search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு கிறிஸ்து
    X
    இயேசு கிறிஸ்து

    சட்டமும் மரபுகளும்- இயேசு கிறிஸ்துவின் விளக்கம்

    நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள். உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.
    சட்டங்களும் மரபுகளும் மனிதரின் நலனுக்காகவே பயன்பட வேண்டும் என்று இயேசு கிறிஸ்து கற்பித்தார். அவை நம்மை அடிமைப்படுத்த முயன்றால், தூக்கி எறியப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

    ஓய்வு நாள் சட்டம்

    ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?” என்று கேட்டனர். அதற்கு அவர் அவர்களிடம், “தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா?” என்றார். மேலும் அவர் அவர்களை நோக்கி, “ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே” என்றார். (மாற்கு 2:23-28)

    "ஓய்வு நாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை."

    நன்மை செய்வோம்

    இயேசு யூதர்களுடைய தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம், “ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?” என்று கேட்டனர். அவர் அவர்களிடம், “உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால் அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர். ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை” என்றார். பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி, “உமது கையை நீட்டும்” என்றார். அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது. (மத்தேயு 12:9-13)

    சட்ட மீறல் இல்லை

    “ஓய்வுநாளில் நான் செய்த ஒரே ஒரு செயலைப் பற்றி நீங்கள் அனைவரும் வியப்புறுகிறீர்கள். மோசே கொடுத்த விருத்தசேதனச் சட்டப்படி, நீங்களே ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்கிறீர்கள்! ஒருவர் ஓய்வு நாளில் விருத்தசேதனம் செய்தாலும் ஓய்வு நாள் சட்டம் மீறப்படுவதில்லையானால், அதே ஓய்வுநாளில் நான் முழு மனிதனையும் நலமாக்கியதற்காக நீங்கள் சினம் கொள்வதேன்? வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். நீதியோடு தீர்ப்பளியுங்கள்.” (யோவான் 7:21-24)

    மரபு தேவையில்லை

    பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர். அதற்கு அவர், “நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள். உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள். ‘உன் தந்தையையும் தாயையும் மதித்துநட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார். (மாற்கு 7:5-13)
    Next Story
    ×