என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    விவிலிய மனிதர்களைப் பற்றி ஆழமாய் அறியவும், இறை வெளிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளவும் விவிலியத்தை திறந்த மனதோடு படிப்பது மட்டுமே ஒரே வழி.
    பைபிளின் கடைசியாக வருகின்ற நூல் திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாடு. இயேசுவின் திருத்தூதர்களில் படுகொலை செய்யப்படாமல் இயற்கை மரணம் எய்திய ஒரே நபர் யோவான் தான். அவருடைய கடைசி காலத்தில் இறைவன் அவருக்கு ஒரு வெளிப்படுத்துதலை வழங்கினார். அந்தக் காட்சியே ‘திருவெளிப்பாடு’ எனும் நூலில் எழுதப்பட்டுள்ளது.

    இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையும், உலக முடிவில் நிகழப்போகும் நிகழ்ச்சிகளையும் இந்த நூல் விளக்குகிறது. இந்த நூலில் ஒரு பெண் காட்சியளிக்கிறார். அவரைப்பற்றி நூல் கவித்துவமாய் விளக்குகிறது.

    ‘வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்’ என அவருடைய தோற்றம் விளக்கப்பட்டுள்ளது.

    அந்த பெண் கர்ப்பவதியாய் இருந்தார். பேறுகால வேதனையின் கதறலை அவர் வெளிப்படுத்தினார். அந்தப் பெண், பிள்ளை பெற்றவுடன் விழுங்கி விட ஒரு அரக்கப் பாம்பு அங்கே தோன்றியது. அந்த பாம்புக்கு ஏழு தலைகளும், பத்து கொம்புகளும் இருந்தன.

    எல்லா நாடுகளையும் இருப்புக் கோல் கொண்டு நடத்தவிருந்த ஒரு ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். குழந்தை கடவுளின் அரியணை இருந்த இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அந்தப் பெண் பாலைவனத்தில் கடவுள் ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு ஓடிப் போனார்.

    அப்போது விண்ணகத்தில் ஒரு போர் வந்தது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தனர். அரக்கப் பாம்பு தோல்வியடைந்து மண்ணில் தள்ளப்பட்டது. அது அந்தப் பெண்ணைக் கொன்றுவிட அவரைத் துரத்தியது.



    அந்தப் பெண்ணுக்கு தப்பிச் செல்ல இரண்டு கழுகின் சிறகுகள் அளிக்கப்பட்டன. அவர் பாலை நிலத்துக்கு பறந்து சென்றார். அங்கே மூன்றரை ஆண்டு காலம் பேணப்பட்டார். அப்பெண்ணை நீரினால் மூழ்கடிக்க அரக்கப்பாம்பு வாயிலிருந்து தண்ணீரை ஆறு போல பாயச் செய்தது.

    உடனே நிலம் வாயைத் திறந்து அந்த நீரை உறிஞ்சிக் கொண்டது. அதனால் அரக்கப் பாம்பு அந்த பெண்ணை விட்டு விட்டு அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர்தொடுக்கப் புறப்பட்டுப் போனது.

    கிறிஸ்தவம் அந்தப் பெண்ணை இரண்டு விதமாகப் பார்க்கிறது. ஒன்று அந்தப் பெண்ணை கிறிஸ்தவர்களின் கூட்டமாகிய திருச்சபையைக் குறிப்பதாகப் பார்க்கிறது. பெண்ணின் தலையில் இருக்கும் பன்னிரண்டு விண்மீன்களும் பன்னிரண்டு திருத்தூதர்களைக் குறிக்கலாம். அல்லது இஸ்ரவேலில் பன்னிரண்டு கோத்திரங்களைக் குறிக்கலாம்.

    கதிரவன் என்பது திருச்சபையின் மாட்சியைக் குறிக்கிறது. நிலவு என்பது திருச்சபையின் உயர்நிலையைக் குறிக்கிறது. அரக்கப் பாம்பு என்பது சாத்தானையும், அது போரிடச் சென்ற பெண்ணின் மற்ற பிள்ளைகள் என்பது தொடக்க கால கிறிஸ்தவர்களையும் குறிக்கிறது.

    இஸ்ரவேல் மக்களினத்தில் இருந்தே இயேசு தோன்றினார் என்பதன் உருவகமே அந்தக் குழந்தை என்பது இந்த இறையியல் சிந்தனையின் விளக்கம்.

    இன்னொரு விளக்கம், இந்தப் பெண்ணை இயேசுவின் தாய் மரியாவோடு இணைத்துப் பார்க்கிறது. அது ஆதிகாலம் முதல் மரபு வழியாக பேசப்படும் இறையியல். எல்லா நாடுகளையும் ஆளும் குழந்தையாகிய இயேசுவைப் பெற்றெடுத்தவர் அன்னை மரி எனும் நோக்கில் இந்த விளக்கம் அமைகிறது.

    அவருக்கு சிறகுகள் அளிக்கப்பட்டதும், அவர் கடவுள் குறிப்பிட்ட இடத்திற்குப் பறந்து சென்றதும் மரியாளின் விண்ணேற்பைக் குறிப்பதாக ஆதிகால மரபுகள் சொல்கின்றன.

    அவர் கதிரவனை ஆடையாய் அணிந்து கொண்டிருப்பதும், நிலவைக் காலடியில் வைத்திருப்பதும், பன்னிரு விண்மீன்களைத் தலையில் சூடியிருப்பதும் அவருடைய விண்ணக மாட்சியைக் குறிப்பதாக அவர்கள் எடுத்துக் கொள்கின்றனர். வேளாங்கண்ணி உட்பட பல்வேறு மாதா ஆலயங்களில் மாதாவை இப்படி கதிரவன், நிலா, நட்சத்திரங்களின் அலங்காரத்துடன் வடித்திருப்பது இதன் ஒரு வெளிப்பாடு தான்.

    ‘உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிக்காலை காயப்படுத்துவாய்’ என பைபிளின் முதல் நூலான தொடக்க நூலில் மரியாளும், சாத்தானும் குறிப்பிடப்பட்டுள்ளனர். அதே போல பைபிளின் கடைசி நூலான திருவெளிப்பாட்டிலும் சாத்தானும், பெண்ணும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். பெண்ணும், சாத்தானும் நிரந்தரப் பகைவர்களாக காட்சியளிக்கப்பட்டுள்ளனர்.

    பெண்ணில் வலி, திருச்சபை சந்திக்கப்போகும் சவால்களையும், துன்பங்களையும் குறிக்கிறது. அதன் பின் அமைதியான ஆயிரம் ஆண்டு கால இறை ஆட்சி தொடங்கும் என்கிறது திருவெளிப்பாடு.

