என் மலர்
தரவரிசை
ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு, மதுபாலா, ராகுல் விஜய், நாசர், மனோபாலா, சாம்ஸ் நடிப்பில் வெளியாகியிருக்கும் காலேஜ் குமார் படத்தின் விமர்சனம்.
நண்பனின் ஆடிட்டர் அலுவலகத்தில் பியூனாக பணிபுரிகிறார் பிரபு. மகன் பிறந்த சந்தோஷத்தில் இருக்கும் பிரபு நண்பனால் அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் அந்த அலுவலகத்தில் இருந்து நிற்கும் பிரபு தன் மகனை ஆடிட்டர் ஆக்குவேன் என்று சபதம் ஏற்கிறார்.
நல்ல பையனாக வளரும் ராகுல் விஜய் கல்லூரி வந்த பிறகு படிப்பில் தடுமாறுகிறார். பெற்றோர் மனது கஷ்டப்பட கூடாது என்று முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவனின் மார்க் ஷீட்டை காட்டி ஏமாற்றுகிறார். இவை எல்லாம் ஒரு கட்டத்தில் பிரபு, மதுபாலாவிறகு தெரிய வருகிறது. மகனை கண்டிக்கும்போது அவர் அப்பாவை பார்த்து கல்லூரிக்கு சென்று படிக்க முடியுமா? என்று சவால் விடுகிறார். அந்த சவாலை ஏற்றுக்கொண்டு பிரபுவும் கல்லூரி செல்ல தொடங்குகிறார். அதன் பின் என்ன ஆகிறது? என்பதே கதை.
பிரபுவுக்கு இது அல்வா சாப்பிடுவது போன்ற கதாபாத்திரம். வெளுத்து வாங்குகிறார். முதல் பாதியில் அழுத்தமாக இருக்கும் பிரபுவின் கதாபாத்திரம் இரண்டாம் பாதியில் செய்யும் காமெடி அலப்பறைகள் சிரிக்க வைக்கின்றன. இறுதிக்காட்சியில் தன் அனுபவ நடிப்பால் கலங்க வைத்துவிடுகிறார்.

மதுபாலா வழக்கமான அம்மா வேடம் என்றாலும் இடைவேளை காட்சியில் மகனிடம் ஆவேசப்படும் காட்சியில் இயல்பாக நடித்துள்ளார். மகன் மீது கோபம் இருந்தாலும் அவன் கஷ்டப்பட கூடாது என்று உருகும் இடங்களும் அட்டகாசம்.
ராகுல் விஜய்யும் சிறப்பாக நடித்துள்ளார். பார்க்க பக்கத்து வீட்டு பையன் போல இருந்தாலும் பொறுப்பு இல்லாமல் திரிவது, பொறுப்பு வந்த பிறகு அப்பாவை உணர்வது என்று கலக்கி இருக்கிறார்.
பிரியா வட்லமணிக்கு வழக்கமான கதாநாயகி கதாபாத்திரம். மனோபாலா, நாசர், சாம்ஸ் ஆகியோரும் காட்சிகளை கலகலப்பாக நகர்த்தியுள்ளனர்.
குடும்ப கதையாக எழுதி அதில் கலகலப்பான காட்சிகளை வைத்து நல்ல பொழுதுபோக்கு படத்தை ஹரி சந்தோஷ் கொடுத்துள்ளார். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பொருந்தும் வகையிலும் அனைவரும் ரசிக்கும் வகையிலும் நல்ல கதையை உருவாக்கி அதை கமர்சியலாகவும் சொல்லி இருக்கிறார்கள்.
குரு பிரசாத்தின் ஒளிப்பதிவு ரம்மியம். குதூப் ஈ க்ருபாவின் இசையில் பாடல்களில் இளமை தெறிக்கிறது.
மொத்தத்தில் ‘காலேஜ் குமார்’ கலகலப்பு.
ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஸ், சன்னி வேய்ன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் விமர்சனம்.
ஜீவா காஷ்மீரில் போர்க்குண்டுகளுக்கு மத்தியில் பிறக்கிறார். போரில் பெற்றோர் பலியானதால் நாடோடியாக சுற்றி திரியும் ஒருவரது அரவணைப்பில் வளர்கிறார். ஜீவாவும் நாடோடி வாழ்க்கையை வாழ்கிறார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அவரது வாழ்க்கை பயணிக்கிறது.
