என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நாகர்கோவில் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
    நாகர்கோவில் பொன்னப்ப நாடார் காலனியில் அற்புத குழந்தை இயேசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் குடும்ப விழா நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலியுடன் தொடங்குகிறது. இதற்கு கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமை தாங்குகிறார்.

    30-ந் தேதி மாலை நடைபெறும் செபமாலை, திருப்பலிக்கு அருட்தந்தை ஜெரேமியாஸ் தலைமை தாங்குகிறார். குளச்சல் வட்டார முதல்வர் எம்.உபால்டு மறையுரையாற்றுகிறார். 1-ந் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு மறை மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் எம் போர்ஜியோ தலைமை தாங்குகிறார். அருட்தந்தை ஆன்றனி மறையுரையாற்றுகிறார்.

    2-ந் தேதி மாலை 6 மணிக்கு மறை மாவட்ட குருமட அதிபர் மைக்கேல் ராஜ் தலைமையில் செபமாலை, திருப்பலியும் மற்றும் கன்னியாகுமரி நசரேன் மறையுரையாற்றுகிறார். 3-ந் தேதி மாலை 6 மணிக்கு செபமாலை, திருப்பலி நடக்கிறது. சகாயபுரம் அருட்தந்தை ஜார்ஜ் வின்சென்ட் தலைமையில், எம்.ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். இதேபோல் விழா நாட்களில் தினமும் திருப்பலி நடக்கிறது.

    7-ந் தேதி அன்று மாலை 5.30 மணிக்கு செபமாலையும், 6 மணிக்கு பங்கு பணியாளர் இல்லம் மந்திரிப்பும் நடக்கிறது. இதற்கு கோட்டார் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்குகிறார். 8-ந் தேதி அன்று காலை 7 மணிக்கு நடைபெற உள்ள திருப்பலிக்கு மறை மாவட்ட முதன்மை பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். ரொமரிக் ததேயுஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு செபமாலை, நற்கருணை ஆசீர், திருக்கொடியிறக்கமும், 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சிகளும், இரவு 8 மணிக்கு சமபந்தி விருந்தும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு அருட்பணிப்பேரவை, பங்குதந்தைகள் செய்து வருகின்றனர்.
    கேரள மாநிலம் எடத்துவா தூய ஜார்ஜியார் திருத்தலப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    தென்னிந்தியாவில் பிரபலமான கத்தோலிக்க திருத்தலங்களில் எடத்துவா தூய ஜார்ஜியார் திருத்தலம் முதன்மையானது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டநாடு பகுதியில் எடத்துவா அமைந்துள்ளது. இங்கு தமிழர்கள் பெருவாரியாக, குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு திருவிழாவை நடத்தி வருவது பாரம்பரியமாக நடந்து வருகிறது.

    இந்த ஆலயத்தை அமைத்தது முதல் இன்று வரை ஆலயத்தோடு தமிழர்களின் தொடர்பு தொடர்ந்து கொண்டே வருகிறது. கி.பி. 3-ம் நூற்றாண்டில் இயேசுவுக்காக உயிர் துறந்த மறைசாட்சியான தூய ஜார்ஜியாரின் பெயரால் இந்த திருத்தலம் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு திருத்தலப்பெருவிழா ஏப்ரல் 27-ந் தேதி தொடங்கி மே 7-ந் தேதி வரை நடக்கிறது. இதன் பிறகு 14-ந் தேதி வரை மலையாளிகளுக்கான 8 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று காலை 7.30 மணிக்கு திருத்தல பணியாளர் ஜான் மணக்குனேல் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். மேலும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து அருட்பணியாளர்கள், அருட் சகோதரிகள், தமிழகத்தில் இருந்து எடத்துவா திருவிழா தமிழக ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை டேவிட் மைக்கேல் தலைமையில் தமிழர்களும் பங்கேற்றனர்.