    விவிலியத்தின் கடைசி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அந்தப் பெண் ஒரு வியப்புக் குறியீடு. தூய ஆவியால் எழுதப்பட்ட, விவிலியத்தின் விளக்கங்களைப் புரிந்து கொள்ள தூய ஆவியின் வெளிப்படுத்துதல் நிச்சயம் தேவை. விவிலிய மனிதர்களைப் பற்றி ஆழமாய் அறியவும், இறை வெளிப்படுத்தலைப் பெற்றுக் கொள்ளவும் விவிலியத்தை திறந்த மனதோடு படிப்பது மட்டுமே ஒரே வழி.
    மரியா அல்லது மரியாள் புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.
    மரியா அல்லது மரியாள் புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள். புனித யோசேப்பு இவரது கணவராவார். மரியாள் கிறிஸ்தவர்களால் சிறப்பாக கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையினரால் மிகவும் மதிக்கப்படுகிறார். மரியாளை மையமாகக் கொண்ட இறையியல் கல்வி மரியாளியல் எனப்படுகிறது.

    மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகள் மரியாவை கன்னி எனக்குறிக்கின்றன. கிறித்தவ மரபுப்படி மரியா இயேசுவை தூய ஆவியினால் தன் கன்னித்தன்மை கெடாமலேயே கருதாங்கினார். இது எல்லா கிறித்தவ பிரிவுகளின் நம்பிக்கைகளின் அடிப்பை என ஏற்கப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு முன்பே மரியா புனித யோசேப்புக்கு மண ஒப்பந்தமாகியிருந்தார்.

    மரியாளின் பிறப்பை கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுவழித்திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை என்பன செப்டம்பர் 8ல் கொண்டாடுகின்றன.
    இறைவனின் பாதத்தில் சரணடையும் போது பாவிகள் முழுமையான மீட்பைப் பெற்றுக் கொள்வார்கள். இயேசுவே நமது வீட்டுக்கு நேரடியாய் வந்தால் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீட்பு பெறுவதில்லை.
    சீமோன் என்னும் செல்வந்தரான பரிசேயர் ஒருவர் இயேசுவை விருந்துக்கு அழைத்தார். இயேசு பரி சேயர்களின் வெளிவேடத்தை வெளிப்படையாகவே எதிர்த்து வந்ததால் இந்த அழைப்பை ஏற்பாரா என்னும் சந்தேகமும் அவரிடம் இருந்தது.

    இயேசு பாரபட்சம் பார்ப்பவரல்ல, அவர் அந்த அழைப்பை ஏற்றார். ஏழைகளையும் பாவிகளையும் தேடிச்சென்ற இயேசு, பணக்கார பரிசேயனையும் நிராகரிக்கவில்லை.

    பரிசேயன் மகிழ்ந்தான். தன்னுடைய நண்பர்களை எல்லாம் அழைத்து இயேசுவை எப்படி எல்லாம் கேள்வி கேட்டு மடக்கலாம் என்று ஆலோசனை செய்து காத் திருந்தான்.

    இயேசு விருந்துக்கு வந்தார். விருந்தினர்களை உப சரிக்கும் யூத கலாசாரத்தை அந்த பரிசேயர் பின்பற்றவில்லை. அவர் இயேசுவை ஒரு தச்சனின் மகனாகப் பார்த்தாரேயன்றி ஒரு விருந்தினராகப் பார்க்கவில்லை.

    இயேசு உணவு உண்பதற்காகப் பந்தியில் அமர்ந்தார்.

    அதே ஊரில் ‘பாவி’ என்று மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு பெண் இருந்தாள். அவள் இயேசு இருக்கும் இடத்தை அறிந்ததும் ஒரு அழகிய படிகச் சிமிழில் நறு மணத் தைலத்தைக் கொண்டு வந்து இயேசுவின் முன்னால் வந்து மண்டியிட்டாள்.

    அவள் வாழ்ந்து கொண்டிருந்த பாவ வாழ்க்கை அவளுடைய கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவள் குனிந்து இயேசுவின் பாதத்தைத் தொட்டாள். அவளுடைய கண்களில் வழிந்த கண்ணீர்த் துளிகள் இயேசுவின் பாதங்களில் வழிந்தோடின. அவள் தம்முடைய கூந்தலினால் அவருடைய பாதங்களைத் துடைத்து, பாதங்களில் பணிந்து முத்தமிட்டாள்.

    பின்பு தான் கொண்டு வந்திருந்த படிகச் சிமிழைத் திறந்து நறுமணத் தைலத்தை எடுத்து அவருடைய பாதங்களில் பூசினாள்.

    இயேசுவை விருந்துக்கு அழைத்திருந்த பரிசேயனை இந்தக் காட்சி சட்டென பிடித்துக் கொண்டது. இயேசுவைச் சிக்க வைக்க இது சரியான காட்சி என நினைத்தான்.

    ‘பாருங்கள்... இவரெல்லாம் ஒரு பெரிய இறைவாக்கினராம். தம்மைத் தொடும் இவள் எத்தனை பெரிய பாவி என்பது கூட இவருக்குத் தெரியவில்லை...’ என்று சுற்றியிருந்த அவருடைய பரிசேய நண்பர்களிடம் கேலியாய் பேசினான்.

    இயேசு அவனை அழைத்தார்.

    ‘ஐயா... நான் ஒன்று கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்லும்’.

    இயேசு சொல்ல அந்தப் பரிசேயன் இயேசுவின் முகத்தைப் பார்த்தான்.

    ‘கடன் கொடுப்பவர் ஒருவரிடம் இரண்டு பேர் கடன் வாங்கியிருந்தார்கள். ஒருவர் ஐநூறு தெனாரியமும், மற்றவர் ஐம்பது தெனாரியமும் கடன் வாங்கியிருந்தார்கள். ஆனால் அவர்களால் அந்தப் பணத்தைத் திரும்பச் செலுத்த முடியவில்லை. அவர்கள் மேல் மனமிரங்கிய கடன் கொடுத்தவன் அவர்களுடைய கடனைத் தள்ளுபடி செய்தான். அந்த இருவருள் யார் அதிகம் மகிழ்ந் திருப்பார்?’ இயேசு கேட்டார்.

    ‘அதிகக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர் தான் அதிகம் மகிழ்ந்திருப்பார்’ அவன் எள்ளலுடன் பதில் சொன்னான்.