சீனியர் என்னும் ஜீவாவை வளர்த்தவரும் சே என்னும் குதிரையும் தான் அவருக்கு எல்லாமே... சீனியர் மறைவுக்கு பின் தனியாகிறார். நாகூரில் தங்கி இருக்கும்போது அங்கு கட்டுப்பாடான முஸ்லீம் குடும்பத்தில் இருக்கும் நடாஷாவுக்கு ஜீவா மீது காதல் ஏற்பட்டு அவருடன் வந்துவிடுகிறார். இருவரும் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக நாடோடி வாழ்க்கை வாழ்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நடாஷாவுக்காக வீடு எடுத்து வசிக்கின்றனர். அப்போது அந்த பகுதியில் ஏற்படும் மதக்கலவரம் அவர்களது வாழ்க்கையையே சின்னாபின்னமாக்குகிறது. அதன் பின் அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கர்நாடக எல்லையில் காவேரியை வைத்து அரசியல்வாதிகள் நடத்தும் கலவர காட்சியில் தொடங்கும் படம், முடியும் வரை உண்மைகளின் குவியல்களாகவே இருக்கிறது. மதக்கலவரம், விசாரணைக்கைதி, நாடோடிகளான ஜிப்ஸிக்களின் வாழ்க்கை என செய்திகளாக நாம் கடக்கும் சம்பவங்களை நிஜத்துக்கு வெகு நெருக்கமாக படம் பிடித்து காட்டி நம்மை நிலைகுலைய செய்கிறார் ராஜூமுருகன். அதிலும் சென்சார் பிரச்சினையால் கறுப்பு வெள்ளையாக்கப்பட்ட அந்த இடைவேளை காட்சி நம்மை கலவர இடத்துக்கே கூட்டி செல்கிறது. இறுதி காட்சியில் வன்முறைக்கும் மனிதத்துக்கும் இடையேயான வித்தியாசத்தை காட்சிப்படுத்தி இருப்பது கலங்க வைக்கிறது. தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்துக்கு நேர்மையாக இருந்து படத்தை எழுதி இயக்கிய ராஜூமுருகனுக்கு பாராட்டுகள்.
ஜீவாவின் சினிமா வாழ்க்கையில் இது மிகவும் முக்கியமான படம். எந்த காட்சியிலும் ஜீவா தெரியாமல் ஜிப்ஸியாக வாழ்ந்து இருக்கிறார். முதல் பாதியில் கலகலப்பாக ரசிக்க வைக்கும் ஜீவா இரண்டாம் பாதியில் நம்மை உருகி நெகிழ வைக்கிறார். கதாபாத்திரத்தின் மனநிலை, கதையோட்டம் இரண்டையும் தனது நடிப்பாலும் உடல்மொழிகளாலும் காட்டி அசத்தி இருக்கிறார். மனைவி, மகளை பார்க்கும்போது அவர் கண்களில் தெரியும் பாசம் கலங்க வைக்கிறது.

நடாஷா சிங் அறிமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடித்துள்ளார். அழகாகவும் இருக்கிறார். இனி வாய்ப்புகள் குவியும். அவரது தந்தையாக வரும் லால் ஜோஸ் கட்டுப்பாடு மிக்க இஸ்லாமியரை கண் முன் கொண்டு வந்துள்ளார். கேரள கம்யூனிஸ்டாக சன்னி வேய்ன், கலவரத்தை நடத்தும் வன்முறையாளராக விக்ராந்த் சிங் உள்ளிட்ட அனைவருமே சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும். நாடோடிகளின் வாழ்க்கைக்காக இந்தியா முழுவதும் பயணித்து பல்வேறு நிலப்பரப்புகளின் அழகை அள்ளிக்கொண்டு வரும் செல்வகுமாரின் ஒளிப்பதிவும் கலவர காட்சிகளையும் கண்முன்னே கொண்டு வந்து பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் கதையோட்டத்தை நமக்கு கடத்துகிறது. ரேமண்டின் படத்தொகுப்பில் இரண்டாம் பாதி மட்டும் சற்று தொய்வு தருகிறது.
நாட்டையே உலுக்கிய குஜராத் கலவரத்தின் இரண்டு முகங்கள் சம்பவத்தை மையமாக எடுத்துக்கொண்டு அதில் அழகான காதல் கதையையும், நாடோடி வாழ்க்கையையும் சேர்த்து மனிதத்தின் முக்கியத்துவத்தை படைப்பாக்கி இருக்கிறார் ராஜூ முருகன். இன்றைய காலகட்டத்துக்கு மிக மிக அத்தியாவசியமான படமாக வெளியாகி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ஜிப்ஸி’ கனமான காதல்.
அருண்காந்த் இயக்கத்தில் ராம்குமார், அஷ்வின் குமார், சாம்ஸ், ஒய்ஜி.மகேந்திரன், சந்தானபாரதி, டெல்லி கணேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்த நிலை மாறும் படத்தின் விமர்சனம்.