    விழாவில் கலந்து கொண்டவர்கள் கற்களை சுமந்து நேர்ச்சையை செலுத்தினர்.கொடியேற்றத்தை தொடர்ந்து, தக்கலை ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் திருப்பலி நடந்தது. இங்கு மே 7-ந் தேதி வரை தமிழில் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. விழாவையொட்டி நேற்று குழித்துறை மறைமாவட்ட சமூக தொடர்பு தேனருவி இயக்குனர் டேவிட் மைக்கேல் தமிழில் திருப்பலி நிறைவேற்றினார். 7-ந் தேதி நடைபெற உள்ள நிறைவு திருப்பலிக்கு பாளையங்கோட்டை ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்குகிறார். மே 6, 7-ந் தேதிகளில் திருப்பவனி நடைபெறுகிறது.
    கனானியப் பெண்ணின் விசுவாசம் நமக்கு பல்வேறு படிப்பினைகளைத் தருகிறது.
    தீர், சீதோன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஒரு கனானியப் பெண் வசித்து வந்தாள். அவள் இயேசுவைப் பற்றியும், அவர் செய்கின்ற அற்புதங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தாள். கனானியர்கள் பிற இனத்தவர். இயேசுவின் பணி வாழ்வோ யூதர்களின் மத்தியில் தான் இருந்தது.

    அந்த கனானியப் பெண்ணுக்கு இயேசு யூதர் என்பதும், அவர் தாவீது மன்னனின் வழிமரபினர் என்பதும், அவரே மீட்பர் என்பதும் தெரிந்திருந்தது. அவளுடைய மகளை பேய் பிடித்திருந்தது. இயேசுவால் மட்டுமே அவளைக் குணப்படுத்த முடியும் என அவள் நம்பினாள்.

    ஒரு நாள் இயேசு அந்த நாடுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அவள் அவரை எதிர்கொண்டு ஓடினாள்.

    ‘ஐயா, தாவீதின் மகனே... எனக்கு இரங்கும். என் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது’ அவள் கத்திக் கொண்டே அவரது பின்னால் ஓடிக்கொண்டிருந்தாள்.

    இயேசு அவளுடைய விசுவாசத்தைக் கொஞ்சம் சோதிக்க விரும்பினார். எனவே அமைதியாகப் போய்க்கொண்டிருந்தார். அது சீடர்களுக்கே பொறுக்கவில்லை.

    ‘இந்தப் பெண் ரொம்ப நேரமாக நமக்குப் பின்னாடியே கத்திக்கொண்டு வருகிறாள். ரெண்டுல ஒண்ணு சொல்லி அனுப்பிடுங்க’ சீடர்கள் சொன்னார்கள்.

    இயேசு அவர்களிடம் சொன்னார், ‘இஸ்ரவேல் மக்களிடையே வழி தவறிப் போன மக்களை மீட்பதே என் பணி’ என்றார்.

    அந்தப் பெண் விடவில்லை. இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட்டாள்.

    ‘ஐயா, எனக்கு உதவியருளும்’

    இயேசு அவளை சோதிப்பதை நிறுத்தவில்லை.

    ‘பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல. முதலில் பிள்ளைகள் சாப்பிடட்டும்’ என்றார்.

    பிள்ளைகள் என இஸ்ரவேல் மக்களையும், நாய்க்குட்டிகள் என பிற இன மக்களையும் இயேசு குறிப்பிட்டார்.

    அந்த கனானியப் பெண்ணோ இயேசு வைத்த தேர்வில் முழு வெற்றி பெற்றாள்.

    ‘ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே’

    அவளுடைய விசுவாசத்தைக் கண்ட இயேசு வியந்தார்.

    ‘அம்மா.. உன் விசுவாசம் பெரிது... நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்’ என்றார்.

    அந்த வினாடியே அவள் மகளை விட்டு பேய் ஓடியது. இயேசுவின் வார்த்தைக்கு முன்னால் நிற்க பேய்களால் முடிவதில்லை.

    ஒரு பிற இன பெண்ணின் விசுவாசம், இஸ்ரவேல் மக்களின் விசுவாசத்தை விடப் பெரியது என விளக்குவதற்காக இயேசு இதைச் சொன்னார்.

