search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    குக்கே சுப்பிரமணியர் கோவில்
    X
    குக்கே சுப்பிரமணியர் கோவில்

    குக்கே சுப்பிரமணியர் கோவில்- கர்நாடகா

    கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கர்நாடகத்தில் உள்ள 7 முக்கிய திருத்தலங்களில் ஒன்றாக பிரசித்தி பெற்ற குக்கே சுப்பிரமணியர் கோவில் விளங்குகிறது. தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகாவில் இந்த சுப்பிரமணியர் கோவில் உள்ளது. மேலும் இது குமார பர்வதா மலையில் உற்பத்தியாகி ஓடி வரும் குமாரதாரா ஆற்றின் கரையோரம் அமைந்து உள்ளது. இந்தக்கோவிலுக்கு புராண வரலாறு ஒன்று உள்ளது. அதாவது முருகக் கடவுள் போரில் தாரகா சூரன், சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை சம்ஹாரம் செய்த பிறகு தனது சகோதரர் விநாயகர் மற்றும் பக்தர்கள் புடைசூழ குமார பர்வதாவுக்கு வந்தார். 

    அவரை இந்திரன் மற்றும் தேவர்கள் வரவேற்றனர். மேலும் தனது மகள் தெய்வானையை திருமணம் செய்து கொள்ளும்படி இந்திரன் வேண்டுகோள் விடுக்க முருகப்பெருமான் சம்மதம் தெரிவித்தார். அதன்படி முருகர்-தெய்வானை திருமணம் நடந்தது. அப்போது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மற்றும் தேவர்கள் அங்கு கூடினர். பல்வேறு புனித நதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அந்த புனித நீர் ஆறாக ஓடியது. அதுவே குமாரதாரா நதியானதாக சொல்லப்படுகிறது.

    இதேப் போல் சிவ பக்தரும், நாகர்களின் தலைவரான வாசுகி தன்னை கருடன் தாக்காமல் இருப்பதற்காக குக்கே சுப்பிரமணியர் கோவிலில் உள்ள பிலாத் வாரா குகையில் தவம் இருந்தது. இதைத் தொடர்ந்து சிவனின் ஆணையை ஏற்று வாசுகியை இந்த தலத்தில் தனது பரமபக்தராக தன்னோடு இருக்கும்படி முருகப்பெருமான் அருள்புரிந்தார். இதனால் இங்கு வாசுகிக்கு பூஜை செய்தால், அது முருகப்பெருமானுக்கு பூஜை செய்ததாகவே கருதப்படுகிறது. இந்த கோவிலில் வெள்ளி கவசமிடப்பட்ட கருட கம்பம் ஒன்று உள்ளது. 

    வாசுகி பாம்பின் விஷம் பக்தர்களை தாக்காமல் இருப்பதற்காக அந்த கருட கம்பம் இங்கு நிறுவப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்தக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் குமாரதாராவில் நீராடிய பிறகே சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த ஆற்றின் தண்ணீர் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்ததாக பக்தர்களால் நம்பப்படுகிறது. 

    மங்களூருவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 299 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த புனித ஆலயம் அமையப் பெற்று இருக்கிறது. இந்தக்கோவிலில் எச்சில் இலையில் பக்தர்கள் உருண்டு நேர்த்திக்கடன் செலுத்தும் ‘உருளு சேவை' என்னும் நிகழ்ச்சி சிறப்பம்சம் ஆகும்.
    Next Story
    ×