search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மீனாட்சி அம்மனின் கரம் பற்றிய சுந்தரேசுவரர் மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
    X
    மீனாட்சி அம்மனின் கரம் பற்றிய சுந்தரேசுவரர் மணக்கோலத்தில் பிரியாவிடையுடன் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

    மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது

    வேத மந்திரங்கள் முழங்க மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. அப்போது பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து தரிசனம் செய்தனர்.
    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மதுரை மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    மீனாட்சி அம்மன் மதுரை மாநகரில் ஆட்சிப் பொறுப்பேற்கும் விதமாக கடந்த 5-ந் தேதி பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மீனாட்சி அம்மன், சிவபெருமானை போருக்கு அழைக்கும் நிகழ்வான ‘திக்கு விஜயம்‘ நேற்று முன்தினம் நடைபெற்றது.

    இதையடுத்து, சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.

    இதற்காக, கோவிலுக்குள் வடக்கு- மேற்கு ஆடி வீதி சந்திப்பில் ரூ.12 லட்சம் செலவில் சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள பல வண்ணப் பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆர்கிட் பூக்கள், கொடைக்கானலின் கார்னேசன், ஜெர்புரா, கோல்டன்ராடு, ஆஸ்கரஸ் போன்ற பூக்களாலும் மேடை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வண்ண வண்ண பட்டுத் துணிகளும் மேடைக்கு மேலும் மெருகூட்டின.

    பக்தர்கள் அமர்ந்து திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக மேற்கு ஆடி வீதியில் 700 அடி நீளத்திற்கும், வடக்கு ஆடி வீதியில் சுமார் 700 அடி நீளத்திற்கும் பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. வெப்பத்தை போக்க பந்தலில் ஏ.சி. வசதி செய்யப்பட்டிருந்தது.

    திருக்கல்யாணக் காட்சியை பொதுமக்கள் கண்டுகளிக்க வசதியாக 20 இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.



    மணமகனாய் எழுந்தருளிய சுந்தரேசுவரரிடம் பெற்ற திருமாங்கல்யத்தை கோவில் சிவாச்சாரியார்கள் மணமகளாய் வீற்றிருந்த மீனாட்சி அம்மனுக்கு சூடிய கண்கொள்ளா காட்சி.

    திருக்கல்யாணத்தை முன்னிட்டு, மதுரை மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் நேற்று அதிகாலை முதலே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து குவிந்தனர். திருக்கல்யாணத்திற்காக இலவச பாஸ் யாருக்கும் வழங்கப்பட வில்லை. ஆனால் ரூ.500, ரூ.200 கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. அதுதவிர முக்கிய பிரமுகர்களுக்கு பேட்ஜ்கள், உபயதாரர்களுக்கான இலவச பாஸ்கள் வழங்கப்பட்டன.

    பேட்ஜ், பாஸ் வைத்திருந்தவர்களும், 500 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களும் மேலக்கோபுர வாசல் வழியாகவும், ரூ.200 கட்டண டிக்கெட் வாங்கியவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர, முன்னுரிமை அடிப்படையில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் தெற்கு கோபுர வாசல் வழியாக இலவசமாக அனுமதிக்கப்பட்டார்கள்.

    மீனாட்சி திருக்கல்யாணத்தை காண, தெய்வானையுடன் முருகப்பெருமானும், தங்கை மீனாட்சியை தாரை வார்த்துக் கொடுப்பதற்காக பவளக்கனிவாய்ப் பெருமாளும் திருப்பரங்குன்றத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவே மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

    நேற்று அதிகாலை மீனாட்சி அம்மன், மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார். அவர் தங்கக் கவசத்துடன், சிவப்பு கேரா நிறத்தில் சேலை உடுத்தி, வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியாணம் அணிந்திருந்தார். சுந்தரேசப் பெருமான் வெண்பட்டும், பிரியாவிடை பச்சைப் பட்டும் உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் சித்திரை வீதியில் வலம் வந்தனர். தொடர்ந்து சுந்தரேசுவரர் காசியாத்திரை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பின்பு அம்மனும் சுந்தரேசுவரரும் கோவிலுக்குள் வந்து கன்னி ஊஞ்சல் ஆடினார்கள்.



