என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    கை சூம்பியவர் ஒருவருக்கும், கூன் முதுகு கொண்ட ஒரு பெண்ணுக்கும், காது வெட்டுண்ட பணியாளர் ஒருவருக்கும் இயேசு சுகமளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.
    இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில் உடல் ஊனமுற்ற சிலரையும் அற்புதமாக குணப்படுத்தினார். கை சூம்பியவர் ஒருவருக்கும், கூன் முதுகு கொண்ட ஒரு பெண்ணுக்கும்,  காது வெட்டுண்ட பணியாளர் ஒருவருக்கும் இயேசு சுகமளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.

    கை சூம்பியவர்

    இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசு மீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பிவரை நோக்கி, “எழுந்து, நடுவே நில்லும்” என்றார். பின்பு அவர்களிடம், “ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?” என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, “கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. (மாற்கு 3:1-5)

    கூன் முதுகாளர்

    ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, “அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்” என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். (லூக்கா 13:10-13)

    காதை இழந்தவர்

    இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், “யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?” என்றார். அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, “ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?” என்று கேட்டார்கள். அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, “விடுங்கள், போதும்” என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார். (லூக்கா 22:47-51)
    மனம் மாறி, நற்செய்தியைக் கைக்கொண்டு, புதிய உடன்படிக்கையின் புதிய மனிதராக வாழ நாம் முயற்சி மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் இயேசுவின் மணவிருந்தில் நாம் கலந்துகொள்ள முடியும்.
    அந்நாட்களில்... யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பைக் கடைப்பிடிப்பதில் உறுதியுடன் செயல்பட்டார்கள். எனவே, யோவானின் சீடரும், பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள். பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்’’ என்றார். இதன் மூலம் தன்னுடைய விண்ணேற்றத்திற்கு பிறகு, தன்னுடைய சீடர்களும், மக்களும் நோன்பிருப்பதை முன்கூட்டியே அறிவித்தார்.

    மேலும் அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார், “எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த ஒட்டு பழைய ஆடையைக் கிழித்துவிடும். கிழிசலும் பெரிதாகும். புதிய துண்டு பழையதோடு பொருந்தாது. அதுபோலப் பழைய தோற்பையில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் புதிய மது தோற்பையை வெடிக்கச் செய்யும், மதுவும் சிந்திப்போகும், தோற்பையும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். அப்போது இரண்டும் வீணாய்ப் போகாது. மேலும் பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர்கள் கருத்து” என்றார்.

    இயேசுவின் காலத்தில் நற்செய்தியைக் கேட்டும் பரிசேயர்கள் மனம் மாறவிரும்பவில்லை. திருச்சட்டத்தின் சடங்குகளைக் கைக்கொண்டு, பழைய ஆடையாகவும் பழைய தோற்பைகளாகவும் இருக்கவே விரும்பினார்கள் . “அவர்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் திருச்சட்டத்தின் செயல்களின் அடிப்படையில் முயற்சி செய்தார்கள். எனவே, தடைக்கல்லின் மேல் தடுக்கி விழுந்தார்கள்’’, என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்.

    இக்காலத்தில் நாமும்கூட பரிசேயரைப்போல் பழையதே நல்லது என்று எண்ணுகிறோம். நாம் பழைய ஆடையாகவும், பழைய தோற்பையாகவும் இருக்கிறோம். நம்மில் பலர் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டாலும் அதை கைக்கொள்ள விரும்புவதில்லை. ஏனெனில், அது நம்மை கிழித்துவிடுகிறது. நம் தவறுகளை அறியவோ, மனம் மாறவோ, இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவோ நாம் விரும்புவதில்லை. நாம் வெளிவேடக்காரராக வாழ்கிறோம். இயேசுவைத் துதிக்கிறோம். இறைவழிபாட்டின் சடங்குகளை நிறைவேற்றுகிறோம்.

