என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    போலித்தனமாய் பெருமை கொள்பவர்களை கடவுள் விரும்புவதில்லை. எனவே உண்மையாய் அவர் பாதம் பணிந்து, தாழ்மையை வாழ்க்கை முறை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
    இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் பேதுருவும், யோவானும் மற்ற அப்போஸ்தலர்களும் ‘இயேசுவே மீட்பர்’ என்று மக்களிடையே உரையாற்றி ஏராளமான மக்களை திருச்சபையில் சேர்த்தனர். அது தான் ஆதித்திருச்சபை என்று அழைக்கப்படுகிறது.

    அவர்கள் பகிர்தலிலும், ஒற்றுமையிலும் சிறந்து விளங்கினார்கள். அந்தத் திருச்சபையில் இணைந்தவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய உடைமைகளை எல்லாம் விற்று பொதுவில் வைத்தார்கள். பின் தேவைக்கேற்ப அவற்றை மக்கள் பகிர்ந்து கொண்டார்கள். யாரும் அளவுக்கு அதிகமாய் ஆசைப்படவில்லை. எல்லோருடைய தேவைகளும் நிறைவேற்றப்பட்டன.

    இந்தத் திருச்சபையின் நடைமுறைகள் மறைநூல் அறிஞர்கள், குருக்கள், அரச அதிகாரிகள் அனைவருக்கும் மிகவும் ஆச்சரியத்தை அளித்தது. பெரும் பணக்காரர்கள் கூட தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்று பொதுவில் வைப்பதை அவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    இயேசு விரும்பியது அது தானே ‘உனக்குள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குக் கொடு’ என்பது தானே அவருடைய போதனை.

    அந்தக் கூட்டத்தில் அனனியா என்றொரு செல்வந்தர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் சப்பிரா. அவர்களும் திருச்சபையின் மீது அதிக ஆர்வம் கொண்டு பேதுருவின் சபையில் இணைந்தவர்கள். அவர்களுக்கும் தங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்னும் ஆர்வம் வந்தது.

    அனனியா சென்று தன்னுடைய சொத்தை எல்லாம் விற்றான். அவனால் நம்பமுடியவில்லை. ஏராளமான செல்வம் அவனுடைய கைகளில் இருந்தது. அவற்றைக் கொண்டு பேதுருவிடம் ஒப்படைக்க நினைத்துக் கொண்டிருந்தபோது அவர்களுடைய மனதில் சஞ்சலப் பேய் புகுந்து கொண்டது.

    நமக்குத் தான் இத்தனை செல்வம் இருக்கிறதே. ஏன் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும்? கொஞ்சத்தை நமக்காய் வைத்துக் கொள்ளலாமே? என்று அவர்கள் சிந்தித்தார்கள்.

    ஒருவேளை நாளை இந்தச் சபை இல்லாமல் போனால் நாம் வாழ்வதற்கு செல்வம் மிகவும் முக்கியம். எனவே சொத்தில் ஒருபாகத்தை யாருக்கும் தெரியாமல் தனக்கென வைத்துக் கொண்டு மிச்சத்தை பேதுருவிடம் ஒப்படைப்பதென்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

    மறுநாள் காலையில் சொத்தில் ஒருபகுதியைத் தனக்கென்று வைத்துக்கொண்டு மிச்சத்தை பேதுருவின் முன்னிலையில் சமர்ப்பித்தான், அனனியா.

    ‘ஐயா... இதோ என்னுடைய அனைத்து சொத்துக்களையும் விற்று அதை உம்மிடம் ஒப்படைக்கிறேன்’.

    பேதுரு அவனைப் பார்த்தார்.

    ‘அனனியா! ஏன் பொய் சொல்கிறாய்? சொத்துக்களை நீ விற்கவேண்டுமென்றோ, அதை இங்கே வைக்கவேண்டுமென்றோ நான் சொன்னேனா? யாராவது உன்னைக் கட்டாயப்படுத்தினார்களா? விற்பதும் அதை அளிப்பதும் உன் விருப்பம். ஆனால் நீ ஏன் கடவுளின் முன்னால் பொய் சொல்கிறாய்? சாத்தான் உன் உள்ளத்தில் புகுந்து கொள்வதற்கு நீ ஏன் அனுமதி அளித்தாய்?’ பேதுரு கேட்டார்.

    பேதுரு சொன்னதைக் கேட்டதும் அனனியா அதிர்ச்சியடைந்தார். அங்கேயே சுருண்டு விழுந்து இறந்து போனார்!

    குழுவில் இருந்த இளைஞர்கள் நிகழ்ந்தவற்றைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பின் அனனியாவை துணியால் சுற்றி எடுத்துக் கொண்டு போய் அடக்கம் செய்தார்கள். மக்கள் அனைவரையும் பேரச்சம் ஆட்கொண்டது.

