search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில்
    X
    நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில்

    நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் கோவில்

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலத்தில் உள்ளார்.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார் கோவிலில் குடி கொண்டிருக்கும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கிழக்கு முகமாய் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். பெருமானின் வலதுபக்கத்தில் நம்பிக்கை நாச்சியார், வஞ்சுளவல்லி என்ற திருநாமத்துடன் தமது வலது திருக்கையில் வரத முத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்க விட்டுக் கொண்டு நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இவ்வாறு நாச்சியார் மூலவர் பெருமாளுடன் மூலஸ் தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் மற்ற எந்த திவ்விய தேசத்திலும் இல்லாத வகையில் இக்கோவிலில் தரிசனம் தருகிறார்.

    சீனிவாசப் பெருமாளுக்கு வலதுபக்கத்தில் நான்முகப் பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும் இடது பக்கத்தில் வரிசையாக அநிருநத்தன், ப்ரத்யும்னன் (இவர் மட்டும் சற்றுக் குட்டையான திருமேனியுடன் எழுந்தருளியுள்ளார்). சாம்பன் என்ற புருசோத்தமன் என்பவர் மிடுக்காக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருவது கூடுதல் சிறப்பாகும். பக்தர்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்தி சினீவாச பெருமாள் விளங்கி வருகிறார். 108 திவ்ய தேசங்களில் இக்கோவிலும் ஒன்றாகும்.

    இது நாச்சியாருக்கு சிறப்புள்ள தலமாகும். ஆஸ்தானத்திலும், திருவிழாக்காலங்களிலும் பெருமாளுக்குச் சற்றுமுன் இருப்பார். நாச்சியாருக்குத் தனிச்சன்னதி இல்லை. ஆண்டாளுக்கு தனிக்கோவில் இல்லை. தேரோடும் தெரு முதல் கருவறை முடிய சேர்த்து ஏழு சுற்றுகள். எல்லாத் தலங்களிலும் வடக்கில் தான் பரமபத வாசல் இருக்கும். ஆனால் இத்தலத்தில் திருவுண்ணாழி தெற்கு சுற்றில் தெற்கு நோக்கி பரமபத வாசல் உள்ளது.

    இத்தனை சிறப்புகள் பெற்றிருக்கும் இத்தலத்தில் மேலும் மெருகூட்டும் விதமாக இறைவன் அருளோடு அனைவருக்கும் அருளாசி வழங்கி வரும் கல் கருட பகவானை வழிபடுவது மிகவும் சிறந்தது.

    கல்கருட பகவான்

    நாச்சியார்கோயில் சீனிவாச பெருமாள் கோவில் கருவறைக்குக் கீழே மகாமண்டபத்தில் வடபால் தெற்கு நோக்கியுள்ள சந்நிதியில் பட்சிராஜன், பெரிய திருவடி, வைநதேயன், புள்ளரசர் என்றெல்லாம் அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். மற்றைய திருப்பதிகளில் இல்லாத தனிச்சிறப்பு இத்தலத்தில் இவருக்கு உண்டு. இவர் சிலை வடிவானவர், சாளகிராம வடிவானவர் என்றும் கூறுவார்கள். இத்தலத்தில் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கல்கருடன் தரிசனம் மிகவும் புகழ் பெற்றது.

    பெருமாளுக்கும் திருவா ராதனம் கண்டருளப் பண்ணியவுடன் அவர் செய்த அமுதுபடியை இவருக்கும் சமர்ப்பிக்கும் ஆராதனம் நடைபெறும். இவர் மிகவும் வரப்பிரசாதி. இவருக்கு ஆடி மாதம் சுக்கில பஞ்ச மயில் ‘அமுதகலசம்” என்ற கொழுக் கட்டைப் பணியாரம் செய்து சமர்ப்பித்தால் நினைத்த காரியம் உடனே கைகூடும்.

