search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில்
    X
    திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில்

    திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவில்

    திவ்யதேசங்கள் எனப்படும் 108 வைணவ தலங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    திவ்யதேசங்கள் எனப்படும் 108 வைணவ தலங்களில் குமரி மாவட்டத்தில் உள்ள திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் நாகர்கோவிலில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நாகர்கோவில் - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இடதுபுறமாக திரும்பி 2 கிலோ மீட்டர் சென்றால் கோவிலை அடையலாம். வயல்களும், தோட்டங்களும் சூழ்ந்த பழையாற்றங்கரையில் கோவில் அமைந்துள்ளது.

    திருவாழ்மார்பன் பெயர்காரணம்

    இந்த கோவிலில் திருமாலின் அவதாரமான திருவாழ்மார்பன் அருள்பாலிக்கிறார். சாமிக்கு திருவாழ்மார்பன் என்ற பெயர் வந்தது எப்படி? என்பதை பக்தர்கள் அறிவது அவசியமான ஒன்றாகும்.

    நரசிம்மர் இரணியரை வதம் செய்த பின் தன் சினம் மாறாமல் நின்றார். அவரது ஆவேசம் அடங்கவில்லை. பிரபஞ்சம் நடுங்கியது. இரணியன் மகனான பிரகலாதன் நரசிம்மனை துதித்தான். அப்போதும் வேகம் அடங்கவில்லை. லட்சுமி தாமரை மலர் மீது அமர்ந்து தவம் செய்தாள். பெருமாள் அமைதி ஆனார். லட்சுமியை அவரது மார்பில் அமர்த்திக் கொண்டார். அந்த கோலத்தில் குடிகொண்டது தான் இந்த கோவில் என்கிறார்கள். லட்சுமியை மார்பிலே இருத்திக் கொண்ட மார்பன் திருவாழ்மார்பன் ஆனார். திருவாகிய லக்குமி தன் பதியாகிய விஷ்ணுவை சார்ந்து இவ்வூரில் தங்கியதால் இவ்வூர் திருப்பதிசாரம் என அழைக்கப்பட்டது. இறைவியாக கமலவல்லி நாச்சியார் உள்ளார்.

    புரட்டாசி சனி வழிபாடு


    பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு விசேஷமானது. அதேபோல திருவாழ்மார்பன் கோவிலிலும் விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன.
    வழக்கமாக கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு தான் திறக்கப்படும். புரட்டாசி சனிக்கிழமைகளில் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக அதிகாலை 3 மணிக்கே நடை திறக்கப்படுகிறது. மூலவருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால் உற்சவருக்கு அபிஷேகம் நடைபெறும். மூலவர் திருவாழ்மார்பனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    காலை 5.30 மணிக்கு உஷ பூஜை, 9 மணிக்கு நிஷ்டான பூஜை, 10.30 மணிக்கு உச்ச பூஜை நடைபெறும். அன்றைய தினங்களில் மதியம் ஒரு மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மாலையில் 5 மணிக்கு நடை திறக்கப்படும். 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, 8 மணிக்கு அத்தாள பூஜை நடைபெறும். இரவு 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    கருட சேவை

    கோவிலில் நடைபெறும் கருட சேவை விசேஷமானது. இந்த ஆண்டு புரட்டாசி மாதம் 4 சனிக்கிழமைகள் வருகின்றன. இந்த 4 சனிக்கிழமைகளிலும் இரவு 9 மணிக்கு கருடசேவை நடைபெறும். முதல் 3 சனிக்கிழமைகளில் சிறிய கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வருவார். கடைசி சனிக்கிழமை அன்று பெரிய வெள்ளிக்கருட சேவையில் சுவாமி எழுந்தருளுவார்.

    பின்னர் மேள, தாளம் முழங்க கோவிலை சுற்றி வருவார். கருட சேவை நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் கருடசேவையை தவிர்த்து வேறு எந்த வித வாகன பவனியும் இங்கு நடைபெறுவது இல்லை.

    புரட்டாசி சனிக்கிழமையை போல மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியும் விசேஷமானது. அன்று அதிகாலை கோவிலில் பூஜைகள் செய்யப்பட்டு சுவாமி பரமபதவாசல் வழியாக எழுந்தருளுவார்.

    ஊஞ்சல் சேவை


    ஆவணி மாதம் ஓணம் திருநாளன்று இரவு சுவாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும். சித்திரை மாதம் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 10 நாள் திருவிழா தொடங்கி நடைபெறும். 5-ம் திருவிழாவன்று கருடசேவை, 9-ம் நாள் தேரோட்டம். சுவாமி தேர் மட்டும் ரத வீதியை சுற்றி வலம் வரும். விஜயதசமியில் திருவாழ்மார்பனின் தங்கையான திருப்பதிநங்கை வெள்ளை குதிரை வாகனத்தில் அம்பெய்யச் செல்லும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும்.

    சுவாமிக்கு வழிபாடு நைவேத்யங்களில் அரவணை, பால்பாயாசம், பொங்கல், புளியோதரை, அப்பம் குறிப்பிடத்தக்கவை. பஞ்சகவ்ய தீர்த்தம் பூஜைக்கு பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற துலாபார நேர்ச்சை செலுத்துகிறார்கள். நிஷ்டான பூஜை வழிபாட்டிலும் பங்கேற்கிறார்கள்.

