search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராமகிரி ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவில்- குஜிலியம்பாறை
    X
    ராமகிரி ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவில்- குஜிலியம்பாறை

    ராமகிரி ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவில்- குஜிலியம்பாறை

    குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.
    சுமார் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு குஜிலியர்கள் என்ற இனத்தவர் இப்பகுதியில் அமைந்துள்ள பாறைப்பகுதியில் ஒட்டி வாழ்ந்துள்ளனர். நாளைடைவில் குஜிலியர் என்ற இனத்தவரின் பெயரோடு அவர்கள் வாழ்ந்து வந்த பாறைப்பகுதியையும் சேர்த்து 'குஜிலியம்பாறை' என இவ்வூர் அழைக்கப்பட்டது. குஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோயிலின் சிறப்பம்சம்.

    தல வரலாறு:

    மகாவிஷ்ணு எடுத்த நான்காவது அவதாரம் நரசிம்மர். அவதாரத்திற்கு ஒரு திருமணம் என்ற முறையில் கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோருக்கு திருமணம் நடந்த இடம்தான் ராமகிரி. நரசிம்மர், ஸ்ரீதேவி, பூமாதேவியின் திருமணத்திற்கு சிவன், சக்தி, பிரம்மா, சரஸ்வதி மற்றும் அனைத்து தேவர்கள், அடியார்கள், ரிஷிகள் வந்து 15 நாள் முகாமிட்டு திருக்கல்யாண வைபவத்தை முடித்து வைத்துள்ளனர். இதற்கு அடையாளமாக சிவன், பிரம்மா சிலைகளும் இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது.

    வேட்டைக்கு போன ராஜா:

    பாண்டியப்பேரரசை ஆட்சி செய்த சந்திர சேகர பாண்டியன், புலிக்குத்தி சாமைய நாயக்கருக்கு பாண்டிய நாட்டின் வடபகுதியிலுள்ள தட்டை நாடு சீமையை ஆளும் உரிமையை கொடுத்துள்ளார். அப்படி சாமைய நாயக் கர் வம்சாவளியில் வந்த லண்டகதிரழகு சா மைய நாயக்கர், குஜி லியம்பாறை அருகே வசந்தகதிர்பாளையத்தில் அரண்மனை அமைத்து ஆண்டு வந்தார். அப்போது தொப் பையசாமி மலைப்பகுதியான சக்கர கிரி மலைப்பகுதிக்கு வேட்டையாட படை, பரிவாரங்களுடன் சா'மைய நாயக்கர் வந்தார். அவர் தற்போது கோயில் உள்ள இடத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்த போது, குடிக்க தண்ணீர் தேட, ஒரு சுனையிலிருந்து குளித்து விட்டு ராமணம்பிள்ளை என்ற பறவை தனது சிறகுகளை உலர்த்தும்பொழுது, 'ராமா, ராமா' என்று கத்தியது.

    அந்த சிறகிலுள்ள நீர்த்துளி மேலில் பட பக்கத்திலுள்ள புதரை விலக்கி, நீர் நிலையை பார்க்கும்போது, அந்த இடத்திலிருந்து முதுகில் ராமம் போட்ட கீரி ஒன்று ஓடியது. அக்கீரியை படை வீரர்களும் நாய்களும் விரட்டினர். உடனே அந்த கீரி கோயிலில் இருந்த இடத்திற்கு சென்றது. சிறிது நேரத்தில் ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அந்த கீரியானது திடீரென நாய்களை விரட்ட, நாய்கள் பயந்து ஓடியது. இதை பார்த்த ஆச்சரியமடைந்த வீரர்கள் நடந்ததை மன்னரிடம் கூறினர். ஆராய்ந்து விசாரித்தபோது, அந்த இடத்தில் கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி திருமணம் நடைபெற்ற இடம் என தெரிய வந்தது.

    ஆஞ்சநேயர் வரவேற்பு:

    திருமண விழாவை சிவ பெருமான், ஈஸ்வரி, பிரம்ம தேவர், சரஸ்வதி மற்றுமுள்ள அனைத்து தேவர்கள், ரிசிகள் மற்றும் எல்லோரும் வந்திருந்து 15 நாள் விழாவாக கொண்டாடினர். விழாவிற்கு வருபவர்களை வரவேற்க 4 திசைகளிலும் ஓடி, ஓடி ஆஞ்சநேயர் வரவேற்பு செய்தார் என்றும் கூறப்படுகிறது. அதனால் இந்த இடத்தில் ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோயில் கட்டி, வழிபட்டு வந்த இடம் என்றும், தற்சமயம் பராமரிப்பு இல்லாது போய் விட்டது என்றும் கேள்விபட்டு அரண்மனைக்கு சென்று விட்டார். அன்று இரவு அவர் கனவில் நரசிம்மர் தோன்றி, கோயிலை புதுப்பிக்கும்படி கூறினாராம்.