    மூன்று மணி நேரம் கழிந்தபின் அனனியாவின் மனைவி வந்தாள். அவளுக்கு அங்கே நடந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. தன்னுடைய கணவன் ஒரு பெரும் தொகையைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு இப்போது பெரும் மதிப்பு இருக்கும். தன்னையும் அவர்கள் பெரும் மரியாதையுடன் வரவேற்பார்கள் என்று அவளுடைய மனம் எண்ணிக் கொண்டது.

    அவள் உள்ளே வந்ததும் பேதுரு அவளிடம்,

    ‘உங்கள் சொத்துக்களையெல்லாம் விற்று விட்டீர்களா?’ என்று கேட்டார்.

    ‘ஆம், விற்று விட்டோம். அந்தப் பணத்தை முழுவதும் என் கணவர் இங்கே கொண்டு வந்து கொடுத்திருப்பாரே’, என்று அவள் சொன்னாள்.

    ‘இவ்வளவு பணத்துக்குத் தான் சொத்தை விற்றீர்களா?’ பேதுரு கேட்டார்.

    ‘ஆம்... இவ்வளவுக்குத் தான் விற்றோம்’

    பேதுரு அவளைப் பார்த்து, ‘நீங்கள் இரண்டு பேருமே ஏன் கடவுளின் முன்னிலையில் பொய் சொன்னீர்கள்? சாத்தான் உங்களை ஆட்கொண்டு விட்டானே!’ என்றார்.

    அவள் கலக்கத்துடன் பேதுருவைப் பார்த்தாள்.

    ‘இதோ... உன் கணவனை அடக்கம் செய்தவர்கள். இவர்கள் இப்போது உன்னையும் அடக்கம் செய்வதற்காகக் கொண்டு செல்வார்கள்’ என்றார்.

    அவ்வளவு தான். அவள் அந்தக் கணமே அந்த இடத்திலேயே இறந்து விழுந்தாள்.

    கடவுளின் முன்னிலையில் சொல்லும் ஒரு சிறு பொய்கூட தங்கள் உயிரை அழித்துவிடும் என்று சபையில் புதிதாய் சேர்ந்தவர்கள் மனதுக்குள் குறித்துக் கொண்டார்கள்.

    போலித்தனமாய் பெருமை கொள்பவர்களை கடவுள் விரும்புவதில்லை. செருக்கு கொண்ட மனிதர்களை அவர் எதிர்க்கிறார். பணிவு கொண்ட மனிதர்களை அரவணைக்கிறார். தாங்கள் ஆன்மிகவாதிகள் என காட்டிக் கொள்பவர்களை அவர் எப்போதுமே வெறுப்பவர். எனவே உண்மையாய் அவர் பாதம் பணிந்து, தாழ்மையை வாழ்க்கை முறை ஆக்கிக் கொள்ள வேண்டும். இதுவே இந்த நிகழ்ச்சி கற்றுத் தரும் பாடமாகும்.
    கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி 5-ந்தேதி நடக்கிறது.
    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயம் விளங்கி வருகிறது.

    இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது.

    வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) 8-ம் நாள் திருவிழா அன்று புனித நற்கருணை நாதர் பவனி நடக்கிறது. பங்குத்தந்தை விக்டர் மறையுரை வழங்குகிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக புனித செபஸ்தியார் தேர் பவனி வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி சிறப்பு மாலை ஆராதனையில் மார்த்தாண்டம் மறை மாவட்ட பிஷப் வின்சென்ட் மார்பவுலோஸ் கலந்துகொண்டு மறையுரை வழங்குகிறார். நள்ளிரவில் தேர் பவனி நடக்கிறது. தொடர்ந்து வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    10-ம் நாள் திருவிழா அன்று நடைபெறும் சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி மறையுரை வழங்குகிறார். திருவிழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குத்தந்தை எஸ்.மணி அந்தோணி, தர்மகர்த்தா எஸ்.லியோ, கணக்கர் எஸ்.மரியசிலுவை மற்றும் எஸ்.மகான் அந்தோணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
    பிரியமானவர்களே! கர்த்தர் உணர்த்திய வார்த்தைகளை தேவசெய்தியாக உங்களுக்கு எழுதுகிறேன். வாசித்து கர்த்தருக்குள் விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டு ஜெபியுங்கள். கர்த்தர் பெரிய காரியம் செய்வார்.
    பிரியமானவர்களே! கர்த்தர் உணர்த்திய வார்த்தைகளை தேவசெய்தியாக உங்களுக்கு எழுதுகிறேன். வாசித்து கர்த்தருக்குள் விசுவாசத்தோடு ஏற்றுக்கொண்டு ஜெபியுங்கள். கர்த்தர் பெரிய காரியம் செய்வார்.

    போராட்டங்களில்...

    “கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம். எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணை நில்லும். உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம். கர்த்தர் நீர் எங்கள் தேவன். மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்”. ( II நாளா.14:11)

    எனக்கன்பான கர்த்தருடைய பிள்ளையே! இச்செய்தியின் தலைப்பை மீண்டும் ஒருமுறை வாசித்து விட்டு தொடர்ந்து வாசியுங்கள். இக்காலங்கள் மிகவும் கொடியதும், நாட்கள் பொல்லாதவைகளுமாய் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். எல்லா பக்கங்களிலும் சொல்ல முடியாத போராட்டங்களோடு மக்கள் வாழ்ந்து வருவதுதான் இந்நாட்களின் நிலைமையாகும்.