    உண்மையில் இயேசு அந்த ஒரே ஒரு பெண்ணின் மகளைக் காப்பாற்றவே ஐம்பது கிலோ மீட்டர் தூரம் நடந்து தீர் சீதோன் பகுதிக்குச் சென்றார். அந்தப் பெண் தனது மகளை விட்டு விட்டு இஸ்ரவேல் பகுதிக்கு வர முடியாத சூழலில் இருந்தார். எனவே இயேசுவே அந்தப் பகுதிக்குச் சென்றார். பணி முடிந்ததும் மீண்டும் கலிலேயாவுக்குத் திரும்பினார்.

    கனானியப் பெண் இயேசுவைக் கண்டதும், இனிமேல் வேறு வழியே இல்லை. இயேசுவிடம் முழுமையாய் சரணடைந்தே தீருவது என முடிவெடுத்தாள். அதற்காக ஒரு நாயைப் போல தன்னை தாழ்த்திக் கொள்ளவும் அவள் இம்மியளவும் தயங்கவில்லை. இயேசு அவளுடைய விசுவாசத்தை அங்கீகரிக்கிறார்.

    இன்று நாம் நாய்களின் இடத்திலல்ல, அவருடைய பிள்ளைகள் எனும் இடத்தில் இருக்கிறோம். பிற இனத்தவரான நமக்கும் இயேசு தனது சிலுவைப் பலியின் மூலம் தமது பிள்ளைகளாகும் உரிமையை அளித் திருக்கிறார்.

    கனானியப் பெண்ணின் விசுவாசம் நமக்கு பல்வேறு படிப்பினைகளைத் தருகிறது.

    1. இயேசுவின் மீட்பும், ஆசீர்வாதங்களும் அனை வருக்குமானது. அதில் பேதங்கள் ஏதும் இல்லை.

    2. இயேசுவால் மட்டுமே மீட்பைத் தரமுடியும் எனும் அசைக்க முடியாத விசுவாசம் வேண்டும்.

    3. தன்னை தாழ்த்திக் கொள்ளத் தயங்காத மனநிலை நிச்சயம் தேவை. பணிவே பிரதானம்.

    4. விடாமல் தொடர்ந்து விண்ணப்பம் வைக்கும் மனநிலை வேண்டும்.

    5. இயேசுவின் தாமதம் என்பது நிராகரிப்பல்ல. நமக்கான சின்னச் சின்ன சோதனைகளே. விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

    6. இயேசுவின் வார்த்தைகள் பேய்களை விரட்டும் வலிமை படைத்தவை. இன்று நம்மிடம் விவிலியம் எனும் இயேசுவின் வார்த்தைப் பெட்டகம் இருக்கிறது, அதைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

    7. இயேசுவோடு தொடர்ந்து நடந்தாலும் இதயத்தில் ஆழமான விசுவாசம் இல்லையேல் பயனில்லை. வேறு சூழலில் இருந்தாலும் இயேசுவே மெசியா என நம்புவோர் மீட்படைவர்.

    8. ஆழமான விசுவாசம் கொண்டவர்களை இயேசு பாராட்டுகிறார். எண்ணிக்கை அல்ல, தரமே முக்கியம். நூறு மைல் தூரம் நடந்து சென்று ஒரே ஒரு நபருக்கு நற்செய்தி சொல்வதும் இறைவனின் திட்டமே.

    9. நமது குழந்தைகளுக்காக நாம் இறைவனிடம் வேண்டினால் அவர் நிச்சயம் பதில் தருவார்.

    10. யாரையும் தரக்குறைவாகவோ இழிவாகவோ நடத்தக் கூடாது. எல்லோருமே இறைவனின் பிள்ளைகளே.

