என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    விஜய் கந்தசாமி இயக்கத்தில் சிவநிஷாந்த், நீருஷா நடிப்பில் உருவாகி வரும் துப்பாக்கியின் கதை படத்தின் முன்னோட்டம்.
    பி.ஜி.பி. எண்டர்பிரைசஸ் சார்பில் பி.ஜி.பிச்சைமணி தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘துப்பாக்கியின் கதை’. இயக்குநர் விஜய் கந்தசாமி இயக்கும் இந்தப் படத்தில் சிவநிஷாந்த் என்பவர் ஹீரோவாக நடிக்க, பெங்களூருவை சேர்ந்த நீருஷா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் டேனியல், ஆர்.எஸ்.சிவாஜி, ஜார்ஜ், மிப்புசாமியுடன் இலங்கை நடிகர் லால்வீர்சிங் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.

    துப்பாக்கியின் கதை 

    சாய் பாஸ்கர் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் "துப்பாக்கியின் கதை" குடும்பத்துடன் பார்க்கக் கூடிய, இளைஞர்கள் ரசிக்கக்கூடிய படமாக உருவாகி வருகிறது. படத்தின் கதை உண்மையிலேயே ஒருவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வை மையப்படுத்தி அதன் தாக்கத்தில் உருவான கதை தான். படம் பார்க்கும்போது இந்த நிகழ்வு எங்கே நடந்தது, யாருக்கு நடந்தது என்பதை ரசிகர்கள் நன்றாகவே தெரிந்து கொள்வார்கள் என்கிறார் இயக்குநர் விஜய் கந்தசாமி.
    இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தவம்’ படத்தின் முன்னோட்டம்.
    இரட்டை இயக்குநர்கள் ஆர்.விஜயானந்த் ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் ஆஸிப் பிலிம் இண்டர்நேசனல் தயாரித்திருக்கும் புதிய படம் ‘தவம்’. இந்தப்படத்தில் இயக்குநர், நடிகர், நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நாயகனாக புதுமுகம் வசி நடித்துள்ளார், நாயகியாக பூஜாஸ்ரீ நடித்துள்ளார் மற்றும் அர்ச்சனா சிங், சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி, பிளாக்பாண்டி, கூல் சுரேஷ், தெனாலி, கிளி ராமச்சந்திரன், வெங்கல்ராவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    விவசாயத்தை காத்து எதிர்கால சந்ததியினருக்கு இந்த பூமியை வளமாக வைத்திருக்க வழி செய்யும் விதமான திரைக்கதை அமைப்போடு தயாராகியிருக்கிறது. இப்படத்தை முன்னணி நிறுவனம் ஒன்று நவம்பர் 8ம் தேதி உலகமெங்கும் வெளியிடுகிறது.

    ஒளிப்பதிவு - வேல்முருகன், இசை - ஸ்ரீகாந்த் தேவா, பாடல்கள் - இந்துமதி, எழில்வேந்தன், கோவிந்த், கலை - ராஜு, எடிட்டிங் - எஸ்.பி.அகமது, நடனம் - ரவிதேவ், ஸ்டண்ட் - ஆக்ஷன் பிரகாஷ், தயாரிப்பு மேற்பார்வை - குமரவேல், சரவணன், தயாரிப்பு - வசி ஆஸிப், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆர்.விஜயானந்த் - ஏ.ஆர்.சூரியன்.
    போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் குமரன் இயக்க கதிர் நாயகனாக நடிக்கும் ஜடா படத்தின் முன்னோட்டம்.
    'பரியேறும் பெருமாள்' படத்துக்கு பிறகு கதிர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஜடா’. கால் பந்தாட்ட விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் கதிருக்கு ஜோடியாக ரோஷினி நடிக்க, யோகி பாபு, சமுத்திரகனி, ஏ.பி.ஸ்ரீதர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் குமரன் இயக்கியுள்ளார். படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, நித்யா மேனன், அதிதிராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைக்கோ’ படத்தின் முன்னோட்டம்.
    டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘சைக்கோ’. உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதிரி ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

    'சைக்கோ' படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். துப்பறிவாளன் படத்திற்குப் பிறகு மிஷ்கின் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
    ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்து, கதாநாயகனாக நடித்து இயக்கி இருக்கும் பாப்பிலோன் படத்தின் முன்னோட்டம்.
    ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம்.

    அப்பா இல்லாத தனது குடும்பத்தை அன்பாகக் கவனித்து வருகிறார் ஹீரோ. எதிர்பாராமல் அவரது தங்கையின் வீடியோ ஒன்று கயவர்களின் கையில் சிக்குகிறது. அவர்கள் அதன்மூலம் தங்கையை பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பதுடன், ஒரு கட்டத்தில் அவரைக் கடத்தவும் முயற்சிக்கின்றனர்.

