என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன.
    திருச்சபை ஒழுங்குகள் (Precepts of the church) என்பது, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பின்பற்றுவதற்காக திருச்சபை வழங்கியுள்ள ஐந்து விதிமுறைகள் ஆகும். கிறிஸ்தவ வழிபாடு மற்றும் அறநெறி சார்ந்த அடிப்படை ஒழுங்குகளாக இவை அமைந்துள்ளன. தமிழ் மரபில், ‘திருச்சபை கட்டளைகள்’ என்ற பெயராலும் இவை அழைக்கப்படுகின்றன.

    கிறிஸ்தவ அறநெறி

    கிறிஸ்தவர்கள் தங்களது வாழ்வில் நம்பி, கடைபிடிக்க வேண்டிய விசுவாசத்தை போதிப்பது திருச்சபையின் கடமையாக உள்ளது. நம்பிக்கையாளர்களின் அறநெறி வாழ்வு, ஓர் ஆன்மிக வழிபாட்டுச் செயலாக மாற திருச்சபை உழைக்கிறது. ஆண்டவர் இயேசுவின் வாழ்வை ஒத்ததாக கிறிஸ்தவர்களின் வாழ்வு இருக்கும்போது, உண்மை கடவுள் மீதான விசுவாசத்திற்கு மற்றவர்களையும் ஈர்த்து திருச்சபையைக் கட்டியெழுப்ப முடியும். ஆகவே, செப உணர்வு, அருளடையாள வாழ்வு, அறநெறி அர்ப்பணம், இறையன்பு மற்றும் பிறரன்பில் வளர்ச்சி ஆகியவற்றில் தவிர்க்க முடியாத குறைந்தபட்ச உறுதிநிலையை வழங்க திருச்சபை ஐந்து ஒழுங்குகளை வகுத்து தந்துள்ளது.

    ஐந்து ஒழுங்குகள்

    திருச்சபை வழங்கியுள்ள ஒழுங்குகள் பின்வருமாறு: (1) ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன் திருநாட்களிலும் திருப்பலியில் பங்கேற்பதுடன், இந்நாட்களின் புனிதத்தைப் பாதிக்கும் வேலைகளையும் செயல்களையும் தவிர்க்க வேண்டும். (2) ஆண்டுக்கு ஒரு முறையாவது, தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு ஒப்புரவு அருளடையாளம் பெற வேண்டும். (3) உயிர்ப்புக் காலத்திலாவது நற்கருணை உட்கொள்ள வேண்டும். (4) திருச்சபை குறித்துள்ள நாட்களில் இறைச்சியைத் தவிர்க்கவும், நோன்பு கடைபிடிக்கவும் வேண்டும். (5) ஒவ்வொருவரும் தம்மால் இயன்ற அளவு, திருச்சபையின் பொருள்சார் தேவைகளில் உதவி செய்ய வேண்டும்.

    சில தெளிவுகள்

    ‘கடன் திருநாள்’ என்பது, கத்தோலிக்கர்கள் கட்டாயமாக திருப்பலி வழிபாட்டில் பங்கேற்க கடமையுள்ள புனித நாளாகும். ஆண்டவரது உயிர்ப்பின் கொண்டாட்டமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகள் அனைத்தும் கடன் திருநாட்களாக உள்ளன. கடவுளின் தாய் மரியா (ஜனவரி 1), ஆண்டவரின் திருக்காட்சி (ஜனவரி 6), மரியாவின் கணவர் யோசேப்பு (மார்ச் 19), ஆண்டவரின் விண்ணேற்றம் (மே/ஜூன்), கிறிஸ்துவின் திருவுடல் திருரத்தம் (மே/ஜூன்), திருத்தூதர்கள் பேதுரு, பவுல் (ஜூன் 29), மரியாவின் விண்ணேற்பு (ஆகஸ்ட் 15), அனைத்து புனிதர்கள் (நவம்பர் 1), மரியாவின் அமல உற்பவம் (டிசம்பர் 8), கிறிஸ்து பிறப்பு (டிசம்பர் 25) ஆகிய பெருவிழாக்கள் மற்ற கடன் திருநாட்கள் ஆகும்.

    உயிர்ப்புக் காலத்தில் நற்கருணை உட்கொள்ளும் முன்பாக, ஒப்புரவு அருளடையாளம் பெறுவது அவசியம். சாம்பல் புதன், புனித வெள்ளி ஆகிய நோன்பு நாட்களில் ஒரு வேளை முழு உணவைத் தவிர்த்து, மற்ற வேளைகளில் குறைந்த அளவு உணவு உட்கொள்ள வேண்டும். தூய உணவு நாட்களான சாம்பல் புதன் மற்றும் தவக்கால வெள்ளிக்கிழமைகளில் இறைச்சியை உணவில் சேர்க்கக்கூடாது. திருச்சபையின் பொதுவான ஐந்து ஒழுங்குகளுடன், “குறைந்த வயதிலும், தடையுள்ள உறவினரோடும் திருமணம் செய்யாதிருக்க வேண்டும்” என்ற ஒழுங்கையும் கடைபிடிக்க தமிழக ஆயர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
    சிலுவை என்றாலே சாட்டையடி, சுத்தில், ஆணி மற்றும் தொங்கவிடப்படுகின்ற மரம் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும். அதைதான் ஆண்டவர் தன்னுடைய சீடர்களுக்கு நிபந்தனையாய் வைக்கிறார்.
    ஆண்டவர் ஏசு தன்னை பின்பற்ற விரும்புகிறவர்களுக்கு ஒரு நிபந்தனையை வைக்கிறார். சீடராய் வாழ விரும்புகிறவர் தன்னலம் துறக்க வேண்டும், சிலுவையை சுமக்க வேண்டும். அவர் அனைவரையும் நோக்கி, “ என்னை பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக்கொண்டு என்னை பின்பற்றட்டும்“ (லூக் 9:23) இன்று சிலுவை என்பது நமக்கு மீட்பின் சின்னம், வாழ்வின் பாதை, ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டவர் ஏசு கூறியபோது, அது அவமானத்தின் சின்னம். சிலுவை என்று அவர் கூறியவுடன் அவர்கள் எண்ணத்தில் மரண வலிகளுடன் கூடிய சாவு, பொது வெளியில் நிர்வாணமாக்கப்பட்டு நடத்தப்படுதல், மற்றும் அவமானங்களும் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும்.

    யாரும் விரும்பக்கூடிய ஒரு அடையாளம் அல்ல. அவர்களால் நம்மைப்போல் ஒரு ஆன்மிக பார்வையில் சிலுவையை பார்த்திருக்க முடியாது. அவர்களை பொறுத்தவரை சிலுவை ரோமானியர்கள் அடிமைப்படுத்திய நாட்டு மக்களை அடக்க பயன்படுத்திய ஒரு அடக்குமுறை கருவி. ஆதிக்க சமூகத்தின் ஆணவத்தை காட்டும் கருவி, ஒரு கொடூரனின் கையில் இருந்த கொடிய ஆயுதம்.

