search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்
    X
    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்

    திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்

    கடமையிலிருந்து நழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே “கீதோபதேசம்” செய்த கண்ணன் வீற்றிருக்கும் தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்.
    கடமையிலிருந்து நழுவ நினைத்த அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து உலகத்திற்கே “கீதோபதேசம்” செய்த கண்ணன் வீற்றிருக்கும் தலம் சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில். இக்கோவிலானது வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும் வேங்கடவன், தொண்டைமானுக்கு பார்த்தசாரதியாக சேவை அளித்த தலமும் ஆகும். தலத்திற்கு பஞ்ச வீரத் தலம் என்ற பெயரும் உண்டு.

    கோவிலில் ஐந்து சந்நிதிகள் இருக்கின்றன. மூலசந்நிதியில் உள்ள மூலவரின் நாமம் வேங்கட கிருஷ்ணன் ஆகும். இவருடைய ஒரு புறத்தில் ருக்மணி தாயாரும் பலராமரும் மறுபுறத்தில் சாத்தகி, பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் கிழக்கு முகமாக மூலவர் சேவை தருகின்றார். தன்னுடைய மனைவி, தமையன், இளையோன், புதல்வன், பேரன் என்று முத்தலைமுறையினருடன் சேவை தருவது தனிச் சிறப்புடையது ஆகும்.

    பாரதப் போருக்கு முன்பாக கவுரவரின் தலை மகனான துரியோதனனுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது இல்லை என்ற வாக்கிற்கு ஏற்ப இவரது வலது கரத்தில் சக்கராயுதம் காணப்படவில்லை. ஆனால் இடது கையில் இருக்கும் சங்கானது வலது கரத்தில் இருக்கிறது. தேரோட்டியான பார்த்தசாரதி முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். ஆனால் முகத்தில் விழுப்புண்கள் உள்ளன. இவை பாரதப் போரின் போது ஏற்பட்டவை ஆகும். இடைப் பகுதியில் வாள் ஒன்று தொங்குகிறது. இன்னொரு கையில் சாட்டை காணப்படுகின்றது. இவ்வாறாக தேரின் முன்பாக நின்ற கோலத்தில் தோன்றுகின்றார்.

    தொண்டைமான் சக்கரவர்த்தியின் பிரார்த்தனைக்கு இணங்க வேங்கடவன் இங்கு சேவை தந்தருளிய காரணமாய் வேங்கட கிருஷ்ணன் என்ற திரு நாமம் பெற்றார். இரண்டாம் சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு மூலவர் அரங்கநாதன் கிடந்த கோலத்தில் சேவை தருகிறார். இவருக்கு மனநாதன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. தாயாருக்கு வேதவல்லி என்று பெயர். திருவல்லிக்கேணியில் முன்பொரு காலத்தில் துளசிச்செடிகள் மண்டிக் கிடந்தனவாம்.

    இப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகவும் இருந்திருக்கிறது. இங்கு ஒரு வந்தன மரத்தின் அடியில் தாயார் குழந்தை வடிவெடுத்துத் தோன்றியதாகவும் அக்குழந்தையை முனிவர் எடுத்துச் சென்று வேதவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்ததாகவும் நாராயணன் ராஜ குமாரனாஉருவெடுத்து வந்து தாயார் வேதவல்லியை மணம் புரிந்து தலத்திலேயே தங்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.

    மூன்றாவது சந்நிதியில் தனது வாகனமாகிய கருடன் மீது அமர்ந்தபடி வரதராஜ பெருமாள் சேவை தருகின்றார்.இவரது மறுபெயர் தேவப்பெருமாள் ஆகும். கிழக்கு நோக்கிய சந்நிதியாகும். நான்காவது சந்நிதியில் மேற்குப்புறமாக நோக்கியபடி அழகிய சிங்கரான நரசிம்மர் வீற்றிருக்கும் கோலத்தில் மூலவர் சேவை தருகிறார். நரசிம்மரின் சந்நிதிக்கு அடுத்த படியாக ஆண்டாள் சந்நிதி உள்ளது.