    இந்த சிந்தனைகளை கனானியப் பெண்ணின் வாழ்க்கை நிகழ்விலிருந்து பெற்றுக் கொள்வோம்.
    நூற்றுவர் தலைவனின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம். அசைக்க முடியாத விசுவாசத்தைப் பற்றிக் கொள்வோம்.
    இயேசு கப்பர்நகூம் எனும் இடத்திற்குச் சென்றார். நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் வந்தார். நூற்றுவர் தலைவர் என்றால் நூறு படை வீரர்களின் தளபதி. அவர் ஒரு ரோமப் படை வீரர். படைத்தளபதி இயேசுவிடம் சொன்னார்:

    ‘ஐயா, என் ஊழியன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக்கிடக்கிறான்’.

    ‘நான் வந்து அவனைக் குணமாக்குவேன்’ இயேசு பதில் சொன்னார்.

    உடனே நூற்றுவர் தலைவர் பதட்டப்பட்டார்.

    ‘ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். அதனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் ஊழியன் நலமடைவான்’ நூற்றுவர் தலைவர் சொல்ல இயேசு அவனைப் பார்த்தார்.

    அவன் தொடர்ந்தான்? ‘நான் அதிகாரத்துக்கு உட்பட்டவன். என் அதிகாரத்துக்கு உட்பட்ட படை வீரரும் உள்ளனர். நான் அவர்களுள் ஒருவரிடம் ‘செல்க’ என்றால் அவர் செல்கிறார். வேறு ஒருவரிடம் ‘வருக’ என்றால் அவர் வருகிறார். என் பணியாளரைப் பார்த்து ‘இதைச் செய்க’ என்றால் அவர் செய்கிறார்...’ இவ்வாறு சொல்லி விட்டு நூற்றுவர் தலைவர் நிறுத்தினார்.

    இயேசு வியந்து போய் அவனைப் பார்த்தார். பின் சுற்றியிருந்த மக்களைப் பார்த்தார். எல்லோரும் இயேசுவைப் பின்பற்றி வருபவர்கள். அவருடைய போதனைகளையும், புதுமைகளையும் கண்டு பின்தொடர்பவர்கள். அவர்களைப் பார்த்துச் சொன்னார்: ‘உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; இஸ்ரவேலர் யாரிடமும் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை’.

    இஸ்ரவேல் மக்களிடையே வந்த இயேசு, பிற இனத்தைச் சேர்ந்த ஒருவருடைய விசுவாசத்தை, நம்பிக்கையைக் கண்டு வியந்து போய் பேசினார்.

    ‘கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர் வந்து, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் விண்ணரசின் பந்தியில் அமர்வர். அரசுக்கு உரியவர்களோ புறம்பாக உள்ள இருளில் தள்ளப்படுவார்கள்’ என்ற இயேசு, நூற்றுவர் தலைவனிடம், ‘நீர் போகலாம், நீர் நம்பியவண்ணமே உமக்கு நிகழும்’ என்றார்.

    அந்த வினாடியிலேயே நூற்றுவர் தலைவரின் ஊழியன் நலமடைந்தான்.

    பைபிளில் வரும் இந்த நிகழ்வு, ஒரு பிற இன மனிதர் இயேசுவின் மீது கொண்ட ஆழமான விசுவாசத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது.

    நூற்றுவர் தலைவனுக்கு அதிகாரம் என்றால் என்ன என்பது தெரிந்திருந்தது. காரணம் அவன் ஒரு கட்டளை கொடுத்தால் அவனுக்குக் கீழே இருக்கின்ற படைவீரன் அதைச் செய்வான்.

    ‘போ’ என்றால் உடனே போவான். ‘இதைச்செய்’ என்றால் செய்வான். காரணம், அவன் இவனுடைய தலைமைக்குக் கட்டுப்பட்டவன்.

    அதுபோல நோய்களெல்லாம் இயேசுவுக்குக் கட்டுப்பட்டவை. அவை இயேசுவின் ஒற்றை வார்த்தைக்குக் கீழ்ப்படியும் எனும் அசைக்க முடியாத விசுவாசம்  அவனுக்கு இருந்தது.

