search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோவில்
    X
    கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோவில்

    கோவிலடி அப்பால ரெங்கநாதர் கோவில்

    108 திவ்ய தேச கோவில்களில் 8-வது திவ்ய தலமாகவும். பஞ்சரங்க கோவில்களில் இரண்டாவது இடமாக அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் கோவிலடியில் எழுந்தருளியிருக்கும் அப்பால ரெங்கநாதர்.
    108 திவ்ய தேச கோவில்களில் 8-வது திவ்ய தலமாகவும். பஞ்சரங்க கோவில்களில் இரண்டாவது இடமாக அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் கோவிலடியில் எழுந்தருளியிருக்கும் அப்பால ரெங்கநாதர்.

    கல்லணை- திருக்காட்டுப் பள்ளி சாலையில் கோவிலடி கிராமத்தில் காவிரி கரையோரத்தில் தரைமட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது அப்பால ரெங்கநாதர் கோவில்.

    கடந்த காலத்தில் துர்வாச முனிவரின் கடும் கோபத்திற்கு ஆளான உபமன்யு என்ற மன்னன் தன் நாடு நகரங்களை இழந்தான். செய்வது அறியாமல் திண்டாடிய உபமன்யுதன் சாபம் தீர தனக்கு சாபம் அளித்த துர்வாச முனிவரிடமே சரண் அடைந்து சாபம் தீர வழி வேண்டினார். துர்வாச முனிவர் உபமன்யு வின் சாபம் தீர அன்னதானம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

    இதன்படி அன்னதானம் செய்ய கோவிலடி பகுதியில் தங்கியிருந்து அன்னதானம் செய்து வந்தார். அன்னதானம் செய்து வந்த ஒரு நாளில் வயதான அந்தணர் ஒருவர் மன்னன்முன் தோன்றி அன்னம் கேட்டார். தயாரித்து இருந்த உணவு அனைத்தையும் ஒருசேர உண்ட முதியவர் மீண்டும் உணவு கேட்டார்.

    இதை கண்டு வியப்படைந்த மன்னர் முதியவரிடம் மன்னிப்பு கேட்டு தங்கள் பசியாற இன்னும் என்ன வேண்டும் என்று கேட்க. முதியவர் ஒரு குடம் அப்பம் வேண்டும் என்று கேட்டார். அப்போது தான் வந்திருக்கும் முதியவர் பெருமாளே என்று எண்ணி விரைந்து அப்பம் தயாரித்து குடத்தில் இட்டு முதியவரிடம் அளித்தார். அப்பம் நிரம்பிய குடத்தை உபமன்யுவிடம் இருந்து பெற்ற முதியவர் தன் உண்மையான உருவத்தை காட்டினார். இதனால் உபமன்யு சாபம் நீங்கியது. இந்த அற்புதம் நிகழ்ந்த இந்த இடமே கோவிலடி ஆகும்.

    அப்பக்குடத்தான்

    உபமன்யு மன்ன னிடம் இருந்து அப்பம் பெற்றதால் கோவிலடி திருத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமாள் அப்பக் குடத்தான் என்று அழைக்கப்படு கிறார்.
    மூலஸ்தானத் தில் வலது கரத்தில் அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் புஜங்க சயனத்தில் மேல்நோக்கி உள்ளார் அப்பக்குடத்தான். ஸ்ரீரங்கம் கோவிலுக்கு முந்தி அடியெடுத்து வைத்த தலம் என்பதால் கோவிலடி என்று பெயர் வழங்கப்படு வதாகவும் கூறப் படுகிறது. புராணங்களில் திருப்பேர்நகர் என்று அழைக்கப்பட்டு வரும் இத்தலத்தில் உள்ள பெருமாளுக்கு தினமும் அப்பம் செய்து நைவேத்தியம் செய்யப்பட்டு வருகிறது.

    கோவிலடி பெருமாளுக்கு திருமண தடை உள்ளவர்கள்இரண்டு துளசி மாலையை கொண்டு வந்து பெருமாளுக்கு சாத்தி வழிபட்டு ஒரு மாலையை வீட்டிற்கு எடுத்து சென்று வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும். அப்பக்குடத்தான் சேவடி யில் பூமிதேவி தவம் செய்து கொண்டிருப்பதால் நிலம் தொடர்பாக தீராத பிரச்சினைகள் உள்ள வர்கள் கோவிலடிக்கு வந்து பூஜை செய்து வழிபட்டால் பிரச்சினை அகலும் என்பது நம்பிக்கை.

    நோய் வாய்ப்பட்டவர்கள் மூன்று சனிக்கிழமைகள் கோவிலடி பெருமாள் கோவிலுக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபட உடல் நலம் பெறுவார்கள். தங்கள் ஜாதகத்தில் சுக்கிரன் நிலை காரணமாக நிதி நெருக்கடி மற்றும் கணவன்- மனைவி களுக்கிடையே மன மாச்சர்யம் உள்ள தம்பதிகள் வெள்ளிக் கிழமைகளிலும். திருவோண நட்சத்திர நாளிலும் கோவிலடிக்கு வந்து பெருமாள் மற்றும் தாயார் சன்னதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீங்கி ஏற்றம் பெறுவார்கள்.

    இத்திருக் கோவிலில் குழந்தை பேறு இல்லாத தம்பதியர் சந்தான கோபால கிருஷ்ணனுக்கு வளர்பிறை நாட்களில் கற்கண்டு நைவேத்யம் செய்து 10 குழந்தைகளுக்கு வழங்கி விட்டு தாங்களும் சாப்பிட்டால் குழந்தைப்பேறு உண்டாகும். கோவிலடி திருக்கோவிலில் மூலவர் அப்பக்குடத் தான். தாயார் கமலவள்ளி தாயார். இத்திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ராபத்து நாட்கள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசி நாளில் சுவாமி பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார். பங்குனி மாதத்தில் பெரிய தேரில் பெருமாள் வீதியுலா வருவார். இத்திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தினமும் அன்ன தானம் நடைபெறுகிறது.

    இந்தத் திவ்ய தேசத்திலிருந்து தான், நம்மாழ்வார் மோட்சத்திற்குப் போனதாகச் சொல்வார்கள். இக்கோயிலில் விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ் வார்கள், கருடன், லட்சுமி நாராயணர், வேணுகோபாலன், விஷ்வக்சேனர் ஆகியோர் சந்நிதிகள் உள்ளன. வைகுண்ட ஏகாதசி விழாவில் 10- நாட்களும் கலந்து கொள்பவர்களுக்கு மோட்சம் உண்டாகும்.

    புரட்டாசி மாத வழிபாடுகள்

    கோவிலடி அப்பக்குடத்தான் கோவிலில் புரட்டாசி மாதம் மிகவும் விசேஷமானதாகும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். புரட்டாசி சனிக்கிழமை அன்று பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளுவார். நவராத்திரி விழாவில் 9 நாட்களும் கமலவள்ளி தாயார் கோவிலில் உள்ள மகா மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விஜயதசமியன்று பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். இக்கோவிலில் அப்பம் நைவேத்யமாக படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    தஞ்சையில் இருந்து கல்லணை செல்லும் அனைத்து பஸ்களும் கோவிலடியில் நின்று செல்லும்.
    Next Story
    ×