    உடனே சாமைய நாயக்கர் வனமாக இருந்த இந்த இடத்தை அழித்து, நரசிம்மருக்கும், ஸ்ரீதேவி, பூமாதேவி திருக்கல்யாண கோலத்தில் அமைந்தவாறு கோயில், கமலவல்லி தாயாருக்கு தனி சன்னதி, எதிர்சேவை கருடாழ்வார் சன்னதி, ஆழ்வார் சன்னதி, முன்மண்டபம், மணி மண்டபம், துவஸ்தம்பம் அமைத்தார். வாகன அறை, மடப்பள்ளி, யாகசாலை அமைத்து மதில் சுவர் கட்டியும் ராஜகோபுரம் அமைத்துள்ளனர். கருடாழ்வாருக்கும், ஆஞ்ச நேயருக்கும் கோயிலுக்கு வெளியில் தனித்தனியாக கோயில் அமைத்துள்ளனர்.

    மங்கலம் கூடி வரும் :

    திருமணக்கோலத்தில் உள்ள நரசிம்மரை வணங்கினால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும். தனி சன்னதியிலுள்ள கமலவல்லி தாயாரை வணங்கினால் வறுமை நீங்கி பொருள் சேர்க்கை, தொழில் அபிவிருத்தி ஏற்படும். இங்குள்ள விஷ்ணு, துர்க்கையை வணங்கினால் பாவங்கள் அகன்று தோ ஷங்கள் நீங்கி சுகம் உண்டாகும். வாசலில் உள்ள ஆஞ்சநேயரை வடை மாலை, துளசி மாலை, நெய்வேத்யம் செய்து வழிபட்டால் எக்காரியமும் வெற்றியடையும். இங்கு வேதநாயகனாக விளங்கும் பெரிய திருவடியான கருட பகவானுக்கு 16 மோதகம், தயிர், அன்னம் வைத்து பூஜித்தால் நாகதோஷம், பட்சி தோஷம் விலகி சுகம் உண்டாகும்.

    இக்கோயில் லண்டக திரழகு சாமையநாயக்கர் ஆரம்பித்து அவர் மகன் குமரழகு சாமையநாயக்கர் கட்டி முடித்ததுடன், அவருடைய மனைவி சீலக்கம்மாள் சிலையும் அமைத்து, சீலக்கம்மாளின் இடது புஜத்தில் உள்ள கிளி வலது மார்பில் பால் அருந்துவது போலவும், தலையில் ஊற்றும் எண்ணெய் தொப்பூழ் வழி சொட்டி விளக்குக்கு எண்ணெய் வழங்கும்படி கலையழகுடன் அமைந்துள்ளது. இக்கோயில் வைணவ ஆகமப்படி வழிபாடு நடக்கிறது. இக்கோயிலில் இருந்த சட்டத்திலான தேரை மாற்றி, ஆங்கிலேயர் காலத்தில் கோயில் தர்மகார்த்தாவான சோழ ப்ப நாயக்கர், திருவாரூர் தேர் போன்று அழகிய சிற்பங்களுடனும், கலை நயத்துடனும் பெரிய தேரை அமைத்துள்ளனர்.

    கோயில் அறநிலையத்துறை பொறுப்பில் இயங்குகிறது. பங்குனி மாதம் 10ம் நாள் பெரிய தேர்த்திருவிழா நடைபெறும். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, ஆவணி கிருஷ்ண ஜெயந்தி, திருக்கார்த்திகை தீபத்திருவிழா, வைகுண்ட ஏகாதசி விழா உள்ளிட்ட விஷேச நாட்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். நவராத்திரி விழாவில் 9 தினங்களும் கமலவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்தும், 10வது நாள் பெருமாள் விஷ்ணு துர்க்கை அவதாரத்தில் குதிரை வாகனத்தில் புறப்பாடு செய்து மகிசாசூரனை வதம் செய்யும் வைபவம் சிறப்பாக நடைபெறும்
    Next Story
    ×