    இயேசு புன்னகைத்தார். ‘சரியாகச் சொன்னீர். நான் உமது வீட்டுக்கு வரும்போது நீர் என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. ஆனால் இந்தப் பெண்ணோ கண்ணீரினாலேயே என் பாதங்களைக் கழுவி விட்டாள். நீர் என்னை முத்தமிடவில்லை. இந்தப் பெண்ணோ என் பாதங்களில் முத்தமிட்டாள். நீர் எனது தலைக்குக் கூட எண்ணெய் பூசவில்லை, இவள் என் பாதத்துக்கே பரிமளத் தைலம் பூசினாள். மொத்தத்தில் என்னை விருந்துக்கு அழைத்த நீர் எனக்கு எந்த வரவேற்பையும் செய்யவில்லை. இந்தப் பெண் யாரும் அழைக்காமலேயே வந்து மரியாதை செய்கிறாள்’.

    ‘நல்ல கனி தரும் கெட்ட மரமும் இல்லை. கெட்ட கனி தரும் நல்ல மரமும் இல்லை. கனிகளை வைத்தே மரங் களின் தன்மை அறியப்படும். நல்லவன் தன் உள்ளமென்னும் கருவூலத்திலிருந்து நல்லவற்றைச் செயல்படுத்துவான், தீயவனோ தீயவற்றைச் செயல்படுத்துவான். ஒவ்வொரு மரமும் அதன் கனியினால் அறியப்படும். முட் செடிகளில் அத்திப் பழங்களையோ, முட்புதர்களில் திராட்சைக் கொடிகளையோ யாரும் அறுத்துச் சேகரிக்க முடியாது’.

    ‘உண்மையாகவே உமக்குச் சொல்கிறேன். இந்தப் பெண் செய்த பல பாவங்கள் இன்று மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவருடைய அன்பு மிகுதியானது’ என்றார்.

    அந்த விருந்தில் பந்தியமர்ந்திருந்த பலருக்கும் இயேசுவின் பதில் பிடிக்கவில்லை. அவர்கள் இயேசுவை மீட்பராகவோ, கடவுளின் மகனாகவோ பார்க்காத பரிசேயர்கள்.

    ‘பாவிகளை மன்னிக்க இவர் யார்? அது கடவுளின் பணியல்லவா?’ என்று அவர்கள் முணு முணுத்தார்கள்.

    இயேசு அவர்களைப் பார்த்து, ‘எனக்கு அந்த அதிகாரம் உண்டு என்பதை விரைவில் உணர்வீர்கள்’ என்றார். பின் அந்தப் பெண்ணிடம் ‘உனது நம்பிக்கை உன்னை மீட்டது, அமைதியுடன் செல்க’ என்றார்.

    அவள் மீட்பைப் பெற்ற மகளாக வீடு திரும்பினாள்.

    இறைவனின் பாதத்தில் சரணடையும் போது பாவிகள் முழுமையான மீட்பைப் பெற்றுக் கொள்வார்கள். இயேசுவே நமது வீட்டுக்கு நேரடியாய் வந்தால் கூட ஏற்றுக் கொள்ளாதவர்கள் மீட்பு பெறுவதில்லை. இந்த இரண்டு செய்திகளையும் இந்த நிகழ்வு நமக்குத் தருகிறது.
    தனது பரலோகத் தந்தையான யகோவா காட்டிய வாழ்க்கை நெறிகளை மீண்டும் கற்பிக்க, உவமைக் கதைகளே சிறந்த ஊடகம் என்பதை இயேசு கிறிஸ்து அறிந்திருந்தார்.
    இயேசு கிறிஸ்து உவமைக் கதைகள் வழியாக போதனைகள் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஏனெனில் தனது பரலோகத் தந்தையான யகோவா காட்டிய வாழ்க்கை நெறிகளை மீண்டும் கற்பிக்க, உவமைக் கதைகளே சிறந்த ஊடகம் என்பதை அவர் அறிந்திருந்தார். பல நேரங்களில் அவர் கூறும் உவமைக் கதைகள் எளிமையாக மக்களுக்கு விளங்கின. ஆனால் பல கதைகள் மறைமுகமான அர்த்தம் கொண்டிருந்தன.

    ஒருமுறை அவர் திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் கதையைக் கூறினார். இந்தக்கதை மறைமுகமான அர்த்தத்தைக் கொண்டிருந்தது. ஆனால் புரிய வேண்டியவர் களுக்கு நன்றாகவே புரிந்தது. இயேசு சுட்டிக்காட்டிய உண்மையான அர்த்தம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளும் முன் அந்தக் கதையைக் கேட்போம்.

    செலுத்தப்படாத குத்தகை

    ஒரு மனிதர் தன்னிடமிருந்த நிலத்தில் ஒரு திராட்சைத் தோட்டத்தை உருவாக்க நினைத்தார். ஏனெனில் அது வளமான மண். நிலத்தை உழுது, பண்படுத்தி உயர்ந்த திராட்சை ரக விதைகளை அதில் வரிசையாக விதைத்து நீர் பாய்ச்சினார். பிறகு தோட்டத்தைச் சுற்றி மதிற்சுவர் அமைத்தார். தோட்டத்தை காவல் காக்க, ஒரு காவல் கோபுரத்தை அமைத்தார். அறுவடை காலத்தில் திராட்சையைப் பிழிவதற்கு ஓர் ஆலையை அமைத்தார். திராட்சைச் செடிகள் முளைவிட்டு சிரித்தன. பிறகு தனது தோட்டத்தைக் குத்தகைக்கு கேட்டுவந்த தொழிலாளர்களிடம் மனமகிழ்வுடன் விட்டுவிட்டுத் தூரதேசத்திற்குப் பயணம் புறப்பட்டார்.

    கொல்லப்பட்ட நியாயம்

    அறுவடைக் காலம் நெருங்கிவந்தது. விளைச்சலில் தன்னுடைய பங்கைப் பெற்றுவர தனது பணியாளர் ஒருவரைக் குத்தகைத் தொழிலாளர்களிடம் அனுப்பினார் தோட்ட உரிமையாளர். அவர்களோ அவரைப் பிடித்து, அடித்து, வெறுங்கையோடு திருப்பி அனுப்பினார்கள். அதனால், மீண்டும் இன்னொரு பணியாளரை அவர் அனுப்பினார். அவரையும் அவர்கள் ஓட ஓட விரட்டியடித்தார்கள். பிறகு மூன்றாவதாக ஒருவரை அனுப்பினார். அவரைக் கொன்றே போட்டார்கள். தோட்ட உரிமையாளருக்கு ஓர் அன்பான மகன் இருந்தான்.

