search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேவநாதசாமி கோவில்
    X
    தேவநாதசாமி கோவில்

    புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில்- கடலூர்

    கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கெடிலம் ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது.

    ஆழ்வார்களால் மங்களா சாசனம் செய்ய பெற்ற திவ்யதேசங்கள் 108-ல் இந்த கோவிலும் ஒன்றாகும். இந்த திருக்கோவில் பல்வேறு காலங்களில் அரசர்கள் பலரால் அவ்வப்போது கட்டப்பெற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    கருடனால் கொண்டு வரப்பெற்ற கெடிலம் நதிக்கும், ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை இலங்கைக்கு கொண்டு செல்கையில் அதன் ஒரு பாகம் வீழ்ந்து உருவாகிய அவுசதமலைக்கும் இடையே அமைந்துள்ளது இந்த தேவநாதசாமி கோவில்.

    இந்த கோவில் நடுநாட்டு திருப்பதிகளில் ஒன்றாகும். கோவிலின் பிரதான மூர்த்தியான தேவநாத பெருமாள் நின்ற கோலத்திலும், சயன கோலத்திலும் காட்சி தருகிறார்.

    கோவிலில் பிரதானமாக பூஜிக்கப்படும் தாயார் அம்புருவர வாசினி, ஹேமாம்புஜநாயகி, தரங்கமுகநந்தினி, செங்கமலத் தாயார், அலைவாய் உகந்த மகள் முதலிய பல திருநாமங்களுடன் விளங்குகிறார்.

    பிரம்மா, சிவன், இந்திரன், பூமாதேவி, மார்க்கண்டேயர் முதலிய பலரும் தவம் புரிந்து தேவநாதசாமியை தரிசித்து வரம் பெற்ற தலம் இதுவாகும்.

    திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள். இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சித்திரை மாதம் 10 நாட்கள் தேவநாதசாமிக்கும், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தேசிகருக்கும் பிரம்மோற்சவங்கள் நடைபெற்று வருகிறது. இதுதவிர ஆடிப்பூரம், பகல் பத்து, ராப்பத்து, வைகுண்ட ஏகாதசி முதலிய உற்சவங்களும் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் இந்த கோவிலில் 12 மாதமும் ஏதாவது ஒரு திருவிழா நடந்து கொண்டே இருக்கிறது. 
    Next Story
    ×