ஐடி துறையில் இருக்கும் அழுத்தம் தொடர்பாக பணியை விடும் இளைஞர் ஒருவர் நண்பனுடன் சேர்ந்து ஒரு இணைய வானொலி தொடங்குகிறார். அதன் மூலம் மேட்ரிமோனியல் விளம்பரம் கொடுக்கும் நபர்களை போன் செய்து கிண்டல் செய்கிறார்கள். இதனால் மேட்ரிமோனியில் விளம்பரம் வெளியிடும் பத்திரிகைக்கு நஷ்டமாகிறது. இந்த விவகாரம் கோர்ட்டுக்கு வருகிறது. அதன் பிறகு என்ன ஆனது? என்பதே படத்தின் கதை.
பேராசையால் அதீத எதிர்பார்ப்புகளுடன் கொடுக்கப்படும் மேட்ரிமோனியல் விளம்பரங்களை படம் முழுக்க கிண்டலடித்துள்ளனர். சுவாரசியமாக இருக்கிறது. அதே நேரத்தில் ஒரு சமூக கருத்தும் இதில் அடங்கி இருக்கிறது.
இளைஞர்களான ராம்குமார், அஷ்வின் குமார், அருண் காந்த் மூவரும் தங்கள் பங்களிப்பை சரியாக கொடுத்துள்ளார்கள். சாம்ஸ் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார். அவரது மைக்கேல் ஜாக்சன் தோற்றமும் அவரது குறும்புகளும் சிரிப்பை வரவைக்கிறது. ஒய்.ஜி. மகேந்திரனின் வில்லத்தனத்திலும் நகைச்சுவை சேர்த்தது சாமர்த்தியம்.

கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படங்களுக்கு மத்தியில் பரீட்சார்த்த முயற்சியாக வெளியாகும் இண்டிபெண்டண்ட் மூவி எனப்படும் சுயாதீன படங்கள் வரிசையில் இந்த நிலை மாறும் படம் வெளியாகி இருக்கிறது. அருண் காந்த் என்ற இளைஞர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை, படத்தொகுப்பு, ஒலி வடிவமைப்பு, உடைகள், கிராபிக்ஸ் என பல துறைகளை கையாண்டு படத்தை எடுத்துள்ளார்.
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் நல்ல சுவாரசியமான படமாகவும் வித்தியாசமான முயற்சியாகவும் அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘இந்த நிலை மாறும்’ மாற்றம் வரும்.
யுவராஜ் முனிஷ் இயக்கத்தில், ரக்ஷன், இளயா, ரித்திகா, லதா இசை ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கடலில் கட்டுமரமாய்’ படத்தின் விமர்சனம்.
விவசாயத்திற்குகாக போராடி, விவசாய சங்க தலைவராக இருந்து வருகிறார் நாயகன் ரக்ஷனின் தந்தை பாலு. இவரின் மகன் ரக்ஷன் சென்னையில் சாப்ட்வேர் வேலையில் பணி புரிந்து வருகிறார். இவரது திறமையால் வெளிநாட்டில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் பெரிய முதலீடு செய்ய வருகிறார்கள். ரக்ஷன் முன் நின்று புதிய திட்டத்தை ஆரம்பித்து நன்றாக முடித்து கொடுக்கிறார்.
இந்நிலையில், கிராமத்தில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கிறது. இதை நாயகனின் தந்தை பாலு எதிர்க்கிறார். அவர்களுடன் நடக்கும் மோதலில் நாயகனின் தந்தையும், நண்பரும் இறக்கிறார்கள். மனவேதனையடையும் ரக்ஷன், எதனால் இவர்கள் இறந்தார்கள் என்பதை அறிய முயற்சிக்கிறார்.

வெளிநாட்டு முதலீட்டார்கள் மூலம், தான் கொண்டுவந்த திட்டத்தால்தான் தந்தையும், நண்பரும் இறந்தார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் ரக்ஷன். இறுதியில் ரக்ஷன் விவசாய நிலங்களுக்கு போராட்டினாரா? தான் கொண்டுவந்த திட்டத்தை தொடர்ந்து செயல் படுத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ரக்ஷன், ஆக்ஷன், சென்டிமெண்ட், காதல் காட்சி என அனைத்திலும் நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். தன்னால்தான் தந்தைக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து வருந்தும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகனாக வரும், இளயா, நாயகிகளாக வரும் ரித்திகா, லதா இசை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். தந்தையாக வரும் கோவை பாலு நடிப்பால் மனதில் பதிகிறார்.

விவசாயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் யுவராஜ் முனிஷ். 10 பேர் சேர்ந்து ஆரம்பித்த ஜல்லிக்கட்டு போராட்டம் நாளடைவில் ஆயிரக்கணக்காணோர் சேர்ந்து எப்படி வெற்றிகண்டதோ, அதுபோல் ஏன் விவசாயத்துக்காக மக்கள் போராட கூடாது என்பதை இயக்குனர் வலியுறுத்தி இருக்கிறார். அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை சொல்லவந்ததற்கு பாராட்டுகள். சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் வசனங்கள், சொல்ல வந்த கருத்துகள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஏ.கே.ராம்ஜியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.