    இச்சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? மனுஷனை நம்புவதை கர்த்தர் ஒருநாளும் விரும்புகிறவரல்ல.

    ஆசா என்ற ராஜாவுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா என்பவன் பெரிய மாபெரும் சேனையோடு யுத்தம் பண்ண எதிரிட்டு வந்தபோது ராஜாவாகிய ஆசா செய்த முதல் காரியம் ‘ஜெபம்’ ஆகும். இரண்டாவதாக தன் ஜெபத்தில் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளை வாசித்துப் பார்க்கும்போது தன்னுடைய பெலத்தை நம்பாமல் கர்த்தருடைய பெலனை முற்றிலும் சார்ந்து கொள்கிறவன் என்பதைக் காண முடியும்.

    இதுதான் கர்த்தருடைய பிள்ளைகளுக்கும், உலகப்பிரகாரமானவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். ஆம், உங்கள் வாழ்விலும் ஏதாவது போராட்டத்தின் வழியாக கடந்து வந்துக்கொண்டிருக்கிற இந்நாட்களில் ஆசா ராஜா ஒரு முன்மாதிரியாகும். சிலர் கர்த்தருடைய பெலனையும், அவர்களுடைய சுயபெலனையும் வைத்துக்கொண்டு போராடுவார்கள். அது முற்றிலும் தோல்வியில் தான் முடிகிறது.

    இயேசு சொல்கிறார், “இவ்வுலகில் நமக்கு உபத்திரவங்கள் உண்டு. ஆனாலும் போராட்டங்களை மேற்கொள்ள நாம் செய்ய வேண்டியது என்ன?. தேவனை நோக்கி பிரார்த்தனை செய்து முற்றிலுமாய் அவரை சார்ந்து கொள்ளுங்கள். அடிக்கடி ‘கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான்’. (எபி.13:6).

    மேலும், “எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்” (சங்.121:1,2) என்று வாய்களைத் திறந்து அறிக்கை செய்து கர்த்தரைத் துதியுங்கள். உங்கள் போராட்டங்களிலிருந்து மாபெரும் வெற்றியைக் காண்பது நிச்சயம்.

    வியாதிகளில்...

    “கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம் பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான். நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். உன் கண்ணீரைக் கண்டேன். இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்”. (ஏசா 38:3,5)

    எனக்கன்பானவர்களே! போராட்ட நேரங்களில் மட்டுமல்ல, பலவீனங்கள் மற்றும் வியாதிகளிலும் ஜீவனுள்ள தெய்வமாகிய ஆண்டவராகிய இயேசுவை அண்டிக்கொள்கிறவர்கள் நிச்சயம் பாக்கியவான்கள். உதாரணமாக வியாதியின் படுக்கையில் ராஜாவாகிய எசேக்கியாவின் விண்ணப்பத்தையும் அதற்கு கர்த்தர் அளிக்கும் பதிலையும் ஏசா.38:3,5 வசனங்களில் காண்கிறோம் அல்லவா.

    ஆம், உங்கள் வியாதிகளைவிட இயேசு பெரியவர் என்பதை மறந்து போகாதீர்கள். உலகப்பிரகாரமான மருத்துவருடைய ஆலோசனைக்கு கட்டாயமாக நீங்கள் செவி கொடுக்க வேண்டும். அதே வேளையில் பூரண சுகத்தைக் கொடுப்பது தேவனுடைய கரத்தில் அல்லவா இருக்கிறது.

    வேதம் கூறுகிறது, “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (யாக்.5:15). மேலும், நம் அருமை ஆண்டவர் “என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்” என்று (யோவான் 14:14-ல்) வாக்கு அருளியுள்ளார் அல்லவா? அவர் மாம்சத்திலிருந்த நாட்களில் “சகல வியாதியஸ்தர்களையும் குணமாக்கினார்” (மத்.4:24). மட்டுமல்ல ‘அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்” என மாற்கு 6:56 கூறுகிறது. இது எத்தனை உண்மை.

    ஆகவே உங்கள் வியாதிகள் எத்தனை கொடியதாக இருந்தாலும் அது நம் அருமை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பார்வையில் அற்ப காரியம். அவரை அண்டிக்கொள்ளுங்கள். பூரண சுகத்தை நிச்சயம் உங்களுக்கு அருளுவார். நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை - 54.
    கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள புனித அருளானந்தர் ஆலய தேர் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
    கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

    தினமும் ஜெபமாலை, சிறப்பு நவநாள், திருப்பலி, மறையுரை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். காலை 10 மணிக்கு அருட்பணி ஆரோக்கியசாமி தலைமையில் ஆங்கிலத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 5 மணிக்கு கூட்டுபாடற்பலி மேட்டுப்பாளையம் மறைமாவட்ட முதன்மை குரு ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

