search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக்குகிறார்

    கானா ஊர் திருமணத்தில் தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றியதே இயேசு கிறிஸ்து செய்த முதல் அற்புதம். இயற்கை மீதான இயேசுவின் அதிகாரத்தைக் காட்டும் இந்த அற்புதமே, அவரது இறையாட்சி பணிக்கு அடித்தளமாக அமைந்தது.
    கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.

    இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும்.
    இயேசு
    அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள்.

    பின்பு இயேசு, “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகவே பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். (யோவான் 2:1-11)

    இறையியல்

    தமது நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு கிறிஸ்து கூறியபோதும், அவரால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று அவரது தாய் மரியா உறுதியாக நம்புகிறார். “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” (மாற்கு 9:7) என்று விண்ணகத் தந்தை கூறியது போன்றே, “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) அன்னை மரியா கூறுகிறார்.

    அன்னையின் தூண்டுதலால் நிகழ்ந்த இந்த அற்புதமே, இயேசுவின் இறையாட்சி பணிக்கு அடித்தளமாக அமைந்தது. ஆதாம் பாவம் செய்ய ஏவாள் காரணமாக இருந்தது போல, இயேசுவின் மீட்பு பணியைத் தொடங்க மரியா காரணமாக இருக்கிறார்.இந்த அற்புதத்தில் சுவையற்ற தண்ணீர் இனிமைமிகு திராட்சை இரசமாக மாறியது, பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு அருள்நிலைக்கு கடந்து செல்வதைக் குறிக்கிறது.
    Next Story
    ×