    ‘என் மகனுக்கு அவர்கள் நிச்சயம் மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று கூறி, கடைசியாகத் தன் மகனை அனுப்பினார். ஆனால் அந்தத் தோட்டக்காரர்கள், ‘இவன்தான் இந்தத் தோட்டத்திற்கு வாரிசு. வாருங்கள், நாம் இவனைத் தீர்த்துக்கட்டிவிடலாம். அதன்பிறகு இவனுடைய இந்தச் சொத்து நமக்கு உரிமையாகிவிடும்’ என்று கலந்துபேசிச் சதித்திட்டம் தீட்டினார்கள்.

    அதன்படியே அவனை மதிப்பதுபோல நடித்து, அவன் கைகளைப் பிணைத்து அவனைக் கொலை செய்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே அவனது உடலைத் தூக்கிப் போட்டார்கள். இப்படிச் செய்வதால் அவனது உடலைக் கண்டு அனைவரும் அச்சம் கொள்வார்கள் என்று அவர்கள் அந்தக் கொடுஞ்செயலைச் செய்தார்கள்.

    இப்போது, திராட்சைத் தோட்டத்தின் உரிமையாளர் என்ன செய்வார்? அவர் வந்து, தன் மகனுடன் நியாயத்தையும் கொன்றுபோட்ட அந்தக் குத்தகைத் தொழிலாளர்களை அழித்துவிட்டு, திராட்சைத் தோட்டத்தை நேர்மையானவர் களிடம் குத்தகைக்குக் கொடுத்துவிடுவார்’ என்று கதையைக் கூறி முடித்தார் இயேசு.

    டவுளை ஏமாற்றிய மனிதன்

    அப்போது, இயேசுவைப் பிடித்து அவரைக் கொலை செய்ய, உயர்பதவிகளில் இருந்த யூத பரிசேயர்கள் வழிதேட ஆரம்பித்தார்கள். ஏனென்றால், தங்களை மனதில் வைத்தே அவர் இந்த உவமைக் கதையைச் சொன்னார் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அந்தக் கதையைச் சொன்னபோது திரளான மக்கள் இயேசு அருகே இருந்ததால், அவரைவிட்டு விட்டு அப்போதைக்கு விலகிப்போனார்கள்.

    இந்தக்கதையின் வழியாக இயேசு சொன்னது என்ன?

    இந்த உலகம், வளம் நிறைந்த திராட்சைத் தோட்டம் போன்றது. தான் படைத்த மனிதர்களிடம் அதைக் குத்தகைக்காக கடவுள் விட்டிருந்தார். நேர்மையாகவும், நீதியாகவும், யாருக்கும் தீங்கிழைக்காமல் இந்தத் தோட்டத்தைப் பராமரிக்கும்படி அவர் மனிதர்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு எப்படி வாழ வேண்டும் என்று வழிகாட்டுவதற்காக பத்து கட்டளைகளையும் கொடுத்தார். அவற்றைக் கடைப் பிடிப்பதே தனக்குச் செலுத்தும் குத்தகைப் பங்கு என கடவுள் எதிர்பார்த்தார். ஆனால் மனிதர்களோ கட்டளைகளை மறந்துபோனார்கள்.

    தங்களுக்குள் ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவரை ஒருவர் தீர்ப்பிட்டார்கள். அடுத்தவர் மண்ணையும், பெண்ணையும் அபகரிக்க ஆரம்பித்தார்கள். சக மனிதரை அடிமைப்படுத்தினார்கள். தங்கள் அதிகாரத்தை நிலைநாட்ட கொலை பாதகம் செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. மனிதர்கள் திருந்த மறுபடியும் வாய்ப்புத் தரும் விதமாகவே பரலோகத் தந்தை தனது ஒரே மகனை இந்த உலகுக்கு அனுப்பினார். ஆனால் அவரால் தங்கள் அதிகாரத்துக்கு ஆபத்து வரும் என்று பொறாமைப்பட்ட யூத பரிசேயர்கள், அவரைக் கொல்ல தருணம் பார்த்தனர்.

    தோட்ட உரிமையாளரின் மகன் இவரே!

    மனம் திருந்தாத அதிகார வர்க்கத்தின் மூலம் தனக்கு நேர இருக்கும் கொடிய மரணத்தை மறைபொருளாகக் குறிப்பிட்டே, திராட்சைத் தோட்ட உரிமையாளரின் கதையைச் சொன்னார் இயேசு. ஆனால் அதிகார மட்டத்தில் இருந்த யூத பரிசேயர்களோ இயேசுவின் பேச்சிலேயே அவரைச் சிக்க வைப்பதற்காக தங்களில் சிலரையும், ரோமாபுரி மன்னன் ஏரோதுவின் ஆதரவாளர்கள் சிலரையும் இயேசு விடம் அனுப்பினார்கள்.

    அவர்கள் அவரிடம் வந்து, ‘போதகரே! நீர் எப்போதும் உண்மை பேசுகிறவர். யாருக்கும் தனிச்சலுகை காட்டாதவர். மனிதர்களுடைய வெளித்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர். கடவுளுடைய நெறியை சத்தியத்தின்படி கற்பிக்கிறவர் என்றெல்லாம் எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டு, ‘ரோம அரசனுக்கு வரி செலுத்துவது முறையா இல்லையா? செலுத்த வேண்டுமா வேண்டாமா?’ என்று கேட்டார்கள்.

    அவர்களுடைய வெளிவேஷத்தை இயேசு புரிந்துகொண்டார். ‘ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? ஒரு தினாரியு நாணயத்தை என்னிடம் கொண்டுவாருங்கள்’ என்றார். அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள்.

    ‘இதிலுள்ள உருவமும் பட்டப்பெயரும் யாருடையது?’ என்று கேட்டார். அதற்கு அவர்கள், ‘ரோம அரசனுடையது’ என்றார்கள். அப்போது இயேசு அவர்களை நேருக்கு நேராகப் பார்த்து, ‘அரசனுக்குரியதை அரசனுக்கும், கடவுளுக் குரியதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்’ என்றார். சூழ்ச்சிக்காரர்கள் வாயடைத்து போனார்கள்.

    -சகாயராஜ், சென்னை.
    நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடியில் சிறப்பு ஆசீர்வாத உபவாச ஜெபம் மார்ச் 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் 3 மணி வரை நடைபெறுகிறது.
    நாசரேத் மற்றும் குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார். தேவனுடைய கூடாரத்தில் வியாபாரம், தொழில் செய்கிறவர்களுக்காக சிறப்பு ஆசீர்வாத உபவாச ஜெபம் மார்ச் 11-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் 3 மணி வரை நடைபெறுகிறது.

    இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் குழுவினர் சிறப்பு பாடல்கள் பாடுகின்றனர். தொழில், வியாபாரம், ஆசீர்வாதமாய் இருக்க, கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை பெற, தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தில் இருந்து விடுதலைபெற, தொழில்மற்றும் வியாபாரங்களுக்கு விரோதமான மந்திர மற்றும் பில்லிசூனிய கட்டுகளில் இருந்து விடுதலைபெற தேவ ஆலோசனை களையும், சிறப்பு ஜெபத்தையும் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ், உடன்ஊழியர் அப்பாத்துரை ஆகியோர் ஏறெடுக்கின்றனர்.

    தொழில் மற்றும் வியாபாரம் செய்கிறவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு நாலுமாவடி இயேசுவிடுவிக்கிறார் ஊழியக்குழுவினர் கேட்டுள்ளனர். ஆசீர்வாதஉபவாச ஜெபத்தில் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட தொழிலதிபர்களின் சாட்சிகள் இடம் பெறுகிறது.

    ஆசீர்வாத உபவாச ஜெபம் கூட்டம் முடிந்ததும் திரும்பிச் செல்வதற்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள மாடத்தட்டுவிளை என்ற ஊரில் அமைந்துள்ளது புனித செபஸ்தியார் ஆலயம்.
    கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது மாடத்தட்டுவிளை என்ற ஊர். புனித தோமையார் வழியாக திருமுழுக்கு பெற்ற சில கிறிஸ்தவ குடும்பங்கள், கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் மாடத்தட்டுவிளையில் தங்கினார்கள். இவர்கள் தான் மாடத்தட்டுவிளையில் குடியமர்த்தப்பட்ட முதல் கிறிஸ்தவ பூர்வீக குடிமக்கள் ஆவார்கள்.

    இங்கு காணப்படும் விளக்குத்தூண் கல்வெட்டு இவர்களின் தொன்மைக்கு சான்றாகும். இந்த கல்விளக் குத்தூண் 15-2-1371-ல் கோவிலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த கல்தூண் இப்போது ஆலயத்தின் வடமேற்கு மூலையில் கம்பீரமாக நிற்கிறது. இந்தக் கல்வெட்டில் காணப்படும் எழுத்துக்கள், கல்வெட்டின் தொன்மையை உறுதி செய்கின்றன. இதன் மூலம் இங்கு சுமார் 652 ஆண்டுகளுக்கு முன்பே, புனித செபஸ்தியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித அந்தோணியார் ஆலயம் இருந்தது என்பது உறுதியாகிறது.

    இயேசு சபை குருக்களால் போர்த்துக்கீசியர் ஆதரவுடன், மாடத்தட்டுவிளையில் கி.பி. 1603-ம் ஆண்டு களிமண்ணால் ஆன ஆலயம் அமைக்கப்பட்டது. நாகர்கோவிலுக்கு அருகில் உள்ள கோட்டாறுக்கு அடுத்தபடியாக இங்குதான் தேவாலயம் அமைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது. அன்று முதல் மாடத்தட்டுவிளை, கோட்டாறு பங்கு தளத்தின் கீழ் கொல்லம் இயேசு சபை கல்லூரியின் கண்காணிப்பில் செயல்படத் தொடங்கியது.

    கி.பி. 1644-ல் ரோம் இயேசு சபை அதிபருக்கு, அருட்தந்தை ஆந்திரேயாஸ் லோப்பன் என்பவர் கோட்டாறு பங்கு தளத்தில் அடங்கியுள்ள கிளை பங்குகள் பற்றிய புள்ளி விவரம் அனுப்பியுள்ளார். அதில், மாடத்தட்டுவிளை மலைப்பகுதியில் உள்ளது என்றும், பாதுகாவலர் புனித செபஸ்தியார் என்றும், அப்போது 350 கிறிஸ்தவர்கள் வாழ்ந்தனர் என்றும் தெரிவித்துள்ளார். வராப்புழை மறை மாவட்டத்தில் இருந்து கொல்லம் தனி மறை மாவட்டமாக செயல்படத் தொடங்கியதும், மாடத்தட்டுவிளை கோட்டாறு பங்கில் இருந்து பிரிந்தது. கி.பி. 1853-ம் ஆண்டு மார்ச் 15-ந் தேதி முதல், காரங்காடு பங்கின் கிளைப்பங்கானது.

    பின்னர் கி.பி 1918-ம் ஆண்டு நவம்பர் 10-ந் தேதி காரங்காட்டில் இருந்து பிரிந்து, மாடத்தட்டுவிளை தனி பங்கானது. இந்த ஆலயத்தின் உள் அமைந்திருக்கும் புனித செபஸ்தியார் திருவுருவச்சிலை ரோமாபுரியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். இந்த சிலை உலகம் முழுவதும் உள்ள பொதுவான தோற்றத்திலிருந்து வேறுபட்டு காணப்படுகிறது. இங்குள்ள புனித செபஸ்தியாரின் இடது கை மார்பிலும், வலது கை உடலோடும் ஒட்டிய நிலையிலும் அமைந்துள்ளது சிறப்புக்குரியதாகும்.

    கி.பி 1923-ம் ஆண்டு ஜனவரி 2-ந் தேதி, புனித செபஸ்தியாரின் உடலில் இருந்து சிறிய எழும்புத் துண்டை கொல்லம் ஆயர் அலோசியஸ் மரிய பென்சிகர் மாடத்தட்டுவிளை ஆலயத்துக்கு வழங்கினார். இது ஒவ்வொரு ஆண்டும் புனித செபஸ்தியாரின் திருநாளான ஜனவரி 20-ந் தேதியும், இவ்வாலயத்தின் 9-ம் திருவிழாவின் போதும், பக்தர்களின் பார்வைக்கும், வணக்கத்திற்கும் ஆலயத்தில் வைக்கப்பட்டு வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித செபஸ்தியாரின் திருப்பண்டத்தை முத்தமிட்டு, அந்தப் புனிதரின் ஆசிபெற்று வருகின்றனர்.

    -எஸ்.ஆன்றனி ராஜாசிங், வில்லுக்குறி.
    அழைத்தலுக்கு செவிமடுப்பவர்களை இறைவன் அற்புதமாகப் பயன்படுத்துவார் என்பதன் விளக்கமாக இருக்கிறது தூய பவுலின் வாழ்க்கை.
    சவுல்- கிறிஸ்தவத்துக்கு எதிராக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தவர். சிசிலியா நாட்டின் தர்சு பட்டணத்தில் பிறந்த பரிசேயர். மிகவும் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த இவர், யூத மத சட்டங்களை நன்கு கற்றறிந்தவர். கிறிஸ்தவத்துக்கு சிம்ம சொப்பனமாய் இருந்தார்.

    இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களை, அவர்களின் வீடுகளில் புகுந்து கொடுமைப்படுத்தினார். தன்னுடைய வலிமையினால் அவர்களை இழுத்துக் கொண்டு போய் சிறையிலும் அடைத்தார். வளர்ந்து கொண்டிருந்த சபை சிதறடிக்கப்பட்டது.

    தமஸ்கு நகரத்தில் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டிருப்பதை சவுல் அறிந்தார். அவர்களை அழிப்பதற்கான அனுமதியை எருசலேம் தலைமைக் குருக்களிடம் சென்று கேட்டார். அவர்கள் உடனடியாக அனைத்தையும் கொடுத்து அவரை அனுப்பி வைத்தனர்.

    சவுல் தன்னுடைய குதிரையில் ஏறி தமஸ்கு நகரை நோக்கி விரைந்தார். கிறிஸ்தவர்களைக் கொல்ல வேண்டும் என வெறியுடன், படையுடன் அவர் புறப்பட்டார்.

    போகும் வழியில் திடீரென்று வானத்திலிருந்து தோன்றிய ஒரு ஒளி சவுலைச் சுற்றி வீசியது. சவுல் குதிரையிலிருந்து கீழே விழுந்தார். உடன் வந்து கொண்டிருந்தவர்கள் எல்லோரும் இந்தக் காட்சியைக் கண்டு உறைந்து போய் நின்றார்கள்.

    ‘சவுலே... சவுலே... ஏன் என்னைத் துன்புறுத்து கிறாய்?’ என்று குரல் ஒன்று ஒலித்தது.

    எல்லோரும் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். யாரும் இல்லை. சத்தம் மட்டும் கேட்கிறது. அவர்கள் பயத்துடன் செய்வதறியாமல் திகைத்து நிற்க, சவுல் குரலை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.

    ‘ஆண்டவரே நீர் யார்? நான் உம்மை எப்போது துன்புறுத்தினேன்...’

    ‘நீ துன்புறுத்தும் இயேசு தான் நான்’ சவுல் இந்தக் குரலைக் கேட்டதும் நடுங்கினார்.

    இயேசு தான் உண்மையான கடவுள் என்பதை அவருடைய மனம் எப்போதும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை.

    ‘நீ எழுந்து நகருக்குப் போ... நீ என்ன செய்யவேண்டும் என்பதை அங்கே நான் உனக்குச் சொல்வேன்’ என குரல் ஒலிக்க சவுல் எழுந்தார். சுற்றுமுற்றும் பார்த்தார். எங்கும் ஒரே இருள்! அவருடைய பார்வை பறிபோய் இருந்தது!

    மூன்று நாட்கள் சவுல் பார்வையில்லாமல் இருந்தார். அவர் அந்த மூன்று நாட்களும் உண்ணவும் இல்லை. குடிக்கவும் இல்லை. ‘நான் துன்புறுத்தும் இயேசு தான் உண்மையிலேயே கடவுளா? நான் இப்போது என்ன செய்வது?’ சவுல் கேள்விகளுக்குள் புதைந்து கிடந்தார்.

    பார்வை இருந்தபோது குருடனாய் இருந்த சவுல், பார்வை போனபின் புதுப் பார்வை பெற்றார். இயேசுவை நோக்கி மன்றாடத் தொடங்கினார்.

    ‘ஆண்டவரே... நீர் உண்மையான கடவுளாய் இருந்தால் என்னுடைய பார்வை எனக்குத் திரும்ப வரட்டும்’ சவுல் மனதால் வேண்டினான்.

    ‘அனனியா என்றொரு மனிதனை நான் அனுப்புகிறேன். அவன் உன்னுடைய பார்வையைத் திரும்பத் தருவார்’ சவுலின் மனதுக்குள் கடவுள் பேசினார். அனனியாவிடமும் கடவுள் பேச அவர் சவுலைத் தேடி ஓடினார்.

    சவுலைக் கண்டுபிடித்து அவருடைய கண்களின் மேல் கைகளை வைத்து செபித்தார் அனனியா. அப்போது அவருடைய கண்களிலிருந்து செதிள் போன்ற ஒரு பொருள் கிழே விழ அவர் பார்வையடைந்தார்.

    அதன் பின் சவுல் தாமதிக்கவில்லை. தன்னுடைய பழைய எண்ணங்களையெல்லாம் மாற்றிக் கொண்டார். விரைந்து சென்று திருமுழுக்குப் பெற்றார். கொண்டு வந்திருந்த ஆணைகளைக் கிழித்து எறிந்தார்.

    எந்த அளவுக்கு இயேசுவுக்கு எதிராய் செயல்பட்டாரோ, அந்த அளவுக்கு ஆதரவாய் செயல்பட ஆரம்பித்தார்!

    தன்னுடைய பெயரையும் ‘பவுல்’ என்று மாற்றிக் கொண்டார்.

    நகரெங்கும் சென்று கிறிஸ்துவை அறிக்கையிடத் தொடங்கினார்.

    கிறிஸ்துவை அடியோடு வெறுத்த ஒருவர் அவரைப் பற்றி சாட்சி சொல்லித் திரிவதைக் கேட்ட பலர் இயேசுவின் விசுவாசம் கொண்டார்கள்.

    பவுல், தமஸ்கு நகரில் தன்னுடைய போதனையை தீவிரப்படுத்தினார். யூதர்கள் பவுலின் மனமாற்றத்தைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். எப்படியாவது பவுலைக் கொல்லவேண்டும் என்று அவர்கள் திட்டமிட்டார்கள். பவுல் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சவில்லை. இயேசுவின் ஆற்றலுடன் பல்வேறு நகர்களுக்கும், துறைமுகப் பட்டணங்களுக்கும் சென்று போதிக்கத் தொடங்கினார்.

    இவ்வாறு மிகவும் எழுச்சியுடன் பணியாற்றிய பவுல் பல்வேறு வகையில் துன் புறுத்தப்பட்டார். கடைசியில் கி.பி. 64-ம் ஆண்டு நீரோ மன்னனால் சிரச்சேதம் செய்யப்பட்டு மரணமடைந்தார்!

    கிறிஸ்தவத்தின் வேர்களில் கோடரி வைக்க நினைத்த பவுலை இயேசு கிறிஸ்தவத்தின் ஆணிவேராக மாற்றினார். இன்றைய பைபிளில் இருக்கும் புதிய ஏற்பாடு நூல்களில் பதிமூன்று நூல்களை தூய ஆவியின் ஏவுதலால் பவுல் எழுதியிருக் கிறார். திருச்சபைகளுக்கு அவர் எழுதிய கடிதங்களே அவை. அவை தான் கிறிஸ்தவ விசுவாசத்தின் அடித்தளமாக இன்றைக்கு அமைந்திருக்கின்றன.

