search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆலய முகப்புத் தோற்றம், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, தவம் பெற்ற நாயகி,
    X
    ஆலய முகப்புத் தோற்றம், நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி, தவம் பெற்ற நாயகி,

    குழந்தை வரம் அருளும் திருக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில்

    விருதுநகர் மாவட்டம் தேவதானம் வனப் பகுதியில் அமைந்திருக்கிறது திருக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    விருதுநகர் மாவட்டம் தேவதானம் வனப் பகுதியில் அமைந்திருக்கிறது திருக்கொழுந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குகிறது. சங்கரன்கோவில் ஆலயம் நிலத்திற்குரிய தலமாகவும், தருகாபுரம் ஆலயம் நீர் தலமாகவும், தென்மலை ஆலயம் காற்று தலமாகவும், கரி வலம் வந்த நல்லூர் ஆலயம் அக்னி தலமாகவும் குறிப்பிடப்படுகின்றன. சிவராத்திரியன்று பல அடியார்கள் ஒன்று கூடி, இந்த பஞ்சபூத தலங் களுக்கும் நடந்தே சென்று வழிபாடு செய்வார்கள். ஆகாய தலமாக விளங்கும் தேவதானம் திருக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தைப் பற்றி இங்கே நாம் பார்ப்போம்.

    தல வரலாறு

    அடர்ந்த காட்டுக்குள் அலைந்து திரிந்தது ஒரு கலைமான். அது கொன்றைத் தழைகளை விருப்பமுடன் தின்ன ஆரம்பித்தது. அதற்குள் சிவலிங்கம் ஒன்று இருப்பதை கலைமான் கண்டது. அந்நாள் முதல் தினமும் அந்த சிவலிங்கத்தை வணங்கி நின்றது. அந்தக் காட்டில் மேய்ச்சலுக்காக வந்த பசுவும், மானைப்போலவே அந்த சிவலிங்கத்தின் மீது தன் பாலைச் சுரந்து அபிஷேகம் செய்து வணங்கியது.

    இவ்விரு விலங்குகளும் ஒன்றை ஒன்று சந்திக்காமலேயே பல நாட்களாக இறைவனை வணங்கிவந்தன. ஒருநாள் சிவலிங்கத்தின் அருகில் சாணம், கோமியம் கிடப்பதைக் கண்டு கலைமான் கோபம் கொண்டது. அப்போது அங்கு வந்த பசுவைக் கண்ட கலைமான், இறைவன் இருப்பிடம் அருகில் இப்படி அசுத்தம் செய்தது இந்த பசுதான் என்று அறிந்து கொண்டு, தன்னுடைய கொம்புகளால் பசுவைத் தாக்கியது. பசுவும் எதிர் தாக்குதல் நடத்தியது. இரு விலங்கு களுக்கும் பயங்கரமாக சண்டை நடைபெற்றது.

    அப்போது அவர்கள் இருவருக்கும் காட்சி கொடுத்த இறைவன், அவர்களை சமரசம் செய்து, இருவருக்கும் முக்தியை வழங்கினார்.

    அந்த நேரம் பார்த்து பசுவின் சொந்தக்காரனான சங்கரன் என்பவன் அங்குவந்து, இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ணாரக் கண்டு ஆனந்தம் அடைந்தான். இறைவன் முன்பு அமர்ந்தான். மற்ற பசுக்களில் இருந்து பாலை கறந்து இறைவனை நீராட்டினான். மலர் தூவினான். தான் கொண்டு வந்த கட்டுச் சோற்றை வைத்தும், பழங்கள், தேன், வாசனைச் சாந்து, குங்கிலியம் ஆகியவற்றைக் காணிக்கைப் பொருளாக வைத்தும் இறைவனை வணங்கினான். அவன் கண்ட காட்சியை ஊராரிடமும் கூறினான். ஊர் மக்களும் திரளாக வந்து இறைவனை வணங்கி நின்றார்கள்.

