என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    நமக்குப் பிடித்தமானதை வைத்துக் கொண்டு மற்றதைத் தருவதல்ல உண்மையான காணிக்கை. நமக்கு எது அதிக பிரியமாய் இருக்கிறதோ, அதை இறைவனுக்குத் தருவதே அழகான காணிக்கை.
    இயேசு ஒரு நாள் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார்.

    ‘மறைநூல் அறிஞர்களைக் குறித்து கவனமாய் இருங்கள். அவர்கள் பிறரிடமிருந்து வணக்கமும், பெருமையும் பெற விரும்புகிறார்கள். எங்கும் அவர்களுக்கு முதல் மரியாதை கிடைக்கவும், முதன்மை இடங்கள் கிடைக்கவும் ஆசைப்படுகிறார்கள். கைம்பெண்கள் மேல் இரக்கம் காட்டுவதில்லை. அவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள். ரொம்ப நேரம் ஜெபம் செய்வது போல நடிக்கிறார்கள். அவர்களுக்கு தீர்ப்பு கடுமையாய் இருக்கும்’ என்று நேரடியாக மறை நூல் அறிஞர்களைப் பற்றிப் பேசினார்.

    பின்னர் ஆலயத்தில் காணிக்கைப் பெட்டிக்கு எதிரே அமர்ந்து அதில் காணிக்கை போடுபவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் காசுகள் தான் இருந்தன. ரூபாய் நோட்டுகள் இல்லை. காசுகளை அள்ளிக் கொண்டு போய் ஒரு உலோக காணிக்கைப் பெட்டியில் போடுவார்கள். போடுகின்ற காணிக்கைக் காசுகளின் அளவைப் பொறுத்தும், எண்ணிக்கையைப் பொறுத்தும் சத்தம் எழுப்பும். நிறைய சத்தம் வந்தால் நிறைய காணிக்கை போடுகிறார் என அர்த்தம். எல்லோரும் அவரை மரியாதையுடன் பார்ப்பார்கள். கொஞ்சம் சத்தம் வந்தால் மிகக் கொஞ்சமாகப் போடுகிறார் என அர்த்தம். அவரை இளக்காரமாகப் பார்ப்பார்கள். இது தான் வழக்கம்.

    செல்வந்தர்கள் வந்தனர். பெரும் தொகையை அள்ளி அள்ளி காணிக்கைப் பெட்டியில் போட்டு விட்டு கர்வத்துடன் கடந்து சென்றனர்.

    பின்னர் அங்கே ஒரு ஏழை விதவை வந்தாள். அவளிடம் இருந்தது இரண்டே இரண்டு காசுகள். அதை அந்தக் காணிக்கைப் பெட்டியில் போட்டாள். டக் டக் என மெல்லிய இரண்டு சத்தங்கள் வந்தன.

    இயேசு சீடர்களை அழைத்துச் சொன்னார்,

    ‘இந்த காணிக்கைப் பெட்டியில் காசு போட்ட மற்ற எல்லாரையும் விட இந்தப் பெண் மிக அதிகமாகப் போட்டிருக்கிறாள்’ எல்லோரும் குழம்பினர். செல்வர்கள் அதிகமாகப் போட்டதை பலரும் பார்த்திருந்தனர். ஏழைக் கைம்பெண்ணிடம் எதுவும் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரிந்திருந்தது.

    இயேசு அவர்களுடைய சிந்தனைகளைப் புரிந்து கொண்டு பேசினார், ‘மற்ற அனைவரும், தங்களுக்கு மிகுதியாய் இருந்த செல்வத்திலிருந்து பணத்தை அள்ளிப் போட்டார்கள். இவளோ தமது பிழைப்புக்குரிய அனைத்தையுமே போட்டு விட்டாள்’

    இயேசுவின் விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் வியந்து போனார்கள். அதுவரை அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள் உடைந்து போயிற்று. காணிக்கையிடுதல் பற்றிய அவர்களுடைய புரிதல் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது.

    நமக்குப் பிடித்தமானதை வைத்துக் கொண்டு மற்றதைத் தருவதல்ல உண்மையான காணிக்கை. நமக்கு எது அதிக பிரியமாய் இருக்கிறதோ, அதை இறைவனுக்குத் தருவதே அழகான காணிக்கை.

    உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்கே தான் உங்கள் உள்ளமும் இருக்கும் என்கிறது பைபிள். செல்வத்தை இறைவனிடம் ஒப்படைத்து விட்டால், நமது உள்ளமும் இறைவனிடம் சென்று விடும். இறைவனுக்குரிய செயல்களில் ஈடுபடுவதே உண்மையான செல்வம் என்பதை உணர்ந்து, அதை சேமிக்க வேண்டும்.

    பழைய ஏற்பாட்டில் வருமானத்தில் பத்தில் ஒரு பாகத்தை காணிக்கையாக செலுத்துவது கட்டாயமாக இருந்தது. புதிய ஏற்பாட்டில் சதவீதங்களெல்லாம் மாறிப் போயின, எல்லாமே இறைவனுடையது. அதை நாம் பயன்படுத்துகிறோம் எனும் மனநிலையே முக்கியம்.

    மகிழ்ச்சியோடும், மன நிறைவோடும் காணிக்கை இடவேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்.

    ஏழைப்பெண்ணின் காணிக்கை நிகழ்வு நமக்கு பல சிந்தனைகளைத் தருகிறது.

    1. கொடுக்கும் காணிக்கையின் அளவை அல்ல, காணிக்கை கொடுக்கும் மனநிலையையே இயேசு பார்க்கிறார்.

    2. காணிக்கை கொடுப்பதையும், கொடுப்பவர்களையும் இயேசு கவனிக்கிறார்.

    3. சிறந்த காணிக்கை என்பது வசதியாய் இருக்கும் போது கொடுப்பதல்ல, வசதியே இல்லாமல் இருக்கும் போதும் கொடுப்பது.

    4. பத்தில் ஒரு பங்கு எனும் சட்டமெல்லாம் அந்த இரண்டு காசு விதவைக்குப் பொருந்தாது. எனினும் அவள் தனக்குரியதையெல்லாம் அன்போடு கொடுத்தாள்.

    5. மனிதர் வெளிப்படையான செயல்களை நம்புபவர். இறைவனோ இதயத்தைப் பார்க்கிறார் எனும் பைபிள் வசனத்தின் உதாரணமாய் இருக்கிறது.

    6. ஏழைப்பெண்ணின் காணிக்கை கடவுளின் மீதான அவளுடைய விசுவாசத்தைக் காட்டுகிறது. இருந் ததை எல்லாம் கடவுளுக்குக் கொடுத்து விட்டு, அடுத்த வேளை உணவுக்கு இறைவன் தருவார் எனும் அவளுடைய அசைக்க முடியாத விசுவாசம் வியப்பூட்டுகிறது.

    7. நமக்குரியதெல்லாம் கடவுளுக்குரியது என விருப்பத்தோடு அளிப்பதையே இயேசு விரும்புகிறார். தியாக உணர்வோடு இருப்பதையெல்லாம் கொடுப்பவர்களை இயேசு பாராட்டுகிறார்.

