search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்
    X
    விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்

    விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோவில்

    விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சனிபகவான் கருதப்படுகிறார்.
    சூரிய தேவனின் மகன், சனிபகவான், இன்னொரு மகன் எமதர்மன். அண்ணன் தம்பியாக இருந்தபோதும் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டனர். அப்படி ஒரு சமயம் வந்த சண்டையில் அண்ணன் எமதர்மன் கோபத்தோடு தம்பி சனிபகவானின் காலில் ஓங்கி அடிக்க, தம்பியின் கால் ஊனமானது.

    மனவருத்தத்துடன் புறப்பட்ட சனி, மனித உருவத்தில் பூவுலகில் சிவதரிசனம் செய்தபடியே பல தலங்களுக்கும் சென்றார். வழியில் பிச்சை எடுத்து கிடைத்ததை சமைத்து ஏழைகளுக்கும், முதியவர்களுக்கும் அளித்து தாமும் உண்டு வந்தார்.

    ஊர் ஊராகச் சுற்றி வந்த சனிபகவான், விளா மரங்கள் நிறைந்த ஒரு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். நடந்து போகும் வழியில், ஒரு பாதையைக் கடந்தபோது ஓரிடத்தில் விளாமரத்தின் வேரில் தடுக்கி நிலை தடுமாறி, அருகே இருந்த பள்ளத்தில் விழுந்தார்.

    அவர் கீழே விழுந்த அதே சமயத்தில், அந்தப் பள்ளத்தில் இருந்து குபீரென்று ஒரு நீரூற்று தோன்றியது. அந்த நீர் சனிபகவானின் மேனியில் பட்ட மறுநொடி, அவரது ஊனம் மறைந்தது. கூடவே ஓர் அசரீரி எழுந்தது. சனிபகவானே... பல கோடி யுகங்களாக மறைந்திருந்த பூச ஞான வாவி என்ற ஞான தீர்த்தம் இது.

    சித்திரைத் திங்கள், வளர்பிறை திருதியையும், பூச நட்சத்திரமும், சனி வாரமும் சேர்ந்த இந்தப் புனித நன்னாளில் இத்தீர்த்தம் உன்னால் மீண்டும் சுரந்துள்ளது.
    விளாவேர் தடுக்கி நீ விழுந்ததால் சுரந்த ஞான வாவி, இத்தலத்தில் புனித தீர்த்தக்குளமாக விளங்கும். அதனால் இந்தக் கிராமம் விழக்குளம் என்று அழைக்கப்படும்! என்றது அந்த அசரீரி.

    தற்போது மருவி விளங்குளம் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வரும் அத்தலத்தில்தான், சனிபகவானுக்கு அருளிய ஈசன், அட்சயபுரீஸ்வரராக கோவில் கொண்டு அருள்கிறார். கி.பி.13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயம். முதலாம் மாறவர்மன் பராக்ரம பாண்டியன் இவ்வாலய இறைவனை வழிபட்ட தகவல், கல்வெட்டு மூலம் காணக் கிடைக்கின்றது.

    ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய கோபுரம். பெரிய பிராகாரத்தை அடுத்து உள்ளது வசந்த மண்டபம். இந்த மண்டபத்தின் வலதுபுறம் அன்னை அபிவிருத்தி நாயகியின் சன்னதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள்.

    மகா மண்டபத்தை அடுத்து உள்ள அர்த்த மண்டப நுழைவாயிலின் இடதுபுறம் இரட்டை விநாயகரும் வலதுபுறம் மாரியம்மன், பிரதோஷ நாயகர் திருமேனிகளும் உள்ளன. அடுத்துள்ள கருவறையில் இறைவன் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார்.

    அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம். அது மட்டுமல்ல, அம்பிகையின் திருப்பெயரும் ‘அபிவிருத்தி’ நாயகி என அமைத்து, மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது.

    செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.

    தேவ கோட்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, சிவதுர்க்கை, மகாலட்சுமி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.திருச்சுற்றில் வன்னி மரம் தழைத்து நிற்கிறது. தென்திருச்சுற்றில் ஆலயத்திருக்குளமான பூச ஞான வாவியின் நுழைவாயில் உள்ளது.வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர், விநாயகர், நாகர் சன்னதிகள் உள்ளன. சண்டீஸ்வரர், காலபரவர், சூரியன் ஆகியோரும் காட்சி அளிக்கின்றனர்.

    இத்தலத்தில் சிவபெருமான் அருளால் சனி பகவானுக்கு திருமணமாகும் பாக்கியமும் கிடைத்ததாம். எனவே இத்தலத்தில் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி என்ற இரு பத்தினிகளுடன் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரோடு தனிச் சன்னதியில் அமைந்திருக்கிறார் சனிபகவான்.

    இவரது ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டதாம். சனிபகவான் அந்தக் காலத்தையே தன் வாகனமாக ஏற்றார் எனவும் தலபுராணம் சொல்கிறது. விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்கவும், எம பயம் நீங்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும், எதிரிகளால் ஏற்படும் அச்சங்கள், தொந்தரவுகள் நீங்கவும் அருள்புரியும் உத்தம மூர்த்தியாக இத்தலத்து சனிபகவான் கருதப்படுகிறார்.

    தசாபுக்தியாலோ, ஜாதக ரீதியாகவோ சனியின் பாதிப்புக்கு ஆளானவர்கள், இத்தலம் வந்து சனி பகவானுக்கும், இறைவன், இறைவிக்கும் அர்ச்சனை செய்து விட்டு, பிராகாரத்தில் காக்கைக்கு உணவு படைக்கின்றனர். இதனால் சனிதோஷம் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் என்பத நிச்சயம்.

    தல விருட்சமான விளாமரம், கோவிலின் வடதிசையில் உள்ளது. பூச நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது என்கிறார்கள். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளிலும், நந்தி பகவானுக்கு பிரதோஷ காலங்களிலும், பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஆலயத்தின் எதிரே தனிக்கோவிலில் விஜய விநாயகர், தன் தந்தையை நோக்கியபடி அமர்ந்திருக்கிறார். அட்சய திருதியை அன்று சனிபகவான் ஸ்தூல சூட்சும வடிவங்களில் அட்சயபுரீஸ்வரரை முழுவதும் வழிபடுவதாக ஐதீகம் நிலவுகிறது.
    Next Story
    ×