    வார்த்தைகளால் உலகைப் படைத்த இறைவன், வார்த்தையின் மனித வடிவமான இறைவன், ஒரு வார்த்தை சொன்னால் எதுவும் நடக்கும் என நம்புவது விசுவாசத்தின் அழகான வெளிப்பாடு.

    இயேசு அவனை மனமாரப் பாராட்டுகிறார். யாரிடமும் இல்லாத விசுவாசம் அவனிடம் இருக்கிறது என வெளிப்படையாகப் பாராட்டுகிறார். அதன் மூலம் மற்றவர்களுடைய விசுவாசக் குறைவையும் இயேசு சுட்டிக் காட்டுகிறார்.

    கூடவே, மீட்பு என்பது இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமானதல்ல, கிழக்கிலும் மேற்கிலும் எல்லா தேசங்களிலுமிருந்து மக்கள் விண்ணரசில் நுழைவார்கள் என தனது மீட்பின் திட்டத்தையும் முன்மொழிகிறார். இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம் அது சர்வதேச மீட்பின் அனுமதியாக மாறியது.

    நூற்றுவர் தலைவனின் வாழ்க்கை சில படிப்பினைகளை நமக்குத் தருகிறது.

    1. இயேசுவைத் தேடவேண்டும் எனும் பாடம்.

    2. இயேசுவால் எல்லாம் கூடும் எனும் விசுவாசம். இயேசு ஒரு வார்த்தை சொல்வாரா? எனும் சந்தேகம் அவனுக்கு இருந்திருக்கலாம். ஆனால் அவர் ஒரு வார்த்தை சொன்னால் நோய் விலகிவிடும் என்பதில் அவனுக்கு சந்தேகம் இல்லை.

    3. இயேசுவின் பதிலை நம்பி புறப்படும் ஆனந்தம்.

    4. உலகப் பணிகள், அந்தஸ்து, இனம் எதுவும் விசுவாசத்தை அழிக்காமல் காத்துக்கொள்ள முடியும் எனும் பாடம்.

    5. விசுவாசம் வெளிப்படையாய் இருப்பதல்ல, உள்ளுக்குள் உறுதியாய் இருப்பது எனும் உண்மை.  

    6. தான் எதற்கும் தகுதியற்றவன் என தன்னைத் தாழ்த்திக் கொள்ளும் மனம்.

    7. தனது பணியாளனுக்காக இயேசுவைத் தேடி ஓடும் இரக்கம்

    8. பிறருக்காக வேண்டுதல் செய்யும் போது, இறைவன் மனம் இரங்குகிறார் எனும் நம்பிக்கையின் உத்தர வாதம்.

    9. மனிதன் வெளித்தோற்றத்தைப் பார்க்கிறான், இறைவன் இதயத்தைப் பார்க்கிறார் எனும் இறைவார்த்தையின் உதாரணம்.

    10. செயல்களல்ல, விசுவாசமே முதன்மையானது எனும் பாடம். நூற்றுவர் தலைவர் ஆலயம் கட்டியிருக்கிறார், ஆனால் அதற்காக அவருக்குக் கிடைத்ததல்ல இந்த பாராட்டும், சுகமளித்தலும். விசுவாசத்துக்காய் கிடைத்தது.

    இந்த செய்திகளை நூற்றுவர் தலைவனின் வாழ்விலிருந்து கற்றுக் கொள்வோம். அசைக்க முடியாத விசுவாசத்தைப் பற்றிக் கொள்வோம்.
    புனித இஞ்ஞாசியர் ஆலய பெருவிழா தேர்பவனி: திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்
    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே குலமாணிக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் புனித இஞ்ஞாசியர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பங்கு தந்தை சாம்சன் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து 21-ந் தேதி மாலை 6 மணிக்கு தவநாள் திருப்பலி நடைபெற்றது. 22-ந்தேதி திருப்பலியும், தேர்பவனியும் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பங்கு தந்தையர்கள் கூட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணியளவில் மலர் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புனித இஞ்ஞாசியர் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. தேரில் புனித இஞ்ஞாசியர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் திரளான கிறிஸ்தவர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

    மேலும் நிகழ்ச்சியில் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் புனித இஞ்ஞாசியர் அருளை பெற்றனர். நிகழ்ச்சியில் வாணவேடிக்கை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருமானூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் நேற்று காலை 8 மணியளவில் விழா நன்றி திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5 மணியளவில் கொடியிறக்கம் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
    மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. கொடைக்கானல் பெருமாள்மலை பங்குத் தந்தை லூயிஸ் கொடியேற்றி விழாவை தொடக்கி வைத்து சிறப்பு திருப்பலி நடத்தினார்.