    வெளிவேடக்காரராக வாழ்வதை நாம் அறியவேண்டும். மனம் மாறி, நற்செய்தியைக் கைக்கொண்டு, புதிய உடன்படிக்கையின் புதிய மனிதராக வாழ நாம் முயற்சி மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் இயேசுவின் மணவிருந்தில் நாம் கலந்துகொள்ள முடியும். நாம் புதிய தோற்பையாக இருக்கிறோமா?
    கானா ஊர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதே இயேசு கிறிஸ்து செய்த முதல் அற்புதம். இயற்கை மீதான இயேசுவின் அதிகாரத்தைக் காட்டும் இந்த அற்புதமே, அவரது இறையாட்சி பணிக்கு அடித்தளமாக அமைந்தது.
    கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.

    இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.

    பின்பு இயேசு, “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகவே பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். (யோவான் 2:1-11)

    இறையியல்

    தமது நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு கிறிஸ்து கூறியபோதும், அவரால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று அவரது தாய் மரியா உறுதியாக நம்புகிறார். “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” (மாற்கு 9:7) என்று விண்ணகத் தந்தை கூறியது போன்றே, “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) அன்னை மரியா கூறுகிறார்.

    அன்னையின் தூண்டுதலால் நிகழ்ந்த இந்த அற்புதமே, இயேசுவின் இறையாட்சி பணிக்கு அடித்தளமாக அமைந்தது. ஆதாம் பாவம் செய்ய ஏவாள் காரணமாக இருந்தது போல, இயேசுவின் மீட்பு பணியைத் தொடங்க மரியா காரணமாக இருக்கிறார்.இந்த அற்புதத்தில் சுவையற்ற தண்ணீர் இனிமைமிகு திராட்சை இரசமாக மாறியது, பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு அருள்நிலைக்கு கடந்து செல்வதைக் குறிக்கிறது.
    நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள். உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.
    சட்டங்களும் மரபுகளும் மனிதரின் நலனுக்காகவே பயன்பட வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கற்பித்தார். அவை நம்மை அடிமைப்படுத்த முயன்றால், தூக்கி எறியப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

    ஓய்வு நாள் சட்டம்

    ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்றார். மேலும் அவர் அவர்களை நோக்கி, “ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார். (மாற்கு 2:23-28)

    "ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை."

    நன்மை செய்வோம்

    இயேசு யூதர்களுடைய தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?” என்று கேட்டனர். அவர் அவர்களிடம், “உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை” என்றார். பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி, “உமது கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது. (மத்தேயு 12:9-13)

    சட்ட மீறல் இல்லை

    “ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலைப் பற்றி நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள். மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி, நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்? வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்.” (யோவான் 7:21-24)

    மரபு தேவையில்லை

    பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர். அதற்கு அவர், “நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள். உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள். ‘உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார். (மாற்கு 7:5-13)
    விதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவர்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார்.
    ‘ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது’ என்று கூறுகிறது விவிலியம். அதன்படி இறைமகன் இயேசு, கதைகளின் ஆற்றலை நன்கு உணர்ந்திருந்தார். எனவே, அவர் தந்தையாகிய கடவுளைப் பற்றி, அவருடைய அரசாங்கத்தைப் பற்றிப் புரியாத போதனைகள் செய்ய விரும்பவில்லை. கதைகள், உவமைகள் வழியே இறை உலகை அவர் எளிமையாக அறிமுகப்படுத்தினார். அப்படி இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார்.

    “ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோரத்தில் விழுந்தன, பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றன. வேறு சில விதைகள் மண் அதிகம் இல்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அவை உடனே முளைத்தபோதிலும், மண் ஆழமாக இல்லாததால் அவற்றால் வேர்பிடிக்க முடியவில்லை. அதனால், வெயில் வந்தபோது அவை வாடி வதங்கிக் காய்ந்துபோயின. இன்னும் சில விதைகள் முட்செடிகள் நிறைந்த நிலத்தில் விழுந்தன. ஆனால், அந்த முட்செடிகள் பெரிதாக வளர்ந்து அவற்றை நெருக்கிப்போட்டன. அவர் தூவிய மற்ற விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்து, விளைச்சல் தரத் தொடங்கின. அவற்றில் சில 100 மடங்காகவும், வேறு சில 60 மடங்காகவும், இன்னும் சில 30 மடங்காகவும் பலன் தந்தன. நான் கூறிய உவமையைக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்று சொன்னவர், சற்று இடைவெளிவிட்டு அந்தக் கதைக்கான உள்ளர்த்தத்தையும் எடுத்துரைத்தார்.