    அழைத்தலுக்கு செவிமடுப்பவர்களை இறைவன் அற்புதமாகப் பயன்படுத்துவார் என்பதன் விளக்கமாக இருக்கிறது தூய பவுலின் வாழ்க்கை.
    நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய கீழ்தளம் அர்ச்சிப்பு விழா நடைபெற்றது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
    நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக இருந்த பழமையான ஆலயம் மாற்றப்பட்டு புதிய ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது ஆலயத்தின் கீழ் தள பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் அர்ச்சிப்பு விழா நடந்தது. விழாவில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு கீழ் தளத்தை அர்ச்சிப்பு செய்து திறந்து வைத்தார்.

    பின்னர் ஆயர் தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது.

    முன்னதாக ஆலய வளாகத்தின் அருகில் உள்ள கல்லறை தோட்ட சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி நடைபெற்றது. தொடர்ந்து அன்பின் விருந்து நடந்தது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியதாஸ், அருட்பணியாளர் அந்தோணி பிச்சை, பங்கு அருட்பணி பேரவையினர், ஆலய திருப்பணி குழுவினர், பங்குமக்கள் செய்து இருந்தனர்.
    புதுவை வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை புதிய ஆலயம் திறப்பு விழா நேற்று இரவு நடந்தது.
    புதுவை வில்லியனூரில் உள்ள புனித லூர்து அன்னை ஆலய (மாதா கோவில்) வளாகத்தில் ரூ.6 கோடி செலவில் புதிய ஆலயம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2011-ம் ஆண்டு கட்டுமானபணிகள் தொடங்கின.

    இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய ஆலய திறப்பு விழா நேற்று முன் தினம் இரவு நடந்தது. புதுவை-கடலூர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமை தாங்கி புதிய ஆலயத்தை திறந்து வைத்தார்.

    முன்னாள் பேராயர் மைக்கேல் அகஸ்டின் முன்னிலைவகித்தார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டனர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ரிச்சர்டு செய்திருந்தார்.
    விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் புனித லூர்து அன்னை கெபி திருவிழா நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
    விக்கிரமசிங்கபுரம் இருதயகுளம் திரு இருதய ஆண்டவர் ஆலய வளாகத்தில் உள்ள புனித லூர்து அன்னை கெபி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் ஒளி பயணம், தியானம் நடைபெற்றது. அருள்ராஜ், அன்பு தலைமையில் குணமளிக்கும் திருப்பலி, வி.கே.எஸ்.அருள்ராஜ், ஞானபிரகாசம், சகாயராஜ் ஆகியோர் தலைமையில் இல்லறம், துறவறம் குறித்த திருப்பலி, வெள்ளிவிழா, பொன்விழா சிறப்பு திருப்பலி, புனித லூர்து அன்னையின் தேர்பவனி உள்ளிட்டவை நடந்தன.

    நேற்று முன்தினம் திரு இருதய உயர்நிலைப்பள்ளியில் இருந்து மெயின்ரோடு வழியாக ஆலயத்திற்கு நற்கருணை பவனி நடைபெற்றது. பின்னர் அருள் அம்புரோஸ் திருப்பலியை நிறைவேற்றி வைத்தார்.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறை மாவட்ட பிஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் புது நன்மை வழங்கும் விழாவும், விழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. காலை 8 மணிக்கு புனித லூர்து அன்னையின் பெருவிழா நடந்தது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கம், நன்றி திருப்பலியுடன் விழா நிறைவு பெற்றது.

    விழாவில் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் இருந்து திரளானோர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை இருதயகுளம் பங்குத்தந்தையும், அம்பை மறை மாவட்ட அதிபருமான ஐ.சைமன் செல்வன், உதவி பங்குத்தந்தை ஜூடு மெரில் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
    ‘கடவுள் நமக்கு இனிமையான வாழ்க்கையை மட்டுமே தருவார். சோதனைகளையும், துன்பங்களையும் அவர் தருவதில்லை’ என்பதே நம்முடைய இயல்பான சிந்தனை.
    ‘அமைதியான கடல், திறமையான மாலுமிகளை உருவாக்குவதில்லை’ என்பார்கள்.

    ‘கடவுள் நமக்கு இனிமையான வாழ்க்கையை மட்டுமே தருவார். சோதனைகளையும், துன்பங்களையும் அவர் தருவதில்லை’ என்பதே நம்முடைய இயல்பான சிந்தனை.

    எளிதான, இனிமையான வாழ்வு கடவுளால் தரப்படும்போது கடவுளின் முழுமையான ஆசிக்குள் இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் இறை அருளின், இறை கிருபையின் சில குறிப்பிட்ட பாடங்களை வேதனை மற்றும் துன்பங்களின் பள்ளத்தாக்கில் தான் நாம் கற்றுக்கொள்ள முடிகிறது.

    சோதனைகளும் துயரங்களும் இல்லாத வாழ்க்கையைத் தான் நாம் விரும்புகிறோம், ஆனால் இறை வார்த்தைகள் நமக்குக் கற்றுத் தரும் சிந்தனையோ முற்றிலும் மாறுபட்ட ஒன்று.

    ஒரு பாரம்பரியக் கதை உண்டு...

    ஒரு அரசன் தனது ஆளுகைக்கு உட்பட்ட சாலை ஒன்றின் நடுவே ஒரு பெரிய கல்லை வைக்கிறார். அந்தக் கல்லை யாராவது நகர்த்துவார்களா என தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

    வழியில் கல் கிடப்பதைப் பார்த்த சிலர் எரிச்சலடைந்தனர். சிலர் கோபமடைந்தனர். சிலர் வெறுப்படைந்தனர். சிலர் எதுவுமே நடவாதது போல விலகிச் சென்றனர். யாருமே அதைப் புரட்டி ஓரமாகப் போடவேண்டும் என நினைக்கவில்லை.

    ஆனால் அந்தப் பக்கமாக வந்த ஏழைக் குடியானவர் ஒருவர், அதைச் சாலையின் ஓரத்துக்குத் தள்ள முயன்றார். வானத்தை அண்ணாந்து பார்த்து கடவுளின் ஒத்தாசையை சைகை மூலம் கேட்கிறார். மிகுந்த சிரமப்பட்டு அந்தக் கல்லை ஓரமாய்த் தள்ளி வைக்கிறார்.

    கல்லைத் தள்ளியபின் பார்த்தால், அந்தக் கல் இருந்த இடத்திலே ஏதோ ஒரு பை இருக்கிறது. அந்தப் பை நிறைய பொற்காசுகள் இருக்கின்றன.

