என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இறை நம்பிக்கை என்ற வார்த்தைக்கு மறு உருவமாய் நிற்பவர் தோமா
    X

    இறை நம்பிக்கை என்ற வார்த்தைக்கு மறு உருவமாய் நிற்பவர் தோமா

    கிறிஸ்துவ வரலாற்றில் ‘இறை நம்பிக்கை’ என்ற வார்த்தைக்கு மறு உருவமாய் நிற்பவர் ‘தோமா’ எனப்படும் புனித தோமையார்.
    கிறிஸ்துவ வரலாற்றில் ‘இறை நம்பிக்கை’ என்ற வார்த்தைக்கு மறு உருவமாய் நிற்பவர் ‘தோமா’ எனப்படும் புனித தோமையார்.

    இயேசுவின் இறப்பின் போது இறை நம்பிக்கை குறைந்தவராகவும், உயிர்த்தெழுந்த இயேசு தன் முன் காட்சியளித்ததும் இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டவராகவும் மாறி இறை மாட்சிமையை உலகிற்கு பரப்பினார். இவரது நம்பிக்கை வாழ்வில் நாமும் இணைய வேண்டும்.

    இயேசு மரித்து உயிர்த்தெழுந்த பின்பு அவருடைய சீடர் களுக்கு காட்சியளித்தார், என வேதத்தில் வாசிக்கிறோம். அவ்வேளையில், பன்னிருவரில் ஒருவரான தோமா அவர்களுடன் இல்லை.

    அதனால் இயேசுவைக் கண்ட சீடர்களைப் பார்த்து தோமா கூறும்போது ‘‘அவருடைய கைகளில் ஆணியினால் உண்டான காயத்தை நான் கண்டு, அந்த காயத்திலே என் விரலை இட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன்’’ எனக் கூறினார் என (யோவான் 20:24–25) விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மீதமிருந்த பதினொரு சீடர்களில் தோமாவே அவ்விசுவாசம் நிறைந்தவராய் இருந்தார். விசுவாசிக்காத தோமாவை இயேசு புறக்கணிக்காமல், எட்டு நாளைக்குப் பின்பு அவருக்கு முன் தோன்றினார்.

    ‘‘தோமா, நீ உன் விரலை இங்கு நீட்டி என் கைகளைப் பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவ்விசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு!’’ என்றார்.

    தோமா உள்ளம் உடைந்தவராய் ‘‘என் ஆண்டவனே! என் தேவனே!’’ என இயேசுவை சரணடைந்து, அவர்மீது நம்பிக்கை கொண்டார்.

    இறை மாட்சிமையை பரப்ப இந்தியாவிற்குள் வந்தவர், தமிழ்நாட்டிலே தங்கியிருந்து தனது பணியை தொடர்ந்தார். தமிழக மக்களிடத்தில் நீங்கா இடம் பிடித்தார். அவருடைய இறை பரப்பு பயணம் இறப்பு வரை தொடர்ந்தது. இயேசுவின் மகிமைகளை போதித்ததற்காகவே கொல்லப்பட்டார்.

    தமிழக மக்களின் நம்பிக்கை சின்னமாக விளங்கும் தோமாவின் கொள்கைகள் இயேசுவின் மீது ஆழமான பற்றுக்கொண்டவை.

    ‘உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர் மேல் நம்பிக்கையாகயிரு: அவரே காரியத்தை வாய்க்க பண்ணுவார்’ (சங்: 37:5) என்ற விவிலிய மொழிகளை அடிப்படையாக கொண்டே தோமாவின் இறை பயணம் அரங்கேறியது.

    நம்முடைய வழியை தினமும் கர்த்தரிடத்தில் ஒப்புக் கொடுத்து அவர் மீது நம்பிக்கை வைத்தால், அதற்கான உரிய பதிலை கொடுப்பார் என்பதை உறுதியாக நம்பினார்.

    மேலும் ‘நான் உனக்கு போதித்து, நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன். உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்’ என்ற இறை வாசகத்தை அடிக்கடி முணுமுணுத்துள்ளார்.

    ‘உன் சுயபுத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரின் நம்பிக்கையாக இருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதை களைச் செம்மைப்படுத்துவார்’ என்ற நீதிமொழிகளிலும் (நீதி 3:56) நாட்டம் மிக்கவராய் இருந்துள்ளார்.

    தோமாவின் வாழ்க்கை இறை நம்பிக்கை என்ற பெரும் கொடையை நமக்கு பாடமாக கொடுக்கிறது. இன்று பெரும்பாலான இறைமக்கள் இறை விசுவாசமற்றவர்களாய் வாழ்ந்து வருகின்றோம். தோமாவை போன்று இறை நம்பிக்கை குறைந்த வர்களாய் இருப்பதோடு, இறைவனை நேரில் கண்டால் மட்டுமே விசுவாசிப்பது என்ற முடிவுடன் இருக்கிறோம். இதற்கான பதில் தோமாவின் வாழ்க்கையிலே அமைந்திருக்கிறது.

    தோமாவின் அவ்விசுவாசத்தினால் மனவேதனைக்குள்ளான இயேசு, தோமாவின் கண்களுக்கு தோன்றினார். தோமாவும் இயேசுவை நம்பினார். அந்தசமயத்தில் இயேசு என்னை கண்டு விசுவாசிப்பவர்களை காட்டிலும் காணாமல் விசுவாசிப்பவர்கள் பேறுபெற்றவர்கள் என்று கூறியதும், தோமா மனவேதனையுடன் மன்னிப்பு வேண்டினார்.

    ஆம்...! இயேசுவை நேரில் கண்டு விசுவாசிப்பவர்களை விட அவரை மனதளவில் உணர்ந்து விசுவாசிப்பவர்களே பேறுபெற்ற வர்கள். தோமா தன்னுடைய தவறுகளை வாழ்க்கையின் இறுதி காலம் வரையிலும் நினைத்து மனவேதனைப்பட்டார்.

    ஆகவே தான் தோமா இறை நம்பிக்கைக்கு சிறந்த பாடமாக திகழ்கிறார். இறை நம்பிக்கை எப்படி அமைந்திருக்க வேண்டும், எப்படி அமைந்துவிடக்கூடாது என்பதற்கான சிறந்த இலக் கணமாகவும் திகழ்கிறார்.

    தவக்காலம் நடந்துக்கொண்டிருக்கும் சமயம் என்பதால் சிலுவை பாதை, உயிர்ப்பு சடங்குகள் போன்றவற்றில் அறைகுறை நம்பிக்கையுடன் பங்குகொள்ளாமல் முழு மனதுடனும், இறைநம்பிக்கையுடனும் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் காணாமல் விசுவாசிப்பவரே பேறுபெற்றோர். 
    Next Story
    ×