search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இயேசுவின் வளர்ப்புத்தந்தை யோசேப்பு
    X
    இயேசுவின் வளர்ப்புத்தந்தை யோசேப்பு

    இயேசுவின் வளர்ப்புத்தந்தை யோசேப்பு

    யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத்தந்தை மட்டுமே என்பதால், முதல் மூன்று நூற்றாண்டுகளில் பெரும்பாலும் மறக்கப்பட்ட புனிதராகவே இருந்தார்.
    புனித யோசேப்பு (Saint Joseph), ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வளர்ப்புத்தந்தை ஆவார். தமிழ் மரபில், ‘சூசையப்பர்’, ‘வளனார்’ ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். மகனாகிய கடவுளையும் அவரது தாயான கன்னி மரியாவையும் இவ்வுலகில் பாதுகாத்தவர் என்பதால், இவர் ‘திருக்குடும்பத்தின் தலைவர்’ என்று அறியப்படுகிறார். விவிலியம் இவரை நேர்மையாளர் என்று புகழ்ந்துரைக்கிறது. கன்னி மரியாவுக்கு நிகராக கடவுளின் மீட்புத் திட்டத்தில் யோசேப்பு ஒத்துழைத்திருக்கிறார். இவர் பேசியதாக நற்செய்திகள் எதுவும் கூறாததால், ‘அமைதியான புனிதர்’ என்று பெயர் பெற்றுள்ளார்.

    மனுவுரு எடுத்த இறைமகனுக்கு இவ்வுலகில் முன்மாதிரியான தந்தையாக செயல்பட யோசேப்பை கடவுள் முன்நியமனம் செய்தார். கன்னி மரியாவைத் திருமணம் செய்ததன் வழியாக இயேசுவின் தந்தை என்ற உரிமை யோசேப்புக்கு கிடைத்தது. ஆகவேதான், மரியாவிடம் பிறந்த இறைமகன், “யோசேப்பின் மகனாகிய இயேசு” (யோவான் 6:42) என்று அழைக்கப்பட்டார். ஆண்டவர் இயேசுவின் இறையாட்சிப் பணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் பொறுப்பு யோசேப்பிடம் இருந்தது.

    மரியா கன்னியாக இருந்தபோதே இறைமகனை கருத்தாங்கியதால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க யோசேப்பு என்ற கணவர் தேவைப்பட்டார். இவ்வாறு, மரியாவின் வயிற்றில் இருந்த இறைமகன் இயேசு கருவிலேயே கொல்லப்படாமல் பாதுகாப்பு பெற்றார். குழந்தை இயேசுவை ஏரோது கொல்லத் தேடியபோது, அவருக்கு மீண்டும் பாதுகாப்பு தேவைப்பட்டது. இவ்வாறு, மீட்புத் திட்டம் நிறைவேறும் வரை இயேசுவைப் பாதுகாக்கும் பொறுப்பை தந்தையாம் கடவுள் யோசேப்புக்கு அளித்திருந்தார். விண்ணகத் தந்தையின் பதிலாளராக இருந்து, ஆண்டவர் இயேசுவுக்கு கற்பிக்கும் பணியை புனித யோசேப்பு நிறைவேற்றினார்.

    பெத்லகேமில் வாழ்ந்த தச்சரான யாக்கோபு – ராகேல் தம்பதியரின் மகனாக கி.மு. 40ல் யோசேப்பு பிறந்தார். சிறு வயது முதலே நீதியின் மீது நாட்டம் கொண்டவராக விளங்கிய இவரிடம், தனிமையில் செபிக்கும் பழக்கம் இருந்தது. சிறுவனாக இருந்தபோதே, தொழுகைக் கூடத்திற்கு சென்று மறைநூலை வாசிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார். இவரது தந்தையிடம் இருந்து தச்சுத் தொழிலைக் கற்றுக் கொண்டார். யோசேப்பு இளமையிலும் பாவத்தின் நிழல் அணுகாமல் புனிதமான வாழ்வு வாழ்ந்தார். பதினெட்டு வயதில் தாயையும் தந்தையையும் அடுத்தடுத்து இழந்த இவர், நாசரேத்தில் இருந்த உறவினர் வீட்டுக்கு சென்று தங்கினார்.