    8. ‘கைம்பெண்ணை ஏழையாகவே வைத்திருப்பவர்கள், அவள் உடைமைகளைப் பிடுங்கிக் கொண்டவர்கள்’ அதிகமாக காணிக்கையிடுவது போலித்தனமானது.

    9. இந்த நிகழ்வு பணம் சார்ந்த நிகழ்வாக இருந்தாலும், நமது நேரம், உழைப்பு, திறமைகள், சிந்தனை அனைத்தையுமே இறைவனுக்கு முழுமையாய் அர்ப்பணிப்பதன் தேவையை இது மறைமுகமாய் விளக்குகிறது.

    10. இருப்பது கொஞ்சம் என்றோ, இதையெல்லாம் எப்படி கடவுளுக்குக் கொடுப்பதென்றோ தயங்காமல் கொடுக்க வேண்டும். மனமுவந்து கொடுப்பதையே இறைவன் விரும்புகிறார்.

    இந்த சிந்தனைகளை மனதில் இருத்துவோம்.
    தேவன் தாமே நம்மை கரம் பிடித்து நடத்துவார் என்ற நம்பிக்கையுடன் அதிகாலையில் ஜெபம் செய்யுங்கள்.
    மகதலேனா என்ற இடத்தைச் சேர்ந்தவள் மரியாள். மரணம் அடைந்த பின்னர் இயேசு உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு சூரியன் உதயமாகிய அந்த காலை நேரத்தில் சென்றாள். ஆனால் இயேசுவின் உடல் அங்கு இல்லாததால் கதறி அழுதாள். அப்போது இயேசு அவளுக்கு தரிசனமாகி, 'ஸ்திரியே! ஏன் அழுகிறாய்? யாரை தேடுகிறாய்?' என்றார்.

    மரியாள், அவரைத் தோட்டக்காரர் என்று எண்ணினாள். இயேசு அவளை நோக்கி 'மரியாளே!' என்றார். அவள் திரும்பிப் பார்த்து 'ரபூனி' (போதகரே) என்றபடியே தன் கையால் அவரைத் தொட முயன்றாள்.

    'என்னைத் தொடாதே. நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை' என்றார் இயேசு.

    மரித்த இயேசுவை அந்த அதிகாலை வேளையிலே தேடின காரணத்தினால், உயிரோடு எழுந்த இயேசுவைக் கண்டாள் மரியாள்.

    இந்த நிகழ்வு பற்றி விவிலியம் குறிப்பிடும்போது, 'அவர்கள் அதைக் கேட்டு அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம் பண்ணினார்கள்' (அப்.5:21) என்கிறது.

    இயேசு உயிரோடு எழுந்த ஆச்சரியத்தைக் கண்ட சீடர்கள், இயேசுவை பற்றி தேவாலயத்தில் சாட்சியம் கூற ஆரம்பித்தார்கள். இதைக் கண்ட பிரதான ஆசாரியனும், சதுசேயரும் ஒன்றாக சேர்ந்து, அப்போஸ்தலர்களை பிடித்து சிறையிலே பூட்டி வைத்தார்கள்.

    ஆனால் கர்த்தருடைய தூதனோ, இரவில் சிறைச்சாலையின் பூட்டை உடைத்து, கதவுகளைத் திறந்து அவர்களை வெளியே கொண்டு வந்து விட்டான். மேலும் 'நீங்கள் அதிகாலையில் தேவாலயம் சென்று, மக்களுக்கு ஜீவ வார்த்தைகளை பிரசங்கம் செய்யுங்கள்' என்றும் கூறினான்.

    அதன்படியே அப்போஸ்தலர்களும் அதிகாலையிலே தேவ ஆலயத்திலே பிரசங்கித்து, ஜீவ வார்த்தைகளை மக்களுக்கு சொன்னார்கள். அப்போது தேவனின் மகிமை வெளிப்பட்டது. அப்போஸ்தலர்களின் வழியாக மக்களுக்கு அநேக அற்புதங் களையும், தேவ அடையாளங்களையும் இறைவன் உண்டாக்கினார்.

    இதைக் கேள்விப்பட்ட மக்கள், திரளான நோயாளிகளையும், அசுத்த ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்கு அழைத்து வந்தார்கள். நோயாளிகளை கட்டில்களின் மேல் கிடத்தி, வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். அப்போது 'பேதுரு' என்ற அப்போஸ்தலர் அந்த வழியாக நடந்து சென்றார். அவரது நிழல் பட்ட நோயாளிகள் அனைவரும் குணமானார்கள். ஏனெனில் அப்போஸ்தலர்கள் அனைவரும், தேவனிடம் அதிகாலையில் ஜெபத்தின் மூலம் பேசி தங்களை பெலப்படுத்தி கொண்டார்கள்.

    அப்போஸ்தலர்களைப் போன்று நாமும் அதிகாலையிலே வேதத்தை வாசித்து, தேவனை துதிக்கும்போது, நமக்கு விரோதமான எல்லா நோய்களும், கஷ்டங்களும் மாறிப்போகும்.

    'அவர் அதிகாலையில் இருட்டோடே எழுந்து புறப்பட்டு,

    வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய் அங்கே ஜெபம் பண்ணினார்' (மாற்.1:35).

    இந்த இறை வசனம், மனிதராக பிறந்த இறைமகனும் அதிகாலையில் ஜெபம் செய்தார் என்பதை தெள்ளத்தெளிவாக விளக்குகிறது. இறைமகனும் கூட, அதிகாலை ஜெபத்தின் மூலம் தந்தையுடன் பேசி தன்னை பெலப்படுத்திக் கொண்டிருக்கிறார். தன்னை அதிகாலை ஜெபத்தினால் பெலப்படுத்திக் கொண்டதால், இயேசு பல அற்புதங்களைச் செய்தார்.

    ஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்த ஒருவன் இருந்தான். இயேசு அவனைப் பிடித்திருந்த ஆவியை அதிகாரத்தோடே வெளியேற கட்டளையிட்டார். உடனே அசுத்த ஆவி அவனை விட்டுப் போய்விட்டது.

    மேலும் பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டிருந்த அநேகரை இயேசு சுகப்படுத்தினார். அநேகமான பிசாசுகளைதுரத்திவிட்டார். குஷ்டரோகியின் மேல் கை வைத்து, மனமுருகி 'நீ சுத்தமாகு' என்று சொன்னவுடன், அவனது குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கியது.

    இவ்வாறாக அதிகாலை ஜெபத்தினால் பெற்ற பெலத்தினால், மக்களின் நோய்களையும், கஷ்டங்களையும் இயேசு விரட்டி அடித்தார். இயேசுவை போன்றே அதிகாலையில் நாம் தேவனைத் தேடும்போது வல்லமையும், அதிகாரத்தையும் பெறுகின்றோம்.

    'அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும் உம்மை நம்பியிருக்கிறேன். நான் நடக்க வேண்டிய வழியை எனக்குக் காண்பியும்' (சங்.143:8).