    கொன்றை மரத்தின் கீழ் இறைவன் வீற்றிருப்பதால் அவருக்கு ‘திருமலைக் கொழுந்தீசர்’ எனப் பெயர் பெற்றார். இந்தப் பகுதியில் கருநெல்லி மரத்தடியில் தேவியும், கங்கையும் இறைவனைக் காணத் தவமிருந்தனர். இறைவன் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனால் இங்குள்ள தேவிக்குத் ‘தவம் பெற்ற நாயகி’ என்ற பெயர் ஏற்பட்டது.

    திருக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தை நோக்கி செல்வோம். மிகப்பெரிய தெப்பக்குளம், அதை தாண்டி நம்மை முகப்பு வாசல் வரவேற்கிறது. உள்ளே நுழைந்தால் கொடிமர மண்டபம். அங்கே கோவில் உருவாக காரணமான சேத்தூர் ஜமீன்தார் ஆதி சின்மயத்தேவர், அவரது மனைவி மனோன்மணியம் ஆகியோரின் திருவுருவ சிலை வணங்கிய நிலையில் காணப்படுகிறது. அதையடுத்து கொலு மண்டபம், தியான மண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்ப கிரகம் என மண்டபங்களை தாண்டி உள்ளே நுழைந்தால் கருவறையில் சிவபெருமானை காண்கிறோம்.

    தானே முளைத்த லிங்கம். மூர்த்தி சிறியதுதான் ஆனால் கீர்த்தி பெரியது. ஆகாயத்தலமான இந்த ஆலயத்தில் எம்பெருமான் அம்மையப்பராக, நச்சாடை தவிர்த்தருளிய இறைவனாக கருணையோடு நமக்கு அருள்பாலிக்கிறார். கோவிலை சுற்றி தட்சிணாமூர்த்தி, விஷ்ணு - மகாலட்சுமி, பிரம்மா, சரஸ்வதி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். கன்னிமூல விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகன், சனீஸ்வரர், சண்டிகேஸ்வரர், பைரவர் உள்பட அனைத்து தெய்வங்களும் பிரமாண்டமாக உள்ளன.

    எந்த கோவிலிலும் இல்லாத வகையில் இந்த ஆலயம் வெளிச்சுற்று பிரகாரத்தில் உயரமான இடத்தில் திருக்கொழுந்தீஸ்வரரும், அருகே கண்கொடுத்த சிவன், கண் எடுத்த சிவனும் உள்ளனர். அங்கிருந்து இறங்கினால் அம்மன் தவம் இருந்த இடம் காணப்படுகிறது. அடுத்ததாக கோவிலில் தல விருட்சமான திருக்கொன்றை மரமும் இருக்கிறது. அருகில் மரத் தடியில் அம்மன் தவகோலம் நமக்கு வேண்டும் வரம் தருவதாகவே காணப்படுகிறது.

    கோவில் முன்புறம் நாகலிங்க மரம் உள்ளது. இந்த மரம் மிகவும் விசேஷமானதாகும். குழந்தை வரம் வேண்டி வருவோருக்கு உடனே வரம் கிடைக்க இந்த மரம் காரணமாகிறது. இந்த மரத்தில் உள்ள நாகலிங்க பூவை பறித்து கோவில் நிர்வாகம் மூலம் பூஜையில் வைத்து தருகிறார்கள். இதை உண்ணும் போது, குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    சோழனுக்கு கண்கொடுத்த கண் கண்ட தெய்வம் அம்மையப்பர் என்பதால், அவரை கண்டு வணங்கி கண்நோய் தீர்ந்து செல்பவர்களும் பலர். நச்சாடையை தன் மீது போர்த்த வைத்து பாண்டிய மன்னரை காத்தது போல, இவரை அண்டி வந்தவர்கள் கடன் மற்றும் தீராத நோய்களை தன்னகத்தே இழுத்து பக்தர்களை காக்க வல்லவராக இந்த சிவபெருமான் திகழ் கிறார். இதனால் பலதரப்பட்ட பிரச்சினை உள்ள மக்களும் இங்கு வந்து வணங்கி செல்கிறார்கள்.

    இக்கோவிலில் நடைபெறும் திருவிழாவில் சிவராத்திரி திருவிழா மிகச்சிறப்பானது. பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இவ்வாலயத்தை வணங்க பக்தர்கள் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள். இவ்வேளையில் பக்தர்கள் வந்த வாகனங்கள் சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு நிற்கும் காட்சி நம்மை பிரமிக்க வைக்கும்.

