search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ராஜகோபாலசாமி கோவில்
    X
    ராஜகோபாலசாமி கோவில்

    ஆண்டு முழுவதும் திருவிழா கோலம் காணும் ராஜகோபாலசாமி கோவில்

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. வைணவ கோவில்களில் இக்கோவிலுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வேறு எந்த ஊரிலும் இல்லாத வகையில் 18 நாட்கள் நடைபெறுகிறது.
    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. வைணவ கோவில்களில் இக்கோவிலுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வேறு எந்த ஊரிலும் இல்லாத வகையில் 18 நாட்கள் நடைபெறுகிறது.

    திருவிழாவின் 5-ம் நாளில் பஞ்சமுக அனுமார் வாகனம், 6-ம் நாள் கண்ட பேரண்ட பட்சி (ஓருடல் இரண்டு தலைகள் கொண்ட பறவை) வாகனத்தில் ராஜகோபாலசாமி எழுந்தருள்கிறார். இந்த வாகனங்கள் வேறு எந்த ஊரிலும் இல்லாத ஒரு தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. திருவிழாவின் நிறைவாக தேரோட்டம் நடக்கிறது. இதில் 80 ஆண்டுகளாக மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேரினை வடம் பிடித்து நிலைக்கு சேர்ப்பது இந்த ஊரில் மட்டுமே காண முடியும்.

    ஒற்றுமைக்கு சான்று

    18 நாட்கள் திருவிழா முடிந்து தொடர்ந்து 12 நாட்கள் விடையாற்றி என்கின்ற திருவிழாவும் கலை விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆக ஒரு மாதம் ஊரெங்கும் கோலாகலம் தான்.

    இந்த 30 நாட்கள் திருவிழாவை பல்வேறு சாதி அமைப்புகள், பல்வேறு அரசுத் துறை ஊழியர் சங்கங்கள் பன்னெடுங்காலமாக உபயமாக ஏற்று நடத்தி வருவது மிகச் சிறந்த நல்லிணக்கத்திற்கும், ஊரின் ஒற்றுமைக்கும் சான்றாக அமைகிறது.

    4 யுகம் கண்ட பெருமாள்

    ஒவ்வொரு நாளும் எந்த வாகனத்தில் ராஜகோபாலன் வருகிறாரோ அதனை கோவிலின் 4 வீதிகளிலும் வசிப்பவர்கள் தங்கள் வீட்டு வாசலில் தனி மேடை அமைத்து வர்ண பொடிகள் கொண்டு கோலமாக வரைந்து ராஜகோபாலனை வரவேற்பதை காண கண் கோடி வேண்டும்.

    ராஜகோபாலன் 4 யுகங்களிலும் சேவை சாதித்தமையால் சதுர் யுகம் கண்ட பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். கோவிலில் எழுந்தருளியிருக்கும் செங்கமலத்தாயார் நம் பண்பாட்டு மரபிற்கு ஏற்ப படிதாண்டா பத்தினி என்று அழைக்கப்படுகின்றார். காரணம் தாயார் கோவிலை விட்டு வெளியே வருவதில்லை.

    ஆடிப்பூரம் திருவிழா

    தாயாருக்கான ஆடிப்பூரம் திருவிழா 10 நாட்கள் கோயில் வளாகத்திற்குளேயே நடைபெறுகிறது. தாயாருக்கான தேர் கோவிலுக்கு உள்ளேயே அமைக்கப்பட்டுள்ள தாயார் பிரகாரத்தில் வலம் வருகிறது. இந்த தேரினையும் பள்ளி மாணவர்களே இழுத்து நிலைக்கு சேர்ப்பர்.

    இக்கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆண்டில் 300 நாட்கள் உற்சவங்கள் தான். எனவே திருவரங்கத்தை போலவே மன்னார்குடி ராஜகோபாலனும் நித்ய உற்சவ பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்.

    மன்னார்குடியில் நீர்நிலைகள் ஏராளம். சுமார் 96 குளங்கள் இருந்ததாக வரலாறு. கோவில் பாதி குளம் பாதி என்கின்ற பழமொழிக்கேற்ப நகரில் 23 ஏக்கர் பரப்பளவுடைய பிரம்மாண்டமான ‘ஹரித்ராநதி’ என்கின்ற தெப்பக்குளம் மிகவும் புகழ் பெற்றது.

    32 திருக்கோலங்கள்

    ஹரித்ராநதியில் ஜலக்ரீடை செய்த பெருமாள் துவாரகைக்கு இணையாக 32 திருக்கோலங்களில் காட்சி அருளினார். ஜலக்ரீடை செய்து களைப்புற்ற பெருமாளுக்கு மன்னார்குடி சிவன்கோவிலில் அருள்பாலிக்கும் ஜெயங்கொண்டநாதர் திரட்டுப்பால் செய்து அனுப்பியதாக ஐதீகம். அந்த நடைமுறை இன்றளவும் தொடர்கிறது. இது சைவ,வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
    Next Story
    ×