search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தினமும் ஜெபிக்க மறக்க வேண்டாம்
    X

    தினமும் ஜெபிக்க மறக்க வேண்டாம்

    எவ்வளவு வேலைப்பளு உங்களை அழுத்தினாலும் ஜெபிக்க மறக்க வேண்டாம். ஜெபத்தைக் கேட்கிற நம் அருமை ஆண்டவர் ஒவ்வொரு நாளும் உங்களோடுகூட இருந்து உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.
    இந்த உலகில் நாம் கர்த்தருடைய பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெற்று அனுபவிக்கக்கூடிய மிக முக்கியமான இடம் நம்முடைய குடும்பம் தான். அதுமட்டுமல்ல நம்முடைய அருமை ஆண்டவர் ஒருவரை ரட்சித்து தமது ஆசீர்வாதத்தினால் அவரை நிரப்பும் போது அந்த ஒரு நபரை மட்டும் ஆசீர்வதிக்கிறவரல்ல, அவருடைய குடும்பம் முழுவதையும் அவர் நிச்சயம் ஆசீர்வதிப்பார்.

    உதாரணமாக லூக்கா 19-ம் அதிகாரத்தில் சகேயு என்ற மனிதனை நம் அருமை ரட்சகராகிய இயேசு சந்தித்தபோது சகேயுவை மட்டும் அவர் ஆசீர்வதிக்காமல் அவருடைய வீட்டார் அனைவரையும் அவர் ஆசீர்வதித்தார்.

    ‘இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது, இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே’ (லூக்கா 19:9).

    மேலும், அப்.16:31 சொல்லுகிறது: ‘கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்’.

    குடும்பத்தலைவர்

    இந்த உலக வாழ்வில் கர்த்தர் கிருபையாய்க் கொடுத்த ஒரு ஆசீர்வாதம் குடும்பம் தான். அந்த குடும்பத்தில் தலைவனாய் இருக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பை கர்த்தர் ஆண்களுக்கு தந்திருக்கிறார்.

    ‘புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்’ (எபே.5:23).

    தலைவன் தலைவனாக இருந்தால் அந்தத் தலைமைத் துவத்துக்குக் கீழ் இருக்கும் குடும்பம் சரியாக செயல்படும். நம் அனைவருக்கும் ஆதாரமாக இருப்பது ஆண்டவரின் வார்த்தையே. ஆகவே கீழ்க்காணும் ஆலோசனைகளை உங்கள் குடும்ப வாழ்விற்கு ஆதாரமாகக் கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் குடும்பம் தலைமுறை தலைமுறையாக செழிக்கும் என்பதில் ஒரு சந்தேகமுமில்லை.

    கர்த்தருக்குப் பயப்படுங்கள்

    ‘கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்’ (சங்.128:1).

    ஒவ்வொரு திருமண ஆராதனைகளிலும் மேலே குறிப்பிட்டுள்ள சங்கீதத்தை மையமாகக் கொண்டு தான் பிரசங்கிப்பார்கள். ஆறே வசனங்களைக் கொண்ட இந்த அதிகாரத்தின் ஆரம்பமே கர்த்தருக்குப் பயப்படும் பயம் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத் தலைவனுடைய வெற்றியின் ரகசியம், அவன் தேவனுக்குப் பயப்படும் பயத்தில்தான் இருக்கிறது. தன் வாழ்வில் கர்த்தருக்கு முதலிடம் கொடுப்பதே அவருக்கு பயப்படுகிற பயமாகும்.

    அன்பு செலுத்துங்கள்


    ‘புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள் மேல் கசந்து கொள்ளாதிருங்கள்’ (கொலோ.3:19, எபே.5:25)

    ‘கடைசி நாட்களில் மனுஷனுடைய அன்பு தணிந்து போகும்’ (மத்.24:12) என்று நம் அருமை ரட்சகர் கூறிய தீர்க்க தரிசனத்தின்படியே இன்று அநேக குடும்பங்கள் அன்பில்லாமல், அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறதை நாம் அனைவரும் அறிவோம்.

    தற்காலத்தில் குடும்ப வாழ்வுக்கு அன்பை முதலீடு செய்யாமல் பணத்தை முதலீடு செய்வதால், பணம் இருக்கும் வரைக்கும் அன்பு இருக்கும். பணம் இல்லாமல் போனால் அன்பைத் தேட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

    தெய்வீக அன்பை மறந்து உலக அன்பைத் தேடி சில குடும்பங்கள் அலைகிறபடியினால், பிசாசினால் அக்குடும்பங்கள் அலைக்கழிக்கப்படுகிறது. பாவ சோதனைகளுக்குள் சிக்குண்டு குடும்ப வாழ்வே முறிந்து போகிறது.

    ‘நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது’ (ரோமர் 5:5).

    மேற்கண்ட வசனத்தை கவனத்தில் கொள்ளுங்கள். கிறிஸ்துவின் அன்பு உங்களில் பெருகும் போது உங்கள் மனைவியையும் மனதார நேசிப்பீர்கள். உங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்பாக இருப்பீர்கள்.

    இணைந்திருங்கள்

    ‘மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்’ (எபே.5:31)

    உங்கள் குடும்பத்தில் தேவனுக்கு அடுத்தபடியாக முன்னுரிமை கொடுக்க வேண்டிய முக்கியமான நபர் உங்கள் மனைவியாகும். இப்படி நடப்பதினாலே ‘பெண்ணுக்கு அடிமை யானவர்கள் அல்ல’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    உங்களை நம்பி வாழ்க்கை நடத்த தன் பெற்றோர் மற்றும் உடன் பிறப்புகளை விட்டு விட்டு உங்களை சார்ந்து வந்திருக்கிற உங்கள் மனைவி உங்கள் வாழ்வில் முக்கியமான நபர் என்பதை ஒருபோதும் மறக்கக்கூடாது.

    ஆகவே, ஒவ்வொரு காரியத்திலும் மனைவியுடன் நீங்கள் இணைந்து செயல்படுவது உங்களுக்கு ஆசீர்வாதமாக அமையும். ஒவ்வொரு நாளும் உங்கள் மனைவி, பிள்ளைகள் மற்றும் உங்கள் வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பும் உங்கள் கையில் உள்ளது.

    ஜெபம் பண்ணுங்கள்

    அதேவேளையில் எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் குடும்ப வாழ்வை உங்கள் பணத்தினாலோ, படிப்பினாலோ, அறிவினாலோ, மனித சக்தியினாலோ உயர்த்த முடியாது. தேவ கிருபையே மிகவும் முக்கியம். அக்கிருபையைப் பெற்றுக் கொள்வதற்கு தினமும் ஆண்டவரை நோக்கிப் பாருங்கள்.

    ‘அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை’ (சங்.34:5).

    ஆகவே, எவ்வளவு வேலைப்பளு உங்களை அழுத்தினாலும் ஜெபிக்க மறக்க வேண்டாம். ஜெபத்தைக் கேட்கிற நம் அருமை ஆண்டவர் ஒவ்வொரு நாளும் உங்களோடுகூட இருந்து உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்.

    சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,

    இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள், சென்னை - 54.
    Next Story
    ×