search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசு
    X
    இயேசு

    இயேசுவின் இறையரசுப் பணியில் முழுமையாக ஒத்துழைத்த மரியா

    மரியாவின் தாயுள்ளம், இயேசுவின் நலனில் மிகுந்த ஈடுபாடு கொண்டதாக இருந்தது. மரியா இயேசுவைக் காண ஏங்கியதாக, காத்திருந்ததாக நற்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன.
    யோசேப்பின் மரணத்துக்குப் பிறகும், ஏறக்குறைய நான்கரை ஆண்டுகள் அன்னை மரியாவுடனேயே இயேசு தங்கியிருந்தார். தாயும் மகனும் இறைவேண்டலிலும் அன்பிலும் நிலைத்திருந்து, கடவுளின் திட்டம் நிறைவேறத் தங்களை முழுமையாக அர்ப்பணித்தனர். பிறகு, இயேசு மரியாவிடம் விடைபெற்றுக் கொண்டு இறையாட்சி பணி செய்ய புறப்பட்டார்.

    முதல் அற்புதம்

    இயேசு திருமுழுக்கு பெற்ற பின்பு, ஊர்ஊராய்ச் சென்று இறையரசின் நற்செய்தியை அறிவித்து வந்தார். இந்நிலையில், ‘கலிலேயா நாட்டின் கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாய் மரியாவும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, “திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது” என்றார். இயேசு அவரிடம், “அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே” என்றார்.

    இயேசுவின் தாய் பணியாளரிடம், “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்றார். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். இயேசு அவர்களிடம், “இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்” என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். பின்பு அவர், “இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்” என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.

    பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, “எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?” என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இதன் பிறகு இயேசுவும் அவர் தாயும் சகோதர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்கு சில நாட்கள் தங்கியிருந்தனர்.

    மகனின் சீடராக

    இயேசுவின் போதனைப் பணிகளின் மத்தியிலும் அவரது உடல் நலனில் அக்கறை கொண்ட நல்லத் தாயாக மரியா அவரைத் தேடிச் சென்றார். ‘இயேசுவின் தாயும் சகோதரர்களும் அவரிடம் வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாக இருந்த காரணத்தால் அவரை அணுக முடியவில்லை.’ (லூக்கா 8:19) ‘இயேசுவின் தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச்சொல்லி ஆள் அனுப்பினார்கள்.’ (மாற்கு 3:31) ‘மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.’ (மத்தேயு 12:46)

    மரியாவின் தாயுள்ளம், இயேசுவின் நலனில் மிகுந்த ஈடுபாடு கொண்டதாக இருந்தது. மரியா இயேசுவைக் காண ஏங்கியதாக, காத்திருந்ததாக நற்செய்திகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவரது சீடத்துவ உள்ளம், இயேசுவின் வார்த்தைகளிலும் இறையரசின் மதிப்பீடுகளிலும் ஆர்வம் நிறைந்ததாக விளங்கியது. கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில், மரியா ஆழ்ந்த மனவுறுதி கொண்டவராகத் திகழ்ந்தார். எனவேதான், “உம் தாயும், சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்று அறிவித்தவர்களிடம், “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்” என இயேசு பதிலளித்தார். (லூக்கா 8:20-21)

    நாசரேத்தில் வாழ்ந்த பலரும் இயேசுவின் செயல்களைக் கண்டு வியந்து, “இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே?” (மத்தேயு 13:55) என்று கேள்வி எழுப்பினர். ஒருமுறை இயேசு போதித்துக் கொண்டிருந்தபோது, “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” (லூக்கா 11:27) என்று பெண் ஒருவர் குரலெழுப்பிக் கூறினார். பல நேரங்களில், இயேசுவைப் பின்தொடர்ந்த பெண் சீடர்களின் கூட்டத்தில் மரியாவும் ஓர் அங்கமாகத் திகழ்ந்தார். இயேசுவின் இறையரசுப் பணியில் முழுமையாக ஒத்துழைத்த மரியா, சீடருக்குரிய மனநிலையோடு அவரை எப்பொழுதும் பின்தொடர்ந்து சென்றார்.
    Next Story
    ×