என் மலர்
முன்னோட்டம்
சாலமன் கண்ணன் இயக்கத்தில் ராம்சந்த், அன்ஷிதா நடிப்பில் உருவாகி வரும் ’திருமாயி’ படத்தின் முன்னோட்டம்.
சாக்ஷினி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சாலமன் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் திருமாயி. கதையின் நாயகனாக ராம்சந்த் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக அன்ஷிதா நடித்துள்ளார். கொடூர வில்லனாக கே.எஸ். மாசாணமுத்து அறிமுகமாகிறார் மேலும் இதில் ராணி, பரவை சுந்தராம்பாள் , நம்பியார் ராஜா, மொட்டைவிஜி, குதிரை முருகன், முரளி கோவிந்த்ராக், முத்துக்காளை, நெல்லை சிவா, கார்த்தி, வீரமணி, பெங்களூர் அலிஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குனர் கூறுகையில், “மலையடிவாரத்திலிருந்து மலைமேல் வாழும் மக்களுக்கான பொருட்களை கழுதை மேல் ஏற்றிக் கொண்டு பாட்டுப் பாடியபடி கொண்டு போய் கொடுத்து வரும் கூட்டத்தை சேர்ந்தவர்கள் தான் இந்தப் படத்தின் நாயகன் நாயகி. தமிழ் சினிமாவில் இதுவரை வந்திராத அளவிற்கு முற்றிலும் மாறுபட்டு முழுவதும் வேறு பட்டு சொல்லப்பட்டுள்ள காதல் கதை இது. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படமிது. இதன் படப்பிடிப்பு தேனி, அல்லிநகரம், கும்பக்கரை, பூதிபுரம், காமக் காபட்டி, சின்னமனூர் வருசநாடு' வடுகபட்டி, கொடைக்கானல், சீலையம்பட்டி, இடங்களில் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.
வெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் தண்டுபாளையம் படத்தின் முன்னோட்டம்.
வெங்கட் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக வெங்கட் கதை, திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் படம் தண்டுபாளையம். சுமன்ரங்கநாத், முமைத்கான், பேனர்ஜி, D.S.ராவ், ராக்லைன் சுதாகர், புல்லட் சோமு, அருண் பச்சன், சஞ்சீவ்குமார், ஜீவா, விட்டல், சினேகா, ரிச்சா சாஸ்திரி, சந்தோஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மேடை நாடக கலைஞர்கள் என்பது கூடுதல் சிறப்பு. இவர்களுடன் தயாரிப்பாளர் வெங்கட் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு - R.கிரி, வசனம் - கிருஷ்ணமூர்த்தி, இசை - ஆனந்த் ராஜா விக்ரம், பாடல்கள் - மோகன்ராஜ், கலை - ஆனந்த் குமார், ஸ்டண்ட் - சந்துரு, நடனம் - பாபா பாஸ்கர், எடிட்டிங் - பாபு ஸ்ரீவஸ்தா, பிரீத்தி மோகன், தயாரிப்பு - வெங்கட், இயக்கம் - K.T. நாயக்
படத்தை ஸ்ரீ லட்சுமிஜோதி கிரியேஷன்ஸ் ஏ.என்.பாலாஜி உலகமெங்கு டிசம்பர் மாதம் வெளியிடுகிறார்.
படம் பற்றி இயக்குனர் K.T.நாயக் கூறியதாவது, 'இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். 1990களில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தண்டுபாளையம் என்ற ஊரில் இருந்து உருவான ஒரு கொள்ளை கும்பல் நாளடைவில் ஆசியாவிலேயே அதிக திருட்டு, கொலை, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நிகழ்த்திய கொடூர கும்பலாக மாறியது. அந்த கேங்கின் உண்மைச் சம்பவங்களை திரட்டி இந்த திரைக்கதையை உருவாக்கி உள்ளோம்.
இந்த தண்டுபாளையம் ஏற்கனவே தெலுங்கு, கன்னடா ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. படம் வருகிற டிசம்பர் மாதம் தமிழ், மலையாளம், ஹிந்தி, போஜ்பூரி, மராட்டி என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
கிரிசய்யா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘ஆதித்ய வர்மா’ படத்தின் முன்னோட்டம்.
விக்ரம் மகன் துருவ், ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்து வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகியுள்ளது. ஆதித்ய வர்மா படத்தில் துருவ்க்கு ஜோடியாக பனித்தா சந்து நடிக்கிறார். பிரியா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் உதவியாளராக பணியாற்றிய கிரிசய்யா இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, அர்ஜூன் ரெட்டி புகழ் ரதான் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நவரசன் இயக்கத்தில் குட்டி ராதிகா, பஜராங்கி லோகி, ஷரன் உல்தி நடிப்பில் உருவாகி உள்ள தமயந்தி படத்தின் முன்னோட்டம்.
