search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சயன பெருமாள்
    X
    சயன பெருமாள்

    பெருமாளின் சயனக்கோலங்களும்... அருள்பாலிக்கும் தலங்களும்...

    சயனக் கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் தலங்கள் ஏராளமாக இருக்கின்றன. சயனக் கோலத்திலும் கூட விதவிதமான கோலங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    திருமால் படுத்த கோலத்தில் அருளுவதை, ‘பள்ளிகொண்ட திருக்கோலம்’ என்று அழைப்பார்கள். அதையே ‘சயனக் கோலம்’ என்றும் சொல்வார்கள். சயனக் கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கும் தலங்கள் ஏராளமாக இருக்கின்றன. சயனக் கோலத்திலும் கூட விதவிதமான கோலங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    ஜல சயனம்

    பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்ட ஆலயங்களை `திவ்ய தேசங்கள்’ என்று வர்ணிப்பார்கள். அப்படி 108 திவ்ய தேசங்கள் இருக்கின்றன. அவற்றில் 107-வது திருத்தலமாக சொல்லப்படுவது, வைகுண்டம். இது பெருமாள் பள்ளிகொண்டிருக்கும் திருப்பாற்கடலைக் குறிக்கும். கடலில் பள்ளிகொண்டிருக்கும் இந்த கோலத்தையே, ‘ஜல சயனம்’ என்கிறார்கள். பக்தர்கள் தங்கள் பூத உடலுடன் சென்று தரிசிக்க முடியாத இடம் இது.

    வீர சயனம்

    திருவள்ளூரில் அமைந்துள்ளது, வீரராகவப் பெருமாள் திருக்கோவில். இது திவ்ய தேசங்களில் 59-வது தலமாகும். இங்கு பெருமாள் கொண்டிருக்கும் கோலத்தின் பெயர், ‘வீர சயனம்’ ஆகும். சாலிஹோத்ர முனிவரிடம், பெருமாள் “நான் எங்கே உறங்குவது?” என்றதற்கு, அந்த முனிவர் காட்டி அருளிய இடம் தான் ‘திருஎவ்வுள்ளூர்.’ இதுவே பின்னாளில் ‘திருவள்ளூர்’ என்றானது.

    தல சயனம்

    ‘கடல் மல்லை’ என்று புராணங்களில் குறிப்பிடப்படும் மாமல்லபுரத்தில், தலசயனப் பெருமாள் கோவில் இருக்கிறது. இது திவ்ய தேசங்களில் 63-வது தலமாகும். இங்கு திருமால் தன்னுடைய வலது கரத்தை உபதேச முத்திரையுடன் மார்பின் மீது வைத்து, ஆதிசேஷன் மீது சயனித்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். இதனை ‘தல சயனம்’ என்கிறார்கள்.

    போக சயனம்

    சிதம்பரம் நடராஜப் பெருமான் கோவிலில், கோவிந்தராஜப் பெருமாள் என்ற பெயரில் திருமாலுக்கும் தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது. இங்கு புண்டரீகவல்லி தாயாருடன் பெருமாள் வீற்றிருக்கிறார். இங்கு அவர் அருளும் கோலம் ‘போக சயனம்’ ஆகும். இந்த ஆலயம் திவ்ய தேசங்களில் 40-வது திருத்தலமாகும்.

    புஜங்க சயனம்

    108 திவ்ய தேசங்களில் முதலாவதாக குறிப்பிடப்படும் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் தான், இந்த சயனக்கோலத்தை நாம் தரிசிக்க முடியும். இங்க திருமால் புஜங்க சயனத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கிறார்.

    தர்ப்ப சயனம்

    திவ்ய தேசங்களில் 105-வது திருத்தலமாக இருப்பது, ராமநாதபுரம் அருகே உள்ள திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோவில். இங்கே பெருமாள், தர்ப்ப சயனக் கோலத்தில் அருள்பாலிக்கிறார். பொதுவாக பெருமாள், ஆதிசேஷன் என்ற பாம்பை படுக்கையாகக் கொண்டுதான் பள்ளிகொண்டிருப்பார். ஆனால் இங்கு தர்ப்பை புல்லை படுக்கையாகக் கொண்டு அவர் பள்ளிகொண்டிருக்கிறார். இதுவும் வேறு எந்த ஆலயத்திலும் காண முடியாத சிறப்புக்குரியது.

    உத்தியோக சயனம்

    திவ்ய தேசங்களில் 12-வது தலமாக இருப்பது, திருக் குடந்தை எனப்படும் கும்பகோணத்தில் உள்ள சாரங்க பாணிப் பெருமாள் திருக்கோவில். இங்கு பெருமாள் இருக்கும் சயனக் கோலத்தை ‘உத்தியோக சயனம்’ என்கிறார்கள். ‘உத்தான சயனம்’ என்றும் சொல்கிறார்கள். திருமழிசை ஆழ்வாருக்காக, சயனத்தில் இருந்து சற்றே எழுந்து பேசுவது போன்ற பாவனையில் இந்தப் பெருமாள் காட்சி தருகிறார். இது வேறு எந்த தலத்திலும் இல்லாத சிறப்பு தரிசனமாகும்.

    பத்ர சயனம்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ரெங்கமன்னார் திருக்கோவில், திவ்ய தேசங்களில் 99-வது தலமாக போற்றப்படுகிறது. இங்கு வடபத்ர சயனக் கோலத்தில், பெருமாள் பள்ளிகொண்டிருக்கிறார். ‘பத்ரம்’ என்பது ஆலமர இலையைக் குறிக்கும்.

    மாணிக்க சயனம்

    சென்னை அடுத்த பல்லாவரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருநீர்மலை. இது திவ்ய தேசங்களில் 61-வது திருத்தலம் ஆகும். இங்கு பெருமாள், அரங்கநாயகி உடனாய அரங்கநாதராய் அருள்புரிகிறார். பாம்பு படுக்கையில் நான்கு கரங்களுடன் மாணிக்க சயனத்தில் அவர் அருள்கிறார். இந்த ஆலயத்தில் நின்ற கோலம், இருந்த கோலம், கிடந்த கோலம், நடந்த கோலம் என நான்கு விதமான நிலைகளில் பெருமாளை தரிசிக்க முடியும்.
    Next Story
    ×