    அமர்ந்த கோலத்தில் மூலவர்

    கோவிலில் உள்ள மூலவர் வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். மூலவர் உயரம் 7 அடி உயரம். நான்கு கரங்கள், பின் கைகள் சங்கு, சக்கரம் ஏந்தியவை. முன் இரண்டும் அபய வரத, முத்திரை காட்டுபவை. கழுத்தில் லெட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கம் காணப்படுகிறது. மூலவர் கடுசர்க்கரை படிமம். அதாவது கடுகு, சர்க்கரை மற்றும் மலை தேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் அபிஷேகம் கிடையாது. மூலவரின் பின் சுவரில் அத்திரி, வசிஷ்டர், காசியபர், பரத்வாசர், விசுவாமித்திரர், ஜமதக்னி, கவுதமர் ஆகிய ரிஷிகள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளனர்.

    பரிவார தெய்வங்கள்

    நமஸ்கார மண்டபத்தின் வடபுறம் விஷ்வசேனர், நடராஜர், நம்மாழ்வார் ஆகியோர் பரிவார தெய்வங்களாக சிறு சன்னதிகளில் உள்ளனர். விஷ்வசேனர் நான்கு கைகளுடன் சங்கு சக்கரம் ஏந்தி விஷ்ணுவின் அம்சமாக உள்ளார். இது நின்ற கோல கல்படிவம். மூலவருக்கு அணிவித்த மாலையை விஷ்வசேனருக்கு அணிவித்தல் என்ற நடைமுறை இக்கோவிலில் இல்லை.

    விஷ்வசேனர் சன்னதியை அடுத்து விழாக்கால படிமங்கள் இருக்கும் சன்னதி உள்ளது. இதில் உமா மகேஸ்வரர், நடராஜர், காரைக்கால் அம்மையார், சிவகாமி, சாஸ்தா ஆகியோரின் செப்பு படிமங்கள் உள்ளன. அடுத்து நம்மாழ்வார் இருக்கிறார். இடது கை மடியிலும், வலது கை சின் முத்திரையுடன் பத்மாசனம் இட்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். நமஸ்கார மண்டபத்தின் தென்மேற்கில் ராமர், லெட்சுமணர், சீதை ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. அருகே விபீஷனர், அகத்தியர், குலசேகர ஆழ்வார் உள்ளனர். அதன் எதிரே கருடாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது.

    கோவில் அமைப்பு

    கோவில் முன் வாசலை அடுத்து இருப்பது கிழக்கு பிரகாரம். இது மகா மண்டபம் என அழைக்கப்படுகிறது. இம்மண்டப வேலை திருவிதாங்கூர் அரசரான ஸ்ரீமூலம் திருநாள் காலத்தில் (1931-1948) முடிந்தது. இந்த மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. 40 அடி உயரமுள்ள இக்கொடிமரம் செம்புத்தகடு வேயப்பட்டது. இதன் உச்சியில் தங்கமுலாம் பூசப்பட்ட கருடனின் விக்ரகம் உள்ளது. இங்குள்ள தீர்த்தம் லட்சுமி தீர்த்தம். விமானம் இந்திர கல்யாண விமானம் என்ற அமைப்பினை சேர்ந்தது.

    திருப்பதிசாரம் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஊர். நம்மாழ்வாரின் தாய் திருவடைய நங்கை பிறந்த தலமாகும். குலசேகர ஆழ்வார் கி.பி. 8-ம் நூற்றாண்டில் இத்தலத்தை புதுப்பித்து இறைவனுக்கு வாகனம், கோவில் மதில் போன்ற திருப்பணிகள் பலவும் செய்து கொடிக்கம்பத்தையும் நிர்மாணித்து விழா எடுத்துள்ளார்.

    தலபுராணம்

    நம்மாழ்வாரின் தாய், நம்மாழ்வாரை ஈன்ற 41-ம் நாள் (வைகாசி விசாகத்தன்று நம்மாழ்வார் பிறந்தார்) குருகூரிலுள்ள ஆதிநாதன் சன்னதியில் இட்டார். அந்த குழந்தை மெல்லத்தவழ்ந்து கோவிலிலுள்ள புளியமரப் பொந்திற்குள் புகுந்தது.

    இதைக் கண்டு அனைவரும் வியந்தது நிற்க, பொந்தில் இருந்து குழந்தை யோக முத்திரையுடன் பத்மாசன யோகத்தில் அமர்ந்து மதுரகவி ஆழ்வாருக்கு திருவாய்மொழி அருளியதாக தல புராணம். இந்த இடத்தில்தான் ஆஞ்சநேயரின் பிரார்த்தனைக்கு இணங்க அகஸ்தியர் ராமாயணம் அருளியதாகவும் சொல்லப்படுகிறது. பெற்றோர்கள் இம்சையில் இருந்து விடுபட, பாவங்களில் இருந்து குடும்பத்தைக் காப்பாற்ற வறுமையில் இருந்து தப்ப, ஆரோக்கியத்தை குலைக்கும் நோய்களில் இருந்து விலக திருப்பதி சாரம் வந்து நம்மாழ்வாரை ஆட்கொண்ட திருக்குறளப்பன் சன்னதியில் மனமுருகி பிரார்த்தனை செய்தால் போதும்.

    திருவாழ்மார்பனை வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும், குழந்தையில்லாத பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    பஸ் வசதி

    திருப்பதிசாரம் கோவிலுக்கு செல்ல நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. ரெயிலில் வருபவர்கள் அங்கிருந்தே கோவிலுக்கு செல்ல ஆட்டோ, கார் வசதியும் உள்ளது. இல்லாவிட்டால் அண்ணா பஸ்நிலையம் வந்து பஸ்சில் சென்று திருவாழ்மார்பனை தரிசிக்கலாம்.

    கோவில் போன்: 04652- 282495.
    Next Story
    ×