    “பாதையோர நிலத்தைப் போல் இருப்பவர் பரலோகத் தந்தையின் அரசாங்கத்தைப் பற்றிய இறைச் செய்தியைக் கேட்டும், அதனுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. ஏனென்றால், பொல்லாதவன் வந்து அவருடைய மனதில் விதைக்கப்பட்டவற்றைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். பாறைகளின் மேல் விழுந்த விதைகள் இறை வார்த்தைகளைக் கேட்டும், மனதில் அவற்றை ஆழமாகப் பதியவைத்துக்கொள்வதில்லை. முட்புதருக்கு இடையில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அது இறை வார்த்தைகளைக் கேட்டும் இவ்வுலக வாழ்வின் மீதும் பணத்தின் மீதும் கொண்ட ஆசையால் அவ்வார்த்தைகளைத் தன்னுள் இருத்தி வைத்து அவற்றின்படி நடக்காதவனைக் குறிக்கிறது. எனவே, இறை வார்த்தை அவன் வாழ்வில் பயன் விளைவிப்பதில்லை.

    நல்ல நிலத்தில் விழுந்த விதை யாரைக் குறிக்கிறது? அவ்விதை இறை வார்த்தைகளைக் கேட்டுப் புரிந்துகொள்ளும் மனிதனைக் குறிக்கிறது. அத்தகைய மனிதன் வளர்ந்து, சில சமயம் 100 மடங்கும், சில சமயம் 60 மடங்கும், சில சமயம் 30 மடங்கும் பலன் தருகிறான்” என்று விளக்கினார்.

    இவ்வாறு விதைப்பவரைக் கடவுளாகிய பரலோகத் தந்தையாகவும், அவர்தரும் வார்த்தைகளை விதைகளாகவும், அவற்றை ஏந்திக்கொள்ளும் நிலமாக மனிதர்களையும், இறை வார்த்தையின்படி வாழும் வாழ்க்கையை விளைச்சலாகவும் இயேசு இந்த உவமைக் கதையின் வழியாகச் சுட்டிக்காட்டினார்.
    இயேசுவின் போதனைகள் அனைத்தும் எக்காலத்து மனிதனுக்கும் பொருந்தக்கூடியது ஆகும். அவரது அற்புத வார்த்தைகளில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
    * தீமையோடு எதிர்த்து நிற்க வேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டு.

    * உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுக்கொடு.

    * ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வர பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.

    * உன்னிடத்தில் கேட்கிறவனுக்கு கொடு. உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.

    * உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள். உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள். உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். இப்படி செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்.

    * ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோக ராஜ்யம் அவர்களுடையது.

    * துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் ஆறுதலடைவார்கள்.

    * இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் சொர்க்கம் பெறுவார்கள்.

    * இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனை தரிசிப்பார்கள்.

    * சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள்.
    "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."
    நமது வாழ்வில் நிகழும் அற்புதங்கள் அனைத்திற்கும் நமது நம்பிக்கையே காரணம் என்று இயேசு கிறிஸ்து போதித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக அவரில் நம்பிக்கை வைத்தால் நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இயேசு கற்பித்தார்.

    சொந்த நம்பிக்கை

    பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம்பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடு இரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரம் முதலே அப்பெண் நலம் அடைந்திருந்தார். (மத்தேயு 9:20-22)

    "தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்."

    பிறரின் நம்பிக்கை

    இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார். “ஐயா, என் பையன் முடக்கு வாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்” என்றார். இயேசு அவரிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன்” என்றார். நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான். நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படைவீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார்.

    வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்” என்றார். இதைக் கேட்டு இயேசு வியந்து, தம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்களை நோக்கி, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரயேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை” என்றார். பின்னர் இயேசு நூற்றுவர் தலைவரை நோக்கி, “நீர் போகலாம், நீர் நம்பிய வண்ணமே உமக்கு நிகழும்” என்றார். அந்நேரமே பையன் குணமடைந்தான். (மத்தேயு 8:5-13)

    மகனிடம் நம்பிக்கை

    “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை.” (யோவான் 3:16-18)

    “மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்.” (யோவான் 6:40) “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்.” (யோவான் 11:25) “என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இருளில் இராதபடி நான் ஒளியாக உலகிற்கு வந்தேன்.” (யோவான் 12:44,46)
    ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.” (லூக்கா 13:24-28)
    பலரும் செய்ய விரும்பாத ஒரு சில செயல்கள் மட்டுமே நிலை வாழ்வு பெற உதவும் என்று இயேசு கிறிஸ்து போதித்தார். அகன்ற வாயிலாக உலகம் காட்டும் பல செயல்கள் அழிவுக்கே இட்டுச் செல்லும் என்று அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

    வாழ்வுக்கு உரியோர்

    “உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.” (யோவான் 8:12) “தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.” (யோவான் 12:25)

    "வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே."

    இடுக்கமான வாயில்

    “இடுக்கமான வாயிலின் வழியே நுழையுங்கள்; ஏனெனில் அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழியும் விரிவானது; அதன் வழியே செல்வோர் பலர். வாழ்வுக்குச் செல்லும் வாயில் மிகவும் இடுக்கமானது; வழியும் மிகக் குறுகலானது; இதைக் கண்டுபிடிப்போர் சிலரே.” (மத்தேயு 7:13-14)

    வருந்தி முயலுங்கள்

    “இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். ‘வீட்டு உரிமையாளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்’ என்று கேட்பீர்கள். அவரோ, நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது’ எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், ‘நாங்கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே’ என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், ‘நீங்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னைவிட்டு அகன்று போங்கள்’ என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறையாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும் போது அழுது அங்கலாய்ப்பீர்கள்.” (லூக்கா 13:24-28)
    தாமே விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என்றும், தம்மிடம் இருந்தே வாழ்வு தரும் தண்ணீர் கிடைக்கும் என்றும் இயேசு கூறுகிறார்.
    விண்ணகத் தந்தையைப் போன்றே தாமும் வாழ்வின் ஊற்றாய் இருப்பதாக இயேசு கிறிஸ்து போதித்தார். தாமே விண்ணிலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு என்றும், தம்மிடம் இருந்தே வாழ்வு தரும் தண்ணீர் கிடைக்கும் என்றும் இயேசு கூறுகிறார்.

    வாழ்வின் தண்ணீர்

    சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?” என்று கேட்டார். இயேசு அவரைப் பார்த்து, “கடவுளுடைய கொடை எது என்பதையும் ‘குடிக்கத் தண்ணீர் கொடும்’ எனக் கேட்பவர் யார் என்பதையும் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார். அவர் இயேசுவிடம், “ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ?” என்றார். இயேசு அவரைப் பார்த்து, “இந்த தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலை வாழ்வு அளிக்கும்” என்றார். (யோவான் 4:9-14)

    "மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்."

    வாழ்வு தரும் உணவு

    “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிட மாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச் செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: மானிட மகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடைய மாட்டீர்கள்.” (யோவான் 6:35-40,53)