'இயற்கை' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கவனம் பெற்றவர் குட்டி ராதிகா. 2006-ஆம் ஆண்டுக்குப் பின் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியவர், தற்போது 13 ஆண்டுகால இடைவெளிக்கு பின் 'தமயந்தி' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் திரும்புகிறார். இயக்குநர் நவரசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் குட்டி ராதிகா அகோரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் பஜராங்கி லோகி, ஷரன் உல்தி, சாது கோகிலா, மித்ரா, பவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு முன்னதாக அனுஷ்காவின் நடிப்பில் வந்த அருந்ததி படத்தை மிஞ்சும் வகையில் இப்படத்தின் காட்சிகளும், வசனங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ஆக்ஷன் படத்தின் முன்னோட்டம்.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ஆக்ஷன். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா, ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அகன்ஷாபூரி, ஷாரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

படம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி. கூறியதாவது: இப்படம் என்னுடைய கனவு படம் என்றும் கூறலாம். இப்படத்தில் எனக்கு பக்க பலமாக அமைந்தது தேசிய விருது பெற்ற அன்பறிவு இருவரும் தான். மிலிட்டரி, தீவிரவாதம், அரசியல் என்று அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது. இப்படத்தில் வில்லி கிடையாது, வில்லன் தான். அந்த வில்லன் யார் என்பது தான் சஸ்பென்ஸ். அது படம் பார்க்கும்போதுதான் தெரியும். விஷாலைத் தவிர வேறு யாராலும் இப்படிப்பட்ட பெரிய திரைப்படத்தை 6 மாத காலங்களிலேயே முடித்திருக்க முடியாது.
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சங்கத்தமிழன்’ படத்தின் முன்னோட்டம்.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சங்கத்தமிழன்’. வாலு, ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராசி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார்கள். மேலும் நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்தை லிப்ரா புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தில் ரஜினியின் படங்களைப் போல் வசனங்கள் அனைத்தும் மாஸாக இருக்கும் என இயக்குனர் விஜய்சந்தர் தெரிவித்திருக்கிறார்.
நாகஷேகர் மூவிஸ் - ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ படத்தின் முன்னோட்டம்.
கன்னட திரையுலகில் பல வெற்றித் திரைப்படங்களை தந்த வெற்றிகரமான இயக்குனர் நாகஷேகர். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான நாகஷேகர் மூவிஸ் மூலம், ஜோனி பிலிம்ஸ் சார்பாக ஜோனி ஹர்ஷா, ஷிவு எஸ் யசோதரா ஆகியோருடன் நாகஷேகர் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’. இப்படத்தை கதை எழுதி, இயக்கும் அவர், முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்.
‘அரண்மனை’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உயர்ந்த நாகஷேகர், அதனைத் தொடர்ந்து ‘சஞ்சு வெட்ஸ் கீதா’, 'மைனா' ஆகிய வெற்றிப் படங்களைத் தந்த ஒரு ஜனரஞ்சகமான இயக்குனர். ‘ரெபல் ஸ்டார்’ அம்பரீஷ் - சுமலதா தம்பதியின் வாரிசான அபிஷேக்கை ‘அமர்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தி, பெரு வெற்றியடையச் செய்த பெருமைக்குரியவர்.
முற்றிலும் புதிய பரிமாணத்தில், ஒரு வித்தியாசமான கதைகளத்துடன், மென்மையானதொரு காதல் கதையான ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’ திரைப்படத்துடன் தமிழ் திரையுலகில் தடம் பதிக்கிறார் நாகஷேகர்.
சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்ய, பிரீத்தம் திரைகதை எழுத, இயக்குனர் விஜி வசனம் எழுத, ரூபன் படத்தொகுப்பை கவனிக்க, லால்குடி N.இளையராஜா கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்கிறார்.
இப்படத்திற்கு மதன் கார்க்கி பாடல்களை எழுத, ஷபிர் இசையமைக்கிறார். சண்டை காட்சிகளுக்கு திலீப் சுப்புராயன் பொறுப்பேற்க, நிர்வாக தயாரிப்பு வேணு வேல்முருகன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
வசூலில் சாதனை படைத்த இயக்குனர் நாகஷேகரின் கன்னடப் படம் ‘மைனா’, மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் ‘முதல் மழை’ என்ற பெயரில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில், இப்புதிய திரைப்படம் குறித்து இப்படக் குழுவினர் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.
சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிப்பில் எஸ்.பி.சித்தார்த், வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் மிஸ்டர் டபிள்யூ படத்தின் முன்னோட்டம்.
சத்தி என் பிலிம்ஸ் சார்பில் மிஸ்டர் சத்தி தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ‘மிஸ்டர் டபிள்யூ’. எஸ்.பி.சித்தார்த் கதையின் நாயகனாக அறிமுகமாக சின்னத்திரை புகழ் வாணி போஜன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் இதில் லிவிங்ஸ்டன், எம்.எஸ்.பாஸ்கர், பைனலிபாரத், வி.ஜே.சித்து, அனுபமா பிரகாஷ், அருள்கோவன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
மிலன் கலையையும், லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பையும், அருள்கோவன் - அசார் நடன பயிற்சியையும், தமிழ் - நிரன்சந்தர் ஒளிப்பதிவையும், தினேஷ் - ரகு தயாரிப்பு நிர்வாகத்தையும், வல்லவன் - அருண் பாரதி,கோசேஷா மூவரும் பாடல்களையும் கவனிக்கின்றனர்.