    பட்சிராஜன் கருடனுக்குத் தனிச்சிறப்பு இத்தலத்தில் உள்ளதுபோல் எங்கும் காண இயலாது. இத்தலத்தில் கருடனின் தனிக் கோயில் மூலத்தானத்திற்கு கீழே மகா மண்டபத்தில் தெற்கு நோக்கியுள்ளது. உள்ளே பட்சிராஜன், கருடன் வைநதேயன், பெரிய திருவடி, புள்ளரசு, மங்களாலயன் என்றெல்லாம் புனிதப்பெயர் கொண்டு அழைக்கப்படும். கருடன் சாளக்கிராமச் சிலை வடிவில் வாகன அமைப்பில், நீள் சிறகும், நீள் முடியும் நீண்டு வளர்ந்த திருமேனியும் கொண்டு பெருந்தோளுடனும், மிகவும் மிடுக்குடனும், வீரத்துடனும், எழுந்தருளியுள்ளார்.

    இவர் எழுந்தருளி உள்ள இடம் 10 1/2 அடி சதுரம் உள்ளது. இவர் வாகன மண்டபத்துக்குப் புறப்பாடு கண்டருளும் காலத்து, ஸ்ரீபாதம் தாங்குவோர் மொத்தம் நால்வராகவும், வாரைகள் சேர்த்தபின் மூலை ஒன்றுக்கு நால்வராகவும், (16 பேர்கள்) பின் எண்மர், பதின்மார் களாகவும் படிகளில் இறங்கியருளும் போது கணக்கற்றவர்களும் ஸ்ரீபாதம் தாங்கிச் செல்வது காண கண்கோடி வேண்டும். இத்தலத்தில் கருடன் எழுந்தருளியது பற்றி மற்றோர் வாய்வழிக் கதையும் கூறப்படுகிறது.

    ஒரு சிற்பி ஆகம முறைப்படி கருட வடிவம் ஒன்றை செதுக்கி வந்தார். முடிவில் இரு பக்கங்களிலும் சிறகுகளைச் செதுக்கிப் பிராணப் பிரதிஷ்டை செய்தார். அப்போது திடீரென்று உயிர்ப்பெற்ற கருடன் வானத்தில் எழும்பி பறந்ததைக் கண்டு அச்சமுற்ற சிற்பி, உடனே தன் கையில் இருந்த கல் உளியை எடுத்துக் கருடன் மேல் வீசி எறிந்தார். அதனால் கருடன் மூக்கில் அடிப்பட்டு அதன் பின்பு கலியுக வரதராய் அவர் இறங்கி வந்து அமர்ந்தது நாச்சியார்கோயில் எனும் இத்தலமே ஆகும் என்பது புராண வரலாறு.

    இவர் கச்யபருக்கும் விந்தைக்கும் இரண்டாவது குமாரராக அவதரித்தார். ‘தானாகவே முட்டையிலிருந்து வெளி வந்தார்” எனச் சிலரும், அவசரப்பட்டு தாய் முட்டையைக் குத்தியதால் மூக்கில் சிறிது காயத்துடன் வெளிவந்தார். அதனால் தான் இன்றும் பெருமாள் ஆலயங்களில் உள்ள வாகன ‘கருடன்கள் மூக்கின் அடியில் சிறுபுள்ளி அமைந்திருக்கும்” என்றும் சிலர் கூறுவார்கள்.

    சூரியனுடைய தேரோட்டியான அருணன் இவரது தமையன் ஆவார். இவருக்கு இரு மனைவிகள் ஒருவர் ருத்ரா மற்றொருவர் ஹூகீர்த்தி. இவர் ஐந்து பிராணன்களின் அதிஷ்டான தேவதை. இவரது பலத்தையும், பக்தியையும் கண்டு திருமால் இவர் வேண்டுகோளின் படியே இவரை வாகனமாகவும் கொடியின் சின்னமாகவும் ஏற்றுக் கொண்டார். இவரைப் பற்றிய ‘கருட பஞ்சாஷரீ” மந்திரம் மிகவும் சிறந்தது. இவரது தரிசனமும் குரலும் என்றும் சிறப்புடையது. வியாழன் மாலையிலும், சனி காலையிலும் ஸ்ரீ கருட வழிபாடு மிகவும் சிறப்புள்ளன என்பார்கள்.

