search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம்: ருதுராஜ் கெய்க்வாட்
    X

    அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டோம்: ருதுராஜ் கெய்க்வாட்

    • ஷிவம் துபே 23 பந்தில் 51 ரன்னும் ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்னும் விளாசினர்.
    • தீபக் சாஹர், முஸ்டாபிஜூர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    ஐ.பி.எல் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சி.எஸ்.கே. தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன் குவித்தது.

    ஷிவம் துபே 23 பந்தில் 51 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), ரச்சின் ரவீந்திரா 20 பந்தில் 46 ரன்னும் (6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 36 பந்தில் 46 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். ரஷித் கான் 2 விக்கெட்டும், சாய் கிஷோர், ஸ்பென்சர் ஜான்சன், மோகித் சர்மா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்தது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    சாய் சுதர்சன் அதிகபட்சமாக 31 பந்தில் 37 ரன் (3 பவுண்டரி ) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தீபக் சாஹர், முஸ்டா பிசுர் ரகுமான், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டும், டேரில் மிட்செல், பதிரனா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்ற 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது:-

    பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். குஜராத் போன்ற அணிக்கு எதிராக இது மாதிரியான ஆட்டத்தை நாங்கள் செயல்படுத்த வேண்டி இருந்தது.

    சேப்பாக்கம் ஆடுகளம் (முதல் 10 ஓவரில் 104 ரன்) எப்படி இருக்கும் என்று உங்களுக்கு தெரியாதபோது நீங்கள் எப்படி பேட்டிங் செய்கிறீர்கள் என்பதை பொருட்படுத்தாமல் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும். பவர் பிளேயில் ரச்சின் அற்புதமாக பேட்டிங் செய்து ஆட்டத்தை முன்னோக்கி கொண்டு சென்றார்.

    ஷிவம் துபேயின் அதிரடி ஆட்டத்தை பார்த்து டோனி வியந்தார். அவர் சி.எஸ்.கே.வுக்கு வந்ததில் இருந்து அவருடன் டோனி இணைந்துப் பணியாற்றினார். மேலும் அவரது நம்பிக்கை அதிகமாக இருந்தது. எங்களது பீல்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது.

    இவ்வாறு ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.

    குஜராத் அணி முதல் தோல்வியை தழுவியது. தோல்வி குறித்து அந்த அணி கேப்டன் சுப்மன் கில் கூறும்போது 'இந்த தோல்வி மூலம் நாங்கள் பாடம் கற்றோம். மாறுபட்ட அனுபவம் கிடைத்தது' என்றார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்சை 31-ந்தேதி விசாகப்பட்டினத்தில் சந்திக்கிறது. குஜராத் 3-வது போட்டியில் அதே தினத்தில் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது.

    Next Story
    ×