    சிலுவை என்றாலே சாட்டையடி, சுத்தில், ஆணி மற்றும் தொங்கவிடப்படுகின்ற மரம் தான் நினைவுக்கு வந்திருக்க முடியும். அதைதான் ஆண்டவர் தன்னுடைய சீடர்களுக்கு நிபந்தனையாய் வைக்கிறார். அது ஒரு பயங்கரமான நிபந்தனை. ஆணவத்தை, கயமையை, அநியாயத்தை, சுயநலத்தை வெளிப்படுத்தும் கருவியாக இருந்த அந்த சிலுவையில் அவற்றை எல்லாம் அறைந்துவிட்டு தாழ்ச்சியுடன் என்னை பின்பற்றுங்கள் என்கிறார்.

    இன்று நம்முடைய வாழ்க்கை நம்முடைய ஆணவம், நம்முடைய தேவைகள், நம்முடைய திட்டம் மற்றும் நம்முடைய விருப்பு வெறுப்புகளை சுற்றியே சுழன்று கொண்டுள்ளது. அவைகளை சிலுவையில் அறையவேண்டும். ஆண்டவர் ஏசுவின் வழியில் உலக மீட்புக்கான சிலுவையை சுமக்க வேண்டும். அங்கு பிறர் அன்பு, மன்னிப்பு, அமைதி மற்றும் தாழ்ச்சி நம்முடன் நடைபோட வேண்டும். அதுதான் ஏசுவின் சீடராய் இருப்பதன் பெருமை.
    லூர்து நகரில் விசாரணை நடத்திய திருச்சபை அதிகாரிகள், அன்னை மரியா காட்சி அளித்தது உண்மை என்று உறுதி செய்தனர். 1907 பிப்ரவரி 11ந்தேதி லூர்து அன்னைக்கு விழா கொண்டாடும் வழக்கம் முதன்முதலாக உருவானது.
    அன்னை மரியா, லூர்து நகரில் காட்சி அளித்ததை நினைவுகூரும் வகையில் இந்த திருநாள் பிப்ரவரி 11ந்தேதி சிறப்பிக்கப்படுகிறது. திருச்சபை விழாக்களின் பட்டியலில் இது ஒரு விருப்ப நினைவாக இடம் பெற்றுள்ளது.

    1858 பிப்ரவரி 11 முதல் ஜூலை 16ந்தேதி வரை பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரில், பெர்னதெத் சூபிரூஸ் என்ற சிறுமிக்கு மரியன்னை பதினெட்டு முறை காட்சி அளித்தார். இளம் கன்னிப் பெண்ணாக காணப்பட்ட அன்னை மரியா, தமக்காக அங்கு ஓர் ஆலயம் எழுப்ப வேண்டுமென கோரிக்கை விடுத்தார். பிப்ரவரி 25ந்தேதி இரண்டாவது முறையாக தோன்றிய அன்னை, பெர்னதெத்தை கொண்டு ஒரு நீரூற்று தோன்றச் செய்தார்.

    மார்ச் 25ந்தேதி மூன்றாம் முறையாக தோன்றிய அன்னை, “நானே அமல உற்பவம்” என்று தம்மை அறிமுகம் செய்தார். அடுத்தடுத்த காட்சிகளில், பாவிகள் மனந்திரும்ப செபமும் தவமும் செய்யுமாறும் அறிவுறுத்திய அவர், பெர்னதெத்தை செபமாலை செபிக்க வைத்தார். அன்னை மரியாவின் காட்சி பற்றி அறிந்த மக்கள், அந்த இடத்தில் பெர்னதெத்தோடு சேர்ந்து செபிக்கத் தொடங்கினர்.

    பெர்னதெத் தோண்டிய நீரூற்றில் இருந்து பருகிய பலரது உடல், உள்ள நோய்கள் குணம் அடைந்ததால், பலரும் அங்கு திருப்பயணம் மேற்கொள்ளத் தொடங்கினர். லூர்து நகரில் விசாரணை நடத்திய திருச்சபை அதிகாரிகள், அன்னை மரியா காட்சி அளித்தது உண்மை என்று உறுதி செய்தனர். இதையடுத்து 1862ஆம் ஆண்டு திருத்தந்தை 9ம் பியுஸ் இந்த காட்சிக்கு அங்கீகாரம் வழங்கினார். 1907 பிப்ரவரி 11ந்தேதி லூர்து அன்னைக்கு விழா கொண்டாடும் வழக்கம் முதன்முதலாக உருவானது.
    "மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்."
    மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய இயேசு கிறிஸ்து, தூய ஆவியாரின் வல்லமையால் கன்னி மரியாவின் வயிற்றில் கருவாகி மனிதரானார். திரித்துவத்தின் மூன்றாம் ஆளான தூய ஆவியாருடன் தமக்குள்ள தொடர்பு குறித்து இறைமகன் இயேசு என்ன கூறினார் என்பதை இங்கு காண்போம்.

    “நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால் இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா? என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார். என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும். மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்.” (மத்தேயு 12:28-32)

    "மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார்."

    “ஒருவர் தண்ணீராலும் தூய ஆவியாலும் பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது என்று மிக உறுதியாக உமக்குச் சொல்கிறேன். மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர். தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்.” (யோவான் 3:5-6) “வாழ்வு தருவது தூய ஆவியே; ஊனியல்பு ஒன்றுக்கும் உதவாது. நான் கூறிய வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன. அப்படியிருந்தும் உங்களுள் சிலர் என்னை நம்பவில்லை.” (யோவான் 6:63-64)

    “உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார். என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.” (யோவான் 14:16-17,26)

    “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.” (யோவான் 16:13-14) இயேசு சீடர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். (யோவான் 20:21-22)

    “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப் போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார்.” (யோவான் 15:26) “என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள். அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே.” (மாற்கு 13:9-11)

    இயேசு தன் சீடர்களிடம் திரும்பி, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். கடவுளுடைய அரசாங்கத் துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட, ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றார்.
    கலிலேயாவில் இருந்து புறப்பட்டு, யோர்தான் நதியைக் கடந்து, யூதேயாவின் எல்லைப் பகுதிகளுக்குப் போய் மக்கள் மத்தியில் போதனை செய்தார் இயேசு. அவரது புகழ் ஏற்கனவே பரவியிருந்ததால் மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். தன்னை நாடிவந்த அனைவரையும் அவர் குணமாக்கினார். இயேசுவின் பின்னால் திரளான மக்கள் செல்வதைக் கண்ட யூத மத அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த பரிசேயர்கள், மக்களின் முன்பாக இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டே அவரைத் தவறானவர் என நிறுவ முயன்றுவந்தனர்.

    ஒரு கிராமத்தில் இயேசு மக்கள் மத்தியில் இருந்தபோது, பரிசேயர்கள் அவரிடம் வந்தனர். அவர்களில் ஒருவர் இயேசுவிடம், “தன் மனைவியை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒருவர் விவாகரத்து செய்வது சரியா?” என்று கேட்டார்கள்.

    அதற்கு இயேசு, “கடவுள், தொடக்கத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? அதன் காரணமாகவே, மனிதன் தன்னுடைய தாய், தந்தையை விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே உடலாக இருப்பார்கள் என்று இறவைன் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா? அதன்படி, அவர்கள் இரண்டு பேராக இல்லாமல், ஒரே உடலாக இருப்பார்கள். அதனால், கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருப்பாராக” என்று கூறினார்.

    உடனே அந்தப் பரிசேயர், “அப்படியானால், விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஏன் கூறினார்?” என்று கேட்டு இயேசுவை மடக்கினார்.

