search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்
    X
    திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்

    திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்

    திருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தலத்தில் நவக்கிரகங்கள் மேல் எம்பெருமான் பார்வைப்படுவதால் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நிவர்த்தியாவது சிறப்பம்சமாகும். இனி, இத்தலத்தின் வரலாற்றை பார்ப்போம்.
    நாகை மாவட்டம் திருக்கண்ணபுரத்தில் பிரசித்திபெற்ற சவுரிராஜப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற வைணவ திருத்தலங்கள் திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது. அவை 108 வைணவ திருப்பதிகள் ஆகும். சோழ நாட்டில் 40 திவ்ய தேசங்கள் உள்ளன. 100-க்கும் மேல் இருநூறுக்குள் பாசுரங்கள் பெற்றவை ஆகும். இவற்றுள் 129 பாடல்களால் போற்றப்படும் பெருமை திருக்கண்ண புரத்துக்கே உண்டு. ஸ்ரீரங்கம், திருப்பதி ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக போற்றப்படும் இந்த திவ்யதேசம் மங்களாசாசனம் செய்த ஆறு திவ்ய தேசங்களில் ஒன்று.

    இந்த வைணவ தலத்தில் நவக்கிரகங்கள் மேல் எம்பெருமான் பார்வைப்படுவதால் வழிபடுவோரின் சகல கிரக தோஷங்களும் நிவர்த்தியாவது சிறப்பம்சமாகும்.
    இனி, இத்தலத்தின் வரலாற்றை பார்ப்போம்.

    முனியதரையன் என்பவர் சோழ மன்னனது அபிமானம் பெற்று இருபது நாடுகளுக்கு தலைவராக மன்னனுக்கு கப்பம் வாங்கி கொடுக்கும் பணியில் இருந்தார். அவர் சவுரிராஜப்பெருமாளிடம் ஆழ்ந்த பக்தி உடையவர். திருக்கண்ணபுரத்திலேயே வாழ்ந்து பெருமானுக்கு கைங்கர்யங்கள் செய்து வந்தார். அவருக்கு விரகாதிபோகம் என்ற காதற்கணிகை ஒருத்தி அவரிடம் பேரன்பு கொண்டு வாழ்ந்து வந்தாள். ஒரு வருடம் நாட்டில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது.

    முனையதரையர் தாம் சேகரித்த கப்பம் முழுவதும் கோவிலில் திருவாராதனத் துக்கும் அடியார்க்கும் அன்னம் வழங்குவதிலும் செலவிட்டார். இதுகேட்ட சோழ மன்னன் , தனக்குரிய பொருளை அவர் தமது கணிகைக்கு கொடுத்து விட்டார் என்று சிறையில் அடைத்தார். அந்த கணிகை, சவுரிராஜப் பெருமாளை வணங்கி 5 நாட்களுக்குள் தன் அன்பன் சிறையில் இருந்து மீளாவிடில் தீயில் பாய்ந்து உயிர்விடுவதாக சபதம் செய்தாள்.

    ஸ்ரீசவுரிராஜப் பெருமாள் மன்னன் கனவில் தோன்றி, முனையதரையரை விடுவிக்குமாறு கூறினார். சிறையில் இருந்து விடுதலை பெற்ற முனையதரையர் திருக்கண்ண புரத்துக்கு சென்றார். தமது கணிகை தீயில் புகுந்தருவாயில் அவளை அணைத்து வாழ்த்தினார். அன்றிரவு அவள் சமைத்த பொங்கல் அவருக்கு அ-மு-தமாயிருந்தது. இத்தகைய அடிசில் பெருமானுக்கு உரியது என்று பேரார்வத்துடன் மானசீகமாக அதை நிவேதனம் செய்து பின்பு உண்டார்.

    மறுநாள் காலையில் பெருமாள் திருமேனியில் பொங்கலுடன் நெய் வடிந்தொழுவதை கண்டு அர்ச்சகர்கள் திடுக்கிட்டனர். பின்பு நடந்த பெருமாளின் பொருளை போற்றினர். அன்று முதல் பெருமாள் நாள்தோறும் அர்த்தசாமத்தில் (இரவு 9 மணி) பொங்கல் வைத்து செய்ய கட்டளையை முனையதரையர் நிறுவினார்.

    சவுரிராஜன் சவுரிமுடி

    உற்சவமூர்த்தி எப்போதும் தலையில் சவுரி அணிந்திருக்கிறார். ஒருநாள் பெருமாளை சேவிக்க வந்த சோழ மன்னனுக்கு பிரசாதமாக கொடுக்க பூமாலை இல்லாமல் தவித்த அர்ச்சகர் தாம் சற்று முன்பு தேவதாசிக்கு அனுப்பியிருந்த புஷ்பத்தை கொண்டு வரச்செய்து அதனை மன்னனுக்கு அளித்தார். அதில் கருப்பான முடி இருக்க கண்ட மன்னன் அர்ச்சகரை கடிந்தான். அர்ச்சகரும் பெருமானுக்கு எப்போதும் கழற்கற்றை உண்டு. அதில் அணிவித்த மாலை இது என்றார். இதனால் கோபம் கொண்ட மன்னன் மறுநாள் காலை வரும்போது முடி இருப்பதை காட்ட வேண்டும் என்று கூறி சென்று விடுகிறார். அர்ச்சகரை சோழமன்னனது கடுந்தண்டனையில் இருந்து விடுவிக்க பெருமாள் கருத்த மயிர்கற்றையுடன் காட்சியளித்தார்.