    கருட வழிபாட்டு சிறப்பு

    இவரை நினைத்தால் விஷ ஜந்துக்கள் குறிப்பாக பாம்புகளினால் துன்பம் ஏற்படாது. இவரது பெயர் கொண்ட ‘கருடோத்காரம்” என்ற பச்சை மரகதம் மிகவும் சிறப்புடையது. அமுதம் கொண்டு வந்து தாயின் அடிமைத்தனத்தை நீக்கியவர். பாம்புகளில் ஆதிசேஷனுடன் நட்பு கொண்டவர். வைகுந்தத்தில் உள்ள அணுக்கத் தொண் டர்களான நித்திய சூரிகளில் இரண்டாமவர். முற் காலத்தில் நகர அமைப்பில் மக்களுக்கு விஷ பீடை உண்டாகாமல் இருக்க கருடன் பறப்பது போல் நகர் அமைப்பதுண்டு. அதற்கு எடுத்துக்காட்டாக முற் காலத்திய தஞ்சை நகரம் அமைக்கப்பட்டு ‘கருடபுரி” என்று அழைக்கப்பட்டது.

    இவரது திருமேனியில் உள்ள சர்ப்பங்களில், பட்டு முதலிய சித்திர வஸ்திரங்களை சமர்பிப் போர்களுக்கு எண்ணிய நலன்கள் கைகூடும். ஆடி சுக்கில பஞ்சமி திதியில் இவரை வணங்குகி றவர்களுக்கு (பிள்ளையே இல்லாதவர்களுக்கு) நல்ல பிள்ளை பிறக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவன் எளிதில் கிட்டுவான். இவரது திருநட்சத்திரம் சுவாதியானதால் அன்று கருடனுக்கு அர்ச்சனை செய்வது மிகவும் உகந்தது.

    கல் கருடன் வருடத்துக்கு இருமுறை சீனிவாச பெருமாளுடன் எழுந் தருள்வது காணத்தக்க தொரு காட்சியாகும். ஒன்று மார்கழிப் பெருந் திருவிழாவில் நான்காம் திருநாளும், மற்றொன்று பங்குனிப் பெருந் திருவிழாவில் நான்காம் திருநாளுமாகும். இத்தலத்தில் உறைந் துள்ள அருள்மிகு வஞ்சுள வல்லி தாயார் சமேத நறையூர் நம்பியான சீனிவாச பெருமானை தரிசித்தால் கஷ்டங்கள், கவலைகள் விலகும். கல் கருட பகவானை சரணடைவோர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது திண்ணமாகும்.

    சக்தி வாய்ந்த தீர்த்தத்தலம்


    பிரமன் தனக்கிருந்த தோஷம் நீங்கச் சங்கர்ஷண தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டுப்பேறு பெற்ற தலம். இந்திரன் அநிருந்த தீர்த்தத்தில் நீராடிப் பெருமாளை வழிபட்டு சாப நீக்கம் பெற்றான். சாம்ப தீர்த்தத்தில் சப்த ரிஷிகள் நீராடித்தவம் செய்தனர். பானுதத்தன் என்னும் அரக்கன் பிரத்தியுமனன் என்னும் தீர்த்தத்தில் நீராடி பெருமாளை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றான். கோச்செங்கட் சோழன் மணிமுத்தாற்றின் திருக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வெற்றி வாள் பெற்றான். இந்தகுளம் 684ஜ்225நீள, அகலம் கொண்டது.

    எனவே இந்த நான்கு வகை தீர்த்தங்களிலும் நீராடி பெருமாளை தரிசித்தால் குறைகள் எல்லாம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மகான்களின் ஆசி கிடைக்கும். பஞ்சமாபாதகங்கள், பழிகள் விலகி ஓடி விடும். அந்த அளவுக்கு இத்தலத்து தீர்த்தங்களுக்கு சக்தி உள்ளது.

    Next Story
    ×