    அதற்கு இயேசு, “உங்களுடைய இதயம் இறுகிப்போயிருந்த காரணத்தால்தான் உங்கள் மனைவியை விவாகரத்து செய்ய அவர் அனுமதித்தார். ஆனால், தொடக்கத்திலிருந்து அவ்வாறு இல்லை. நான் உங்களுக்குச் சொல்கிறேன், பாலியல் முறைகேட்டைத் தவிர வேறு எந்தக் காரணத்துக்காகவும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறவன், முறைகேடான உறவுகொள்கிறான்” என்று சொன்னார். இயேசு இப்படிக் கூறியதும் பதில் ஏதும் கூறாமல், அவரைத் தொடர்ந்து சோதிக்க முடியாமல் பரிசேயர்கள் கிளம்பிச் சென்றனர்.

    பரிசேயர்கள் நகர்ந்து சென்றதும் சீடர்கள் இயேசுவிடம், “திருமண பந்தம் இப்படித்தான் இருக்க வேண்டுமென்றால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்று கூறினார்கள்.

    அதற்கு இயேசு, “திருமணம் செய்யாமல் இருக்கும் வரம் பெற்றவர்களைத் தவிர வேறு யாராலும் நீங்கள் கூறுவதுபோல் நடக்க முடியாது. சிலர் பிறவிக் குறைபாட்டால் திருமணம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள்; வேறு சிலர் மனிதர்களால் அந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; இன்னும் சிலர் பரலோக அரசாங்கத்துக்காகத் தங்களையே அர்ப்பணித்து, திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்க முடிந்தவர்கள் அப்படி இருக்கட்டும்” என, துறவறம் குறித்துத் தெளிவாக எடுத்துக் கூறினார்.

    அப்போது அவ்வூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இயேசுவிடம் ஓடிவந்து, “போதகரே, முடிவில்லாத வாழ்வைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

    அதற்கு இயேசு, “முடிவில்லாத வாழ்வைப் பெற விரும்பினால், கட்டளைகளைத் தொடர்ந்து கடைப்பிடி” என்று அவனிடம் கூறினார்.

    “எந்தக் கட்டளைகளை?” என்று அவன் ஆவலுடன் கேட்டான்.

    இயேசு அவனிடம், “கொலை செய்யக்கூடாது, மனைவிக்குத் துரோகம் செய்யக்கூடாது, திருடக்கூடாது, பொய்சாட்சி சொல்லக்கூடாது, உன் தாய், தந்தைக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும், உன்னை நீ நேசிப்பதுபோல மற்றவர்களையும் நேசி ஆகிய கட்டளைகளை” என்று கூறினார்.

    அதற்கு அந்த இளைஞன், “இவை அனைத்தையும் நான் ஏற்கனவே கடைப்பிடித்து வருகிறேன்; என்னிடம் இன்னும் என்ன குறை இருக்கிறது?” என்று இயேசுவை நோக்கி தன் கரங்களைக் குவித்துக் கேட்டான்.

    அதற்கு இயேசு, “நீ குறையில்லாதவனாக இருக்க விரும்பினால், போய் உன் சொத்துகளையெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, என்னைப் பின்பற்றி வா. அப்போது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் சேரும்” என்று கூறினார். இதைக் கேட்டு அந்த இளைஞன் துக்கத்தோடு திரும்பிப் போனான். ஏனென்றால், அவனிடம் நிறைய சொத்துகள் இருந்தன.

    இயேசு தன் சீடர்களிடம் திரும்பி, “உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். கடவுளுடைய அரசாங்கத் துக்குள் ஒரு பணக்காரன் நுழைவதைவிட, ஊசியின் காதுக்குள் ஒரு ஒட்டகம் நுழைவது சுலபம்” என்றார்.
    கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்த வரையில் ஒரு சில தேவாலயங்களில் ஆன்-லைனில் ஆராதனை, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான தேவாலயங்கள் மூடப்பட்டே உள்ளன.
    கொரோனா வைரசின் 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இதற்கு முன்பு ஏப்ரல் மாதத்திலேயே அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. இந்து கோவில்களை பொறுத்த வரையில் ஆகம முறைப்படி சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

    கிறிஸ்தவ தேவாலயங்களை பொறுத்த வரையில் ஒரு சில தேவாலயங்களில் ஆன்-லைனில் ஆராதனை, சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான தேவாலயங்கள் மூடப்பட்டே உள்ளன.

    வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறும். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

    ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று நாமக்கல்லில் கிறிஸ்து அரசர் திருச்சபை, தமிழ் பாப்தீஸ்து திருச்சபை, சி.எஸ்.ஐ. ஆலயம், ஏ.ஜி. சபை என அனைத்து தேவாலயங்களும் மூடப்பட்டு இருந்தன. அவற்றின் வளாகங்களும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற கிறிஸ்தவ தேவாலயங்களும், கொரோனா ஊரடங்கு காரணமாக ஆராதனைகள் நடத்தப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டன.
    யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத்தந்தை மட்டுமே என்பதால், முதல் மூன்று நூற்றாண்டுகளில் பெரும்பாலும் மறக்கப்பட்ட புனிதராகவே இருந்தார்.
    புனித யோசேப்பு (Saint Joseph), ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத்தந்தை ஆவார். தமிழ் மரபில், ‘சூசையப்பர்’, ‘வளனார்’ ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். மகனாகிய கடவுளையும் அவரது தாயான கன்னி மரியாவையும் இவ்வுலகில் பாதுகாத்தவர் என்பதால், இவர் ‘திருக்குடும்பத்தின் தலைவர்’ என்று அறியப்படுகிறார். விவிலியம் இவரை நேர்மையாளர் என்று புகழ்ந்துரைக்கிறது. கன்னி மரியாவுக்கு நிகராக கடவுளின் மீட்புத் திட்டத்தில் யோசேப்பு ஒத்துழைத்திருக்கிறார். இவர் பேசியதாக நற்செய்திகள் எதுவும் கூறாததால், ‘அமைதியான புனிதர்’ என்று பெயர் பெற்றுள்ளார்.

    மனுவுரு எடுத்த இறைமகனுக்கு இவ்வுலகில் முன்மாதிரியான தந்தையாக செயல்பட யோசேப்பை கடவுள் முன்நியமனம் செய்தார். கன்னி மரியாவைத் திருமணம் செய்ததன் வழியாக இயேசுவின் தந்தை என்ற உரிமை யோசேப்புக்கு கிடைத்தது. ஆகவேதான், மரியாவிடம் பிறந்த இறைமகன், “யோசேப்பின் மகனாகிய இயேசு” (யோவான் 6:42) என்று அழைக்கப்பட்டார். ஆண்டவர் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு யோசேப்பிடம் இருந்தது.

    மரியா கன்னியாக இருந்தபோதே இறைமகனை கருத்தாங்கியதால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க யோசேப்பு என்ற கணவர் தேவைப்பட்டார். இவ்வாறு, மரியாவின் வயிற்றில் இருந்த இறைமகன் இயேசு கருவிலேயே கொல்லப்படாமல் பாதுகாப்பு பெற்றார். குழந்தை இயேசுவை ஏரோது கொல்லத் தேடியபோது, அவருக்கு மீண்டும் பாதுகாப்பு தேவைப்பட்டது. இவ்வாறு, மீட்புத் திட்டம் நிறைவேறும் வரை இயேசுவைப் பாதுகாக்கும் பொறுப்பை தந்தையாம் கடவுள் யோசேப்புக்கு அளித்திருந்தார். விண்ணகத் தந்தையின் பதிலாளராக இருந்து, ஆண்டவர் இயேசுவுக்கு கற்பிக்கும் பணியை புனித யோசேப்பு நிறைவேற்றினார்.