    வாழ்வின் ஊற்று

    “தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழ வைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழ வைக்கிறார். தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை. தமக்கு எல்லாரும் மதிப்புக் கொடுப்பதுபோல மகனுக்கும் மதிப்புக்கொடுக்க வேண்டுமெனத் தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் அவர் மகனுக்கு அளித்துள்ளார். மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை. என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலை வாழ்வைக் கொண்டுள்ளனர். அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டார்கள்; ஏற்கெனவே சாவைக் கடந்து வாழ்வுக்கு வந்துவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். காலம் வருகிறது; ஏன், வந்தே விட்டது. அப்போது இறைமகனின் குரலை இறந்தோர் கேட்பர்; அதைக் கேட்போர் வாழ்வர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தந்தை, தாம் வாழ்வின் ஊற்றாய் இருப்பது போல மகனும் வாழ்வின் ஊற்றாய் இருக்குமாறு செய்துள்ளார்.” (யோவான் 5:21-26) “வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.” (யோவான் 14:6)
    மனித மாண்பு மற்றும் அன்புறவை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவர் மற்றவரை எப்படி நோக்குவது, அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இது வழிகாட்டுகிறது.
    “பிறர் மனைவிமீது ஆசை கொள்ளாதே” (You Shall Not Covet Your Neighbour’s Wife) என்பது இஸ்ரயேலருக்கு மோசே வழியாக கடவுள் வழங்கிய கட்டளைகளில் ஒன்பதாம் கட்டளை ஆகும். நமது உள்ளார்ந்த உணர்வுகள் கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும். மற்றவருக்கு மணமானவர் மீது இச்சை கொள்வதை இக்கட்டளைத் தடை செய்கிறது.

    விவிலியத்தில்

    விடுதலைப்பயணம், இணைச்சட்டம் ஆகிய நூல்களில் காணப்படும் 9ஆம் கட்டளையின் வார்த்தைகள் பின்வருமாறு:

    விடுதலைப்பயணம் 20:17

    பிறர் மனைவியைக் கவர்ந்திட விரும்பாதே.

    இணைச்சட்டம் 5:21

    பிறர் மனைவியைக் காமுறாதே!

    இதயத் தூய்மை

    மட்டற்ற சிற்றின்ப வேட்கையை, ஒருவர் எண்ணத்திலும் விருப்பத்திலும் வெற்றிகொள்ள வேண்டுமென ஒன்பதாம் கட்டளை வலியுறுத்துகிறது. இதயத்தை தூய்மைப்படுத்தவும், தன்னடக்கம் என்ற புண்ணியத்தை கடைபிடிக்கவும், சிற்றின்ப வேட்கைக்கு எதிரான போராட்டம் இன்றியமையாததாகிறது. கடவுளின் அருள், கற்பு என்ற புண்ணியம், நோக்கத்தின் தூய்மை, பார்வையின் தூய்மை, கற்பனை மற்றும் உணர்வுகளின் ஒழுக்கம், செபம் ஆகியவற்றின் வழியாக திருமுழுக்கு பெற்ற ஒருவர் இதயத் தூய்மையை அடைய முடியும். கற்பின் உணர்திறனை வெளிப்படுத்தும் தன்னடக்கம், இதயத் தூய்மைக்குத் தேவையானதாக உள்ளது.

    தீமையை நாடும் முறையற்ற சிற்றின்ப வேட்கையில் ஆர்வத்தை தூண்டும் அனைத்தையும் தவிர்க்க இதயத் தூய்மை உதவுகிறது. மனித மாண்பு மற்றும் அன்புறவை உறுதிப்படுத்தும் வகையில், ஒருவர் மற்றவரை எப்படி நோக்குவது, அவர்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதற்கு இது வழிகாட்டுகிறது.

