search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?

    “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.” (மத்தேயு 18:1-4)
    விண்ணரசில் நுழைவதற்கு தாழ்ச்சி மிகவும் அவசியமானது என்று இயேசுகிறிஸ்து போதித்தார். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர் என்றும் அவர் எச்சரிக்கை விடுக்கிறார்.

    விண்ணரசில் பெரியவர்

    இயேசுவும் அவரது சீடர்களும் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார். அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில் தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார். (மாற்கு 9:33-35)

    சீடர்கள் இயேசுவை அணுகி, “விண்ணரசில் மிகப் பெரியவர் யார்?” என்று கேட்டார்கள். அவர் ஒரு சிறு பிள்ளையை அழைத்து அவர்கள் நடுவில் நிறுத்தி, பின்வருமாறு கூறினார்: “நீங்கள் மனந்திரும்பிச் சிறு பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இந்தச் சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்.” (மத்தேயு 18:1-4)

    "சிறு பிள்ளையைப் போலத் தம்மைத் தாழ்த்திக் கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர்."

    “ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், ‘இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்’ என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும் போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், ‘நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்’ எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.” (லூக்கா 14:8-11)

    “மறைநூல் அறிஞரும் பரிசேயரும் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வர மாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ‘ரபி’ (போதகர்) என அழைப்பதையும் விரும்புகிறார்கள்.

    ஆனால் நீங்கள் ‘ரபி’ என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் இயேசுகிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.” (மத்தேயு 23:3-12)
    Next Story
    ×