    இதில் விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் செல்கிறார் தங்கை. கதாநாயகி மூலம் இந்த விபரம் அண்ணனுக்குத் தெரியவர, இதன் பின்னணியில் உள்ள கும்பலை நாயகன் எப்படி வேரறுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.

    கதாநாயகியாக ஸ்வேதா ஜோயல் என்பவர் நடித்துள்ளார். தங்கையாக சௌமியா மற்றும் அம்மாவாக ரேகா சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். ஷ்யாம் மோகன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். அருள்செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுதர்சன் இப்படத்தின் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார்.

    இந்தப் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்து இருக்கும் ஆறு ராஜா, கலை இயக்குநர் தோட்டா தரணியின் குழுவில் ஆர்டிஸ்ட் ஆகப் பணியாற்றியவர். சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பிளாக் பஸ்டர் ஹிட்டான சந்திரமுகி படத்தில் சந்திரமுகியின் ஓவியத்திற்கு வர்ணம் தீட்டியவர் இவர்தான்.
    அட்டக்கத்தி மூலம் நடிகையாக அறிமுகமான நந்திதா ஸ்வேதா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘ஐபிசி 376’ படத்தின் முன்னோட்டம்.
    நந்திதா ஸ்வேதா நடிப்பில் ஐபிசி 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது. நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. 

    ஹாரர் சேஸிங், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் என கதை திரைக்கதை எழுதி படத்தை இயக்கி வருகிறார் ராம்குமார் சுப்பாராமன். இப்படம் பெண்களைப் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பில் உள்ள IPC 376 என்பது பெண்கள் மீதான பாலியல் கொடுமைக்கு எதிரான சட்டத்தைக் குறிக்கிறது. இப்படி இப்படத்தின் தலைப்பிலே பெண்கள் மீதான அக்கறை தெரிகிறது. 

    விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் அண்ணாதுரை, தகாராறு படங்களில் பணியாற்றிய k.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கோலமாவு கோகிலா படத்தின் எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக S.பிரபாகர் படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக  நடைபெற்று வருகிறது.
    ராய் லட்சுமி, சாக்‌ஷி அகர்வால் நடிப்பில் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் முன்னோட்டம்.
    உலகெங்கும் தேவதைக் கதைகளில் உலாவரும் மிகவும் புகழ்பெற்ற பெயர் 'சிண்ட்ரெல்லா'. இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் ஹாரர் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.

    இதில் ராய்லட்சுமி, சாக்‌ஷி அகர்வால், ரோபோ சங்கர், 'கல்லூரி' வினோத், பாடகி உஜ்ஜயினி, கஜராஜ், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இவர் சில ஆண்டுகள் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.

    'காஞ்சனா 2' படத்திற்கு இசை அமைத்த அஸ்வமித்ரா இசையமைத்திருக்கிறார். தெலுங்கில் 'லட்சுமி என்டிஆர்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ராமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. விரைவில் இப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்த மனோசித்ரா நடிப்பில் உருவாகி வரும் ‘ரூம்’ படத்தின் முன்னோட்டம்.
    சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரடொக்சன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த 'அம்முவாகிய நான்' மற்றும் 'நேற்று இன்று' ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் ‘ரூம்’   படத்தை இயக்குகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் என மூன்று மொழிகளில் ‘ரூம்’ தயாராகிறது.

    தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மனோசித்ரா நடிக்கிறார். இவர் ’அவள் பெயர் தமிழரசி’, ’நீர்ப்பறவை’, ’வீரம்’ ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஹைலைட்டான அம்சமே பெரும்பகுதி காட்சிகள் ஒரு பாத்ரூமுக்குள் நிகழ்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டு இருப்பதுதான்.. அந்தவகையில் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி வித்தியாசமான, தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியாக திரில்லர் படமாக உருவாகியுள்ளது. இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சர்யமான அனுபவமாக இருக்கும்.

    ரூம்

    பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, இசையமைக்கிறார் வினோத் யஜமான்யா. இவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 300 படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். 

    ’குற்றம் கடிதல்’, ’ஹவுஸ் ஓனர்’ என இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட  முக்கியமான படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சி.எஸ்.பிரேம் ‘ரூம்’   படத்தை எடிட் செய்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் முன்னோட்டம்.
    மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். 