    இதையடுத்து மேலக்கோபுர வாசலில் மாப்பிள்ளை சுந்தரேசப் பெருமானுக்கு பாத பூஜை நடத்தப்பட்டது. அதன்பின் அவர் மணமேடைக்கு வந்து எழுந்தருளினார். அவரைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் மணக்கோலத்தில் மேடைக்கு வந்தார். மணமகளின் இடதுபக்கம் பவளக்கனிவாய்ப் பெருமாளும், வலது புறம் தெய்வானையுடன் முருகப்பெருமானும் மேடையில் வீற்றிருந்தனர்.

    காலை 8.30 மணிக்கு விநாயகர் பூஜையுடன் திருமணச் சடங்குகள் தொடங்கின. மணமகள் மீனாட்சியாக ஹலாஸ் பட்டரும், சுந்தரேசுவரராக கல்யாணசுந்தரம் என்ற சந்தோஷ் பட்டரும் வீற்றிருந்தனர்.

    மேடையின் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க, முதலில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. அதன்பின் சுமங்கலி பூஜை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து சுந்தரேசுவரராக கல்யாணசுந்தரம் என்ற சந்தோஷ் பட்டரும், மீனாட்சியாக ஹலாஸ் பட்டரும் மாலை மாற்றிக்கொண்டனர். பின் சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. பவளக்கனிவாய்ப் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.

    பின்பு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்கத் தாலியை கல்யாணசுந்தரம் என்ற சந்தோஷ் பட்டர், ஹலாஸ் பட்டர் ஆகியோர் மூன்று முறை பக்தர்கள் முன்பு எடுத்துக்காட்டினார்கள். காலை 8.42 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க, தேவர்கள் வாழ்த்த மேளதாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது விண்ணுலகத்தில் இருந்து தேவர்கள் மலர் தூவி வாழ்த்துவதை போன்று இந்தாண்டு புதுமையாக திருமாங்கல்யம் அணிவித்த போது, மேலே இருந்து வண்ண மலர்கள் சாமிகள் மீது கொட்டப்பட்டது.

    அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தார்கள். பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டனர். ஏராளமான பெண்கள் புதிய மங்கல நாண் அணிந்து கொண்டார்கள். அதன்பின்பு சுந்தரேசுவரருக்கும், அம்மனுக்கும் தங்கக் கும்பாவில் சந்தனமும், தங்கச் செம்பில் பன்னீரும் கொண்டு வந்து தெளிக்கப்பட்டன. தொடர்ந்து, தங்கத் தட்டில் கற்பூரம் வைத்து, மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேசப் பெருமானுக்கும் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. மணமக்கள் தங்க அம்மியில் மிதித்து அருந்ததி பார்க்கும் நிகழ்ச்சி நடந்தேறியது.


    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் நேற்று திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன் வீதி உலா வந்தார்.


    திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசப்பெருமானும் மேடையில் இருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோவிலுக்குள் இருக்கும் பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்தனர். அவர்களுடன் திருப்பரங்குன்றம் முருகன்-தெய்வானையும், பவளக்கனிவாய்ப் பெருமாளும் வந்தனர். திருக்கல்யாண மண்டபத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மன்-சுந்தரேசுவரர் அருள் பெற்றுச் சென்றார்கள். மாலையில் மணமகள் கோலத்தில் மீனாட்சி அம்மன் அனந்தராயர் புஷ்ப பல்லக்கிலும், சுந்தரேசுவரர் யானை வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகள் வழியாக உலா வந்தனர். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் வீரசண்முகமணி, மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தென்மண்டல ஐ.ஜி. முருகன், போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார்யாதவ், மாநகராட்சி ஆணையாளர் சந்தீப் நந்தூரி, மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவண குமார், மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜன், இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல துணை கமிஷனர் பச்சையப்பன் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    சித்திரைத்திருவிழாவில் இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு மேல் சுந்தரேசப் பெருமான் பிரியாவிடையுடன் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளுகிறார்கள். காலை 6 மணியளவில் பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்குகிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு இன்று (திங்கட் கிழமை) மாலை புறப்படுகிறார்.

    வழிநெடுக உள்ள சுமார் 450-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர், 10-ந் தேதி (புதன் கிழமை) அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.

    இதைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிகிறார்கள்.
    Next Story
    ×