    அதிகாலையில் கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கு, அவருடைய கிருபை நிச்சயமாக கிடைக்கும். தன் மீது விழும் மழையை, வறண்ட நிலமானது தன்னால் இயன்றவரை உறிஞ்சிக் கொள்ளும். அவ்வாறே நம்மால் முடிந்தவரை கர்த்தரோடு அதிகாலையில் உறவாடவேண்டும். அப்பொழுது தேவனின் மகிமையைக் காணமுடியும்.

    சங்கீதக்காரன் தாவீது ராஜா அதிகாலையில் தேவனை தேடினான். எனவே தாவீது போன எல்லா இடத்திலும் இறைவன் அவனோடு இருந்து, அவன் எதிரிகளை எல்லாம் அவனுக்கு முன்பாக நிர்மூலமாக்கினார்.

    'ஏழாம் நாளில் அதிகாலமே கிழக்கு வெளுக்கும் போது எழுந்திருந்து அந்தப் பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றி வந்தார்கள்' (யோசுவா 6:15).

    கர்த்தர், யோசுவாவை நோக்கி, 'எரிகோ பட்டணத்தையும், அதன் ராஜாவையும், யுத்த வீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்' என்றார். எரிகோ பட்டணத்தை சுற்றி, உயரமான மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. யாரும் கைப்பற்ற முடியாத, வலுவான கோட்டையாக இருந்தது எரிகோ பட்டணம்.

    யோசுவா கர்த்தரின் வார்த்தையை கூறினான். 'யுத்த புருஷராகிய இஸ்ரவேலர் அனைவரும் ஆறுநாள் அதிகாலை வேளையிலே எரிகோ பட்டணத்தை சுற்றி வாருங்கள். ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழு முறை சுற்றிவரக் கடவர்கள். ஏழு கொம்பு எக்காளங்களை தொனிக்கும் போது மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக் கடவர்கள். அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்து விழும்' என்றான்.

    இறைமகனின் வாக்குப்படியே, ஆறு நாள் கோட்டையை அதிகாலை வேளையிலேயே சுற்றி வந்தார்கள். ஏழாம் நாள் அதிகாலையிலே ஏழு முறை சுற்றி வந்து, எக்காளங்களை ஒலிக்கச் செய்தார்கள். அப்போது பட்டணத்தின் வலுவான மதில் இடிந்து விழுந்தது. தேவன் சொன்னபடி அதிகாலை வேளையிலே இஸ்ரவேல் மக்கள் எரிகோ கோட்டையை கைப்பற்றினார்கள்.

    எரிகோவைத் தகர்த்த தேவன், எதையும் தகர்க்க வல்லவர். அதிகாலையில் தேவனை தேடும் போது, எரிகோ மதில் போன்ற பெரிய பிரச்சினைகள் நம்மை சூழ்ந்து இருந்தாலும், அவற்றை தேவன் தகர்த்தெரிவார். நமக்கு விரோதமான ஆயுதங்கள் வாய்க்காத போதும், தேவன் தாமே நம்மை கரம் பிடித்து நடத்துவார் என்ற நம்பிக்கையுடன் அதிகாலையில் ஜெபம் செய்யுங்கள். இறைவனின் வல்லமையை பெற்றுக்கொள்ளுங்கள்.
    உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று காலை 6.30 மணிக்கு புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு போப் ஜான் பால் கல்வியியல் கல்லூரியின் செயலர் பால் தலைமையில் சிறப்பு திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது.

    விழாவையொட்டி தினமும் காலை 6.30 மணிக்கு சிறப்பு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், மறையுரையும் தொடர்ந்து தேர்பவனியும் நடைபெற உள்ளது.

    வருகிற 14-ந் தேதி இரவு பெரிய தேர்பவனி நடைபெறும். 15-ந் தேதி காலை 6.30 மணிக்கு புதுவை-கடலூர் மறைமாவட்ட முதன்மை குரு அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. மாலை ஆடம்பர தேர்பவனி நடைபெற உள்ளது. 16-ந் தேதி காலை 6.30 மணிக்கு திருப்பலியும் தொடர்ந்து கொடியிறக்கமும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை மற்றும் பங்குபேரவையினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    பூண்டி மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே அமைந்துள்ளது பூண்டி மாதா பேராலயம். இந்த பேராலய ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே 6-ந் தேதி தொடங்கும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு பூண்டி மாதா பேராலய வாசலில் இருந்து மாதாவின் உருவம் வரையப்பட்ட கொடியை பக்தர்கள் எடுத்து வந்தனர்.

    பூண்டி மாதா சிறு சொரூபம் தாங்கிய சிறு தேரை பக்தர்கள் சுமந்து கொண்டு ஊர்வலமாக சொன்று கொடிமேடையை அடைந்தனர். கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி முன்னிலையில் கோட்டாறு மறை மாவட்ட பிஷப் பீட்டர்ரெமிஜியுஸ் கொடியை புனிதம் செய்து கொடியேற்றி வைத்தார்.

    அதை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலியை கோட்டாறு மறைமாவட்ட பிஷப் பீட்டர்ரெமிஜியுஸ் குடந்தை ஆயர் அந்தோணிசாமி மற்றும் அருட்தந்தையர்கள் இணைந்து நிறைவேற்றினர். விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர ஊர்வலமும், சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.

    இந்த ஆண்டு சிறப்பு நிகழ்வாக வருகிற 14-ந் தேதி மாலை 5.30 மணிக்கு பூண்டி மாதா பேராலயத்தின் பங்குதந்தையாக பணியாற்றி மறைந்த லூர்து சேவியர் சவரிராயன் அடிகளாருக்கு இறை அடியாராக அறிவிக்கும் நிகழச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து மரியாள் திருச்சபையின் அன்னை என்ற தலைப்பில் குடந்தை பிஷப் அந்தோணிசாமி திருப்பலி நிறைவேற்றுகிறார். அன்று இரவு 9 மணி அளவில் தேர்பவனி நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் அமிர்தசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குநர் குழந்தைராஜ், உதவிப்பங்குத்தந்தையர்கள் டேவிட்ராஜேஸ், அலக்ஸ்சில்வஸ்டர் மற்றும் குழுவினர் செய்து வருகின்றனர்.
    ராஜாவூர் புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    ராஜாவூரில் புகழ்பெற்ற புனித மிக்கேல் அதிதூதர் திருத்தலம் உள்ளது. இந்த திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான இன்று காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், அன்பியங்களின் கலைவிழா நடக்கிறது.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நவநாள் நற்கருணை ஆசீரும், இரவு 9 மணிக்கு புனித ஜார்ஜியார் நாடகமும் நடக்கிறது.