    பெத்லகேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு – ராகேல் தம்பதியரின் மகனாக கி.மு. 40ல் யோசேப்பு பிறந்தார். சிறு வயது முதலே நீதியின் மீது நாட்டம் கொண்டவராக விளங்கிய இவரிடம், தனிமையில் செபிக்கும் பழக்கம் இருந்தது. சிறுவனாக இருந்தபோதே, தொழுகைக் கூடத்திற்கு சென்று மறைநூலை வாசிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தையிடம் இருந்து தச்சுத் தொழிலைக் கற்றுக் கொண்டார். யோசேப்பு இளமையிலும் பாவத்தின் நிழல் அணுகாமல் புனிதமான வாழ்வு வாழ்ந்தார். பதினெட்டு வயதில் தாயையும் தந்தையையும் அடுத்தடுத்து இழந்த இவர், நாசரேத்தில் இருந்த உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினார்.

    முப்பது வயதானதும் திருமணம் முடிக்குமாறு உறவினர்கள் வற்புறுத்தி வந்ததால், துறவற வாழ்வை விரும்பி பாலை நிலத்துக்கு சென்றார். அங்கு ஒரு முதியவரை சந்தித்த இவர், பின்னர் எருசலேம் கோவிலுக்கு சென்றார். அப்போது குரு செக்கரியா நடத்திய சுயம்வரத்தில், யோசேப்பின் கோலில் லீலி மலர்கள் மலர்ந்ததால் மரியாவின் கணவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இருவருக்கும் மண ஒப்பந்தம் நிகழ்ந்த பிறகு, மரியா நாசரேத்தில் இருந்த தமது உறவினர் வீட்டில் தாய் அன்னாவுடன் தங்கியிருந்தார். அங்கிருந்த வேளையில்தான், மரியாவுக்கு வானதூதர் தோன்றி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தார். இதையடுத்து, தூய ஆவி நிழலிட்டதால் கன்னி மரியா கருவுற்றார்.

    மரியா கருவுற்றதற்கு காரணம் அறியாத யோசேப்பு அவரை விலக்கி விட எண்ணினார். ஆனால், வானதூதரின் அறிவுரையை ஏற்று மரியாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின்னர், பெத்லகேமில் இயேசு பிறந்தார். நாற்பதாம் நாளில், யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவை எருசலேம் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்தனர். கிழக்கில் இருந்து வந்த ஞானிகளால், குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடிய ஏரோதிடம் இருந்து தப்பிக்க திருக்குடும்பம் எகிப்துக்கு சென்றது. ஏரோது காலமானதும் மரியாவையும் குழந்தை இயேசுவையும் எகிப்தில் இருந்து அழைத்துக் கொண்டு நாசரேத்தில் சென்று குடியேறினார் யோசேப்பு. அங்கு மரியாவுக்கு நல்ல துணைவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு திகழ்ந்தார்.

    இயேசு தொழுகைக் கூட்டத்தில் மறைநூலை வாசிக்கவும், தச்சுத் தொழிலைக் கற்கவும் யோசேப்பு துணை நின்றார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ உதவினார். பன்னிரண்டு வயதில் எருசலேம் கோவிலில் இயேசு தங்கிவிட்ட வேளையில், மரியாவுக்கு ஆறுதல் அளித்து அவரைக் கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தார். யோசேப்பின் தச்சுத் தொழிலில் கிடைத்த வருவாயிலேயே மரியாவும் இயேசுவும் உணவும் உடையும் பெற்றனர். இயேசுவும் இவரது தச்சு வேலைகளில் உதவி செய்தார். தமது அறுபத்தோராம் வயதில் நோயுற்ற யோசேப்பு, இறையன்னை மரியா அருகிருக்க இயேசுவின் மார்பில் தலைசாய்த்து பேறுபெற்ற மரணம் அடைந்தார்.

    வரலாற்றில்

    யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத்தந்தை மட்டுமே என்பதால், முதல் மூன்று நூற்றாண்டுகளில் பெரும்பாலும் மறக்கப்பட்ட புனிதராகவே இருந்தார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இறையன்னை மரியாவின் கன்னிமையைக் காக்கின்ற விதத்தில், புனித யோசேப்பு வயதில் முதிர்ந்தவராக சித்தரிக்கப்பட்டார். 4ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக எகிப்து நாட்டு கோப்திய கிறிஸ்தவர்கள், ‘தச்சரான புனித யோசேப்பு’ என்ற விழாவை ஜூலை 20ந்தேதி கொண்டாடியதாக அறிகிறோம். 440ஆம் ஆண்டளவில் தோன்றிய ‘தச்சரான யோசேப்பின் வரலாறு’ என்ற நூல், பல்வேறு புனைவுகளுடன் புனித யோசேப்பு குறித்த தகவல்களை வழங்குகிறது.

    கன்னி மரியாவுக்கு அடுத்து ஆண்டவரிடம் செல்வாக்கு பெற்ற புனிதராக யோசேப்பு இருக்கிறார் என்ற கருத்தியல் 13ஆம் நூற்றாண்டில் ஆழமாக வேரூன்றியதால், அவரது பக்தி மேற்கத்திய நாடுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1414ல் கூடிய கொன்ஸ்தான்ஸ் பொதுச்சங்கத்தில், புனித யோசேப்பு குறித்து இறையியலாளர் ஜெர்சோன் வழங்கிய இறையியல் பார்வை திருச்சபையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1480ல் திருத்தந்தை 4ம் சிக்ஸ்து, புனித யோசேப்பு விழாவை ரோமை திருவழிபாட்டு நாள்காட்டியில் சேர்த்தார். 1481 மார்ச் 19ந்தேதி முதல் ரோமையில் சிறப்பிக்கப்பட்ட இவ்விழாவை, 1570ல் திருத்தந்தை 5ம் பியு திருச்சபை முழுவதற்கும் விரிவுபடுத்தினார்.

    புனித யோசேப்பின் முதல் மன்றாட்டுமாலை 1597ல் ரோமையில் வெளியானது. 1621 மே 8ந்தேதி திருத்தந்தை 15ம் கிரகோரி, புனித யோசேப்பு விழாவை கடன் திருநாளாக மாற்றினார். 19ஆம் நூற்றாண்டில் மார்ச் மாதம் முழுவதும் புனித யோசேப்பை சிறப்பு வணக்கம் செலுத்துகின்ற வழக்கம் தோன்றியது. 1870 டிசம்பர் 8ந்தேதி திருத்தந்தை 9ம் பியு, ‘புனித யோசேப்பு உலகளாவிய திருச்சபையின் புரவலர்’ என அறிவித்தார். 1889ல் திருத்தந்தை 13ம் லெயோ, திருச்சபை முழுவதிலும் புனித யோசேப்பு வணக்க மாதத்திற்கு அங்கீகாரம் வழங்கினார். 1955ல் திருத்தந்தை 12ம் பியு, ‘தொழிலாளரான புனித யோசேப்பு’ விழாவை மே 1ந்தேதி சிறப்பிக்கும் விதத்தில் அறிமுகம் செய்தார்.