    கார்த்தி

    சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25ம் தேதி திரைக்கு வர உள்ளது. 
    சாய் இயக்கத்தில் சீனு மோகன், தாரா பழனிவேல், ஸ்ரீவத்சன் நடிப்பில் உருவாகியுள்ள இபிகோ 306 படத்தின் முன்னோட்டம்.
    சாய் என்ற இளைஞர் இயக்கியுள்ள படம் இபிகோ 306. இந்திய தண்டனை சட்ட பிரிவில் இது தற்கொலைக்கு தூண்டுதல் குற்றத்தை குறிக்கும். படத்தை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதுடன் முக்கிய எதிர்மறை வேடத்திலும் நடித்துள்ளார் சாய். சீனு மோகன், தாரா பழனிவேல், ஸ்ரீவத்சன், கணேஷ், ரிஷி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சாய் பிக்சர்ஸ் சார்பில் பி.சிவகுமார் தயாரித்துள்ளார். சூர்ய பிரசாத் இசையமைக்க ஜோ.சுரேஷ், செல்லப்பா இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். 

    இபிகோ 306

    படம் பற்றி இயக்குனர் கூறியதாவது:- ’சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம். மருத்துவ சீட் கிடைத்ததால் படித்தேன். கடந்த பிப்ரவரியில் எம்பிபிஎஸ் முடித்தேன். பள்ளி, கல்லூரியில் இயக்கிய குறும்படங்கள் கொடுத்த அனுபவத்தால் இயக்கி உள்ளேன். கல்வியில் நிலவும் வியாபாரம் மற்றும் அரசியல் பற்றி பேசும் படம் இது. ஒரு கிராமத்து ஏழை மாணவியின் படிப்பு கனவுக்கு நீட் நுழைவுத்தேர்வு எப்படி தடையாக இருக்கிறது என்பதையும் நீட்டுக்கு பின்னணியில் இருக்கும் வியாபார தந்திரங்களையும் சொல்லும் கதை. நீட் தேர்வுக்கு பின்னணியில் இருக்கும் அரசியலை பேசும். 21 நாட்களில் படத்தை முடித்துவிட்டோம்’ என கூறினார்.

    எம்.பத்மாநாபன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமாங்கம் படத்தின் முன்னோட்டம்.
    போர் வீரனின் கதையை பிரமாண்டமாக சொல்லும் மம்முட்டியின் “மாமாங்கம்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. மலையாளத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் தமிழ் பதிப்பில் தனது கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் நடிகர் மம்முட்டி.

    மலையாள மம்மூட்டியுடன் இப்படத்தில் மலையாள உச்ச நட்சத்திரங்களான உன்னிமுகுந்தன், சித்திக், மணிக்குட்டன், மணிகண்டன் ஆச்சாரி, தருண் அரோரா, பிரச்சி தெஹ்லான், கனிகா, அனு சித்தாரா, இனியா ஆகியோருடன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

    எம்.பத்மாநாபன் இயக்கியிருக்கும் இப்படத்தினை காவ்யா பிலிம் கம்பெணி சார்பில் வேணு குணப்பிள்ளி தயாரித்துள்ளார். மலையாள வசனம், மற்றும் தழுவல் திரைக்கதை - ஷங்கர் ராமகிருஷ்ணன். தமிழ் வசனம் - இயக்குநர் ராம், ஒளிப்பதிவு - மனோஜ் பிள்ளை, சண்டைப்பயிற்சி - ஷாம் கௌஷல், விஷுவல் எபெஃக்ட்ஸ் - ஆர்.சி.கமலக்கண்ணண், எடிட்டர் - ராஜா முகம்மது, இசை - எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை - சஞ்சித் பலாரா, அங்கித் பலாரா, ஒலியமைப்பு - பி.எம்.சதீஷ், மனோஜ், எம்.கோஸ்வாமி.
    அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ் இயக்கத்தில் சனம் ஷெட்டி, லட்சுமி பிரியா நடிப்பில் உருவாகி வரும் ’எதிர் வினையாற்று’ படத்தின் முன்னோட்டம்.
    சென்னையில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள படம் ‘எதிர் வினையாற்று’. இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்கள் அலெக்ஸ் மற்றும் இளமைதாஸ். படத்தின் நாயகனாக அலெக்ஸ் அறிமுகமாகிறார். 

    அவரே தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக சனம் ஷெட்டி நடித்துள்ளார். இரண்டாம் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடிக்கிறார். மேலும் ஆர்.கே.சுரேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், மதன், ஸ்டில்ஸ் விஜய், யோகிராம், பிளாக் மணி ஆகியோரும் நடித்துள்ளனர். ஷெரீப் இசையமைக்க மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

    எதிர் வினையாற்று படக்குழு

    எந்த வம்புக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருக்கும் போட்டோகிராபர் ஒரு நள்ளிரவு பயணத்தில் எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணை காப்பாற்றுகிறான். அந்த பெண்ணுடன் சேர்ந்து அவள் கொண்டு வரும் சிக்கல்களும் அவனை பின் தொடர்கின்றன. சாதாரண இளைஞனான அவன் மிகவும் அசாதாரண சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறான். அதில் இருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான்? என்பதே எதிர் வினையாற்று படத்தின் கதை.
    ×