    முப்பது வயதானதும் திருமணம் முடிக்குமாறு உறவினர்கள் வற்புறுத்தி வந்ததால், துறவற வாழ்வை விரும்பி பாலை நிலத்துக்கு சென்றார். அங்கு ஒரு முதியவரை சந்தித்த இவர், பின்னர் எருசலேம் கோவிலுக்கு சென்றார். அப்போது குரு செக்கரியா நடத்திய சுயம்வரத்தில், யோசேப்பின் கோலில் லீலி மலர்கள் மலர்ந்ததால் மரியாவின் கணவராக இவர் தேர்வு செய்யப்பட்டார். இருவருக்கும் மண ஒப்பந்தம் நிகழ்ந்த பிறகு, மரியா நாசரேத்தில் இருந்த தமது உறவினர் வீட்டில் தாய் அன்னாவுடன் தங்கியிருந்தார். அங்கிருந்த வேளையில்தான், மரியாவுக்கு வானதூதர் தோன்றி இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவித்தார். இதையடுத்து, தூய ஆவி நிழலிட்டதால் கன்னி மரியா கருவுற்றார்.

    மரியா கருவுற்றதற்கு காரணம் அறியாத யோசேப்பு அவரை விலக்கி விட எண்ணினார். ஆனால், வானதூதரின் அறிவுரையை ஏற்று மரியாவை மனைவியாக ஏற்றுக் கொண்டார். பின்னர், பெத்லகேமில் இயேசு பிறந்தார். நாற்பதாம் நாளில், யோசேப்பும் மரியாவும் குழந்தை இயேசுவை எருசலேம் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணித்தனர். கிழக்கில் இருந்து வந்த ஞானிகளால், குழந்தை இயேசுவைக் கொல்லத் தேடிய ஏரோதிடம் இருந்து தப்பிக்க திருக்குடும்பம் எகிப்துக்கு சென்றது. ஏரோது காலமானதும் மரியாவையும் குழந்தை இயேசுவையும் எகிப்தில் இருந்து அழைத்துக் கொண்டு நாசரேத்தில் சென்று குடியேறினார் யோசேப்பு. அங்கு மரியாவுக்கு நல்ல துணைவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் யோசேப்பு திகழ்ந்தார்.

    இயேசு தொழுகைக் கூட்டத்தில் மறைநூலை வாசிக்கவும், தச்சுத் தொழிலைக் கற்கவும் யோசேப்பு துணை நின்றார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ உதவினார். பன்னிரண்டு வயதில் எருசலேம் கோவிலில் இயேசு தங்கிவிட்ட வேளையில், மரியாவுக்கு ஆறுதல் அளித்து அவரைக் கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தார். யோசேப்பின் தச்சுத் தொழிலில் கிடைத்த வருவாயிலேயே மரியாவும் இயேசுவும் உணவும் உடையும் பெற்றனர். இயேசுவும் இவரது தச்சு வேலைகளில் உதவி செய்தார். தமது அறுபத்தோராம் வயதில் நோயுற்ற யோசேப்பு, இறையன்னை மரியா அருகிருக்க இயேசுவின் மார்பில் தலைசாய்த்து பேறுபெற்ற மரணம் அடைந்தார்.

    வரலாற்றில்

    யோசேப்பு இயேசுவின் வளர்ப்புத்தந்தை மட்டுமே என்பதால், முதல் மூன்று நூற்றாண்டுகளில் பெரும்பாலும் மறக்கப்பட்ட புனிதராகவே இருந்தார். கி.பி. 2ஆம் நூற்றாண்டில் இறையன்னை மரியாவின் கன்னிமையைக் காக்கின்ற விதத்தில், புனித யோசேப்பு வயதில் முதிர்ந்தவராக சித்தரிக்கப்பட்டார். 4ஆம் நூற்றாண்டில் முதன்முதலாக எகிப்து நாட்டு கோப்திய கிறிஸ்தவர்கள், ‘தச்சரான புனித யோசேப்பு’ என்ற விழாவை ஜூலை 20ந்தேதி கொண்டாடியதாக அறிகிறோம். 440ஆம் ஆண்டளவில் தோன்றிய ‘தச்சரான யோசேப்பின் வரலாறு’ என்ற நூல், பல்வேறு புனைவுகளுடன் புனித யோசேப்பு குறித்த தகவல்களை வழங்குகிறது.