    1962ல் திருத்தந்தை 23ம் யோவான், திருப்பலியின் முதல் நற்கருணை மன்றாட்டில் புனித யோசேப்பின் பெயரை சேர்த்தார். 1969ல் திருத்தந்தை 6ம் பவுல் சீரமைத்த நாள்காட்டியின்படி, ‘கன்னி மரியாவின் கணவரான புனித யோசேப்பு’ திருநாள் மார்ச் 19ந்தேதி பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2013 மே 1ந்தேதி, திருப்பலியின் மற்ற நற்கருணை மன்றாட்டுகளிலும் புனித யோசேப்பின் பெயரை திருத்தந்தை பிரான்சிஸ் இணைத்தார். 2020 டிசம்பர் 8ந்தேதி ‘தந்தையின் இதயத்தோடு’ என்ற திருத்தூது மடலை வெளியிட்ட அவர், அன்று முதல் 2021 டிசம்பர் 8ந்தேதி வரை ‘புனித யோசேப்பு ஆண்டாக’ சிறப்பிக்க ஆணையிட்டார்.
    மரியாவின் தாயுள்ளம், இயேசுவின் நலனில் மிகுந்த ஈடுபாடு கொண்டதாக இருந்தது. மரியா இயேசுவைக் காண ஏங்கியதாக, காத்திருந்ததாக நற்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
    யோசேப்பின் மரணத்துக்குப் பிறகும், ஏறக்குறைய நான்கரை ஆண்டுகள் அன்னை மரியாவுடனேயே இயேசு தங்கியிருந்தார். தாயும் மகனும் இறைவேண்டலிலும் அன்பிலும் நிலைத்திருந்து, கடவுளின் திட்டம் நிறைவேறத் தங்களை முழுமையாக அர்ப்பணித்தனர். பிறகு, இயேசு மரியாவிடம் விடைபெற்றுக் கொண்டு இறையாட்சி பணி செய்ய புறப்பட்டார்.

    முதல் அற்புதம்

    இயேசு திருமுழுக்கு பெற்ற பின்பு, ஊர்ஊராய்ச் சென்று இறையரசின் நற்செய்தியை அறிவித்து வந்தார். இந்நிலையில், ‘கலிலேயா நாட்டின் கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாய் மரியாவும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.

    இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

    பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இதன் பிறகு இயேசுவும் அவர் தாயும் சகோதர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருந்தனர்.

    மகனின் சீடராக

    இயேசுவின் போதனைப் பணிகளின் மத்தியிலும் அவரது உடல் நலனில் அக்கறை கொண்ட நல்லத் தாயாக மரியா அவரைத் தேடிச் சென்றார். ‘இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை.’ (லூக்கா 8:19) ‘இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச்சொல்லி ஆள் அனுப்பினார்கள்.’ (மாற்கு 3:31) ‘மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.’ (மத்தேயு 12:46)

    மரியாவின் தாயுள்ளம், இயேசுவின் நலனில் மிகுந்த ஈடுபாடு கொண்டதாக இருந்தது. மரியா இயேசுவைக் காண ஏங்கியதாக, காத்திருந்ததாக நற்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவரது சீடத்துவ உள்ளம், இயேசுவின் வார்த்தைகளிலும் இறையரசின் மதிப்பீடுகளிலும் ஆர்வம் நிறைந்ததாக விளங்கியது. கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில், மரியா ஆழ்ந்த மனவுறுதி கொண்டவராகத் திகழ்ந்தார். எனவேதான், “உம் தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அறிவித்தவர்களிடம், “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என இயேசு பதிலளித்தார். (லூக்கா 8:20-21)

    நாசரேத்தில் வாழ்ந்த பலரும் இயேசுவின் செயல்களைக் கண்டு வியந்து, “இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே?” (மத்தேயு 13:55) என்று கேள்வி எழுப்பினர். ஒருமுறை இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” (லூக்கா 11:27) என்று பெண் ஒருவர் குரலெழுப்பிக் கூறினார். பல நேரங்களில், இயேசுவைப் பின்தொடர்ந்த பெண் சீடர்களின் கூட்டத்தில் மரியாவும் ஓர் அங்கமாகத் திகழ்ந்தார். இயேசுவின் இறையரசுப் பணியில் முழுமையாக ஒத்துழைத்த மரியா, சீடருக்குரிய மனநிலையோடு அவரை எப்பொழுதும் பின்தொடர்ந்து சென்றார்.
    யாக்கோபுவும் யோவானும் தாங்கள் நேசித்த தொழிலை மட்டுமல்ல, இயேசுவை குருவாக ஏற்றுக்கொள்ள தங்கள் தந்தையையும் விட்டுவிட்டுச் சென்றார்கள். இயேசு போன்ற ஒருவருடன் செல்ல அந்தத் தகப்பனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
    இயேசு தனது சீடர்களைத் தேர்வு செய்தபோதும், தாங்கள் தேடிய ஞானகுரு இவர்தான் என சீடர்கள் இயேசுவைக் கண்டடைந்தபோதும் எப்படி உணர்ந்திருப்பார்கள்? தங்களுக்குச் சொந்தமான அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு, அவற்றைவிட உயர்வான ஒன்றைப் பெற்றுக்கொள்கிறபோது ஏற்படும் உணர்வே ஆன்மிகத்திலும் கிடைக்கிறது. பதவி, பணம், புகழ் இந்த மூன்றும் கிடைத்துவிடும்போது, அந்தஸ்து தானாகவே வந்து ஒட்டிக்கொள்கிறது. இந்த மூன்றையும்விடச் சிறந்தது ஆன்மிக வாழ்வுதான். அதைப் பெறுவதற்காக தன்னிடமுள்ள அனைத்தையும் துறக்க யாராவது முன்வருவார்களா என்று கேட்டால், அது அரிதானதே. அப்படிப்பட்ட அரிய முன்மாதிரிகளாக இருந்தார்கள் இயேசுவும் அவரது சீடர்களும். இப்படிப்பட்ட அரிதான, அருமையான குணத்தைப் பற்றி இயேசு ‘விலை உயர்ந்த ஒரு முத்து’ பற்றிய உவமை வழியாக எடுத்துக் கூறினார்.

    மத்தேயு நற்செய்தி அதிகாரம் இதை 13-ல், 45 முதல் 48 வரையிலான இறைவசனங்களைப் படிப்பதன் மூலம் இதை அறிந்துகொள்ளலாம். இயேசு தாம் தேர்ந்தெடுத்த தன் சீடர்களைப் பார்த்து, “விண்ணுலக அரசாங்கம், அருமையான முத்துக்களைத் தேடிப் பயணம் செய்கிற வியாபாரியைப் போல் இருக்கிறது. விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டுபிடித்ததும், அவன் போய், தன்னிடம் இருந்த அனைத்தையும் உடனடியாக விற்று அதை வாங்கிக்கொண்டான். அதோடு, விண்ணுலக அரசாங்கம், கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொள்கிற வலையைப் போல் இருக்கிறது. வலை நிறைந்ததும் மீனவர்கள் அதைக் கடற்கரைக்கு இழுத்துக்கொண்டுவந்து அங்கே உட்கார்ந்து நல்ல மீன்களைக் கூடைகளில் சேகரிப்பார்கள், ஆகாதவற்றையோ தூக்கியெறிவார்கள்” என்றார்.