    ஐந்தாவது சந்நிதியில் தெற்கு நோக்கியபடி சக்ரவர்த்தி திருமகனாக ராமர் நின்ற கோலத்தில் சேவை அளிக்கின்றார். மூலவருடன் சீதாப் பிராட்டியார், பரதன், லட்சுமன், சத்ருக்கன், அனுமன் ஆகியோரும் சேவை தருகின்றனர். இந்த ஐந்து சந்நிதிகளிலும் உள்ள மூலவர்கள் ஐந்து பேரும் மங்களாசாசனம் பெற்றிருப்பதால் தலத்திற்கு பஞ்சமூர்த்திதலம் என்ற பெயரும் உண்டானது.

    திருமங்கை ஆழ்வார் பத்து பாசுரங்களாலும் பேயாழ்வார் ஒரு பாசுரத்தாலும், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரத்தாலும் மங்களாசாசனம் செய்துள்ளனர். கோவிலில் உள்ள அல்லிக்கேணி புஷ்கரணி தீர்த்தத்தில் இந்திர, கோம, மீன அக்னி, விஷ்ணு தீர்த்தங்கள் ஐந்தும் சூழ்ந்திருப்பதாக கூறப்படுவது உண்டு. கோவில் குளத்தில் அல்லி மலர்கள் அதிகமாய் இருந்தபடியால் அல்லிக்கேணி என்ற பெயர் பெற்றது. கோவிலில் முன் மண்டபங்கள் முதலில் உள்ளன. அடுத்து மகா மரியாதை மண்டப வாயில் உள்ளது. இதன் மீது ராஜகோபுரம் அமைந்துள்ளது.

    ஐந்து நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட கோபுரம் சில வருடங்களுக்கு முன்பாக புதுப்பிக்கப்பட்டது. கோவிலில் உள்ள ஐந்து விமானங்கள் ஆனந்த விமானம், பிரணவ விமானம், புஷ்பக விமானம், சேஷ விமானம், தைவிக விமானம் ஆகியவை ஆகும். புராண காலத்தில் இத்தலம் “பிருந்தாரயண்ய சேத்திரம்” என அழைக்கப்பட்டது. மகாபாரத யுத்தத்தின் போது பஞ்ச பாண்டவர்களில் “பார்த்தனாகிய” “அர்ஜுனனுக்கு” அவனின் ரதத்தை செலுத்தும் “சாரதியாக” பகவான் கண்ணன் சேவை புரிந்தார். அந்த கண்ணனே இங்கு கோவில் கொண்டுள்ளதால் இந்த இறைவனுக்கு “பார்த்தசாரதி” பெருமாள் என பெயர் ஏற்பட்டது.

    கேணி என்றால் குளம் என்றும் ஒரு பொருள் உண்டு. முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் “அல்லி” மலர்கள் நிறைந்திருந்ததால் இந்த ஊர் “திரு அல்லிக்கேணி” என்று அழைக்கப்பட்டது. காலப் போக்கில் அது திருவல்லிக்கேணி என்றானது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக இது இருந்தாலும் இக்கோவிலை 7-ம் நூற்றாண்டில் முதன் முதலாக நன்கு வடிவமைத்து கட்டியவர்கள் “பல்லவ” மன்னர்கள் ஆவர். பின்னாளில் “சோழர்களும், விஜயநகர பேரரசர்களும் இக்கோவிலை மேம்படுத்தி கட்டியிருக்கின்றனர்.

    ஆழ்வார்களில் “திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம் ஆகும். இது 108 திவ்ய தேசங்களில் முக்கியமான கோவில்களில் ஒன்றானதாகும். புகழ் பெற்ற மனிதர்களான சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார், கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் போன்றோர் அவர்களின் காலத்தில் இக்கோவிலில் வந்து வழிபட்டுள்ளனர்.

    இக்கோவிலின் மூலவரான பார்த்தசாரதி பெருமாளின் சிலை 9 அடி உயரம் கொண்டது. அனேகமாக பாரதத்தில் இந்த கோவிலின் பெருமாள் மட்டுமே முகத்தில் மீசையுடன் காட்சி தருகிறார். இங்கு பார்த்தசாரதி பெருமாள் தன் மனைவி மற்றும் சகோதரர் என குடும்பம் சகிதமாக இருக்கிறார். பொதுவாக எல்லா பெருமாள் விக்கிரகங்களும் கையில் ஏதேனும் ஒரு ஆயுதம் ஏந்தியிருப்பதை காணலாம். ஆனால் இத்தல கடவுளான பார்த்தசாரதி பெருமாள் தனது கையில் ஆயுதம் ஏதும் இன்றி இருப்பது கூடுதல் சிறப்பு.