    திருநெற்றியில் தழும்பு

    உற்சவமூர்த்தியின் திருமேனியில் வலப்புருவத்துக்கு மேல் சிறு தழும்பு இன்றும் காணலாம். முன்காலத்தில் அன்னியர் திருமதில்களை இடித்து வந்தபோது திருக்கண்ணபுரத்து அரையர் மனம்புழுங்கி பெருமானே.. பொருவரை முன்போர் கையிலிருந்த பொன்னாழி மற்றொரு கை என்றது பொய்த்ததோ என்று கையில் இருந்த தாளத்தை வீசி எறிந்தார். அது பெருமானின் நெற்றியில் பட்டது. அந்த தழும்பு இன்றும் காணலாம்.

    நம்மாழ்வாரின் வாக்குப்படி திருக்கண்ண புரம் திருத்தலம் பூலோக வைகுந்தம் என்பதால் இங்கு தனியே வாசல் கிடையாது.

    ஆஞ்சநேயர் சன்னதி


    இக்கோவிலுக்கு எதிரில் உள்ள நித்யபுஷ்கரணியின் பிரதான படிக்கட்டின் மேல்புறம் தீர்த்தக்கரை ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பதால் இவரின் சக்தி அளவிட முடியாது. தெற்கு நோக்கி அஞ்சலி ஹஸ்தராக நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கும் இவர் வரப்பிரசாதி என்று பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

    உற்சவங்கள்

    பிரம்மோற்சவம்: இது வைகாசி மாதம் பவுர்ணமி திதியில் முடிவுறும். துவஜாரோகணம் முதல் விடையாற்றி முடிய 12 நாட்கள் வாகனாதிகளுடன் விமரிசையாக நடைபெறும். இந்த உற்சவம் தல புராணத்தில் வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரத்தில் வஸ¨வின் பெண்ணான பத்மினி நாயகியை பெருமாள் மணம்புரிநந்து கொண்டதாக காண்பதால் அந்த கல்யாண உற்சவமே தற்போது பிரம்மோற்சவமாக நடந்து வருகிறது.

    மகோத்சவம்:- இது மாசி மாதம் பவுணர்மி திதி 9-ம் நாள் சமுத்திரத்தில் தீர்த்த வாரியுடன் நடை பெறுகிறது. துவஜா ரோகணம் இந்த உற்சவத் திலும் உண்டு. வாகனாதிகளுடன் விமரி சையாக நடைபெறும்.

    மார்கழி அத்யன உற்சவம்:- இது பெருமாள் அத்யன உற்சவம் முடிந்து பின் 9 நாட்கள் நடைபெறும். இதில் ஏகாதசி தொடங்கி கண்ணப்புரத்தாயார் பிரகார புறப்பாடு கடைசி நாளாகிய அமாவாசை அன்று பெருமாள் நாச்சியார் திருக்கோலத்திலும் பிரகாரம் புறப்பாடு, மறுநாள் பெருமாள் சன்னதியில் இருவருக்குமான சேர்ந்த உற்சவம் நடைபெறும்.

    மாத உற்சவங்கள்: மாதந்தோறும் தமிழ் மாதப்பிறப்பு, ஏகாதசி, அமாவாசை, ஹஸதம் இவற்றில் பஞ்சவர்வ புறப்பாடு பிரகாரத்தில் நிகழும். இந்த ஐந்து நாட்களிலே தான் பெரிய பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யக்கூடும். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் கண்ணபுரத்தாயார் புறப்பாடு உண்டு. திவ்ய தேசங்களில் ஓன்றாக கருதப்படும் திருக்கண்ணபுரம் பெருமாள் கோவிலுக்கு எப்போதும் பக்தர்கள் வருகை இருக்கும். குறிப்பாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நன்னிலம் வழியாக நாகை மார்த்தத்தில் உள்ளது. நன்னிலத்தில் இருந்து திருப்புதலூர் என்ற ஊரில் இருந்து தெற்கே 1 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.

    புரட்டாசி மாத வழிபாடு

    மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தை போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் திருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்கி வருகிறது.

    பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமான மாதமாகும். சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கம் தான். இதில் புரட்டாசி மாத சனிக்கிழமையில் ஒரு விசேஷம் உள்ளது. இந்த நாளில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக சனியினால் கெடுபலன்கள் குறைய பெருமாளை பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    திருக்கண்ணப்புரத்து சவுரிராஜப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறும். அன்று முழுவதும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறும். அதுமட்டுமின்றி ஞாயிறு அன்றும் பெருமாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. இக்கோவிலுக்கு தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசித்து செல்கின்றனர். 
    Next Story
    ×