    மீன்பிடி தொழில், நிரந்தரமான வருவாயைத் தரக்கூடியது. மழை பொய்த்துப் போகலாம். ஆனால் கடலும் அதில் உற்பத்தியாகும் மீனும் என்றுமே வற்றுவதில்லை. அப்படிப்பட்ட உயர்ந்த, உடல் உழைப்பு கொண்ட தொழிலில் ஈடுபட்டிருந்த பேதுரு, அவரது சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, அவரது சகோதரர் யோவான் ஆகியோர் அந்தத் தொழிலை விட்டுவிட்டு இயேசு அழைத்ததும் அவரைப் பின்பற்றிச் சென்றார்கள். இதை மத்தேயு நற்செய்தி அதிகாரம் 4-ல், 18 முதல் 22 வரையிலான இறை வசனங்கள் நமக்கு விளக்குகின்றன.

    “கலிலேயா கடலோரமாக இயேசு நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும், அவருடைய சகோதரர் அந்திரேயாவையும் பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள். இயேசு அவர்களிடம், ‘என் பின்னால் வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆக்குவேன்’ என்று சொன்னார். அவர்கள் உடனடியாக வலைகளை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள். அங்கிருந்து அவர் போனபோது, சகோதரர்களாக இருந்த இன்னும் இரண்டு பேரைப் பார்த்தார். அவர்கள்தான் செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும். அவர்கள் தங்களுடைய அப்பாவோடு படகில் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களையும் இயேசு அழைத்தார். அவர்கள் உடனடியாகப் படகையும், தங்களுடைய அப்பாவையும் விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள்”.

    யாக்கோபுவும் யோவானும் தாங்கள் நேசித்த தொழிலை மட்டுமல்ல, இயேசுவை குருவாக ஏற்றுக்கொள்ள தங்கள் தந்தையையும் விட்டுவிட்டுச் சென்றார்கள். இயேசு போன்ற ஒருவருடன் செல்ல அந்தத் தகப்பனும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

    இயேசு தன் உவமையில் குறிப்பிட்ட அந்த வியாபாரி செய்தது முட்டாள்தனமான ஒரு காரியமாக இன்றுள்ள பல வியாபாரிகளுக்குத் தோன்றலாம். காரணம் லாப நோக்கம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு வியாபாரி, இப்படிப்பட்ட வியாபாரத்தில் ஆர்வம் செலுத்தமாட்டார். ஆனால் இயேசுவின் உவமையில் குறிப்பிடப்பட்ட வியாபாரியின் உயரிய கண்ணோட்டம் வேறு வகையானது. பொருளாதார லாபத்தை அல்ல, ஆனால் ஒப்பற்ற மதிப்பு கொண்ட ஒன்றைச் சொந்தமாக்கிக் கொள்வதில் கிடைக்கிற மகிழ்வு, நிறைவு ஆகிய உணர்வுகளையே அவர் லாபமாகக் கருதினார். அந்த லாபம் ஆன்மிக ரீதியிலானது. உங்கள் குருவை நீங்களும், குரு உங்களையும் கண்டுகொள்ளும்போது நீங்களும் அதை அடைவீர்கள்.
    ‘கடவுளை நம்பினால் முடியாதது இல்லை’ என்ற முடிவுக்கு வந்த தாவீது, கோலியாத்துடன் சண்டையிட விரும்பினான். இதை அவன் சக வீரர்களிடம் கூறியபோது அவர்கள் முதலில் சிரித்தார்கள்.
    இஸ்ரவேலின் பேரரசன் சவுலின் படையில், தாவீதின் மூத்த அண்ணன்கள் மூவர் போர் வீரர்களாக இருந்தனர். அவர்களுக்கு வீட்டின் உணவைக் கொடுத்துவர, போர்க்களம் சென்றான் தாவீது. போர் தொடங்கி 40 நாட்களைக் கடந்திருந்த நிலையில் பெலிஸ்தியர்களின் முகாமை நோக்கி முன்னேறிச் செல்ல எந்த இஸ்ரவேலிய வீரனுக்கும் துணிவு இல்லை. அதற்குக் காரணம் கோலியாத் என்னும் மாவீரன்.

    காத் என்ற நகரத்தைச் சேர்ந்தவன் கோலியாத். அவனுடைய உயரம் 9 அடி, 6 அங்குலம். செம்பால் செய்யப்பட்ட தலைக்கவசத்தையும், செதில் செதிலாக வடிவமைக்கப்பட்ட உடல் கவசத்தையும் அவன் அணிந்திருந்தான். கால்களிலும் செம்புக் கவசங்களைப் போட்டிருந்தான், செம்பால் செய்யப்பட்ட சிறிய ஈட்டியை முதுகுக்குப் பின்னால் வைத்திருந்தான். அவன் கையில் வைத்திருந்த பெரிய ஈட்டியின் கம்பு, நெசவாளர்களுடைய தறிக்கட்டையைப் போல் இருந்தது. அவன் உருவத்துக்கென்று விசேஷமாகச் செய்யப்பட்ட ஈட்டி அது. இப்படிப்பட்ட பிரம்மாண்ட உருவம் கொண்ட பலசாலி, பொலிஸ் தியர்களின் படையில் இருந்தான். அவனைக் கண்டு இஸ்ரவேல் வீரர்கள் பயந்து நடுங்கிக் கிடந்தார்கள்.

    மலைகளால் சூழ்ந்த ஏலா என்ற பள்ளத்தாக்கில் இருந்தது, அந்தப் போர்க்களம். ஒரு பக்கத்திலுள்ள மலையில் கோலியாத்துடன் பெலிஸ்தியர்கள் நின்றார்கள். இன்னொரு பக்கத்திலுள்ள மலையில் இஸ்ரவேலர்கள் நின்றார்கள். ஏலா போர்க்களத்துக்கு இருதரப்பு வீரர்களும் வந்து அணிவகுப்பை முடித்து 40 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால், போரைத் தொடங்க துணிவற்று இஸ்ரவேலர்கள் பயந்திருந்தனர். ஏனெனில் தினசரி மலையில் இருந்து கீழே இறங்கிப் பள்ளத்தாக்கின் நடுவில் நின்று கர்ஜித்தான் கோலியாத். அவன் இஸ்ரவேல் படையைப் பார்த்து, “எதற்காகப் போருக்கு அணிவகுத்து நிற்கிறீர்கள்? நான் ஒரு பெலிஸ்திய வீரன். என்னோடு மோதுவதற்கு உங்களில் சரியான ஒரு ஆளை அனுப்புங்கள். அவன் என்னோடு சண்டைபோட்டு என்னைக் கொன்றுவிட்டால், பெலிஸ்தியப் படை முழுவதும் உங்களுக்கு அடிமையாக இருக்கும். ஆனால், நான் அவனைக் கொன்றுவிட்டால், நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமைகளாக இருப்பீர்கள்” என்று கத்தி னான். அப்படியும் இஸ்ரவேல் தரப்பில் ஈயாடவில்லை. இப்படியே ஒவ்வொரு நாளும் சவுல் அரசனையும், இஸ்ரவேலர்களையும் ஏளனத்துடன் எள்ளி நகையாடி வந்தான் கோலியாத்.