    8-ந் தேதி பகல் 11 மணிக்கு அன்பின் விருந்து, இரவு 9 மணிக்கு மறைகல்வி மன்ற ஆண்டு விழா, கலை நிகழ்ச்சி நடைபெறும். 12-ந் தேதி காலை 6.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, மாலை 6.15 மணிக்கு நற்கருணை பவனி, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

    13-ந் தேதி மாலையில் ஜெபமாலை, திருப்பலியும், இரவு 9 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது. 14-ந் தேதி காலை 6 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நவநாள் திருப்பலி, 6.15 மணிக்கு மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி போன்றவை நடைபெறும். திருவிழா இறுதி நாளான 15-ந் தேதி காலை 5.30 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி நடக்கிறது. காலை 8.30 மணிக்கு மலையாளத்தில் திருப்பலியும், மாலை 7 மணிக்கு தேரில் திருப்பலியும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ரால்ப் கிராண்ட் மதன், இணைப்பங்கு அருட்பணியாளர் சுதர்சன், பங்கு பேரவை துணைத்தலைவர் கிளாட்சன், செயலாளர் அலெக்சாண்டர், துணை செயலாளர் ஜீங்வின் ஷைனுஜா, பொருளாளர் ஜார்ஜ் சகாய ஜோஸ் மற்றும் அருட்சகோதரிகள், இறைமக்கள் செய்துள்ளனர்.
    புனித அந்தோணியார் திருத்தலம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய இந்த திருத்தலம் கடந்த 41 ஆண்டுகளாக சுற்றுப்புறம் மற்றும் தொலைதூர பக்தர்களையும் ஈர்க்கும் ஆலயமாக புகழ்பெற்று விளங்குகிறது.
    புனித அந்தோணியார் திருத்தலம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய இந்த திருத்தலம் கடந்த 41 ஆண்டுகளாக சுற்றுப்புறம் மற்றும் தொலைதூர பக்தர்களையும் ஈர்க்கும் ஆலயமாக புகழ்பெற்று விளங்குகிறது.

    ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜான்சன் என்ற மாவட்ட ஆட்சியர் அவர்களால் குமாரசாமிப்பட்டியில் வாழ்ந்த மக்களுக்கு இந்த இடம் ஒதுக்கப்பட்டது. இங்கு குடியிருந்த 7 கிறிஸ்தவ குடும்பங்களுக்காக ஆலயம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த மரியசூசை மகன் துரைசாமிபிள்ளை அவர்களால் கொண்டு வரப்பட்ட கோடி அற்புதங்கள் செய்யும் புனித அந்தோணியாரின் சுரூபத்தை கூரை கொட்டகை அமைத்து அதில் மக்கள் கூடி ஜெபித்து வந்தனர். 1933-ம் ஆண்டு முதல் ஜான்சன்நகர், செவ்வை நகர் பங்கின் துணை பங்காக செயல்பட்டு வந்தது.

    காலத்தின் தேவைக்கு ஏற்ப ஒரு சிறிய கோவில் அருட்திரு உர்மான்ட் அவர்களால் கட்டப்பட்டு ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    1953 அரிசிப்பாளையம் தனிப்பங்காக செவ்வாய் நகரிலிருந்து பிரிக்கப்பட்ட போது ஜான்சன்நகர் அதன் துணைப்பங்காக மாறியது. 1954-ல் மக்களின் ஆன்மிக தேவைக்காக அருட்தந்தை எஸ்.சி.செபாஸ்டின் பங்கு தந்தையாக நியமிக்கப்பட்டார். 12-6-1972-ல் புதிய ஆலயம் அமைக்க மேதகு செல்வநாதர் ஆயர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. 19-3-1975 அன்று அப்போதைய ஆயர் மேதகு மைக்கேல் போஸ்கோ துரைசாமி அவர்களால் புதிய ஆலயம் புனிதப்படுத்தப்பட்டு தனிப்பங்காக உருவாக்கப்பட்டு அருட்திரு பால்அந்தோணி முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.

    1-6-2000-ல், 25-ம் ஆண்டு நினைவாக புனித அந்தோணியார் குருசடி அருட்திரு ஜெகநாதன் பங்கு தந்தை அவர்களால் கட்டப்பட்டது. 2005-ல் ஆலயத்தின் உட்புறம் அருட்திரு மதலைமுத்து அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. பின்பு பங்கு குருவாக பொறுப்பேற்ற அருட்திரு ஜேக்கப் அடிகள் புதிய கோபுரமும், மணிகூண்டும் அமைத்து, பிரமாண்டமான உலக இரட்சகர் சுரூபவமும் நிறுவப்பட்டு 22-5-2007 அன்று மேதகு ஆயர் சிங்கராயன் அவர்களால் அர்ச்சிக்கப் பட்டது.

    தற்போதைய பங்குதந்தையும் சேலம் மறைமாவட்ட முதன்மை குருவுமான அருட்தந்தை பெலவேந்திரம் அடிகள் அவர்களின் வெகு முயற்சியால் ஆலயத்தை விரிவுப்படுத்த வேண்டி 22-1-2014-ல் மேதகு ஆயர் சிங்கராயன் அவர்களால் ஆலய விரிவாக்கப்பணி ஆரம்பமானது. பங்குதந்தை பெலவேந்திரம் உதவி பங்குதந்தை அருட்திரு பவுல்ராஜ், பங்கு பேரவை, அன்பிய வழிகாட்டிகள் மற்றும் அந்தோணியார் பக்தர்கள் மூலம் பணிகள் தீவிரமாக விரைவுப்படுத்தப்பட்டு இத்திருத்தலம் மேதகு ஆயர் சிங்கராயன் மற்றும் மேதகு ஆயர் அந்தோணி சாமி அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.

    பத்து தொழுநோயாளர்களை குணமாக்கிய இயேசு
    இயேசு எருசலேமுக்குச் சென்று கொண்டிருந்தார். சமாரியா, கலிலேயா பகுதிகள் வழியாகச் சென்றபோது தொழுநோயாளியர் பத்து பேர் தூரத்தில் நின்று கொண்டு இயேசுவை நோக்கிக் கத்தினார்கள்.

    'ஐயா.. இயேசுவே.. எங்களுக்கு இரங்கும்'

    தொழுநோயாளிகள் பாவிகள் என்பது அந்தக் கால நம்பிக்கை. அவர்கள் நகருக்குள் நுழைய முடியாது. நகரத்துக்கு வெளியே குகைகளில் தான் அவர்களுடைய வாழ்க்கை. அவர்கள் வெளியே வந்தால் ஒரு மணிச்சத்தத்தை எழுப்பிக் கொண்டே தான் வர வேண்டும்.

    வரும் போதே 'தீட்டு..தீட்டு..விலகுங்கள்' என சத்தமிட்டுக் கொண்டே தான் வரவேண்டும். யாரையும் நெருங்கக் கூடாது. யாருடனும் சகவாசம் இருக்கக் கூடாது. யாரையும் தொட்டு விடவே கூடாது. சொந்த மனைவி, குழந்தைகள் என எல்லோருக்குமே அவர்கள் அன்னியர்கள் தான்.

