search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி20 உலகக்கோப்பைக்கு ரோகித்-தான் கேப்டன்: ஆகாஷ் சோப்ரா கணிப்பு
    X

    டி20 உலகக்கோப்பைக்கு ரோகித்-தான் கேப்டன்: ஆகாஷ் சோப்ரா கணிப்பு

    • உடற்தகுதி தொடர்பான பிரச்சினை இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்க மாட்டார்.
    • ஆப்கானிஸ்தான் தொடரிலும் பாண்ட்யா ஆடவில்லை.

    புதுடெல்லி:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. டோனி தலைமையிலான இந்திய அணி முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது.

    இதுவரை 8 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கிலாந்து (2010, 2022), வெஸ்ட் இண்டீஸ் (2012, 2016) அணிகள் அதிகபட்சமாக தலா 2 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன. இந்தியா (2007), பாகிஸ்தான் (2009), இலங்கை (2014), ஆஸ்திரேலியா (2021) ஆகியவை தலா 1 முறை உலகக்கோப்பையை வென்றுள்ளன.

    9-வது 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியை வெஸ்ட்இண்டீஸ், அமெரிக்கா இணைந்து நடத்துகிறது. இந்தப் போட்டி ஜுன் 1-ந்தேதி முதல் 29-ந் தேதி வரை நடக்கிறது.

    நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா உள்பட 20 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது.

    20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆப்கானிஸ்தானுடன் மட்டுமே 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவரில் விளையாடுகிறது. வருகிற 11, 14 மற்றும் 17-ந்தேதிகளில் மொகாலி, இந்தூர், பெங்களூரில் இந்தப் போட்டிகள் நடக்கிறது.

    ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்த அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, விராட்கோலி ஆகியோர் அணிக்கு தேர்வாகி உள்ளனர். இருவரும் கிட்டத்தட்ட 14 மாதங்களுக்கு பிறகு 20 ஓவர் அணிக்கு தேர்வாகி உள்ளார்.

    2022-ம் ஆண்டு உலகக்கோப்பை அரைஇறுதியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் மோசமாக தோற்றது. இந்தப் போட்டிக்கு ரோகித் சர்மாவும், விராட்கோலியும் 20 ஓவர் சர்வதேச போட்டியில் விளையாடியது இல்லை.

    இருவரும் ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடும் ஆர்வத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்காகவே அவர்கள் தற்போது ஆப்கானிஸ்தான் தொடரில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 20 ஓவர் உலகக்கோப்பை அணியிலும் அவர்கள் இடம்பெறுவது உறுதியாகிவிட்டது.

    20 ஓவர் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா காயத்தில் உள்ளார். ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. முழு உடல் தகுதி பெறாததால ஹர்திக் பாண்ட்யா ஆப்கானிஸ்தான் தொடரில் ஆடவில்லை. இதனால் ரோகித்சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டியிலும் ரோகித்சர்மாவே கேப்டனாக இருப்பார் என்றும், ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு இல்லை என்று முன்னாள் தொடக்க வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உடற்தகுதி தொடர்பான பிரச்சினை இருப்பதால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்க மாட்டார். அவர் தற்போது விளையாட முடியாத நிலையில் உள்ளார். ஆப்கானிஸ்தான் தொடரிலும் அவர் ஆடவில்லை. டெஸ்ட் தொடரில் ஆடமாட்டார். நேரடியாக ஐ.பி.எல்.லில் தான் ஆடுவார். இதனால் இந்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையிலும் ரோகித்சர்மாவே கேப்டனாக செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன்.

    இவ்வாறு ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டு உள்ளார். ரோகித்சர்மா இடத்தில் அவர் தேர்வாகி உள்ளார். ஹர்திக்பாண்ட்யா கடந்த சீசன்களில் குஜராத் அணிக்காக ஆடினார்.

    இந்த ஆண்டில் இருந்து மீண்டும் மும்பை அணிக்கு திரும்பியுள்ளார்.

    Next Story
    ×