    போர்க்களத்தில் இருந்த அண் ணன்களுக்காக தாவீது உணவு கொண்டுவந்திருந்த தினத்தில் கொஞ்சம் அதிகமாகவே கத்தினான், கோலியாத். அவனது ஆணவம் தாவீதை உசுப்பியது. ‘40 நாட்களாக பெலிஸ்தியர்களில் ஒருவன் மட்டும் வந்து இப்படிச் சவால் விடுகிறான். அதை ஏற்று அவனுடன் மோதுவதற்கு ஒரு இஸ்ரவேலன்கூட இல்லையா?’ என நினைத்துக்கொண்டான்.

    ‘கடவுளை நம்பினால் முடியாதது இல்லை’ என்ற முடிவுக்கு வந்த தாவீது, கோலியாத்துடன் சண்டையிட விரும்பினான். இதை அவன் சக வீரர்களிடம் கூறியபோது அவர்கள் முதலில் சிரித்தார்கள். ஆனால், தாவீது உறுதியாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்ட அவர்கள், அரசன் சவுலிடம் சென்று தாவீது பற்றிச் சொன்னார்கள். சவுலுக்கு முதலில் நம்பிக்கை வரவில்லை. இருப்பினும் அவனை வாழ்த்தி அனுப்பினார்.

    அரசனின் அனுமதி கிடைத்ததும் அருகிலிருந்த ஓடையை நோக்கி ஓடோடிச் சென்றான் தாவீது. அங்கே தண்ணீரில் உருண்டு உருண்டு திடமாகிக் கிடந்த கூழாங்கற்களில் இருந்து சிறந்த ஐந்தைத் தேர்வுசெய்து எடுத்தவன், அவற்றைத் தன் பைக்குள் போட்டுக் கொண்டான். பின்பு தன் கச்சை வாரில் இருந்து கவணைக் கையில் எடுத்துக்கொண்டு ஏலா பள்ளத்தாக்கின் நடுப்பகுதியில் மலைபோல் நின்றுகொண்டிருந்த கோலியாத்தை நோக்கி நடந்து சென்றான்.

    ஒரு சிற்றெறும்பைப் போல் துணிவுடன் கோலியாத்தை நேருக்கு நேராக தாவீது நெருங்கிச் செல்வதை இஸ்ரவேலர்களாலும், பெலிஸ்தியர்களாலும் நம்ப முடியவில்லை. தன்னை நோக்கி உருவத்தில் சிறுத்த இளவட்டப் பையன் கையில் கவணுடன் வருவதைக் கண்டபோது கோலியாத்தாலும் நம்ப முடியவில்லை. கோலியாத், 50 அடி தூரத்தில் தன் அருகில் வந்து தாவீது நின்றதும் அவனைப் பார்த்து கொக்கரித்தான்.

    ஏளன வார்த்தைகளுக்கு தாவீது சிறிதும் சினம் கொள்ளாமல், “நீ உனது வாளுடனும், ஈட்டியுடனும், கேடயத்துடனும் என்னிடம் போரிட வருகிறாய். நானோ பரலோகத் தந்தையாகிய கடவுளின் பெயரால் உன்னிடம் சண்டையிட வந்தேன். இன்று கடவுள் உன்னை என் கையில் ஒப்படைத்து விடுவார், நான் உன்னைக் கொல்லப் போகிறேன்” என்று கூறினான். இப்படி கூறிக்கொண்டே கோலியாத்தை நோக்கி ஓடினான். தனக்கும் கோலியாத்துக்கும் மத்தியில் தாக்குவதற்கு இணக்கமான இடைவெளி என அனுமானித்ததும் சட்டென்று தன் பையிலிருந்து ஒரு கூழாங்கல்லை எடுத்த தாவீது, அதைத் தன் கவணில் வைத்தான். கண் இமைப்பதற்குள் முழு பலத்துடன் அதைச் சுழற்றி கோலியாத்தின் நெற்றியைக் குறிவைத்து வீசினான்.

    அந்தக் கல் காற்றைக் கிழித்துக்கொண்டுபோய் கோலியாத்தின் நெற்றிப்பொட்டை தாக்கிப் பதம் பார்த்தது. அந்த ஒரு கல் தாக்கியவுடனே மூளை கலங்கி உயிரைவிட்டபடியே, மலை சரிவதுபோல் கீழே சரிந்தான் கோலியாத்.

    பல போர்களில் வெற்றிகளைத் தேடித் தந்தவன், மலைபோல் நம்பியிருந்த தங்களின் மாவீரன் விழுந்துவிட்டதை பெலிஸ்திய வீரர்கள் கண்டபோது, அதை நம்ப முடியாமல் அவர்களுக்குத் தொண்டை அடைத்தது. கீழே விழுந்து மாண்ட கோலியாத்தை நெருங்கிய தாவீது, சிதறிக்கிடந்த அவனது வாளை எடுத்து அதன் மூலமே அவனது தலையைத் தனியே கொய்தான். இதைக் கண்டு பெலிஸ்தியர் அனைவரும் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள். அவர்களைத் தேசத்தின் எல்லைக்கு அப்பால் துரத்தியடித்த இஸ்ரவேலர்கள் போரில் வெற்றியடைந்தார்கள். தாவீதின் புகழ் நாடெங்கும் பரவியது.
    “கணவர்களே... மனைவிகளே... இறைமகன் இயேசுவுக்குப் பயந்து, ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடங்கள். மனைவிகளே... நம்முடைய எஜமானுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள்.
    இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டு, அவரது நெறிகளைப் பரப்பியவர் புனித பவுல். இவர் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் அல்ல. ஆனால், தலைசிறந்த அப்போஸ்தலராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். திருமறை பரப்பும் பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பவுல் எழுதிய திருமடல்கள், விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை மேலும் செழுமைப்படுத்தியிருக்கின்றன. அந்த வரிசையில் எபேசிய மக்களுக்கு பவுல் எழுதிய திருமடலில், கணவன்-மனைவி இடையிலான உறவு குறித்து, அவர் குறிப்பிட்டிருக்கும் தீர்க்கமான கருத்துகள் குடும்ப அமைப்பையும், குடும்ப உறவையும் வலுப்படுத்தக்கூடியவை. அவற்றைப் புதிய ஏற்பாட்டில், எபேசியர் புத்தகத்தில் அதிகாரம் 5-ல் 23 முதல் 33 வரையிலான வசனங்களில் வாசித்துப் பாருங்கள்.

    “கணவர்களே... மனைவிகளே... இறைமகன் இயேசுவுக்குப் பயந்து, ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடங்கள். மனைவிகளே... நம்முடைய எஜமானுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால், கிறிஸ்து இயேசு நம் சபைக்குத் தலையாக இருப்பதுபோல், மனைவிக்குத் தலைவனாக கணவன் இருக்கிறான். கிறிஸ்து தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார். கிறிஸ்துவுக்கு சபை கட்டுப்பட்டு நடப்பதுபோல், மனைவிகளும் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.”