    அந்தப் பையில் ஒரு குறிப்பு இருந்தது. ‘இந்தக் கல்லைப் புரட்டுபவர்களுக்கான அரசனின் பரிசு இந்தப் பொற்காசுகள்’ என அதில் எழுதப்பட்டிருந்தது.

    குடியானவர் மிகுந்த ஆனந்தமடைந்தார்.

    நமது ஆண்டவர் இயேசுவும் ஒவ்வொரு சோதனைக்கு அடியிலும் நமக்கு ஆசீர்வாதத்தைப் மறைத்து வைத்திருக்கிறார். வேதனைகளின் பள்ளத்தாக்கில் பயணிக்கும் போது தான் இவையெல்லாம் நமக்குக் கிடைக்கின்றன.

    நமது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் இறைவனை நோக்கிப் பார்க்க வேண்டும். அவரோடு அன்பு கொள்ள வேண்டும். சோதனைகளும், வேதனைகளும் நமது வாழ்வில் வருவது இறைவன் நம் மீது கொள்ளும் அன்பின் வெளிப்பாடாகவும் இருக்கலாம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ‘என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்; ஏனெனில், நான் மிகவும் தாழ்த்தப்பட்டுள்ளேன்; என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; ஏனெனில், அவர்கள் என்னைவிட வலிமைமிக்கோர்’ என சங்கீதம் 142:6 ல் தாவீது இறைவனை நோக்கிப் பார்க்கிறார்.

    நாம் எப்போதுமே நமது சுய விருப்பத்தின் படி பயணிக்கும் இலகுவான வாழ்க்கையை மட்டுமே எதிர்பார்க்கிறோம்.

    கடவுளுக்கு முழுமையாக கீழ்ப்படியும் போது வாழ்க்கை சுமூகமாக அமையும் என நினைக்கிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கை அமைந்தால் தான் கடவுள் ஆசீர்வதிக்கிறார் எனவும் கருதிக்கொள்கிறோம்.

    இடையூறுகளைச் சந்திக்கும்போதோ ‘ஐயையோ நான் கடவுளின் விருப்பத்துக்கு மாறாக நடக்கிறோனோ’ எனவும் பயப்படுகிறோம்.

    கீழ்ப்படியும் போது கடவுள் நம்மை ஆசீர்வதிப்பார் என்பது உண்மை தான். ஆனால் அதே வேளையில் கடவுளின் பிள்ளைகளுக்கு அவர் சோதனைகளையும் அனுமதிக்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    பவுலின் வாழ்க்கை நமக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது. பிலிப்பியருக்கு அவர் எழுதிய திருமுகம், அவர் சிறைச்சாலையில் இருந்த போது எழுதப்பட்டது. தான் சிறைச்சாலையில் இருப்பதை அவர் தனது எழுத்தில் முன்னிறுத்தவில்லை. அந்தச் சூழலையும் பிறருக்கு நற்செய்தியைக் கொண்டு செல்லும் ஒரு வாய்ப்பாகக் கருதினார்.

    நெருக்கடிகளும், இடையூறுகளும் இறைவனை நோக்கிப் பார்ப்பதற்கானவையே, இறைவனை விட்டுப் பார்வையை விலக்குவதற்கானவை அல்ல. நமது ஆன்மிக வாழ்க்கை செழுமையாக இருக்க வேண்டுமெனில் நாம் இறைவனைப் பார்க்க வேண்டும்.

    ஸ்டீபன் கான் ஒரு போதகர். அவருடைய பெற்றோர் அவரை ஏழு வயதிலிருந்தே இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை வாழ அவரைப் பழக்கியிருந்தனர்.

    எனவே அவருடைய வாழ்க்கையில், ‘நான் ஒரு பொல்லாதவனாய் இருந்தேன், இப்போது நல்லவனாய் இருக்கிறேன்’ என்பது போன்ற சுவாரஸ்யமான புனைக்கதை இருக்காது. ‘அட அப்படி ஒரு சாட்சி நமக்கு இல்லையே, இருந்திருந்தால் பிறரை எளிதில் வசீகரித்திருக்கலாமே’ என அவர் அவ்வப்போது நினைப்பாராம். ஆனால் அவருடைய வாழ்க்கையே பிறருக்கு மிகப்பெரிய சாட்சியான வாழ்க்கையாய் அமைந்து விட்டது என்பது தான் உண்மை.

    ‘நீ குழந்தைப் பருவம் முதல் திருமறை நூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது’ எனும் இறை வார்த்தைக்கு ஏற்ப அவரது வாழ்க்கை அமைந்து விட்டது.

    நமது வாழ்க்கையைப் பற்றி நாம் கொண்டிருக்கிற திட்டங்களெல்லாம், வெறும் ஊகங்களும் அனுமானங்களும் மட்டுமே. ஆனால் இறைவனை நோக்கிப் பார்க்கும் போது நிகழ்கின்ற செயல்களெல்லாம் இறைவனின் திட்டங்களாகவே இருக்கும்.

    எப்போதும் இறைவனையே பற்றிக் கொண்டிருக்கும் வாழ்க்கையே முழுமையான வாழ்க்கை. அத்தகைய வாழ்க்கை வாழ நாம் அழைக்கப்படுகிறோம்.

    இறை ஆசீர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

    ஞா.வெலிங்டன் ஜேசுதாஸ், நல்மேய்ப்பர் ஆலயம்,

    வேளச்சேரி, சென்னை.
    நாகர்கோவில், மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய அடித்தளம் அர்ச்சிப்பு விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் புனித தஸ்நேவிஸ் மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு பல ஆண்டுகளாக இருந்த பழமையான ஆலயம் மாற்றப்பட்டு தற்போது புதிய ஆலயம் கட்டப்பட்டு வருகிறது. இதில் ஆலயத்தின் அடித்தளம் பகுதி கட்டி முடிக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக நாளை (சனிக்கிழமை) அர்ச்சிக்கப்படுகிறது.

    இதற்கான விழா, நாளை மாலை 6 மணிக்கு நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் ஆலயத்தின் அடித்தளத்தை அர்ச்சித்து திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து ஆயர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடைபெறுகிறது.

    முன்னதாக மாலை 5.30 மணிக்கு ஆலய வளாகத்தின் அருகில் உள்ள கல்லறை தோட்ட சிற்றாலயத்தில் இருந்து கொடிபவனி நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் இரவு 8 மணிக்கு அன்பின் விருந்து நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியதாஸ், அருட்பணியாளர் அந்தோணி பிச்சை, பங்கு அருட்பணி பேரவையினர், பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    ×