    அடுத்த (மே) மாதம் 1-ந்தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் மாலை பல்வேறு பகுதிகளின் அருட்தந்தையர்கள் கலந்து கொண்டு பல தலைப்புகளில் சிறப்பு திருப்பலி நடத்துகிறார்கள்.

    முக்கிய நிகழ்வாக வருகிற 30-ந்தேதி மாலை திருப்பலி முடிந்ததும் புனித வளனார் உருவம் தாங்கிய தேர்பவனி நடக்கிறது. மறுநாள் 1-ந்தேதி காலை திருவிழா திருப்பலியும், குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கும் விழாவும், மாலையில் திவ்ய நற்கருணை பவனியும் நடைபெறுகின்றன. அதனைதொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    இயேசு மக்களுக்கு அளித்துள்ள போதனை மொழிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
    "பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28).

    "நல்ல ஆயன் நானே...என் ஆடுகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன்" (யோவான் 10:14-15).

    "வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை" (யோவான் 14:6).

    "உங்கள் பகைவரிடமும் அன்புகூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" (மத்தேயு 5:44).

    "பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்" (மத்தேயு 7:12).

    "மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்" (மத்தேயு 12:33).

    "உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக" (மத்தேயு 22:39).

    "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" (லூக்கா 23:34).
    நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் (கொலொ 3:1)
    ‘நீ என் தாசன்: நான் உன்னை உருவாக்கினேன்: நீ என் தாசன்: இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’ (ஏசா.44:21)

    இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே, ‘உறவினர்கள் நம்மை மறந்துவிட்டார்களே! நம்மை யாருமே நினைப்பதில்லை! எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்ற தனிமைபடுத்தப்பட்ட மனநிலையுடன் ஏராளமான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

    இந்த மனநிலையுடன் வாழ்பவர்கள் ‘மனிதர்கள் நம்மை மறந்துவிட்டாலும், தேவன் நம்மை கைவிடுவதில்லை’ என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மாறும் உலகில் தேவனின் அன்பு மட்டுமே மாறாதது.

    ‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்பதில்லை’ (ஏசா.49:15) என்ற இறை வசனம் ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை, நாம் ஒருநாளும் அவரால் மறக்கப்படு வதில்லை’ என்பதை தெளிவாக விளக்குகிறது.

    துன்ப வேலைகளில் ஒரு நாளும் மனிதனை தேடிப் போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். அவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் ஆண்டவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார். நம்முடைய துன்ப வேளைகளிலும், பண உதவி தேவைப்படும் காலங்களிலும், தேவனின் பாதங்களில் சரணடையுங்கள். அவர் நம்முடைய துன்பங்களை அதிகாலை பனிபோல கரைத்துவிடுவார்.

    ‘உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவோ’ (எபி.6:10).

    ‘என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார்களே, நம்முடைய உழைப்பு வீணாய் போகிறதே, உழைப்பிற்கான பலன் எனக்குக் கிடைப்பதில்லையே’ என்று வருத்தப்படாதீர்கள். ஏனெனில் உங்களுடைய உழைப்பை தேவன் பார்த்துக்கொண்டிருக்கிறார். நீங்கள் யாருக்காக உழைக்கிறீர்கள், எதற்காக கஷ்டப்படுகிறீர்கள்... என்பதை குறித்துக்கொண்டு, அதற்கான தக்க சன்மானத்தை விரைவிலே உங்களுக்கு கிடைக்கச் செய்வார். மேலும் தேவனை நோக்கி வைக்கப்படும் ஜெபங்களுக்கும் விரைவிலே பலன் உண்டு. நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு ஜெபத்தையும், நன்றி மன்றாட்டுகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.

