search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இன்று கடைசி நாள்.. இந்தியா வெற்றிபெற 280 ரன்கள் தேவை..!
    X

    விராட் கோலி, ரகானே

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இன்று கடைசி நாள்.. இந்தியா வெற்றிபெற 280 ரன்கள் தேவை..!

    • இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அவுட் சர்ச்சை ஆனது.
    • ரகானே - விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நான்காவது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த கடின இலக்கை நோக்கி இந்திய அணி ஆடிவருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். சுப்மன் கில் 18 ரன்கள் இருந்த போது அவுட் ஆனார். அவரது அவுட் சர்ச்சை ஆனது. ஸ்காட் போலன்ட் வீசிய பந்தை கில் தடுத்து ஆட முயற்சித்தபோது, எட்ஜாஜி தாழ்வாக சென்ற பந்தை கேமரூன் கிரீன் இடது கையால் பிடித்தபடி தரையில் விழுந்தார். அப்போது பந்தை பிடித்து இருந்த அவரது கை தரையில் உரசியது. இதனால் கில் வெளியேறாமல் நின்றார். உடனடியாக கள நடுவர்கள் 3-வது நடுவரிடம் அப்பீல் செய்தனர். வீடியோ பதிவை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த 3-வது நடுவர் கேட்ச் சரியானது என்று உறுதி செய்ததால் கில் வெளியேறினார்.

    அவரை அடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்த புஜாரா சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே புஜாரா 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரகானே - விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது. அவ்வப்போது பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடி பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்தது.

    இதனால் இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இந்திய அணி வெற்றி பெற 280 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.

    விராட் கோலி 44 ரன்னிலும் ரகானே 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த பார்ட்னர்ஷிப் நெருக்கடியை சமாளித்து இன்று நம்பிக்கை அளித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    Next Story
    ×