என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரிஷப் பண்ட்
தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்: கேப்டன் பதவி வகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது- ரிஷப்பண்ட்
- கேப்டன் பதவியில் நான் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன் என இந்திய அணியின் கேப்டன் ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
- பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் இருப்பது மிக சிறந்த ஒன்றாகும்.
புதுடெல்லி:
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி டெல்லியில் இன்று நடக்கிறது.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட்கோலி, முகமது ஷமி, பும்ரா போன்ற முன்னணி வீரர்களுக்கு ஏற்கனவே ஓய்வு கொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கேப்டன் பொறுப்பை வகித்த லோகேஷ் ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளனர். இதனால் இந்திய அணிக்கு ரிஷப்பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் பதவி நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது. மிகவும் நல்ல சூழ்நிலையில் வரவில்லை. ஆனால் அதே நேரத்தில் கேப்டன் பதவி வகிப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய அணியை வழி நடத்த வாய்ப்பு அளித்ததற்காக கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
சொந்த ஊரில் தலைமை தாங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது சிறந்த உணர்வாகும். ஐ.பி.எல். போட்டி மூலம் பல தவறுகளில் இருந்து கற்று கொண்டேன். வரும் நாட்களில் எனக்கு அது உதவும் என்று கருதுகிறேன்.
கேப்டன் பதவியில் நான் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். எனது கிரிக்கெட் ஏற்றம், இறக்கத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
ஒவ்வொரு நாளும் என் வாழ்க்கையை சிறப்பாக்குவேன். ராகுல் தொடக்க வீரராக ஆடி இருந்ததால் பேட்டிங் வரிசையில் அதிரடி மாற்றம் இருக்காது. எங்களிடம் அதிகமான தொடக்க வீரர்கள் இல்லை. ஒரு அணியாக நாங்கள் அடைய விரும்பும் இலக்கை பற்றி ஆலோசித்துள்ளோம்.
பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுடன் இருப்பது மிக சிறந்த ஒன்றாகும். 19 வயதுக்குட்பட்ட அணியில் ஆடிய போது அவருடன் பணியாற்றி உள்ளேன். பின்னர் இந்திய அணியில் பணிபுரிகிறேன்.
நிறைய அனுபவம் வாய்ந்த அவர் முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் ஆவார். அவரிடம் இருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டோம். இன்னும் கற்றுக்கொள்ள இருக்கிறோம்.
இவ்வாறு ரிஷப்பண்ட் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடர்ச்சியாக 12 ஆட்டங்களில் வென்ற அணி என்ற உலக சாதனையை படைக்கும்.