    எதிரான பாவங்கள்

    விபசாரம், புறநிலைப் பாலுறவு, பரத்தைமை, வன்புணர்வு, பலதார மணம் உள்ளிட்ட கற்பு நெறிக்கு எதிரான செயல்களில் ஈடுபடத் தூண்டும் எண்ணங்கள் மற்றும் ஆசைகளே ஒன்பதாம் கட்டளைக்கு எதிரான பாவங்கள் ஆகும்.
    பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர்களில் பலர், உலகைப் படைத்த கடவுளாகிய யகோவாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தார்கள்.
    சாலமோனின் மறைவுக்குப் பின், இஸ்ரவேல் இரண்டு ராஜ்ஜியங்களாகப் பிரிக்கப்பட்டது, ஒன்று வடக்கு ராஜ்ஜியம், மற்றொன்று தெற்கு ராஜ்ஜியம். பெரும்பான்மையான இஸ்ரவேலர்கள் கற்பனைக் கடவுளர்களை வழிபட்டனர். எருசலேம் தேவாலயத்தை எல்லாவிதத்திலும் களங்கப்படுத்தினர். தீர்க்கதரிசிகளை அனுப்பி கடவுள் இஸ்ரவேலர்களை எச்சரித்துத் திருத்த முயன்றார். ஆனால், கடவுளின் தூதுவர்களாகிய அவர்களது வார்த்தைகளைக் கேட்க இஸ்ரவேலர்கள் தயாராக இல்லை. கோபம் கொண்ட கடவுள் அசீரியரின் படையெடுப்பை அனுமதித்தார்.

    இதனால் போரில் சரணடைந்த இஸ்ரவேலர்களை பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாரின் படையினர் கைது செய்யப்பட்டு பாபிலோனுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே அவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். அதன் பின்னர் அடுத்துவந்த சில ஆண்டுகளில் நேபுகாத்நேசாரால் எருசலேம் நகரம் தீக்கிரையாக்கப்பட்டது. எருசலேம் நகரின் கோட்டைச்சுவர்கள் உடைத்து நொறுக்கப்பட்டன. அதன் வாசல் கதவுகள் எரிக்கப்பட்டு சாம்பலாய்ப் போயின. பாதுகாப்பு அரண் ஏதுமில்லாத நிலையில் அதன் பின்னர் இஸ்ரவேல் தேசமே யாருமின்றி வெறிச்சோடிக்கிடந்தது.

    பாபிலோனுக்கு சிறைபிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரவேலர்களில் பலர், உலகைப் படைத்த கடவுளாகிய யகோவாவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்களாய் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களைக் கடவுள் கைவிடவில்லை. சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு தாம் முன்பு இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த அந்தத் தேசத்துக்கு அவர்களை மீண்டும் கொண்டுவரப்போவதாகக் கடவுள் வாக்குக் கொடுத்தார்.

    பாபிலோன் சிறையில் இருந்தபோது கடவுள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்த இஸ்ரவேலர்கள் பல சோதனைகளை எதிர்கொண்டார்கள். பாபிலோன் அரசன் நேபுகாத்நேசார் உத்தரவின்படி சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூவர் நெருப்புச் சூளைக்குள் வீசப்பட்டார்கள், ஆனால் கடவுள் அவர்களை உயிருடன் வெளியே அழைத்து வந்தார். அதன் பின்னர் பெர்சியர்கள் பாபிலோனைக் கைப்பற்றினார்கள். அப்போது மற்றொரு விசுவாசியான தானியேல் சிங்கங்களின் கூண்டுக்குள் வீசப்பட்டார். ஆனால், சிங்கங்கள் அவரை உண்ணவரும் முன் கடவுள் அவற்றின் வாயைக் கட்டிப்போட்டு அவரையும் பாதுகாத்தார்.

    இறுதியில் இஸ்ரவேலர்களின் கடவுள் சக்தி வாய்ந்தவராக இருப்பதை அறிந்து பெர்சிய அரசனாகிய கோரேஸு இஸ்ரவேலர்களை விடுதலை செய்தார். பாபிலோனுக்குக் கைதிகளாக இழுத்துச்செல்லப்பட்டுப் பெரும் துன்பங்களை அனுபவித்தாலும் கடவுள் தங்களைக் கைவிட மாட்டார் என்று நம்பிய இஸ்ரவேலர்கள் சுமார் 70 ஆண்டுகள் பாபிலோன் சிறையிலிருந்து விடுதலை கிடைத்த பின் தங்கள் சொந்த தேசமாகிய இஸ்ரவேலுக்கு நெகேமியாவின் தலைமையில் திரும்பி வந்தார்கள். எருசலேமுக்குத் திரும்பிவந்த கையோடு, அழிந்து கிடந்த தங்களின் நகரின் நிலைகண்டு வருந்தி அழுதனர். முதல்வேலையாகத் தங்களைக் காத்து ரட்சித்த பரலோகத் தந்தையாகிய யகோவாவின் ஆலயத்தை மீண்டும் கட்டத் தொடங்கினார்கள். ஆலயம் எழுப்புவதை எதிரிகள் பலமுறை தடை செய்தபோதும் சுமார் 22 ஆண்டுகள் முயன்று அந்தப் பேராலயத்தைக் கட்டி முடித்தார்கள்.