    அந்த காலத்தில் இயேசுவின் பிறப்பை உணர்ந்துக்கொண்ட அரசன், ஆண் குழந்தைகளை கொல்லும் படி உத்தரவிட்டான். அப்போது சில மகப்பேறு மருத்துவச்சிகள், தேவனுக்குப் பயந்து, ஆண் பிள்ளைகள் பிறக்கும்போது, அவர்களை உயிரோடு விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.

    ‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’ (யாத்.1:21)

    உங்களை நினைத்து, உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒரு  நாளும் மறந்து போகாதீர்கள். இறைவனுக்கு பயந்து வாழ பழகிக்கொள்ளுங்கள்.  நம்முடைய வாழ்க்கை தேவனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் தேவனின் சகல ஆசீர்வாதங்களும் கிடைக்கப்பெறும்.

    ‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங். 115:12)

    கர்த்தரை தேடுங்கள் :

    கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் (ஆமோஸ் 5:4)

    தேவனுடைய ராஜ்ஜியத்தை தேடுங்கள்

    முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் (மத்தேயு 6:33)

    மேலானவைகளை தேடுங்கள்

    நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள் (கொலொ 3:1)

    கேளுங்கள்

    ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும் (மத்தேயு7:8)
    புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகர்கோவில் புன்னைநகர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா (குடும்ப விழா) நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி மே மாதம் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி நாளை மாலை 6 மணிக்கு செபமாலை, புகழ்மாலை, 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    2-ந் திருவிழாவான 23-ந் தேதி மாலையில் செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவில் பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், பரிசு வழங்குதல், 24-ந் தேதி காலையில் திருப்பலி, நற்கருணை ஆராதனை, மாலையில் சிறப்பு நற்கருணை ஆசீர், செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவில் மறைக்கல்வி ஆண்டு விழா ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து 9-ந் திருவிழாவான 30-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும், மே மாதம் 1-ந் தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீரும், இரவு 7 மணிக்கு பொதுக்கூட்டமும், பரிசு வழங்குதலும், 8 மணிக்கு நடனப்போட்டியும் நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் மாலையில் செபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவில் கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு அருட்பணிப் பேரவை, பங்கு இறைமக்கள் இணைந்து செய்துவருகின்றனர்.
    இயேசு மக்களுக்குப் பெரும்பாலும் சிறு கதைகள் அல்லது உவமைகள் வழி போதித்தார்.
    இயேசு மக்களுக்குப் பெரும்பாலும் சிறு கதைகள் அல்லது உவமைகள் வழி போதித்தார். அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு சில உவமைகள் இதோ:

    ஊதாரி மைந்தன் உவமை (லூக்கா 15:11-32)
    நல்ல சமாரியன் உவமை (லூக்கா 10:25-37)
    பரிசேயனும் பாவியும் உவமை (லூக்கா 18:9-14)
    தாலந்துகள் உவமை(மத்தேயு 25:14-30)
    பத்து கன்னியர் உவமை(மத்தேயு 25:1-13)
    காணாமல் போன ஆடு உவமை(லூக்கா 15:1-7)

    இயேசு பல உவமைகள் வழியாக இறையாட்சி பற்றிய உண்மைகளை மக்களுக்கு அறிவித்தார்; இறையாட்சியில் பங்குபெற மக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்தார்; இறையாட்சியின் பண்புகளை விளக்கினார். குறிப்பாக, எல்லா மக்களும் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு, கடவுளையும் மனிதரையும் அன்புசெய்து வாழ்ந்திட வேண்டும் என்று இயேசு போதித்தார். பகைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது அவர் வழங்கிய முக்கிய போதனைகளில் ஒன்று. தம்மைத் துன்புறுத்தி, சிலுவையில் அறைந்த பகைவரை அவரே மனதார மன்னித்தார்.
    இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும்.
    இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று மலைப்பொழிவு ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசுவின் இப்போதனை தம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார்.