    ஆலயத்தில் பிரதோஷம், கார்த்திகை, மாத வெள்ளி, சோமாவாரம் மிகச்சிறப்பாக நடை பெறும். வைகாசி விசாகம் 10 நாள் திருவிழாவாக நடைபெறும். மாசி மகம் அன்று அம்மன், தபசு காட்சிக்காக தேவதானம் முருகன் கோவில் வந்து தவமிருப்பது விசேஷமானது. ஐப்பசி மாத திருவிழாவில் 6 நாள் கந்த சஷ்டியும், 7-வது நாள் திருக்கல்யாணமும் மிகச்சிறப்பாக நடைபெறும். தை பூசத்திருவிழாவும் இங்கு சிறப்பாக நடக்கிறது.

    பாண்டியனுக்கு அருள் செய்த இறைவன்

    வீரபாகு என்னும் பாண்டிய மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுவந்தான். அவன் ஓர் அந்தணனைக் கொன்ற காரணத்தினால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இத்தல இறைவனை வழிபட்டதால், மன்னனின் தோஷம் நீங்கியது. பின்னர் அந்த மன்னன், ‘சிவனே கதி’ என்று இங்கேயே அமர்ந்து விட்டான்.

    சோழநாட்டை ஆண்ட விக்கிரமசோழன் என்ற மன்னன், இந்த சமயத்தில் பாண்டியன் மீது போர் தொடுத்தான். சிவனே என்று கிடந்த பாண்டியனை சிறை பிடிக்க தனது படையை ஏவினான். ஆனால் சிவபெருமானே போர் வீரனாய்க் கோலம் பூண்டு, சோழனுடன் போரிட்டு பாண்டியனுக்குச் சேவகம் செய்து வெற்றியை பெற்றுத் தந்தார். இதனால் இறைவனுக்கு ‘சேவகத்தேவர்’ என்ற பெயரும் உண்டானது.

    பாண்டிய மன்னனிடம் நட்பு பாராட்டுவது போல, நச்சு தோய்ந்த ஆடை ஒன்றை தயாரித்து அனுப்பினான் சோழ மன்னன். அதற்கு முன்தினம் பாண்டியனின் கனவில் தோன்றிய இறைவன், “நாளை வரும் ஆடையை என் மீது போற்று..” என்று கூறினார். மன்னனும் அவ்வாறே செய்தான். சிவன் மீது போற்றப்பட்ட நச்சு தோய்ந்த ஆடை, பேரொளியுடன் எரிந்து சாம்பலானது. இதனால் இறை வனுக்கு ‘நச்சாடை தவிர்த்தருளிய தேவர்’ என்ற பெயரும் வந்தது.

    அந்த சமயத்தில் சோழ மன்னனின் கண் பார்வை பறிபோனது. தன் தவறை உணர்ந்த சோழ மன்னன், பாண்டியன் இறைவனுக்கு கட்டிய ஆலயத்திற்கு பல திருப்பணிகளைச் செய்தான். தான் தங்கிய பாசறைக்கு ‘விக்கிரம பாண்டியன்’ என்று பெயரிட்டு, ‘சோழபுரம்’ என்ற ஊரை அமைத்தான். இதையடுத்து சோழனுக்கு கண்பார்வை வந்தது. சோழனின் கண் எடுத்த சிவனும், கண் கொடுத்த சிவனும், திருக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்திற்கு அருகேயே இருக்கின்றனா். தனக்கு கண் கிடைத்ததன் காரணமாக, சிவனுக்கு சேத்தூரில் ஒரு ஆலயத்தை சோழ மன்னன் கட்டினான். அந்த ஆலயம் ‘திருகண்ணீசர் ஆலயம்’ என்று அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - புளியங்குடி சாலையில் அமைந்திருக்கிறது தேவ தானம் என்ற ஊா். கோவில் இருப்பது வனப்பகுதி என்பதால் ஊரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும். எப்போதும் ஆட்டோ வசதி உண்டு. விழாக் காலங்களில் மட்டும் பஸ் வசதிகள் இருக்கும்.

    முத்தாலங்குறிச்சி காமராசு
    Next Story
    ×