    பேராலயத்தைக் கட்டி முடித்த பின் தங்கள் நகரத்தின் மதில்களைக் கட்டத் தொடங்கினார்கள். இதைக் கண்ட இஸ்ரவேலர்களின் எதிரிகள், “விரைந்துசென்று இஸ்ரவேலர்களைக் கொன்றொழித்து அவர்கள் தங்கள் நகரத்தின் மதில்களைக் கட்டுவதைத் தடுத்து நிறுத்துவோம்” என்று புறப்பட்டார்கள். இதை உளவறிந்த நெகேமியா, நகரத்தைப் புனரமைக்கும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு ஈட்டிகளையும் கொடுத்து, நம்பிக்கை தந்தார்.

    இதனால் இஸ்ரவேல் மக்கள் துணிவுடன் எதிரிகளை எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருந்தார்கள். அல்லும் பகலும் ஆயுதங்களைத் தயாராக வைத்துக்கொண்டு, நகரின் மதில்களைக் கட்டியெழுப்புவதில் முழு மூச்சாக ஈடுபட்டனர். அதனால் 52 நாட்களுக்குள் எருசலேமின் மதில்கள் கட்டி முடிக்கப்பட்டன. இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லி மக்கள் அனைவரும் கோட்டைக் கொத்தளம் அமையப்பெற்ற பாதுகாப்பான நகரத்துக்குள் பயமின்றி வாழத் தொடங்கினர். நெகேமியாவும் குருவாகிய எஸ்றாவும் கடவுளுடைய திருச்சட்டத்தை இஸ்ரவேல் மக்களுக்குக் கற்பித்தார்கள்.

    மக்களும் பாவத்தை அறிக்கையிட்டு திருச்சட்டத்தின்படி வாழ உறுதி பூண்டார்கள். ஆனால், காலம் செல்லச் செல்ல, திருச்சட்டத்தைக் கற்பித்து வந்த குருக்கள், மக்களை ஒடுக்கும் அதிகார பீடமாக மாறினார்கள். அந்நியர்களை அவர்கள் அனுமதித்தார்கள். அந்நியனாகிய பெர்சிய அரசன் மீண்டும் இஸ்ரவேலை ஆளத் தொடங்கினான். இஸ்ரவேலர்கள் அவனுக்கு சேவை செய்து வாழ வேண்டிய நிலை உருவானது. அந்தத் தருணத்தில் “ஒரு புதிய அரசரை அனுப்புவேன், அவர் உங்களுக்கு சமாதானத்தையும் மீட்பையும் கொண்டுவருவார்” என்று தீர்க்கதரிசியின் வழியாக வாக்குக்கொடுத்தார் கடவுள். அவருக்காக மக்கள் காத்திருக்கத் தொடங்கினர். அவரே ரட்சகரான இயேசு.
    “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.” (மத்தேயு 18:1-4)
    விண்ணரசில் நுழைவதற்கு தாழ்ச்சி மிகவும் அவசியமானது என்று இயேசுகிறிஸ்து போதித்தார். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர் என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

    விண்ணரசில் பெரியவர்

    இயேசுவும் அவரது சீடர்களும் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். (மாற்கு 9:33-35)

    சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.” (மத்தேயு 18:1-4)

    "சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்."

    “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.” (லூக்கா 14:8-11)

    “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ‘ரபி’ (போதகர்) என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

    ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் இயேசுகிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.” (மத்தேயு 23:3-12)
    ×