    இரவு 7 மணியளவில் ஆடம்பர தேர் பவனி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி புனித அருளானந்தரின் சொரூபம் அலங்கார தேரில் வைக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது. கோவை மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்தவர்கள் புனித அருளானந்தரை தரிசித்தனர். பின்னர் பங்கு தந்தை விக்டர், உதவி பங்கு தந்தை ஜெரால்டு, பெலிக்ஸ் ஆகியோர் புனித அருளானந்தரின் தேருக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் தேர் வெங்கடசாமி ரோடு, கவுலிபிரவுன் ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை அடைந்தது. அதன்பின்னர் நற்கருணை ஆசிர் நிகழ்ச்சி நடைபெற்றது.
    கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் புனித அருளானந்தர் ஆலயத்தின் தேர் திருவிழா நாளை மாலை 6 மணிக்கும், இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
    கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டில் புனித அருளானந்தர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. புனித அருளானந்தரின் திருநாளையொட்டி ஜெபமாலை இன்று(சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு நவநாள், திருப்பலி, மறையுரை, வேண்டுதல் தேர் ஆகியவற்றை தர்மபுரி மறைமாவட்ட முதன்மை குரு சூசை நடத்துகிறார்.

    நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. 8 மணிக்கு கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் கூட்டு பாடற்பலி நடக்கிறது. காலை 10 மணிக்கு புனித சூசையப்பர் இளங்குருமட அதிபர் ஆரோக்கியசாமி அடிகள் ஆங்கிலத்தில் திருப்பலி நடத்துகிறார். மாலை 5 மணிக்கு மேட்டுப்பாளையம் மறைமாவட்ட முதன்மை குரு ஜேக்கப் கூட்டு பாடற்பலி நடத்துகிறார். மாலை 6 மணிக்கு தேர்பவனியும், இரவு 7.30 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழா முன்னிட்டு நேற்று அதிகாலை செட்டிவிளை பங்குதந்தை பீட்டர் பால் தலைமையிலும் திருப்பலி நடந்தது.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித காணிக்கை அன்னை திருவிழா கடந்த 24-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. திருவிழா நாட்களில் ஜெபமாலை பவனி, மறையுரை, நற்கருணை ஆசீர், திருப்பலி போன்றவை நடந்தன. திருவிழாவின் 9-வது நாளான நேற்று முன்தினம் சாத்தான்குளம் வட்டார முதன்மைகுரு ரெமிஜியுஸ் தலைமையில் மாலை ஆராதனையும், இரவு 10 மணிக்கு தேர்ப்பவனியும் நடந்தது.

    விழாவின் இறுதி நாளான நேற்று அதிகாலை வடக்கன்குளம் வட்டார முதன்மைகுரு ததேயுஸ் ராஜன் தலைமையிலும், காலை 7 மணிக்கு செட்டிவிளை பங்குதந்தை பீட்டர் பால் தலைமையிலும் திருப்பலி நடந்தது. மதியம் 2 மணிக்கு புனித காணிக்கை அன்னையின் தேர்ப்பவனியும், இரவு நற்கருணை ஆசீரும் நடந்தன. தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை மைக்கிள் ஜெகதீஸ், உதவி பங்குதந்தை சூசைமணி, பங்கு பேரவையினர் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
    எவ்வளவு வேலைப்பளு உங்களை அழுத்தினாலும் ஜெபிக்க மறக்க வேண்டாம். ஜெபத்தைக் கேட்கிற நம் அருமை ஆண்டவர் ஒவ்வொரு நாளும் உங்களோடுகூட இருந்து உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
    இந்த உலகில் நாம் கர்த்தருடைய பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கக்கூடிய மிக முக்கியமான இடம் நம்முடைய குடும்பம் தான். அதுமட்டுமல்ல நம்முடைய அருமை ஆண்டவர் ஒருவரை ரட்சித்து தமது ஆசீர்வாதத்தினால் அவரை நிரப்பும் போது அந்த ஒரு நபரை மட்டும் ஆசீர்வதிக்கிறவரல்ல, அவருடைய குடும்பம் முழுவதையும் அவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

    உதாரணமாக லூக்கா 19-ம் அதிகாரத்தில் சகேயு என்ற மனிதனை நம் அருமை ரட்சகராகிய இயேசு சந்தித்தபோது சகேயுவை மட்டும் அவர் ஆசீர்வதிக்காமல் அவருடைய வீட்டார் அனைவரையும் அவர் ஆசீர்வதித்தார்.

    ‘இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது, இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே’ (லூக்கா 19:9).

    மேலும், அப்.16:31 சொல்லுகிறது: ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்’.

    குடும்பத்தலைவர்

    இந்த உலக வாழ்வில் கர்த்தர் கிருபையாய்க் கொடுத்த ஒரு ஆசீர்வாதம் குடும்பம் தான். அந்த குடும்பத்தில் தலைவனாய் இருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை கர்த்தர் ஆண்களுக்கு தந்திருக்கிறார்.

    ‘புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்’ (எபே.5:23).

