search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்போரூர் கந்தன்
    X
    திருப்போரூர் கந்தன்

    நல்ல மணவாழ்க்கை, குழந்தை பாக்கியம் அருளும் திருப்போரூர் கந்தன்

    திருப்போரூர் கந்தசுவாமியை வழிபட்டு வந்தால் வீடு, நிலம், நிறைந்த செல்வம், நல்ல மணவாழ்க்கை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, கலை உலகில் புகழ், உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் என வேண்டியதை கந்தனிடம் வேண்டி பெறலாம்.
    சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்பெற்ற திருப்போரூர் திருத்தலம் அமைந்துள்ளது. ஆலயத்தில் சம்ஹார முத்துக்குமார சுவாமியின் திருவடிவம் உள்ளது. இவர் வலது காலை மயில் மேல் ஊன்றி, வில்லேந்திய திருக்கோலத்தில் அருள்கிறார். இந்த சம்ஹார மூர்த்தியை தொடர்ந்து 6 செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது 6 சஷ்டி நாட்களிலோ சிவப்பு அரளி மாலை சூட்டி, பீட்ரூட் சாதம் நிவேதனம் செய்து 6 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு, ‘சத்ரு சம்ஹார வேல்பதிகம்' பாராயணம் செய்து வந்தால் எதிரிகள் விலகுவர். கடன் தொல்லை விலகும்.

    இத்தல முருகப்பெருமானை தொடர்ந்து வழிபட்டு வந்தால், பிரிந்த குடும்பங்கள் ஒன்றாகும் என்கிறார்கள். இத்தல முருகப்பெருமான், பனை மர அடியில் கிடைத்ததால் அந்த பனை மரத்தினால் ஆன பெட்டியை ஆலய பிரகாரத்தில் வைத்துள்ளனர்.

    இங்கு மாதம்தோறும் கிருத்திகை நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். ஆடி மற்றும் தை கிருத்திகை நாட்களில் அலகு குத்துதல், முடி காணிக்கை, காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபடுகிறார்கள். கிருத்திகை விரதம் முறைப்படி இருந்து திருப்போரூர் கந்தசுவாமியை வழிபட்டு வந்தால் வீடு, நிலம், நிறைந்த செல்வம், நல்ல மணவாழ்க்கை, குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, கலை உலகில் புகழ், உடல் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் என வேண்டியதை கந்தனிடம் வேண்டி பெறலாம். இத்தல சரவணப்பொய்கை தீர்த்தம் நீள்சதுர வடிவில் அமைந்துள்ளது.

    உட்பிரகாரத்தின் வடகிழக்கில் சிதம்பர சுவாமிகள் ஸ்தாபித்த, யந்திர ஸ்தாபனமாகிய ஸ்ரீசக்கரம் உள்ளது. இதில் விநாயகர், வள்ளி - தெய்வானையுடன் கூடிய முருகர், சிவன், உமையவள், சண்டேசர், அஷ்டதிக் பாலகர், பைரவர்களுக்கு உரிய மந்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. கூர்மம், அஷ்டநாகம், அஷ்ட கஜங்கள், கணங்கள் ஆகியவை கொண்ட பீடத்தில் இச்சக்கரம் அமைந்துள்ளது. தினமும் இதற்கு பூஜைகள் நடைபெற்றாலும், கந்தசஷ்டி ஆறு நாட்களிலும் விசேஷ அபிஷேகமும், யந்திர மாலா சிறப்பு பூஜையும் செய்யப்படுகின்றன. இந்தச் சக்கர ஸ்தாபனத்தை வாசனை மலர்கள் தூவி, நெய் தீபம் ஏற்றி, தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால் பதினாறு வகைப்பேறுகளும் கிட்டும்.

    மாமல்லபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டா் தூரத்திலும், திருக்கழுக்குன்றத்தில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல்பெற்ற திருப்போரூர் திருத்தலம் அமைந்துள்ளது.
    Next Story
    ×