    இயேசு வழங்கிய மலைப்பொழிவு மத்தேயு நற்செய்தியில் உள்ளது (காண்க: மத்தேயு - அதிகாரங்கள் 5 முதல் 7 முடிய). இப்பொழிவைப் பெரிதும் ஒத்த இன்னொரு பொழிவு சமவெளிப் பொழிவு என்று அழைக்கப்படுகிறது. அது லூக்கா நற்செய்தியில் உள்ளது (காண்க: லூக்கா 6:20-49).

    இயேசு வழங்கிய மலைப்பொழிவின் தொடக்கப்பகுதி கீழே தரப்படுகிறது:

    மத்தேயு 5:1-12

    இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:

    1. ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.

    2. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.

    3. கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.

    4. நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர்.

    5. இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.

    6. தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.

    7. அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

    8. நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.

    9. என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!

    10. மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
    இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்."
    ஏலாக்குறிச்சி புனித அடைக்கல அன்னை ஆலய பெருவிழாவில் தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே ஏலாக்குறிச்சியில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட, கிறிஸ்தவ ஆலயங்களில் பழமை வாய்ந்த புனித அடைக்கல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 9-ந் தேதி மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆலய பெருவிழா தொடங்கியது.

    கொடி யேற்ற நிகழ்ச்சியில் பங்கு தந்தை லூர்து சாமி தலைமையில் பங்கு தந்தையர் தஞ்சாவூர் பிரான்சிஸ் சேவியர், தார்சிஸ், புதுக்கோட்டை ராபர்ட் தனராஜ் ஆகியோரின் திருப்பலி நடைபெற்றது. 10-ந் தேதி மாலை 6 மணிக்கு பங்கு தந்தை லூர்துசாமி, உதவி பங்கு தந்தை சந்தனம் ஆகியோரால் திருப்பலி நடைபெற்று சிறிய தேர்பவனி நடைபெற்றது. தொடர்ந்து 11-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை மாலை 6 மணிக்கு திருப்பலியும், சிறிய தேர்பவனியும் நடைபெற்றது.

    தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பங்கு தந்தையர்கள் ஜெரோம், சூசைராஜ், பெங்களூர் உயர் மறைமாவட்ட குருக்கள் அமர்நாத், ஜான்சுதிப், கில்பர்ட், மோசஸ் ஆகியோரின் கூட்டு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 11 மணியளவில் மலர் மற்றும் மின்விளக்கு களால் அலங்கரிக்கப்பட்ட அடைக்கல அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது. தேரில் புனித அடைக்கல அன்னை தமிழ் பெண் அலங்காரத்தில் பட்டுப்புடவையில் எழுந்தருளினார். பின்னர் திரளான கிறிஸ்தவர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் நிகழ்ச்சியில் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் அன்னையின் அருளை பெற்றனர். நிகழ்ச்சியில் வாணவேடிக்கை மற்றும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் குடந்தை ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பகல் 12 மணியளவில் எர்ணாகுளம் பங்குதந்தை ஜோஷி நெடும்பரம்பில் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் பங்கு தந்தையர் லால்குடி தனராஜ், புனல்வாசல் ஆல்பர்ட் சேவியர் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இரவு 11 மணியளவில் அன்னையின் அலங்கார தேர்பவனி நடைபெற்றது.

    இதில் கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தஞ்சை, அரியலூர் மற்றும் திருமானூரிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மன்னர்மன்னன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் செல்வமணி தலைமையிலான மருத்துவகுழுவினர் சுகாதார ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை லூர்துசாமி, உதவி பங்குதந்தை சந்தனம் மற்றும் பங்கு மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில் பங்குதந்தை லூர்துசாமி, உதவி பங்கு தந்தை சந்தனம் ஆகியோரின் நன்றி திருப்பலியுடன் ஆலய கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    ×