    தலைவன் தலைவனாக இருந்தால் அந்தத் தலைமைத் துவத்துக்குக் கீழ் இருக்கும் குடும்பம் சரியாக செயல்படும். நம் அனைவருக்கும் ஆதாரமாக இருப்பது ஆண்டவரின் வார்த்தையே. ஆகவே கீழ்க்காணும் ஆலோசனைகளை உங்கள் குடும்ப வாழ்விற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக செழிக்கும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.

    கர்த்தருக்குப் பயப்படுங்கள்

    ‘கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்’ (சங்.128:1).

    ஒவ்வொரு திருமண ஆராதனைகளிலும் மேலே குறிப்பிட்டுள்ள சங்கீதத்தை மையமாகக் கொண்டு தான் பிரசங்கிப்பார்கள். ஆறே வசனங்களைக் கொண்ட இந்த அதிகாரத்தின் ஆரம்பமே கர்த்தருக்குப் பயப்படும் பயம் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத் தலைவனுடைய வெற்றியின் ரகசியம், அவன் தேவனுக்குப் பயப்படும் பயத்தில்தான் இருக்கிறது. தன் வாழ்வில் கர்த்தருக்கு முதலிடம் கொடுப்பதே அவருக்கு பயப்படுகிற பயமாகும்.

    அன்பு செலுத்துங்கள்

    ‘புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள்’ (கொலோ.3:19, எபே.5:25)

    ‘கடைசி நாட்களில் மனுஷனுடைய அன்பு தணிந்து போகும்’ (மத்.24:12) என்று நம் அருமை ரட்சகர் கூறிய தீர்க்க தரிசனத்தின்படியே இன்று அநேக குடும்பங்கள் அன்பில்லாமல், அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறதை நாம் அனைவரும் அறிவோம்.

    தற்காலத்தில் குடும்ப வாழ்வுக்கு அன்பை முதலீடு செய்யாமல் பணத்தை முதலீடு செய்வதால், பணம் இருக்கும் வரைக்கும் அன்பு இருக்கும். பணம் இல்லாமல் போனால் அன்பைத் தேட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

    தெய்வீக அன்பை மறந்து உலக அன்பைத் தேடி சில குடும்பங்கள் அலைகிறபடியினால், பிசாசினால் அக்குடும்பங்கள் அலைக்கழிக்கப்படுகிறது. பாவ சோதனைகளுக்குள் சிக்குண்டு குடும்ப வாழ்வே முறிந்து போகிறது.

    ‘நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது’ (ரோமர் 5:5).

    மேற்கண்ட வசனத்தை கவனத்தில் கொள்ளுங்கள். கிறிஸ்துவின் அன்பு உங்களில் பெருகும் போது உங்கள் மனைவியையும் மனதார நேசிப்பீர்கள். உங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்பாக இருப்பீர்கள்.

    இணைந்திருங்கள்

    ‘மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்’ (எபே.5:31)

    உங்கள் குடும்பத்தில் தேவனுக்கு அடுத்தபடியாக முன்னுரிமை கொடுக்க வேண்டிய முக்கியமான நபர் உங்கள் மனைவியாகும். இப்படி நடப்பதினாலே ‘பெண்ணுக்கு அடிமை யானவர்கள் அல்ல’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    உங்களை நம்பி வாழ்க்கை நடத்த தன் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை விட்டு விட்டு உங்களை சார்ந்து வந்திருக்கிற உங்கள் மனைவி உங்கள் வாழ்வில் முக்கியமான நபர் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது.

    ஆகவே, ஒவ்வொரு காரியத்திலும் மனைவியுடன் நீங்கள் இணைந்து செயல்படுவது உங்களுக்கு ஆசீர்வாதமாக அமையும். ஒவ்வொரு நாளும் உங்கள் மனைவி, பிள்ளைகள் மற்றும் உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் உங்கள் கையில் உள்ளது.

    ஜெபம் பண்ணுங்கள்

    அதேவேளையில் எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் குடும்ப வாழ்வை உங்கள் பணத்தினாலோ, படிப்பினாலோ, அறிவினாலோ, மனித சக்தியினாலோ உயர்த்த முடியாது. தேவ கிருபையே மிகவும் முக்கியம். அக்கிருபையைப் பெற்றுக் கொள்வதற்கு தினமும் ஆண்டவரை நோக்கிப் பாருங்கள்.

    ‘அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை’ (சங்.34:5).

    ஆகவே, எவ்வளவு வேலைப்பளு உங்களை அழுத்தினாலும் ஜெபிக்க மறக்க வேண்டாம். ஜெபத்தைக் கேட்கிற நம் அருமை ஆண்டவர் ஒவ்வொரு நாளும் உங்களோடுகூட இருந்து உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,

    இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை - 54.
    கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய தேர் பவனி வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றாக நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயம் விளங்கி வருகிறது.

    இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடந்து வருகிறது.

    வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) 8-ம் நாள் திருவிழா அன்று புனித நற்கருணை நாதர் பவனி நடக்கிறது. பங்குத்தந்தை விக்டர் மறையுரை வழங்குகிறார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக புனித செபஸ்தியார் தேர் பவனி வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி சிறப்பு மாலை ஆராதனையில் மார்த்தாண்டம் மறை மாவட்ட பிஷப் வின்சென்ட் மார்பவுலோஸ் கலந்துகொண்டு மறையுரை வழங்குகிறார். நள்ளிரவில் தேர் பவனி நடக்கிறது. தொடர்ந்து வாணவேடிக்கைகள், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    10-ம் நாள் திருவிழா அன்று நடைபெறும் சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை ஜெரால்டு எஸ்.ரவி மறையுரை வழங்குகிறார். திருவிழா ஏற்பாடுகளை நாங்குநேரி பங்குத்தந்தை எஸ்.மணி அந்தோணி, தர்மகர்த்தா எஸ்.லியோ, கணக்கர் எஸ்.மரியசிலுவை மற்றும் எஸ்.மகான் அந்தோணி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
    இயேசுவோடு கூட நடந்தபோது நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள் எல்லாரும் இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு அறைகளில் பதுங்கினார்கள்.
    இயேசுவின் சிலுவை மரணத்துக்குப் பின் சீடர்கள் ரொம்பவே சோர்ந்து போனார்கள். இயேசுவோடு கூட நடந்தபோது நெஞ்சு நிமிர்த்தி நடந்தவர்கள் எல்லாரும் இயேசுவின் சிலுவை மரணத்திற்குப் பின் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு அறைகளில் பதுங்கினார்கள்.

    மூன்றாவது நாள் இயேசு உயிர்த்துவிட்டார். முதலில் மதலேன் மரியாளுக்குக் காட்சியளித்த இயேசு, அதன்பின் எம்மாவூஸ் சென்ற இரண்டு சீடர்களுக்குக் காட்சியளித்தார்.

    ஆனாலும் பேதுருவும் அவருடன் இருந்த சில சீடர் களும் தங்கள் பழைய வேலையான மீன்பிடிக்கும் தொழிலுக்கே திரும்பினார்கள். ஆனால் இயேசு மீண்டும் அவர்களுக்கு நேரடியாகக் காட்சியளித்து நம்பிக்கையூட்டினார். பின்னர் தூய ஆவியானவரை உலகிற்கு அனுப்பி சீடர்களை நிரப்பினார். அதன்பின்பு தான் சீடர்கள் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கினார்கள்.

    ஒருநாள் மூன்று மணியளவில் செபம் செய்வதற்காக பேதுருவும், யோவானும் ஆலயத்துக்குச் சென்றார்கள். மூன்று மணிக்கு செபம் செய்வது என்பது அவர்களுடைய வழக்கமாய் இருந்தது. இயேசு சிலுவையில் உயிர்விட்ட நேரமும் பிற்பகல் மூன்று மணி என்பதால், மாலை மூன்றுமணி என்பது அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் நினைவு கூரத்தக்க ஒன்றாக மாறிவிட்டிருந்தது.

    ஆலயத்தில் அழகுவாயில் என்னுமிடத்தில் ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அழகுவாயில் என்பது எருசலேம் தேவாலயத்தின் முதல் வாயில். அவன் பிறவியிலேயே கால்கள் வலுவில்லாத ஒரு முடவன். பிழைப்புக்கு வேறு வழி ஏதும் இல்லாததால் ஆலய வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.

    தினமும் காலையில் சிலர் அவனைத் தூக்கி வந்து ஆலய வாசலில் இருத்துவார்கள். மாலையில் அவனைத் தூக்கிக் கொண்டு செல்வார்கள்.

    பேதுருவும், யோவானும் ஆலயத்தில் செபிப்பதற்காக உள்ளே வந்தபோது வாசலில் அமர்ந்திருந்தான் அவன்.

    ‘ஐயா... காலில்லாத ஏழைக்கு உதவுங்களேன்...’ அவன் பேதுருவைப் பார்த்து தர்மம் கேட்டான்.

    பேதுருவும், யோவானும் நின்றார்கள்.

    பேதுரு அவனை உற்றுப் பார்த்துக் கொண்டே சொன்னார் ‘என்னைப் பார்’, அவன் ஆவலுடன் அவர்களைப் பார்த்தான்.

    ‘உனக்குத் தர எங்களிடம் ஒன்றும் இல்லை’ பேதுரு சொல்ல, அவனுடைய முகம் வாடிப்போயிற்று.

    பேதுரு ஒரு வினாடி யோசித்தார். இயேசு முடவர்களுக்கோ, பிணியாளிகளுக்கோ பிச்சையிட்ட நினைவு அவருக்கு இல்லை. அவர் நலமளித்தார், ஆறுதல் அளித்தார், அன்பை அளித்தார். ஆனால் பணம் அளித்ததாய் அவருக்கு நினைவில்லை.

    பேதுரு அவனை மீண்டும் உற்றுப் பார்த்தார்.