    உணர்வு ரீதியாக அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். நிராகரிப்புகளின் நிழலில் தான் படுத்திருந்தனர். உடல் வலி இன்னொரு பக்கம். கொஞ்சம் கொஞ்சமாய் உடல் உதிர்ந்து விழுவதைப் பார்க்கும் துயரம். மரத்துப் போன கால்கள் துண்டானால் கூட அறிய முடியாத பரிதாபம்.

    இந்த சூழ்நிலையில் உடல்நலம் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதிசயத்தால் மட்டுமே அப்படி நடக்க முடியும். பழைய காலத்தில் அப்படி நடந்த வரலாறுகள் உண்டு. அப்படி ஏதேனும் ஒரு அதிசயம் நடக்காதா எனும் ஏக்கம் அவர்களுடைய மனதில். இயேசு நினைத்தால் நிச்சயம் சுகம் கிடைக்கும் எனும் நம்பிக்கையும் அவர் களிடம் உண்டு.

    எனவே தான் தொலைவில் இருந்து கொண்டு அவர்கள் கத்தினார்கள், 'ஐயா.. இயேசுவே.. எங்களுக்கு இரங்கும்'.

    இயேசு அவர்களைப் பார்த்து, 'நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்' என்றார்.

    ஒருவர் குணமானால் குணமான உடலைக் குருவிடம் காட்ட வேண்டும். சுகமாகிவிட்டோம் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்கென ஒரு காணிக்கை உண்டு, அதை செலுத்தவும் வேண்டும். அப்போது தான் அவர்களால் சமூகத்தில் நடமாட முடியும்.

    'சுகமாக்குங்கள்' என வேண்டினால், குருக்களிடம் காட்டச் சொல்கிறாரே என்று அவர்கள் தயங்கவில்லை. இயேசுவின் வார்த்தையை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்கள் நடந்தார்கள்.

    போகும் வழியிலேயே அவர்களுடைய தொழுநோய் நீங்கிவிட்டது. அவர்கள் பரவசமடைந்தார்கள்.

    அதில் ஒருவன் தனது பரவசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் உரத்த குரலில் ஆண்டவரைப் புகழத் தொடங்கினான். இயேசுவை நோக்கி திரும்பி ஓடினான். இயேசுவைக் கண்டதும் அவருக்கு முன்னால் நிற்கவும் தோன்றாமல் முகம் குப்புற விழுந்தான்.

    'இயேசுவே, நன்றி.. நன்றி' என உரத்த குரலில் கூறினான். அவன் ஒரு சமாரியன். யூதர்களுக்குப் பிடிக்காத இனத்தைச் சேர்ந்தவன். பிற இனத்தினன்.
    இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார். 'எல்லாரும் சுகமடைய வில்லையா? மற்ற ஒன்பது பேரும் எங்கே?' என்று கேட்டார்.

    மற்ற ஒன்பது பேரும் குணமளித்த இறைவனுக்கு நன்றி சொல்லவும் தோன்றாமல் எங்கோ போய்விட்டிருந்தனர். ஒருவேளை அவர்கள் குருக்களைப் பார்க்க போயிருக்கலாம்.

    இயேசு அவனைப் பார்த்து, 'எழுந்து செல்லும். உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது' என்றார்.

    திரும்பி வந்தவன், இயேசுவின் வல்லமையால் தான் சுகமானேன் என நம்பினான். அதற்கான புகழை முதலில் இறைவனுக்கு உரத்த குரலில் செலுத்தினான். பின்னர் இயேசுவின் பாதத்தில் விழுந்து நன்றி செலுத்தினான்.

    இந்த நிகழ்வு நமக்கு எவற்றைக் கற்றுத் தருகிறது.

    1. இறைவனுக்கு நன்றி செலுத்துவதிலிருந்து எந்தக் காரணம் கொண்டும் நாம் விலகி விடக் கூடாது.

    2. இறைவனைப் புகழ்வதில் தாமதமோ, தயக்கமோ கூடாது.

    3. இயேசுவின் வார்த்தைகளை நம்பினால் நலம் கிடைக்கும்.

    4. நலமளிப்பவர் இறைவனே அவரை நம்பி அவரிடம் விண்ணப்பம் வைப்பதே முதன்மையானது. நெருங்கமுடியாதபடி வாழ்க்கைச் சூழல் அமைந்தாலும் அவரையே வேண்ட வேண்டும்.

    5. கடவுளுக்கு நன்றி செலுத்து என இயேசு சொல்லவில்லை, ஆனால் அதை நம்மிடமிருந்து அவர் தானாகவே வரவேண்டும் என விரும்புகிறார்.

    6. தூய ஆவியானவர் இதயத்தில் இருந்தால் நம்மை இத்தகைய சூழல்களில் வழிநடத்துவார். எனவே தூய ஆவியானவரை இதயத்தில் ஏற்றுக் கொள்தல் வேண்டும்.

    7. நோயிலிருந்து விடுதலை நம் உடலைப் பாதுகாக்கிறது. நன்றி செலுத்துகையில் இயேசு, 'எழுந்து செல், நலமானீர்' எனும் போது நம் ஆன்மா சுகமடைகிறது. மீட்பு வருகிறது.

    8. நம்மை இறைவன் விடுவித்தால், பின்னர் இறைவன் பாதத்தை பணிந்து அவர் விரும்பும் வழியில் நடப்பதே தேவையானது.

    9. இயேசுவின் இந்த சுகமளித்தல் அவர் இறைமகன் என்பதை மீண்டும் உணர்த்துகிறது.

    10. தொழுநோய் நீங்குவது, நாம் பாவத்திலிருந்து மீள்வதற்கு ஒப்பானது. 'எழுந்திரும்' என்று இயேசு சொல்வது மீண்டும் பாவத்தில் விழாமல் சரியான வாழ்க்கை வாழ்வதற்கான அழைப்பாகும்.

    இந்த சிந்தனைகளை பத்து தொழுநோயாளர் நிகழ்விலிருந்து கற்றுக் கொள்வோம்.
    கருங்கல் அருகே செல்லங்கோணம் புனித ஜார்ஜியார் மலங்கரை கத்தோலிக்க ஆலய திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
    கருங்கல் அருகே செல்லங்கோணத்தில் புனித ஜார்ஜியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இத்திருவிழா வருகிற 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளில் பங்கு அருட்பணியாளர் ஜாண்குமார் கொடியேற்றினார். தொடர்ந்து, திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தன.

    திருவிழா நாட்களில் மாலை ஜெபம், ஜெபமாலை, திருப்பலி போன்றவை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாவேலிக்கரை மறைமாவட்ட ஆயர் ஜோசுவா மார் இக்னாத்தியோசின் தலைமையில் திருப்பலி, புதுநன்மை வழங்குதல் போன்றவை நடந்தன.

    விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலையில் நடைக்காவு பங்கு அருட்பணியாளர் ஜோஸ்பிரைட் தலைமையில் திருப்பலி, பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது. நாளை (புதன்கிழமை) மாலையில் கண்ணக்கோடு பங்கு அருட்பணியாளர் தேவதாஸ் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து மறைகல்வி மன்ற ஆண்டு விழா பொதுக்கூட்டமும் நடக்கிறது. வருகிற 5-ந் தேதி மாலையில் திருப்பலியை தொடர்ந்து இளையோர் சங்க ஆண்டுவிழா பொதுக்கூட்டம் நடக்கிறது. 6-ந் தேதி மாலையில் திருப்பலியை தொடர்ந்து பக்த இயக்கங்களின் ஆண்டு விழாவும், நகைச்சுவை பட்டிமன்றமும் நடைபெறும். 7-ந் தேதி மாலையில் திருப்பலியும் தொடர்ந்து, இரவு 7.15 மணிக்கு தேர்பவனியும் நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 8-ந் தேதி காலை 9 மணிக்கு மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து அன்பின் விருந்தும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
    சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும்.
    சாந்தோம் பசிலிக்கா (Santhome Basilica) இந்தியாவின் சென்னையில் சாந்தோம் பகுதியில் அமைந்துள்ள ஓர் இளம் பேராலய (Minor Basilica) வகையைச் சேர்ந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயமாகும். இவ்வாலயம், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் தலைமை ஆலயம் ஆகும்.

    இது 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசிய குடியேற்றத்தவரால் கட்டப்பட்டு பின்னர் 1893ஆம் ஆண்டு பிரித்தானியர் குடியேற்றக் காலத்தில் விரிவாக்கப்பட்டு மீளவும் கட்டப்பட்டது. கோத்திக் கட்டட வடிவமைப்பில் எழுப்பபட்ட அந்தக் கட்டடமே தற்போது உள்ளது. இது 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானிய கட்டடப் பொறியிலாளர்கள் பயன்படுத்திய புது கோத்திக் வகையாக அமைக்கப்பட்டுள்ளது.

    சாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிக்கா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது புனித தோமா என்று பொருள்படும். போர்த்துகீசியர் இக்கோவிலுக்கு இயேசுவின் அன்னை மரியாவின் பெயரை முதலில் அளித்திருந்தனர். "கடவுளின் அன்னை" எனப்பொருள்படும் Madre de Deus பெயர் இக்கோவிலுக்கு மட்டுமன்றி அது அமைந்த நகருக்கும் ("மதராஸ்", "மதராஸ்பட்டணம்") பெயராயிற்று என்பர். "மதராஸ்" என்னும் பெயருக்கு வேறு விளக்கங்களும் உள்ளன.[3]

    சாந்தோம் கோவில் வரலாறு

    பண்டைய கிறித்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமா இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் தோமா அடக்கப்பட்ட இடத்தில் ஒரு கோவில் கட்டினார்கள். மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய பயணி 1292இல் மயிலாப்பூர் சென்றதாகக் குறிப்பிடுகிறார். 1349இல் ஜான் தே மரிஞ்ஞோலி என்பவர் புனித தோமா கோவிலையும் கல்லறையையும் சந்தித்ததாக எழுதுகிறார்.

    1517ஆம் ஆண்டும், 1521ஆம் ஆண்டும் போர்த்துகீசியர் தருகின்ற குறிப்புகள்படி, அவர்கள் தோமா கோவில் பாழடைந்து கிடந்ததைக் கூறுகிறார்கள்; ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது. அது "பெத் தூமா" ("தோமாவின் வீடு" என்பது பொருள்) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு கோவில்; அது ஓர் இசுலாமியரின் கண்காணிப்பில் அப்போது இருந்ததாகக் கூறப்படுகிறது.

    1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்; அதோடு சாந்தோம்-மயிலாப்பூர் என்னும் மறைமாவட்டமும் நிறுவப்பட்டது (கி.பி. 1523). அகுஸ்தின் சபை சார்ந்த செபஸ்தியான் தே பேத்ரோ என்பவர் அம்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டை கட்டினார்கள். அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.

    போர்த்துகீசியர் கட்டிய சாந்தோம் கோவில் பழுதடையத் தொடங்கிய நிலையில் புதியதொரு கோவில் கட்ட வேண்டியதாயிற்று. என்றீ ரீத் த சில்வா என்னும் மறை ஆயரின் தலைமையில் 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்பவர் புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் பிரித்தானிய பொறிநுட்ப வல்லுநர். புதிய கோத்திக் என்னும் கட்டடப்பாணியில் கோவிலை விரித்து, பெரிதாகக் கட்ட பவர் பெரிதும் துணைபுரிந்தார்.

    கோத்திக் கட்டடப்பாணியில் உயர்ந்த கோபுரங்கள் எழுப்புவது வழக்கம். சாந்தோம் கோவிலின் பெரிய கோபுரம் 155 அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதி 112 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. பலிபீடம் அடங்கிய திருத்தூயகப் பகுதி 62 அடி நீளம், 33 அடி அகலம்; கோவில் உட்பகுதியில் மேல்கூரை உயரம் 36 அடி 6 அங்குலம்; திருத்தூயகப் பகுதியில் கூரை உயரம் 41 அடி 6 அங்குலம்.

    கோவில் உட்பகுதியில் 36 பெரிய சாளரங்கள் உள்ளன. அவற்றில் நிறப்பதிகைக் கண்ணாடி (stained glass) அமைக்கப்பட்டு, கதிரவன் ஒளி கோவிலின் உள் இதமாக நுழைய வழியாகின்றன. கிறித்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அக்கண்ணாடிப் பதிகையில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. திருத்தூயகத்தின் பின்புறம் அமைந்துள்ள பெரிய நிறப்பதிகைக் கண்ணாடி செருமனியில் மூனிச் நகரில் அமைந்த மையர் (Mayer) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட கோவில் 1896, ஏப்ரல் முதல் நாளன்று புனிதமாக்கப்பட்டது.

    சென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்க உயர்மறைமாவட்டத்தில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும். 1956ஆம் ஆண்டு மார்ச்சு 16ஆம் நாள் போப்பாண்டவர் 12ஆம் பயஸ் (பத்திநாதர்) சாந்தோம் கோவிலை சிறிய பசிலிக்கா நிலைக்கு (Minor Basilica) உயர்த்தினார். பிப்ரவரி 11, 2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையால் தேசிய வழிபாட்டுத்தலமாக (National Shrine) அறிவிக்கப்பட்டது. இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கியமான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.

    2004ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் சாந்தோம் கோவிலும் தூய தோமா கல்லறைச் சிற்றாலயமும் அழகுற புதுப்பிக்கப்பட்டு வனப்போடு விளங்குகின்றன. புதுப்பிக்கப்பட்ட கோவில் டிசம்பர் 12, 2004இல் இந்தியாவில் போப்பாண்டவர் தூதர் பேராயர் பேத்ரோ லோப்பெசு கின்றானா மற்றும் மும்பை பேராயர் கர்தினால் இவான் டியாசு ஆகியோரால் புனிதப்படுத்தப்பட்டது.

