search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன்தான் முடிவு செய்யவேண்டும்: ரசிகர்களிடையே ரஜினி பேச்சு
    X

    நான் அரசியலுக்கு வருவது குறித்து ஆண்டவன்தான் முடிவு செய்யவேண்டும்: ரசிகர்களிடையே ரஜினி பேச்சு

    ரஜினி இன்றுமுதல் 5 நாட்கள் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவிருக்கிறார். இன்று அவர் கலந்துகொண்டு ரசிகர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
    நடிகர் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதமே அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ஆம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

    இன்று காலை 8 மணி முதலே ரஜினி ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரசிகர்களை சந்திப்பதற்காக ரஜினி காலை 9.50 மணிக்கு ராகவேந்திரா மண்டபத்துக்கு வருகை தந்தார்.

    அப்போது ரசிகர்களிடைய அவர் உரையாற்றினார். அவர் பேசும்போது, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் எனக்கு சகோதரர். ஒழுக்கம், சத்தியம், உண்மை ஆகியவற்றை அவரிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன். அவர், என்னை எப்போது பார்த்தாலும் ‘உனது உடலை பார்த்துக்கொள். ரசிகர்களை பார்த்துப் பேசு. போட்டோ எடுத்துக் கொள்’ என்று சொல்வார்.

    அவர் சொன்னது இன்று நடந்துள்ளது. ஆரம்பத்தில் நான் குடிப்பழக்கத்துக்கு ஆளானதால் படப்பிடிப்புக்கு தாமதமாக செல்வேன். அப்போது, முத்துராமன் என்னிடம் நீ படத்தின் ஹீரோ, படப்பிடிப்புக்கு நீதான் முதலில் வரவேண்டும் என்பார். அப்போது மதல் நான்தான் படப்பிடிப்பு தளத்துக்கு முதலில் செல்வேன். சில காரணங்களால் என்னுடைய படங்களின் வெற்றி விழாக்களை கொண்டாட முடியவில்லை.



    வேலை காரணமாக ரசிகர்களையும் சந்திக்க முடியவில்லை. இதையடுத்து ரஜினி எந்த முடிவிலும் உறுதியாக இருக்க மாட்டார். அவருடைய திரைப்படம் வந்தால் மட்டும் ரஜினி ஏதாவது ஸ்டண்ட் பண்ணுவார் என்று சொல்லுகிறார்கள். ரசிகர்களின் ஆசீர்வாதமும், அவர்களுடைய அன்பும் இருக்கும்போது நான் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

    குளத்தில் கால் வைத்தபிறகு அங்கு நிறைய முதலைகள் இருப்பது தெரிய வருகிறது. அதையும் மீறி அடுத்த அடி எடுத்துவைத்தால் என்ன ஆகும்? பின்வாங்கித்தான் ஆகவேண்டும். முரட்டு தைரியம் எப்போதும் ஆகாது. ரஜினி நல்ல படம் கொடுப்பார் என்ற நம்பிக்கையில்தான் நீங்கள் திரையரங்குக்கு வருகிறீர்கள். அதனால்தான் நானும் இங்கு நிற்கிறேன். நான் தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பேன்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கூட்டணிக்கு ஆதரவு தர நேர்ந்தது. அந்த கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றது. அன்றுமுதல் தேர்தல் சமயங்களில் சில ஆதயாத்துக்காக ரசிகர்களை பயன்படுத்துவதால் இப்போதெல்லாம் நான் யாருக்கும் ஆதரவு இல்லை என சொல்லக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறேன். என் ரசிகர்களை யாரும் தவறாக பயன்படுத்த கூடாது என்பற்காக இவ்வாறு சொல்கிறேன்.

    அடுத்து என்ன நடக்கும் என்பதை ஆண்டவன்தான் தீர்மானிக்கிறான். இப்போது நடிகனாக என்னுடைய கடமையை செய்து வருகிறேன். நாளை என்ன பொறுப்பு கொடுத்தாலும், அதில் நியாயமாகவும் உண்மையாகவும் இருப்பேன். அது கடவுளின் கையில்தான் உள்ளது.

    என்னை பற்றிய அரசியல் செய்திகளை நம்பவேண்டாம். அப்படி நான் வரவேண்டிய சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக வருவேன். நான் அரசியலுக்கு வந்தால் ஊழல் செய்பவர்கள், பணம் சாதிக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர்களை பக்கத்தில் வைத்துக் கொள்ள மாட்டேன். ரசிகர்கள் முதலில் குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கம், மதுப்பழக்கத்தை கைவிடுங்கள். அடிபட்டதால் இதை சொல்கிறேன். சந்தோஷமாக இருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×