    ‘உனக்குத் தர பொன்னோ, வெள்ளியோ என்னிடம் இல்லை. ஆனால் என்னிடம் இருப்பதை உனக்குத் தருகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட’ என்று கூறி அவனுடைய கையைப் பிடித்துத் தூக்கி விட்டார்.

    சுமார் நாற்பது ஆண்டுகளாக வலுவில்லாமல் கிடந்த அவனுடைய கால்கள் சட்டென்று வலுவடைந்தன. அவனுடைய கணுக்கால்கள் நேராகின. அவன் நின்றான். வாழ்க்கையில் முதன் முறையாக அவன் இரண்டு கால்களினால் நிற்கிறான். அவன் ஆனந்தக் கூச்சலிட்டான். அங்கே பெரும் கூட்டம் கூடிவிட்டது.

    ‘ஏய்... இவன் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த முடவன் அல்லவா? இப்போது எப்படி நிற்கிறான்?’

    ‘அவன் தானா இது? அல்லது வேறு யாராவதா?’

    ‘அவனுடைய கையைப் பிடித்து அந்த மனிதர் எழுப்பி விடுவதை நான் பார்த்தேன்’ மக்களிடையே செய்தி காட்டுத் தீ போல பரவியது.

    பேதுருவையும், யோவானையும் கூட்டத்தினர் மொய்த்துக் கொண்டார்கள். இயேசுவைப் பிரிந்த பிறகும் சீடர்களால் அதிசயச் செயல்கள் செய்ய முடிகிறதே என்று மக்கள் ஆச்சரியமடைந்தார்கள்.

    ‘ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள். அவனைக் குணமாக்கியது நாங்களல்ல, இயேசு கிறிஸ்துவின் பெயர் தான் அவனைக் குணமாக்கியது. அவர் தான் உண்மையான கடவுளின் மகன். அவரை நீங்கள் பிலாத்துவிடம் ஒப் படைத்தீர்கள். பிலாத்து விடுவிக்க விரும்பிய போது கூட நீங்கள் இயேசுவுக்கு எதிரானீர்கள். அவர் உங்களுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்டார்’.

    பேதுரு பேசப்பேச கூட்டத்தினர் மவுனமானார்கள்.

    ‘நீங்கள் அதை அறியாமையினால் தான் செய்தீர்கள். இது நடக்கவேண்டும் என்பது கடவுளின் விருப்பம் தான். நீங்கள் கொலை செய்த இயேசு உயிர்த்துவிட்டார். அதற்கு நாங்கள் சாட்சிகள். அவரைக் கண்டவர்கள் அனைவரும் சாட்சிகள். இனிமேலாவது மனம் மாறி இயேசுவின் வழியில் நடவுங்கள்’ பேதுரு உரத்த குரலில் மக்களை அழைத்தார்.

    மக்கள் கூட்டத்தினரிடையே மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ந்தது. சுமார் ஐயாயிரம் பேர் அப்போதே இயேசுவின் வழியில் செல்லப்போவதாக வாக்களித்தனர். கிறிஸ்தவத்தின் ஆரம்பம் அங்கே ஆழமாக நடப்பட்டது.

    இயேசு வாழ்ந்த போதும் அந்த முடவன் அங்கே தான் இருந்திருப்பான். அப்போது அவனை ஏன் இயேசு குணமாக்கவில்லை என எழுகின்ற கேள்விகளுக்கு விடை இப்படி வெளிப்பட்டது. தூய ஆவியால் நிரப்பப்படும்போது நற்செய்தி அறிவிக்கும் துணிச்சலும், அதிசயங்களும் பிறக்கும் என்பதை இந்த நிகழ்வு விளக்குகிறது.
    கும்பகோணம் பெரும்பாண்டி மாதாகோவில் தெருவில் உள்ள புனித பெரியயநாயகி அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது.
    கும்பகோணம் பெரும்பாண்டி மாதாகோவில் தெருவில் உள்ள புனித பெரியயநாயகி அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. விழா நாட்களில் கூட்டு ஜெபமாலை திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. இதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் பெரியநாயகி அன்னை பவனி வந்தார்.

    தோ்பவனி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனா். தோ்பவனி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய இடங்களுக்கு சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. நேற்று மாலை குவனெல்லா பங்குத்தந்தை ஜான்போஸ்கோ, உதவி பங்குத்தந்தை வின்சென்ட் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர். விழா ஏற்பாடுகளை குவனெல்லா சபை பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை, பங்கு பேரவை உறுப்பினா்கள், அன்னை தெரசா இளைஞா மன்றத்தினா் செய்திருந்தனா்.
    மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வெள்ளி விழா கடந்த 22-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழா நடந்தது.
    மும்பை காட்கோபர் கிழக்கு காமராஜ் நகரில் உள்ள புனித அந்தோணியார் ஆலய வெள்ளி விழா கடந்த 17-ந் தேதி முதல் தொடங்கி நடந்தது. 22-ந் தேதி புனித செபஸ்தியார் திருவிழா நடந்தது.