    மயிலை மாதா திருவுருவம்

    சாந்தோம் ஆலயத்தின் உட்பகுதியில் உள்ள அரும்பொருள்களில் ஒன்று மயிலை மாதா திருவுருவம் ஆகும். அதன்முன் திருப்பயணிகள் இறைவேண்டல் செய்வது வழக்கம். இந்திய நாட்டிலும் ஆசியாவின் பிற பகுதிகளிலும் கிறித்தவ மறையைப் பரப்பிய புனித ஃபிரான்சிசு சவேரியார் (1506-1552) மயிலையில் தங்கியிருந்தபோது (1545) இத்திருவுருவத்தின்முன் வேண்டுதல் செலுத்தியதாக மரபு. மரத்தால் ஆன இச்சிலை 3 அடி உயரமுடையது. மரியா அரியணையில் அமர்ந்திருக்கிறார். கைகள் இறைவேண்டல் முறையில் குவிந்திருக்கின்றன. கண்கள் சற்றே கீழ்நோக்கியுள்ளன. அருள்திரு கஸ்பார் கொயேலோ 1543இல் இத்திருவுருவத்தைப் போர்த்துகல் நாட்டிலிருந்து கொண்டுவந்ததாகக் கருதப்படுகிறது.

    ஆலய வழிபாட்டு நேரங்கள்

    திங்கள் முதல் சனி வரை

    காலை 5:45 - ஆராதனை; செபமாலை; ஆங்கில திருப்பலி
    காலை 11:00 - தமிழ் திருப்பலி (கல்லறைச் சிற்றாலயம்)
    மாலை 5:30 - நற்கருணை ஆசீர்
    மாலை 5:45 - செபமாலை; தமிழ் திருப்பலி

    ஞாயிற்றுக் கிழமை

    காலை 6:00 - தமிழ் திருப்பலி
    காலை 7:15 - ஆங்கில திருப்பலி
    காலை 8:15 - தமிழ் திருப்பலி
    காலை 9:30 - ஆங்கில திருப்பலி
    காலை 10:30 - மலையாள திருப்பலி
    நண்பகல் 12:00 - ஆங்கில திருப்பலி
    மாலை 6:00 - தமிழ் திருப்பலி

    ஒவ்வொரு மாதமும் 3ஆம் நாள் புனித தோமா நாளாகக் கொண்டாடப்படும். மாலை 6:00 மணிக்குச் சிறப்பு வழிபாடுகள், திருப்பலி.

    ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமையன்று மயிலை மாதா சிறப்பு நாள். மாலை 6:00 மணிக்குத் திருப்பலியும் தேர்ப்பவனியும் நடைபெறும்.
    கிறிஸ்துவ வரலாற்றில் ‘இறை நம்பிக்கை’ என்ற வார்த்தைக்கு மறு உருவமாய் நிற்பவர் ‘தோமா’ எனப்படும் புனித தோமையார்.
    கிறிஸ்துவ வரலாற்றில் ‘இறை நம்பிக்கை’ என்ற வார்த்தைக்கு மறு உருவமாய் நிற்பவர் ‘தோமா’ எனப்படும் புனித தோமையார்.

    இயேசுவின் இறப்பின் போது இறை நம்பிக்கை குறைந்தவராகவும், உயிர்த்தெழுந்த இயேசு தன் முன் காட்சியளித்ததும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவராகவும் மாறி இறை மாட்சிமையை உலகிற்கு பரப்பினார். இவரது நம்பிக்கை வாழ்வில் நாமும் இணைய வேண்டும்.

    இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின்பு அவருடைய சீடர் களுக்கு காட்சியளித்தார், என வேதத்தில் வாசிக்கிறோம். அவ்வேளையில், பன்னிருவரில் ஒருவரான தோமா அவர்களுடன் இல்லை.

    அதனால் இயேசுவைக் கண்ட சீடர்களைப் பார்த்து தோமா கூறும்போது ‘‘அவருடைய கைகளில் ஆணியினால் உண்டான காயத்தை நான் கண்டு, அந்த காயத்திலே என் விரலை இட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன்’’ எனக் கூறினார் என (யோவான் 20:24–25) விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மீதமிருந்த பதினொரு சீடர்களில் தோமாவே அவ்விசுவாசம் நிறைந்தவராய் இருந்தார். விசுவாசிக்காத தோமாவை இயேசு புறக்கணிக்காமல், எட்டு நாளைக்குப் பின்பு அவருக்கு முன் தோன்றினார்.

    ‘‘தோமா, நீ உன் விரலை இங்கு நீட்டி என் கைகளைப் பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவ்விசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு!’’ என்றார்.

    தோமா உள்ளம் உடைந்தவராய் ‘‘என் ஆண்டவனே! என் தேவனே!’’ என இயேசுவை சரணடைந்து, அவர்மீது நம்பிக்கை கொண்டார்.

    இறை மாட்சிமையை பரப்ப இந்தியாவிற்குள் வந்தவர், தமிழ்நாட்டிலே தங்கியிருந்து தனது பணியை தொடர்ந்தார். தமிழக மக்களிடத்தில் நீங்கா இடம் பிடித்தார். அவருடைய இறை பரப்பு பயணம் இறப்பு வரை தொடர்ந்தது. இயேசுவின் மகிமைகளை போதித்ததற்காகவே கொல்லப்பட்டார்.

    தமிழக மக்களின் நம்பிக்கை சின்னமாக விளங்கும் தோமாவின் கொள்கைகள் இயேசுவின் மீது ஆழமான பற்றுக்கொண்டவை.

    ‘உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாகயிரு: அவரே காரியத்தை வாய்க்க பண்ணுவார்’ (சங்: 37:5) என்ற விவிலிய மொழிகளை அடிப்படையாக கொண்டே தோமாவின் இறை பயணம் அரங்கேறியது.

    நம்முடைய வழியை தினமும் கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து அவர் மீது நம்பிக்கை வைத்தால், அதற்கான உரிய பதிலை கொடுப்பார் என்பதை உறுதியாக நம்பினார்.

    மேலும் ‘நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்’ என்ற இறை வாசகத்தை அடிக்கடி முணுமுணுத்துள்ளார்.

    ‘உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரின் நம்பிக்கையாக இருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதை களைச் செம்மைப்படுத்துவார்’ என்ற நீதிமொழிகளிலும் (நீதி 3:56) நாட்டம் மிக்கவராய் இருந்துள்ளார்.

    தோமாவின் வாழ்க்கை இறை நம்பிக்கை என்ற பெரும் கொடையை நமக்கு பாடமாக கொடுக்கிறது. இன்று பெரும்பாலான இறைமக்கள் இறை விசுவாசமற்றவர்களாய் வாழ்ந்து வருகின்றோம். தோமாவை போன்று இறை நம்பிக்கை குறைந்த வர்களாய் இருப்பதோடு, இறைவனை நேரில் கண்டால் மட்டுமே விசுவாசிப்பது என்ற முடிவுடன் இருக்கிறோம். இதற்கான பதில் தோமாவின் வாழ்க்கையிலே அமைந்திருக்கிறது.