சென்னை, பெங்களூர் பகுதிகளில் உள்ள முக்கியமான இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ள இதன் இணைத்தயாரிப்பு பொறுப்பை அருள்கோவன் ஏற்றுள்ளார். பிரபல முன்னனி இயக்குனர்கள் பலரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவத்தை கொண்டு "மிஸ்டர் டபிள்யூ" என்கிற கதையை எழுதி வசனம் தீட்டி திரைக்கதை அமைத்து தானே இசையமைத்து தமது முதல் படமாக டைரக்டு செய்து வருகிறார் நிரோஜன் பிரபாகரன்.
பாரி.கே.விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி, முனிஷ்காந்த் நடிப்பில் உருவாகும் பேண்டஸி திரைப்படம் ஆலம்பனா படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் ஆலம்பனா.
அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் ஆலம்பனா எனும் படம் தயாராகிறது. ஆலம்பனா எனும் பெயரிடப்பட்டுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கவனம் ஈர்க்கக்கூடிய படமாக பேண்டஸி கான்செப்ட்டோடும் பிரம்மாண்டமாக தயாராகிறது.
விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர்.
மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதி நடிக்கிறார். முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். முரளிசர்மா ஒரு கேரக்டரில் நடிக்க, வேதாளம் படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.
மிக வித்தியாசமான இந்தக்கதை களத்தில் பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது. சமீபத்தில் வெளியான கோமாளி படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் கவர்ந்த ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். நெடுநால்வாடை படத்தில் கிராமத்தின் அழகை துளியும் குறையாமல் தன் கேமராவிற்குள் கொண்டு வந்த வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ராட்சசனில் தன் இமலாய உழைப்பைக் கொடுத்த எடிட்டர் ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். மாஸான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் கெய்ன் ஸ்டண்ட் பொறுப்பை கவனிக்க, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.
மனுஷா தயாரிப்பில் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்கும் ‘ஜூவாலை’ படத்தின் முன்னோட்டம்.
75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் 'ஜூவாலை'. இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. 'ஜூவாலை' படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார். இவர் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.
தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி வளர்த்து தயாராகி உள்ளார்.
கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹமான் ஜிப்ரீல்.
ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார். இவர் லண்டனைச் சேர்ந்தவர். பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார்.
ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய், பாலக் லால்வாணி நடிப்பில் உருவாகி வரும் ‘சினம்’ படத்தின் முன்னோட்டம்.
அருண் விஜய் அடுத்ததாக நடிக்கும் புதிய படத்திற்கு “சினம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குநர் GNR குமரவேலன் இப்படத்தினை இயக்குகிறார். குற்றம் 23 எனும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு பிறகு அருண் விஜய் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடிக்கிறார். இப்படம் குற்றம் 23ல் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேறொரு வடிவத்தில் போலீஸ் கதையை சொல்வதாக இருக்கும் என்கிறது படக்குழு.
Movie Slide Pvt Ltd நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கிறது. பாலக் லால்வாணி இப்படத்தின் நாயகியாக நடிக்க, நடிகர் காளிவெங்கட் மிக முக்கிய பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். நெஞ்சமுண்டு நேர்மையுண்டு, சகா படப்புகழ் சபீர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, ராஜா முகமது எடிட்டிங் செய்கிறார். மைக்கேல் கலைஇயக்கம் செய்ய, ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சிகளை செய்கிறார். மதன் கார்கி, பிரியா ஏக்நாத் பாடல்களை எழுதுகிறார்கள். படத்தின் விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மிகவிரைவில் துவங்கவுள்ளது.
அஜய் வாசுதேவ் இயக்கத்தில் மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘குபேரன்’ படத்தின் முன்னோட்டம்.
மம்முட்டி, ராஜ்கிரண், மீனா ஆகியோர் நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிப்படமாக உருவாகி வரும் திரைப்படம் 'குபேரன்'. நடிகர் ராஜ்கிரண் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள திரையுலகில் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார். பிரபல மலையாள இயக்குனர் அஜய் வாசுதேவ் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் இந்தப்படத்திற்கு ஷைலாக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் கதையை புதியவர்களான பிபின் மோகன் மற்றும் அனீஸ் ஹமீது ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். ராஜ்கிரண் வசனம் எழுதியுள்ளார். ரணதீவ் இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கவனிக்க, மலையாள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் கோபிசுந்தர் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்திற்கு பாடல்களை ராஜ்கிரண், விவேகா எழுதியுள்ளனர். பல படங்களை ராஜ்கிரண் அவர்கள் இயக்கி இருந்தாலும் பாடல் எழுதுவது இதுவே முதன் முறை.