    நேற்றுமுன்தினம் காலை திருவிழா திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இந்த திருப்பலியை பங்கு தந்தைகள் ஜெயக்குமார், ஆஸ்லின் பொன்செகா, டெரன்ஸ் முர்ராய், இயேசுராஜ் ஆகியோர் நிறைவேற்றினர். பின்னர் மதியம் சமபந்தி விருந்து நடந்தது. இரவு புனித அந்தோணியாரின் தேர் பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.
    பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.
    ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்.

    இன்றைய சூழ்நிலையிலே அநேக சமயங்களிலே மனிதர்கள், ‘என்னை யாருமே நினைப்பதேயில்லை, எனக்கென்று இந்த உலகிலே யார் இருக்கிறார்கள்?’ என்று கூறுவதுண்டு.

    இப்படி பலவிதமான சோர்வோடு காணப்படுகிற அன்பான சகோதர, சகோதரியே! உங்களுக்கு ஓர் நற்செய்தி, ‘ஆண்டவர் நம்மை மறப்பதேயில்லை. நாம் ஒரு நாளும் அவரால் மறக்கப்படுவதில்லை’.

    ஏன் தெரியுமா?

    ‘அவர் நம்மை நினைத்திருக்கிறார்’.

    ‘நீ என் தாசன், நான் உன்னை உருவாக்கினேன். நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை’. (ஏசா.44:21)

    தாய் மறந்தாலும் நான் மறப்பதில்லை

    ‘ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும் நான் உன்னை மறப்ப தில்லை’. (ஏசா.49:15)

    ஒரு தாய் தான் பெற்ற குழந்தையை ஒருநாளும் மறக்கவே மாட்டாள். எத்தனை குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தாலும், தன் குழந்தையின் சத்தத்தை, அதன் அசைவுகளை அறிந்திருப்பாள். அந்தந்த நேரத்தில் அதற்கு என்ன தேவை என்பதை குழந்தை கேட்காமலே தந்து அதை அன்போடு வளர்ப்பவள்தான் தாய். அவள் எப்போதும் தன் குழந்தையை நினைத்துக் கொண்டிருப்பாள்.

    ஆனால் இன்றைய சமுதாயத்தில் அப்படிப்பட்ட தாய் கூட தன் பிள்ளைகளை மறந்துவிடுகிறாள். தன் சொந்த இச்சைகளை நிறைவேற்றுவதற்காக குழந்தைகளை அநாதையாய் விட்டுவிட்டு ஓடுகிறாள். அல்லது தன் சொந்த குழந்தைகளையே கொலை செய்து விடுகிறாள். அப்படிப்பட்ட கொடிய, அன்பில்லாத காலத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

    ஆனால் நம் அருமை ஆண்டவரோ, ஒருநாளும் நம்மை மறப்பதேயில்லை. நமக்கு இன்னது தேவை என்பதை அறிந்து பரம தகப்பன் நம்மை ஒருநாளும் கைவிடுவதேயில்லை.

    ஒருநாளும் மனிதனைத் தேடிப்போகாதீர்கள். ஆண்டவரை நீங்கள் மறந்து விடாதிருங்கள். ஆண்டவரை நோக்கிப் பார்த்தால் நிச்சயம் அவர் உங்களை நினைத்து, ஆசீர்வதித்து உயர்த்துவார்.

    உங்கள் பிரயாசங்களை மறப்பதில்லை

    ‘உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான் களுக்கு ஊழியஞ்செய்ததினாலும், செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்து விடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே’. (எபி. 6:10)

    ஒருவேளை நீங்கள் நினைக்கலாம்: ‘எவ்வளவு கஷ்டப்பட்டாலும் என் பிரயாசத்தின் பலன் எனக்குக் கிடைக்கவில்லையே. என் குடும்பத்திற்காக எவ்வளவு உழைத்தாலும் என்னை யாரும் மதிப்பதில்லையே, என்னை ஏளனமாய்ப் பார்க்கிறார்களே, என்னை தரக்குறைவாய்ப் பேசுகிறார்களே’.

    பிரியமானவர்களே! நீங்கள் படுகிறபாடுகளை நம் தேவன் அறிந்திருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்காக செய்கிற ஒவ்வொரு பிரயாசங்களையும், கிரியைகளையும் தேவன் மறக்கவே மாட்டார்.

    மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு பிள்ளைகள் பிறக்கும் போது, அவர்களை உயிரோடே விட்டு விட்டார்கள். அவர்கள் செய்த இந்த பிரயாசங்களை தேவன் மறக்கவில்லை. அவர்களுக்கு தேவன் நன்மை செய்தார்.

    ‘மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்’. (யாத்.1:21)

    பிரியமானவர்களே! சந்தோஷமாயிருங்கள், உங்களை நினைத்து உங்களை ஆசீர்வதிக்கிற ஒரு தேவன் உங்களுக்கு உண்டு என்பதை ஒருநாளும் மறந்து போகாதீர்கள்.

    ‘கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்’. (சங்.115:12)

    ஜோசப், தி.நகர், சென்னை.
    ×