    தோமாவின் அவ்விசுவாசத்தினால் மனவேதனைக்குள்ளான இயேசு, தோமாவின் கண்களுக்கு தோன்றினார். தோமாவும் இயேசுவை நம்பினார். அந்தசமயத்தில் இயேசு என்னை கண்டு விசுவாசிப்பவர்களை காட்டிலும் காணாமல் விசுவாசிப்பவர்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறியதும், தோமா மனவேதனையுடன் மன்னிப்பு வேண்டினார்.

    ஆம்...! இயேசுவை நேரில் கண்டு விசுவாசிப்பவர்களை விட அவரை மனதளவில் உணர்ந்து விசுவாசிப்பவர்களே பேறுபெற்ற வர்கள். தோமா தன்னுடைய தவறுகளை வாழ்க்கையின் இறுதி காலம் வரையிலும் நினைத்து மனவேதனைப்பட்டார்.

    ஆகவே தான் தோமா இறை நம்பிக்கைக்கு சிறந்த பாடமாக திகழ்கிறார். இறை நம்பிக்கை எப்படி அமைந்திருக்க வேண்டும், எப்படி அமைந்துவிடக்கூடாது என்பதற்கான சிறந்த இலக் கணமாகவும் திகழ்கிறார்.

    தவக்காலம் நடந்துக்கொண்டிருக்கும் சமயம் என்பதால் சிலுவை பாதை, உயிர்ப்பு சடங்குகள் போன்றவற்றில் அறைகுறை நம்பிக்கையுடன் பங்குகொள்ளாமல் முழு மனதுடனும், இறைநம்பிக்கையுடனும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் காணாமல் விசுவாசிப்பவரே பேறுபெற்றோர். 
    வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பட்டுக்கோட்டை அருகே உள்ள வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவிற்கு பட்டுக்கோட்டை மறைவட்ட அதிபர் மரியசூசை தலைமை தாங்கினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பங்கு தந்தையர்கள் ஏ.ஆர். அல்போன்ஸ் (சஞ்சாய்நகர்), செபஸ்டின் (ஒரத்தநாடு), கபிரியேல் (அம்மாசத்திரம்), அடைக்கலம் (பட்டுக்கோட்டை), ஆரோக்கியசுந்தரம் (வேளாங்கண்ணி), சுரேஷ் (பட்டுக்கோட்டை), டெரென்ஸ் (தஞ்சை) ஆகியோர் கலந்து கொண்டனர்

    விழாவிற்கான ஏற்பாடுகளை வீரக்குறிச்சி சுக்கிரன்பட்டி புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை நித்திய சகாயராஜ், பங்கு மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
    தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும்.
    தூய ஆரோக்கிய அன்னை திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி தமிழ்நாடு, இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இவ்வாலயம் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டதாகும். 16ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த மூன்று புதுமைகளினால் இங்கே ஆரோக்கிய அன்னையின் பக்தி பரவலாயிற்று. அம்மூன்று புதுமைகள்: இடைய சிறுவனுக்கு காட்சி தந்தது, தயிர் விற்ற முடவனுக்கு கால் நலமடைந்தது, போர்த்துகீச மாலுமிக்கு கடும் புயலில் கரை வந்தடைய உதவியது.

    இவ்வாலய விழாநாள் கன்னி மரியாவின் பிறந்த நாளும், போர்த்துகீசிய மாலுமி கரை அடைந்த புதுமை நடந்த நாளுமான செப்டம்பர், 08 ஆகும். இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டது என்பது குறிக்கத்தக்கது.

    அன்னை மரியா :


    இயேசுவின் தாயான மரியா, உலகின் பல நாடுகளில் வாழும் மக்களிடையே தோன்றி இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார். அவர் தோன்றிய இடங்களின் பெயரால், லூர்து மாதா, பாத்திமா மாதா, குவாடலூப்பே மாதா என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறார். உலகின் பல இடங்களில் தோன்றிய அன்னை, இந்தியாவில் தமிழகத்தின் வேளாங்கண்ணியில் காட்சி அளித்ததால் வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார். வேண்டுதல் செய்யும் அனைவரின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதால் ஆரோக்கிய அன்னையாக திகழ்கிறார்.

    பால்க்கார சிறுவன் :

    அன்னை மரியா, பதினாறாம் நூற்றாண்டின் மத்தியில் நாகப்பட்டினம் அருகே உள்ள வேளாங்கண்ணியில் காட்சி அளித்தார். வேளாங்கண்ணி என்றால் விவசாய நிலம் என்று அர்த்தம். இங்கு இருந்த குளத்தைச் சுற்றி வேளாண்மை நடந்தது. அந்த காலகட்டத்தில், பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற இந்து சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி, தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார்.

    அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அவன் குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான். பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மிகவும் ஆசைப்பட்டனர். அன்னை காட்சி அளித்த இடத்தில் மக்கள் கூடி செபிக்கத் தொடங்கினர். பலரும் தங்கள் துன்பங்கள் தீர உதவுமாறு அன்னை மரியாவிடம் வேண்டிக்கொண்டனர்.

    மோர் விற்ற சிறுவன் :

    தனது மகனுக்காக மனதுருகி செபித்த ஒரு தாயின் வேண்டுதலுக்கு பதிலளிக்கும் வகையில் மரியன்னை மீண்டும் காட்சி அளித்தார். நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக் கொண்டிருந்த கால் ஊனமுற்ற சிறுவன் ஒருவனுக்கு அன்னை மரியா தோன்றினார்.

    `மகனே, எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல்' என்ற அன்னையின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் அதிர்ந்து போனான். `அம்மா, என்னால் எப்படி நடக்க முடியும்?' என்றான் சிறுவன். `உன்னால் முடியும்' என்றார் அன்னை. அவன் எழுந்தான், நடந்தான், அங்கு ஓடத் தொடங்கியவன் செல்வந்தரின் வீட்டில் போய்தான் நின்றான். அன்னையின் புகழ் சுற்றுப் புறமெங்கும் பரவ, அன்னை செல்வந்தருக்கு காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது.

    ஆலயத்தின் வளர்ச்சி :

    தொடக்கத்தில் நாகப்பட்டினம் கிறிஸ்தவப் பங்கின் துணை ஆலயமாக வேளாங்கண்ணி இருந்து வந்தது. 1771ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது.

    ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் திருத்தலமாக மாறியது. இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான் வேளாங்கண்ணி திருத்தலக் கோவிலை 1962 நவம்பர் 3ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" (minor basilica என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பெருங்கோவில்" நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.

    சமூக சேவைகள் :

    தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் ஆண்டகையின் மேற்பார்வையின் கீழ் வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இதன் அதிபராக அருட்தந்தை மைக்கேல் அடிகளார் இருந்து வருகிறார். மேலும் பல குருக்களும் இந்த ஆலயத்தில் பணியாற்றுகிறார்கள். வேளாங்கண்ணி பேராலயத்தின் மூலம் பல்வேறு கல்வி நிறுவனங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சமூக சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், அந்த அன்புத் தாயின் பரிந்துரையால் அற்புதங்களைப் பெற்று மகிழ்கிறார்கள்.
    ×