search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரகலாத வரதன் திருக்கோவில்
    X
    பிரகலாத வரதன் திருக்கோவில்

    அருள்மிகு பிரகலாத வரதன் திருக்கோவில்

    ஆதிசங்கரர் இங்கு உள்ள நவ நரசிம்மரை வழிபாடு செய்ய வந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.
    மூலவர் – மலை அடிவாரக் கோயில் : பிரகலாத வரதன், லட்சுமி நரசிம்மன்.

    மலைக்கோயில்: அஹோபில நரசிம்மர்

    தாயார் – அடிவாரக் கோயில் : அமிர்தவல்லி, செஞ்சுலட்சுமி.

    மலைக்கோயில்: லட்சுமி .

    தீர்த்தம்– மலை அடிவாரக் கோயில் : இந்திர தீர்த்தம், நரசிம்ம தீர்த்தம், பாபநாச தீர்த்தம், கஜ தீர்த்தம், பார்கவ தீர்த்தம்.

    மலைக்கோயில்: பாபநாசினி.

    ஊர்– அஹோபிலம்

    மாநிலம் – ஆந்திர பிரதேசம்

    தல வரலாறு :

    இரண்யகசிபுவின் மகன் பிரகலாதனுக்கு நாராயணன் மீது அளவுகடந்த பக்தி உடையவன். ஆனால் இரணியகசிபு தானே கடவுள் என்று கூறி அகந்தையில் இருந்தான். பிரகலாதன் நாராயணன் புகழ் பாடினான். எங்கே ஒரு முறை உன் நாராயணனைக் காட்டு என இரணியன் கூற, அவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் அகில உலகத்தையும் அவரே காத்து வருகிறார் என்றான் பிரஹலாதன்.

    கோபம் கொண்ட இரணியன் தன் கதாயுதத்தால் ஒரு துணை ஓங்கி அடித்தான். தூண் பிளவுபட்டு நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை அழித்தார். இந்த அவதாரத்தின் நிகழ்வு இத்தலத்தில் நிகழ்ந்தது. பிரகலாதன் வாழ்ந்த அரண்மனை பகுதி தற்போது காடாக மாறிவிட்டது.

    நரசிம்ம அவதாரத்தை தரிசிக்க கருடாழ்வாருக்கு ஆசை ஏற்பட்டது. எனவே இந்த தரிசனம் வேண்டி இங்கு தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மலை உச்சியில் நரசிம்ம அவதாரம் காட்டினார். பிரகலாதனுக்காக தூணில் இருந்து வெளிப்பட்டது, இரணியனை வயிற்றை கிழித்தது ஆக்ரோஷம் அடங்காமல் கர்ஜித்தது, பிரகலாதனின் வேண்டுகோளுக்கிணங்க சாந்த நரசிம்மராக அமர்ந்தது போன்ற இந்த அவதாரத்தின் ஒன்பது திருக்கோலங்கள் இங்கு உள்ளன.

    கருடன் தவம் இருந்ததால் இந்த மலைக்கு கருடாச்சலம் என்றும் கருடாத்ரி என்றும் பெயர் வந்தது. சேஷாத்ரியாக உயர்ந்திருப்பது திருவேங்கடமலை என்றால் கருடாத்ரியாக உயர்ந்திருப்பது அஹோபில மாகும். மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. இதனை நவ நரசிம்ம ஷேத்திரம் என்பர் இந்த 9 கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்ட இடமும் உள்ளது. மலையடிவார கோயிலின் முன்பு 85 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண் ஒன்று உள்ளது. இதை ஜயஸ்தம்பம் அதாவது வெற்றித் தூண் என்கிறார்கள். இந்தத் துணை பூமிக்கடியில் 30 அடி தோண்டி நிலைநிறுத்தி உள்ளார்கள் என்பது ஆச்சரியமான விஷயம். இந்தத் தூணின் முன்பு நாம் மனமுருகி வேண்டினால் அது நிறைவேறும் என்பது நம்பிக்கை.

    ஆதிசங்கரர் இங்கு உள்ள நவ நரசிம்மரை வழிபாடு செய்ய வந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும், நரசிம்மரே வந்து ஆதிசங்கரரை காப்பாற்றியதாக வரலாறு உள்ளது.

    மலையடிவார கோயிலில் உள்ள மூலவர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இங்குள்ள விமானம் குகை விமானம் மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட உக்கிர ஸ்தம்பம் தூண் உள்ளது. மலை அடிவாரத்தில் ஒரு கோயிலும் மலைமேல் ஒரு கோயிலும் உள்ளது.

    அடிவாரத்திலிருந்து மலைமேல் உள்ள கோவிலுக்கு 10 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. மலைமீதுள்ள நரசிம்ம தலங்களை தகுந்த பாதுகாப்புடன் சென்றால் தான் தரிசிக்க முடியும். மாலை நேரத்தில் மிருகங்களின் நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. கரடு முரடான பாதைகள் செங்குத்தான மலை மீது ஏற வேண்டும் மாலை 6 மணிக்குள் மலைக்கோயில் தரிசனத்தை முடித்து இறங்கி விட வேண்டும்.

    திருவிழா

    நரசிம்மர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி

    திறக்கும் நேரம்

    மலை அடிவாரக் கோயில் காலை 6:30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை.

    மலைக்கோவில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 6 மணி வரை.
    Next Story
    ×