என் மலர்
சினிமா

விஷாலுக்கு ஆந்திர பெண்ணுடன் திருமணம் - நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தீவிரம்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார். #VishalMarriage #Vishal #Anisha
‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமனாவர் விஷால். தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், சமர், பட்டத்து யானை, பாண்டியநாடு, பூஜை, ஆம்பள, பாயும்புலி, மருது, கதகளி, துப்பறிவாளன், இரும்புத்திரை உள்பட பல படங்களில் நடித்துள்ளார். சில படங்களை தயாரிக்கவும் செய்தார்.
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்ததும் திருமணம் செய்து கொள்வதாக விஷால் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், விஷால் - வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் விஷால் நண்பர் மட்டுமே என்று வரலட்சுமி விளக்கம் அளித்திருந்தார். விஷால் கூறும்போது, வரலட்சுமி எனது பால்ய நண்பர். என் மனதுக்கு நெருக்கமானவர், சமயம் வரும்போது எனது திருமணம் குறித்தும், யாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பது குறித்தும் தெளிவுபடுத்துவேன் என்று கூறியிருந்தார்.

நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் பணிகள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஷாலுக்கு பெண்பார்க்கும் முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டு, தற்போது மணமகளை தேர்வு செய்துள்ளனர்.
மணப்பெண்ணின் பெயர், அனிஷா. ஆந்திராவை சேர்ந்தவர். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இதற்காக விஷால், குடும்பத்தினருடன் ஐதராபாத் செல்கிறார். நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கிறார்கள்.

விஷாலுக்கு மணமகள் முடிவானதையும், ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடப்பதையும் அவரது தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி பிரத்யேகமாக தெரிவித்தார். #VishalMarriage #Vishal #Anisha
Next Story