search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆலய தோற்றம், தேவியருடன் சீனிவாசப் பெருமாள்
    X
    ஆலய தோற்றம், தேவியருடன் சீனிவாசப் பெருமாள்

    வேண்டும் வரம் தரும் வரதராஜப் பெருமாள் கோவில்

    திருச்சி பெரிய கடை வீதியில், 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி- பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கும் ஆலயம் உள்ளது.
    திருச்சி பெரிய கடை வீதியில், ஸ்ரீதேவி- பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சேவை சாதிக்கும் ஆலயம் உள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், மேற்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. ஸ்ரீதேவி- பூதேவி சமேத வெங்கடேசப் பெருமாள் ஆலயம் என்ற பெயரிலும் இந்தக் கோவில் அழைக்கப்படுகிறது. குடியிருப்புகள் சூழ நடுவில் அமைந்துள்ள இந்த ஆலயம், உள் திருச்சுற்று, வெளி திருச்சுற்றுடன் அழகுற அமைந்துள்ளது.

    இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. அழகிய முகப்பை தாண்டியதும் மகா மண்டபம் காணப்படுகிறது. நுழைவு வாசலின் வலது புறம் கருப்பண்ணசாமி கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். அடுத்து முக மண்டப நுழைவு வாசலின் இருபுறமும் பிரமாண்ட உருவில் துவாரக பாலகர்களின் திருமேனிகள் உள்ளன. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை தாண்டினால் கருவறையில் சீனிவாசப் பெருமாள் திருமங்கை - நிலமங்கை தேவியருடன் நின்ற கோலத்தில் மேற்கு திசை நோக்கி சேவை சாதிக்கிறார். பெருமாளின் முன்பாக உற்சவ திருமேனிகள் உள்ளன.

    முக மண்டபத்தின் இடதுபுறம் பார்வதி தாயார் தனி சன்னிதியில் சேவை சாதிக்கிறார். முக மண்டபத்தின் தெற்குப் பகுதியில் கருவறையில் வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். இவர்களின் முன்பாகவும் உற்சவத் திருமேனிகள் இருக்கின்றன.

    இந்த ஆலயத்தில் பெருமாள், ‘சீனிவாசப் பெருமாள்’, ‘வரதராஜப் பெருமாள்’ என்ற இரண்டு அமைப்புகளில் அருள்புரிவது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது. முக மண்டபத்தின் தென்புறம் சுவர் கோஷ்டத்தில் ஆஞ்சநேயர், ராமானுஜர், நம்மாழ்வார், வீர ஆஞ்சநேயர் திருமேனிகள் உள்ளன. வடபுற சுவர் கோஷ்டத்தில் கிருஷ்ணர், கருடாழ்வார், வைகானஸர், விஷ்வக்சேனர் ஆகியோரது திருமேனிகளைக் கண்டு தரிசிக்கலாம்.

    வைகானஸ ஆகம முறைப்படி பூஜையும், தென்னாசார்ய சம்பிரதாய அனுஷ்டானமும் இக்கோவிலில் கடைப்பிடிக்கப்படுகிறது. வைகானஸ ஆகமத்தை ஏற்படுத்தியவர் வைகானஸ குரு ஆவார். எனவே அவரது திருமேனியும் வடபுற சுவர் கோஷ்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    சீனிவாசப் பெருமாள், வரதராஜப் பெருமாள் என்ற 2 திருநாமங்களில் தங்கள் துணைவியருடன் அருள்புரியும் பெருமாளை முக மண்டபத்தில் நின்றபடி ஒருசேர தரிசனம் செய்யலாம். தன்னை நாடும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்கள் வேண்டும் வரத்தினை தருவதில் இத்தல பெருமாள் முதன்மையானவர். குழந்தைப் பேறு இல்லாதவர்கள், இத்தல இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள். அதன்படி அவர்களின் பிரார்த்தனை ஓராண்டுக்கள் நிறைவேறுவது அதிசயமான ஒன்றுதான். அப்படி தங்கள் கோரிக்கை நிறைவேறியவர்கள், குழந்தையோடு வந்து பெருமாள் சன்னிதியில் மொட்டை போட்டு, காதுகுத்தி மகிழ்கிறார்கள்.

    தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இந்த ஆலயத்தில், மாதந்தோறும் வரும் திருவோண நட்சத்திர நாளில், பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று சீனிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சகிதம் வீதியுலா வருவதுண்டு. அட்சய திருதியை அன்று சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வருவார். ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் வரதராஜப் பெருமாளுக்கு காலை திருக்கல்யாணம் நடைபெறும். மாலையில் சீனிவாசப் பெருமாள் வீதியுலா வருவார்.

    தனுர்மாத பூஜை இங்கு மார்கழி 30 நாட்களும் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி விரதத்தின்போது, 9 நாட்களும் பத்மாவதி தாயாரை விதம் விதமாக அலங்கரிப்பார்கள். இந்த நாட்களில் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவதுண்டு. 10-ம் நாள் சீனிவாசப் பெருமாள் குதிரை வாகனத்தில் பயணித்து அம்பு போடும் உற்சவம் நடைபெறும்.

    ஆடி 18-ம் நாள் கருப்பண்ணசாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அவருக்கு இளநீர் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் சனிக்கிழமை மட்டும் இரவு 10.30 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.

    அமைவிடம் :


    திருச்சி மலைக்கோட்டை பெரிய கடை வீதியில் உள்ளது இந்த ஆலயம். தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடந்தே செல்லலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
    Next Story
    ×