search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    இது வியர்வையால் தைக்கப்பட்ட சட்டை: சஞ்சு சாம்சனின் இன்ஸ்டா பதிவு
    X

    இது வியர்வையால் தைக்கப்பட்ட சட்டை: சஞ்சு சாம்சனின் இன்ஸ்டா பதிவு

    • உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நிலையிலும் இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லை.
    • தற்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அப்படி இடம் கிடைத்தாலும் நிரந்தரமாக அணியில் விளையாடமாட்டார்.

    முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்போது அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும். ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு சலிப்பு தட்டி உள்ளூர், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

    உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியமான தொடருக்கான வீரர்கள் தேர்வின்போது, சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும் என குரல் வலுக்கும். ஆனால், பிசிசிஐ கண்டு கொள்வதில்லை. அதனைத் தொடர்ந்து விமர்சனங்கள் கிளம்பும். ஓரிரு நாட்களில் அது அடங்கி போகும்.

    தற்போது ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி வருகிறார். அவர் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் 385 ரன்கள் விளாசியுள்ளார்.

    விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கேஎல் ராகுல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில்தான் நேற்று பிசிசிஐ டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது.

    இதில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் இருந்திருந்தால் பிசிசிஐ கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கும்.

    நேற்று அறிவிக்கப்பட்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனது பெயர் இடம் பிடித்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இது வியர்வையால் தைக்கப்பட்ட சட்டை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிசிசிஐ பலமுறை நிராகரித்த போதிலும், பொறுமை காத்து தனது திறமையை வெளிப்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

    15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். ரிஷப் பண்ட் ஆடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை என்றால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    29 வயதாகும் சஞ்சு சாம்சன் 2015-ம் ஆண்டு இந்திய டி20 அணியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். இந்த 9 வருடத்தில் 25 போட்டிகளில் விளையாடி 1 அரைசதத்துடன் 374 ரன்கள் அடித்துள்ளார்.

    Next Story
    ×