search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    எண்கண் திருத்தலம் என்கிற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்
    X
    எண்கண் திருத்தலம் என்கிற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

    எண்கண் திருத்தலம் என்கிற பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

    பிரம்மதேவன், தன்னுடைய எட்டு கண்களைக் கொண்டு முருகனுக்கு பூஜை செய்து வழிபட்டார். இதனால் இத்தலம் ‘எண்கண்’ என்றானது. இத்தல வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திருவாரூரில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, எண்கண் திருத்தலம். இங்கு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலைப் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்...

    இந்த ஆலயம், சிவனுக்கானது என்றாலும், இங்கு முருகப்பெருமானே பிரதான தெய்வமாக இருக்கிறார்.

    இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னனால் கட்டப்பட்ட ஆலயம் இது.

    சிக்கல், எட்டுக்குடி, எண்கண் ஆகிய மூன்று தலங்களிலும் மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் ஆறுமுகப்பெருமான் சிலைகள், ஒரே சிற்பியால் வடிக்கப்பட்டவை.

    முருகப்பெருமான் ஆறு முகங்களுடன் அருள்கிறார். முன்புறம் மூன்று முகம், பின்புறம் மூன்று முகம் கொண்டிருக்கிறார். பன்னிரு கரங்களில், வேல், அம்பு, கத்தி, சக்கரம், பாசம், சூலம், வில், கேடயம், சேவல்கொடி, அங்குசம் தாங்கியிருக்கிறார்.

    மூலவரான ஆறுமுகப்பெருமான், மயில் வாகனத்தில் தனியாக அமர்ந்த கோலத்தில் அருள்கிறார். அவருக்கு இருபுறமும் வள்ளி-தெய்வானை இருவரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்.

    ஆறுமுகப்பெருமானுக்கு, தேன், பால், நல்லெண்ணெய், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், தயிர், நெய், பழரசம், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், இத்தல பிரம்மபுரீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும்.

    இந்த ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா, 14 நாள் பிரம்மோற்சவமாக நடைபெறும். பிருகு முனிவரின் சாபத்தால், சிம்மவர்மன் என்ற மன்னன் சிங்க முகத்தைப் பெற்றான். இதையடுத்து அந்த மன்னன், தினமும் வெட்டாற்றில் நீராடி, எண்கண் வேலவனை தரிசித்து வந்தான். இதையடுத்து ஒரு தைப்பூச நாளில், அவனுக்கு காட்சியளித்த முருகப்பெருமான், மன்னனின் முகத்தை மனித முகமாக மாற்றி விமோசனம் அளித்தார்.

    இத்தலத்தில் கண்நோய் பாதிப்பு உள்ளவர்கள், இறைவனை வேண்டி வழிபட்டால் அந்தக் குறை விரைவில் அகலும் என்பது நம்பிக்கை. கண்பார்வை குறை உள்ளவர்கள், ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் விசாக நட்சத்திரம் அன்றும், குமார தீர்த்தத்தில் நீராடி முருகப்பெருமானுக்கு ‘சண்முகார்ச்சனை’ செய்து வழிபட வேண்டும். இப்படி தொடர்ந்து 12 மாதங்கள் வழிபட்டால் கண் குறைபாடு நீங்கும் என்பது ஐதீகம்.

    ஆறுமுகன் சிற்பத்தின் கதை

    முத்தரச சோழன் என்ற மன்னனின் உத்தரவுப்படி, சிக்கல் என்ற ஊரில் உள்ள முருகப்பெருமானின் சிலையை வடித்தார் ஒரு சிற்பி. அதன் அழகில் மயங்கிய மன்னன், இதுபோல் வேறு ஒரு சிலையை செய்துவிடக்கூடாது என்பதற்காக, சிற்பியின் வலது கட்டை விரலை வெட்டிவிட்டான். கட்டை விரலை இழந்த நிலையிலும் கூட, அந்த சிற்பி எட்டுக்குடியில் மற்றொரு முருகன் சிலையை சிக்கலில் உள்ளதுபோலவே வடித்தார். இதனால் கோபம் கொண்ட மன்னன், சிற்பியின் இரண்டு கண்களையும் பறித்து விட்டான். சமீவனம் என்ற இத்தலத்திற்கு வந்த சிற்பி, ஒரு சிறுமியின் உதவியுடன், மீண்டும் ஒரு முருகன் சிலையை வடித்தார். அப்போது உளி பட்டு அவரது கையில் இருந்து ரத்தம் வெளிப்பட்டது. அந்த ரத்தம் கண்களில் பட்டு, சிற்பிக்கு கண்பார்வை வந்தது என்பது இத்தல சிறப்பு.

    தல வரலாறு

    படைப்பின் மறைபொருளான பிரணவத்திற்கு பொருள் தெரியாததால், பிரம்மனை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதோடு படைக்கும் தொழிலையும் தானே ஏற்றார். சிவபெருமான், பிரம்மனை விடுவித்து படைப்புத் தொழிலை அவரிடமே ஒப்படைக்கக் கூறினார். ஆனால் பிரணவப் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்யலாகாது என்று முருகன் மறுத்து விட்டார். இதையடுத்து சிவன், “அப்படியானால், பிரணவத்தின் பொருளை நீயே பிரம்மனுக்கு எடுத்துரைத்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்து விடு” என்று கூறினார். இதையடுத்து பிரம்மனுக்கு பிரணவப் பொருளை உபதேசித்து, படைப்புத் தொழிலை அவரிடம் ஒப்படைத்தார், முருகப்பெருமான். இதையடுத்து பிரம்மதேவன், தன்னுடைய எட்டு கண்களைக் கொண்டு முருகனுக்கு பூஜை செய்து வழிபட்டார். இதனால் இத்தலம் ‘எண்கண்’ என்றானது.
    Next Story
    ×