    கன்னி மரியாவுக்கு அடுத்து ஆண்டவரிடம் செல்வாக்கு பெற்ற புனிதராக யோசேப்பு இருக்கிறார் என்ற கருத்தியல் 13ஆம் நூற்றாண்டில் ஆழமாக வேரூன்றியதால், அவரது பக்தி மேற்கத்திய நாடுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்தது. 1414ல் கூடிய கொன்ஸ்தான்ஸ் பொதுச்சங்கத்தில், புனித யோசேப்பு குறித்து இறையியலாளர் ஜெர்சோன் வழங்கிய இறையியல் பார்வை திருச்சபையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1480ல் திருத்தந்தை 4ம் சிக்ஸ்து, புனித யோசேப்பு விழாவை ரோமை திருவழிபாட்டு நாள்காட்டியில் சேர்த்தார். 1481 மார்ச் 19ந்தேதி முதல் ரோமையில் சிறப்பிக்கப்பட்ட இவ்விழாவை, 1570ல் திருத்தந்தை 5ம் பியு திருச்சபை முழுவதற்கும் விரிவுபடுத்தினார்.

    புனித யோசேப்பின் முதல் மன்றாட்டுமாலை 1597ல் ரோமையில் வெளியானது. 1621 மே 8ந்தேதி திருத்தந்தை 15ம் கிரகோரி, புனித யோசேப்பு விழாவை கடன் திருநாளாக மாற்றினார். 19ஆம் நூற்றாண்டில் மார்ச் மாதம் முழுவதும் புனித யோசேப்பை சிறப்பு வணக்கம் செலுத்துகின்ற வழக்கம் தோன்றியது. 1870 டிசம்பர் 8ந்தேதி திருத்தந்தை 9ம் பியு, ‘புனித யோசேப்பு உலகளாவிய திருச்சபையின் புரவலர்’ என அறிவித்தார். 1889ல் திருத்தந்தை 13ம் லெயோ, திருச்சபை முழுவதிலும் புனித யோசேப்பு வணக்க மாதத்திற்கு அங்கீகாரம் வழங்கினார். 1955ல் திருத்தந்தை 12ம் பியு, ‘தொழிலாளரான புனித யோசேப்பு’ விழாவை மே 1ந்தேதி சிறப்பிக்கும் விதத்தில் அறிமுகம் செய்தார்.

    1962ல் திருத்தந்தை 23ம் யோவான், திருப்பலியின் முதல் நற்கருணை மன்றாட்டில் புனித யோசேப்பின் பெயரை சேர்த்தார். 1969ல் திருத்தந்தை 6ம் பவுல் சீரமைத்த நாள்காட்டியின்படி, ‘கன்னி மரியாவின் கணவரான புனித யோசேப்பு’ திருநாள் மார்ச் 19ந்தேதி பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 2013 மே 1ந்தேதி, திருப்பலியின் மற்ற நற்கருணை மன்றாட்டுகளிலும் புனித யோசேப்பின் பெயரை திருத்தந்தை பிரான்சிஸ் இணைத்தார். 2020 டிசம்பர் 8ந்தேதி ‘தந்தையின் இதயத்தோடு’ என்ற திருத்தூது மடலை வெளியிட்ட அவர், அன்று முதல் 2021 டிசம்பர் 8ந்தேதி வரை ‘புனித யோசேப்பு ஆண்டாக’ சிறப்பிக்க ஆணையிட்டார்.
    Next Story
    ×