search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சார புஷ்கரணியுடன் கூடிய ஆலயத் தோற்றம்
    X
    சார புஷ்கரணியுடன் கூடிய ஆலயத் தோற்றம்

    திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில்- கும்பகோணம்

    கும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.
    ஒரு பிரளய காலத்தில் பிரம்மனுக்கு வேதங்களையும், ஆகமங்களையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அவர் மண்ணால்  ஒரு குடம் செய்து, அதனுள் வேதங்களையும், ஆகமங்களையும் வைக்க முயன்றார். ஆனால் குடம் உடைந்து போயிற்று. இருப்பினும் முயற்சியைக் கைவிடாத பிரம்மன், மீண்டும் மீண்டும் மண்ணெடுத்து குடம் செய்தாலும், அது உடைந்துகொண்டேதான் இருந்தது. பூவுலகின் பலத் திருத்தலங்களுக்கும் சென்று மண்ணெடுத்துக் குடம் செய்து பார்த்தார். எந்த மண்ணிலும் குடம் நிலையாய் இருக்கவில்லை.

    இதனால் வருந்திய பிரம்மன், மகாவிஷ்ணுவை வேண்டினார். அப்போது மகாவிஷ்ணு, “பிரம்மா தேவா! நான் பூலோகத்தில் மிகவும் விரும்பி உறையும் சாரச்சேத்திரம் எனும் திருத்தலத்தில் இருந்து மண்ணெடுத்து குடம் செய்திடுக. அது உடையாமல் நிலைத்திருக்கும். இத்தலத்து மண் மிகவும் சத்து மிக்கசாரம் நிறைந்தது” என்றருளினார்.

    இதனால் மகிழ்ச்சியடைந்த பிரம்மன் சார சேத்திரம் வந்து, மகாவிஷ்ணுவை துதித்து அத்தல மண்ணெடுத்து குடம் செய்தார். அதில் வேதங்களையும், ஆகமங்களையும் வைத்துக் காப்பாற்றிப் பராமரித்தார். பிரம்மன் பாதுகாத்து பராமரித்த வேதங்கள் உள்ளடங்கிய அந்த மண்குடத்தை, உலக நன்மைக்காக இன்றும் பிருகு, சவுனகர், வியாசர், பராசரர், வயின தேவர், மார்க்கண்டேயர், பணீந்திரர் ஆகிய சப்த ரிஷிகளும், சார புஷ்கரணிக்கரையில் தவமியற்றியவாறு காப்பாற்றி வருவதாக நம்பிக்கை.

    இப்படி தேவர்கள், பூவுலகினர் என அனைத்து வகை உயிரினங்களின் வாழ்வாதாரம் பொதிந்த வேதங்களையும், ஆகமங்களையும் அந்த சார சேத்திர மண்குடம் தாங்கிக் கொண்டிருப்பதால், அத்தலம் ‘திருச்சாரம்’ என்று அழைக்கப்பட்டது. அதுவே தற்போது மருவி ‘திருச்சேறை’ என்று வழங்கப்படுகிறது. ‘சாரம்’ என்றால் ‘சத்து’ எனப் பொருள்படும். பிரம்மன் குடம் செய்ய மண் கொடுத்த திருக்குளம் ‘சார புஷ்கரணி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் திருக்குளத்தில் சேறு போன்ற மண் கிடைத்து அதில் குடம் செய்யப்பட்டதால், இத் திருத்தலம் ‘திருச்சேறை’ என்றானதாகவும் கூறுகிறார்கள்.

    இங்கு எழுந்தருளிய மகாவிஷ்ணு ‘சாரநாதப் பெருமாள்’ எனற திருநாமம் கொண்டுள்ளார். அவரது உடனுறையும் தாயாரும் ‘சார நாயகி’ என அழைக்கப்படுகிறாள். ஆலய விமானமும் ‘சார விமானம்’ என்றானது. இப்படி ‘சாரநாதப் பெருமாள்’, ‘சார நாயகித் தாயார்’, ‘திருச்சாரம் தலம்’, ‘சார புஷ்கரணி’, ‘சார விமானம்’ என முறையே மூர்த்தி, தாயார், தலம், தீர்த்தம், விமானம் என ஐந்து விதத்திலும் அழியாமல் நிலைத்து நிற்பதால், இத்தலம் ‘பஞ்சசார சேத்திரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

    கருவறையில் சாரநாதப் பெருமாள் கிழக்குப் பார்த்த வண்ணம் சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு வலப்புறம் மார்க்கண்டேயரும், இடப்புறம் காவிரித் தாயும் எழுந்தருளி உள்ளனர். என்றும் பதினாறு வயது கொண்டவராய், சிரஞ்சீவியாய் இருக்கும் வரம் பெற்ற மார்க்கண்டேயர், ‘இறைவனின் திருவடிகளே சிரஞ்சீவத்துவத்தை விட மேன்மைதரும்’ என்பதை உணர்ந்து திருச்சேறையில் அருளும் சாரபரமேஸ்வரர், காலபைரவர் ஆகியோரை வழிபட்டு, பின்னர் சாரநாதப் பெருமாளின் திருவடியில் முக்திப் பெற்றார். இதனால்தான் இன்றளவும் பக்தர்கள் முதலில் திருச்சேறை சார புஷ்கரணியில் நீராடி, அதற்கு மிக அருகில் உள்ள சாரபரமேஸ்வரர் சிவாலயத்தை வழிபாடு செய்து, அங்குள்ள காலபைரவர் சன்னிதியில் தீபம் ஏற்றி வழிபட்ட பிறகுதான் சாரநாதப் பெருமாள் திருக்கோவில் வந்து வழிபாடு செய்கிறார்கள்.