    தனிச் சன்னதிகள் :

    * அத்திரிமுனிவரின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன் அழகிய சிங்கராகக் காட்சியளிக்கிறார். இதனைத் தெள்ளிய சிங்கர் எனச் சாற்றப்படுகிறது. இவர் நின்ற திருக்கோலத்தில் மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். துளசிங்கர் என மருவிற்று.

    * பிருகு முனிவருக்காக ஸ்ரீரங்கநாதர், மன்னாதன் புஜங்கசயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். தாயார் வேதவல்லி.

    * மதுமான் மகரிஷிக்காக ஸ்ரீராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், பரதன், சத்துருக்கன், ஆஞ்சநேயர் ஆகியோருடன் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.

    * சப்தரோமர் ரிஷிக்காக வரதராஜர், தேவப்பெருமாள் கருட வாகனத்தின் மீது கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.

    ஆண்டாள், கூரத்தாழ்வார், முதலியாண்டான், மணவாள மாமுனிகள், ராமானுஜர், தேசிகர், திருக்கச்சி நம்பிகள் ஆகியோர்களுக்கு தனிச் சன்னதிகள் உள்ளன.

    சுமதி என்ற மன்னன் திருவேங்கடமலையில் வழிபடப் பெருமாள் இத்தலத்தில் பார்த்தசாரதியாய் தரிசனம் தந்தார். பிருகு முனிவரின் தவச்சாலைக்கு அருகில் திருமகள் குழந்தை வடிவில் தோன்ற முனிவர் அதை வளர்த்து வந்தார். திருமால் இவளே தமது பிராட்டி என்று அரசகுமாரனாகத் தோன்றி முன்னே நிற்கப் பிராட்டி, இவரே என் கணவர் என்று கூறினாள். அதனால் மந்நாதர் என்னும் பெயர் வழங்கலாயிற்று.

    கோவிலில் உள்ள நரசிம்மர் சந்நிதியில் வழிபட்டு அந்த நரசிம்மருக்கு உரிய சங்கு தீர்த்தத்தை நமது முகத்தில் தெளித்து, அத்தீர்த்ததை அருந்தினால் நம்மை பீடித்திருக்கும் துஷ்ட ஆவிகள், செய்வினை, பில்லி, சூனியம், ஏவல், தேவையற்ற பயங்கள் போன்ற பாதிப்புகள் நீங்கும். பார்த்தசாரதி பெருமாளை வணங்குவதால் ஒருவரின் ஆளுமை திறனும் மேம்படும். கல்வியில் சிறப்பு, நல்ல இல்வாழ்க்கை துணை அமைய இக்கோவிலில் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் பெருமாளுக்கு சர்க்கரை பொங்கலை நிவேதனமாக அளித்து வழிபடுகின்றனர்.

    குடும்பத்துடன் கிருஷ்ணர்

    வேங்கடகிருஷ்ணனுக்கு அருகே அதே கம்பீரத்தோடு, கூர்மையான நாசியும் புன்சிரிப்பு தவழும் உதடும் வலது கையில் குமுத மலரும் கொண்டு ருக்மணி தேவி இருக்கிறார். ருக்மணி தேவியின் வலப்பக்கத்தில் உழு கலப்பையோடு பலராமர் காட்சி தருகிறார். வேங்கடகிருஷ்ணரின் இடப்பக்கம் தம்பி சாத்யகியும், அவருக்கு அருகே தெற்கு நோக்கி மகன் பிரத்யும்னனும், பேரன் அநிருத்தனும் காட்சி தருகிறார்கள். குடும்பத்துடன் இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினால் குடும்ப ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை.

    வேதவல்லித்தாயார்

    பார்த்தசாரதி சன்னதிக்கு வலது புறத்தில் வேதவல்லித் தாயாரின் சன்னதி அமைந்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வேதவல்லித் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். பெருமாளுக்கு நைவேத்தியத்தில் கடலை எண்ணை, மிளகாய் சேர்ப்பதில்லை. இதற்கு பதிலாக நெய் மற்றும் மிளகு சேர்க்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது, பகல் பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரையில் 5 நாட்கள் மட்டும் மீசை இல்லாமல் தரிசிக்கலாம். உற்சவர் பார்த்தசாரதிக்கு வெள்ளிக்கிழமைகளில் விசேஷ அபிஷேகம் நடக்கும் போது மட்டும் மீசையுடன் அலங்காரம் செய்கின்றனர்.
    Next Story
    ×