    கணவர்களே... சபைக்காக கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல, நீங்களும் உங்கள் மனைவி மீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள். அவளது வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால் சபையை சுத்தப்படுத்திப் புனிதமாக்குவதற்காக இயேசு அப்படிச் செய்தார். எந்தவொரு கறையோ எந்தவொரு குறையோ இல்லாமல் பரிசுத்தமான, களங்கமில்லாத சபையாக அது தனக்கு முன்னால் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.

    குடும்பமும் அதைப் போன்றதே. கணவர்களும் தங்கள் சொந்த உடல் மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவி மீதும் அன்பு காட்ட வேண்டும். தன் மனைவி மீது அன்பு காட்டுகிறவன் தன் மீதே அன்பு காட்டுகிறான். ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான். கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார். ஏனென்றால், நாம் அவருடைய உடலின் உறுப்புகளாக இருக்கிறோம். ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டு தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்’ என்ற திருமணச் சட்டத்தின் பரிசுத்த ரகசியம் மகத்தானது” என்று பவுல் குறிப்பிடுகிறார்.

    கணவன்-மனைவியின் பரிசுத்தமான உறவே குடும்பம் எனும் அமைப்பை வலுவாக்குகிறது. இந்த உறவும், நம்பிக்கையும் உடையும்போது குடும்ப அமைப்பும் உடைந்துபோகிறது. கணவன்-மனைவி உறவில் சிக்கல் தோன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உடல்ரீதியான பந்தமும், மனரீதியான நம்பிக்கையும் மிக முக்கியமானவை என்பதை (மத்தேயு 5:27-32) இயேசு எடுத்துக்காட்டுகிறார்.

    இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து பேசும்போது... “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணை பாலியல் இச்சையோடு பார்த்துக்கொண்டே இருப்பவன், அவளோடு ஏற்கனவே தன் உள்ளத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான். உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் முழு உடலும் நரகத்தில் வீசப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.”

    இயேசுவின் வார்த்தைகளில், குற்றங்களின் தொடக்கம் அலைபாயும் கண்கள் வழியே நிகழும் என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஆணோ-பெண்ணோ பிறரைப் பாலியல் இச்சையுடன் பார்ப்பதை அடியோடு களைந்தெறிய வேண்டும் என்கிறார் இயேசு. மீறிப் பார்க்கும்போது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவே கடவுள் உங்கள் கணக்கில் பாவத்தை சேர்த்துக்கொள்கிறார்.
    இயேசுவை உணவாக உட்கொள்ளும் அனைவரும் அவரது போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலமே அவர் உயிருள்ள உணவு என்பதை உணர முடியும்.
    இயேசு பல ஊர்களை சுற்றி வந்து பல புதுமைகளை செய்து கொண்டிருந்தார். பல நூறு மக்களுக்கு அற்புதம் செய்து உணவளித்தார். அவர் செய்த சில அற்புதங்களைக் கண்டு மக்கள் அவரை, ஓர் உணவுத் தொழிற்சாலையாகக் கருதிக்கொண்டார்கள். அவரிடம் திரும்பத் திரும்ப அதையே எதிர்பார்த்தனர். அப்படிப்பட்ட சூழ் நிலையில் இயேசுவின் பதில் அவர்களைத் தெளிவடையச் செய்தது.

    யோவான் எழுதிய நற்செய்தி அதிகாரம் 6-ல் 30 முதல் 35 இறைவசனங்களை வாசித்துப் பாருங்கள். இயேசு, கொல்லப் படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு மக்கள் மத்தியில் போதனை செய்துகொண்டிருந்தார். அப்போது மக்களில் சிலர் அவரிடம் வந்து, “ஐயா நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் அருள் அடையாளம் காட்டுகிறீர். எகிப்திலிருந்து மீட்டுவரப்பட்ட எங்கள் முன்னோர்கள் பாலை நிலத்தில் தங்கியிருந்தபோது ‘மன்னா’ என்ற உணவை உண்டார்களே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளப்பட்டது’ என மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா” என்று கேட்டனர்.

    அதற்கு இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவை அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.

    உடனே அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

    இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இருக்காது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இருக்காது” என்றார்.

    இயேசுவை அன்றாடம் அணுகிச் சென்ற மக்கள் தங்களுக்கு அவர் வழியே உணவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்குக் காரணம் தண்ணீருக்குக் கூட வழியில்லாத பாலை நிலத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு மோசே கடவுளிடமிருந்து ‘மன்னா’என்னும் உணவைப் பெற்றுக் கொடுத்தார். அதுபோலவே மக்களின் வாழ்வுக்கு நெறிகாட்டும் வகையில் ‘தோரா’ என்னும் திருச்சட்டத்தை வழங்கினார்.

    இதைத் தங்கள் ஆன்மிக வரலாற்றின் மூலம் அறிந்து வாழ்ந்த மக்கள், இயேசுவும் அதே உணவைப் பெற்றுத்தருவார் என நினைக்கிறார்கள். இயேசுவால் செய்ய முடியாத அதிசய செயல் ஏதாவது உண்டா எனத் தங்களின் எதிர்பார்ப்புக்கு நியாயம் கற்பிக்கிறார்கள். அதிசயமான விதத்தில் ஐயாயிரம் மக்களுக்கு இயேசு உணவு வழங்கிய நிகழ்வும் அவர்கள் இப்படி எதிர்பார்க்கக் காரணமாக அமைகிறது.

    ஆனால், இயேசு மன்னாவைவிடச் சிறந்த ஓர் உணவை அவர்களுக்கு வழங்குகிறார். அது மன்னாவைப் போல் சில காலம் மட்டுமே தரப்பட்ட உணவு அல்ல. என்றும் ஜீவித்திருக்கும் உயிருள்ள உணவு. பாடுகள் வழியாக இயேசுவே மக்களுக்கு உணவாகத் தம்மைக் கையளிக்கிறார். இந்த உணவை உண்போர் பசியால் வாட மாட்டார்கள். அவர்களுடைய தாகமும் தணியும்.

    முழுமையான நிறைவைத் தருகின்ற உணவை நாம் தேடினால் இயேசுவை அணுகிச் செல்ல வேண்டும். நம் வாழ்க்கையின் தாகம் தணிய வேண்டும் என விரும்பினால் இயேசுவிடம் நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவ்வாறு இயேசு இறை நம்பிக்கையின் உயர்வை உணர்த்துகிறார். இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு நமக்காகத் தம்மையே அர்ப்பணித்ததால் நமக்கு உணவாக மாறினார். இயேசுவை நம் வாழ்வின் ஊற்றாக ஏற்றால் அவரே நமக்கு வாழ்வு வழங்குவார்.

    இயேசுவை உணவாக உட்கொள்ளும் அனைவரும் அவரது போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலமே அவர் உயிருள்ள உணவு என்பதை உணர முடியும். இயேசுவைத் தம் வாழ்வுக்கு முன்மாதிரியாகக் கொண்டு, அவருடைய கட்டளைகளை ஏற்று நடக்கும் அனைவருக்கும் நிலைவாழ்வு உண்டு. நிலைவாழ்வு நாமாகவே உழைத்துப் பெறுகின்ற பேறு அல்ல, மாறாகக் கடவுளே தன் மகனின் வழியாக நமக்கு வழங்குகின்ற அன்புக் கொடை. இதுவே கடவுளின் ஏற்பாடு.
    ×