    ஒருமுறை கங்கை, காவிரி ஆகிய இரு நதி தேவதைகளுக்கும், ‘தமக்குள் யார் பெரியவர்?’ என்ற விவாதம் ஏற்பட்டது. அவர்களை அழைத்த பிரம்மன், காவிரியைப் பார்த்து, “பெருமைமிக்கவளே! மகாவிஷ்ணு வாமனனாக அவதரித்து, திாிவிக்கிரமனாக ஆகாயத்தை அளந்தபோது, எமது சத்தியலோகம் வரை அவரது திருவடிகள் நீண்டது. அப்போது அவரது திருப்பாதங்களை நான் திருமஞ்சனம் (நீராட்டுதல்) செய்தேன். அதுவே பெருக்கெடுத்து ஓடி புனிதம் மிக்க கங்கை நதி ஆனது. எனவே கங்கையே பெரியவள்” என்று கூறி முடித்தார்.

    இதனைக் கேட்டு மிகவும் வருத்தமுற்ற காவிரி, “கங்கையினும் மேலான பெருமைபெற நான் என்ன செய்ய வேண்டும்” என்று பிரம்மனிடம் கேட்டாள்.

    அதற்கு பிரம்மதேவன், “தூயவளே! நீ பூலோகத்தில் திருச்சாரம் எனும் திருத்தலம் சென்று, அத்தல சார புஷ்கரணிக் கரையில் உள்ள அரச மரத்தடியில் மகாவிஷ்ணுவை நினைத்து தவம் இயற்று. நீ விரும்பிய பெரும் பேற்றினை அடைவாய்” என்று அருளினார்.

    அதன்படியே இந்தத் திருத்தலம் வந்து கடும் தவம் இயற்றினாள் காவிரித் தாய். அந்த தவத்தால் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஒரு தைப்பூச நன்னாளில், குரு என்னும் வியாழன் கூடியிருந்த நேரத்தில் குழந்தை கண்ணனாக தவழ்ந்து வந்து காவிரியின் மடியில் அமர்ந்தார். ‘குழந்தையாக தம் மடியில் வந்து அமர்ந்திருப்பது மகாவிஷ்ணுவே’ என்பதை உணர்ந்த காவிரி, மகாவிஷ்ணுவின் பரிபூரண தரிசனத்தை வேண்டினாள்.

    மறுநொடியே குழந்தையாக இருந்த கண்ணன், விஸ்வரூபம் எடுத்து, கருட வாகனத்தில் பத்மம் என்னும் தாமரையை தமது வலது கரத்தில் தாங்கி, வைகுண்டத்தில் இருப்பது போல காட்சி கொடுத்தார். அப்போது அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி, மகாலட்சுமி, சாரநாயகி என ஐந்து தேவியர்களும் அருட்காட்சி புரிந்தனர். பின்னர் காவிரியின் வேண்டுதலுக்கு இணங்க, மகாவிஷ்ணு இங்கே திருக்கோலம் கொண்டார்.

    குழந்தையாக கண்ணன் தவழ்ந்து வந்து, காவிரித் தாயின் மடியில் அமர்ந்ததைக் கண்ட பூலோகத்தின் அனைத்து நதிகள், தீர்த்தங்களும், காவிரியின் பெரும் புனிதத்தன்மையைக் கண்டு தொழுது நின்றன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் கிரகம் வரும்போது, இத்தல சார புஷ்கரணியில் நீராடி சார நாத பெருமாளை வழிபட்டால், சகல தோஷங்களும், முன்ஜென்ம வினைகளும், கிரக தோஷங்களும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும் அகன்று, வாழ்வில் நல்வளம் பெருகும் என்று தல புராணம் சொல்கிறது.

    காவிரித்தாய் கண்ணனை மடியில் அணைத்த திருக்கோலத்தில் இருக்கும் திருக்கோவில், சார புஷ்கரணியின் மேற்குக்கரையில் அரசமரத்தடியில் அமைந்துள்ளது. சாரபுஷ்கரணியில் நீராடி காவிரித்தாய், சார நாதப் பெருமாளை முறைப்படி வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.

    அமைவிடம்


    கும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மிக அருகில் பாடல் பெற்ற சிவாலயமான சார பரமேஸ்வரர் திருக்கோவிலும் அமைந்துள்ளது.

    சிவ.அ.விஜய் பெரியசுவாமி
    Next Story
    ×