மொத்தத்தில் ‘கடலில் கட்டுமரமாய்’ விவசாய போராட்டம்.
தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரக்ஷன், ரிது வர்மா, நிரஞ்சனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் விமர்சனம்.
நாயகன் துல்கர் சல்மானும், ரக்ஷனும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் வேலைக்கு போகாமல், வீட்டில் இருந்து கொண்டு ஆப் மூலம் சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில், நாயகி ரிது வர்மாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் துல்கர் சல்மான்.
இருவரும் காதலித்து வரும் நிலையில், போலீஸ் அதிகாரியாக இருக்கும் கவுதம் மேனன் இவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அதன்பின் துல்கர் சல்மானின் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படுகிறது. இந்த கதையை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் படமாக எடுத்திருக்கிறார்கள்.
இந்த கதையை 2 மணி நேரம் 40 நிமிடங்கள் எடுக்க என்ன இருக்கிறது என்று தியேட்டரில் போய் உட்கார்ந்தால், முழு நேரமும் உங்களை எழுந்திரிருக்க விடாமல் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்கள். இதுதான் இந்த கதையின் சிறப்பம்சம்.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் துல்கர் சல்மானுக்கு இப்படம் 25-வது படம். சத்தமே இல்லாமல் வெளியானாலும் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவிற்கு நடித்திருக்கிறார். நண்பராக வரும் ரக்ஷன் ஆங்காங்கே காமெடியில் கலக்கி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரிது வர்மா அழகாலும், நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பிற்பாதியில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் நிரஞ்சனிக்கு கொஞ்சம் சீரியசான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் கவுதம் மேனன் நடிகராக முத்திரை பதித்திருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். இவரது குரல் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஸ்டைலிஷ் இயக்குனர் என்று பெயர் பெற்ற இவரை, இனிமேல் ஸ்டைலிஷ் நடிகர் என்றே அழைக்கலாம்.

முதல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை சுவாரஸ்யமாக எடுத்து சென்றிருக்கிறார் இயக்குனர் தேசிங் பெரியசாமி. திரைக்கதையில் பல திருப்பங்கள் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களை மிகவும் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
மசாலா காஃபி, ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கேட்கும் ரகம். கே.எம்.பாஸ்கரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கண்களுக்கு விருந்து.
மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார், கருணாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரெளபதி படத்தின் விமர்சனம்.
ரிச்சர்ட் விழுப்புரம் அருகே இருக்கும் சேந்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர். இரட்டை கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு செல்கிறார். பின்னர் ஜாமினில் வெளியே வரும் ரிச்சர்டு, சென்னையில் தனது நண்பருடன் தங்குகிறார். ராயபுரத்தில் இருக்கும் பதிவாளர் அலுவலகத்தில் டீ விற்று வருகிறார். அங்கே திருமண பதிவு விஷயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதையும் போலி திருமணங்கள் நடத்தப்படுவதையும் கண்டுபிடிக்கிறார்.
இதற்கு அரசு அதிகாரியான பதிவாளரும் உடந்தை என்பதால் இந்த குற்றத்தை பொறி வைத்து பிடிக்க ரிச்சர்டு திட்டமிடுகிறார். இந்த சூழலில் போலி திருமணங்கள் செய்து வைக்கும் நபர்களை கொன்று அதன் வீடியோக்களை கமிஷனருக்கே அனுப்பி வைக்கிறார். இதையடுத்து ரிச்சர்ட் என்ன செய்தார்? அவர் மனைவி திரெளபதிக்கு என்ன ஆனது? திருமண மோசடிகளுக்கு அவர் தீர்வு கண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ரிச்சர்டுக்கு படத்தையே தாங்கும் கதாபாத்திரம். பொறுமை, ஆக்ரோஷம் இரண்டையும் காட்டும் கதாபாத்திரம். நடிப்பில் வித்தியாசம் காட்டுகிறார். அவரது மனைவியாக வரும் ஷீலா ராஜ்குமார் சிறப்பான நடிப்பு. சமூகத்துக்காக அவர் பேசும் வசனங்கள் கைதட்டல்கள் வாங்குகின்றன. சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் கருணாசுக்கு நிறைவான வேடம். மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள்.
பொய்யான காதலை எதிர்க்கிறேன் என்று ஒட்டுமொத்த காதலர்களையும் காதலையும் கொச்சைப்படுத்தி இருக்கவேண்டாம். படம் முழுக்க லாஜிக் மீறல்களும் இருக்கின்றன. அதேபோல் பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணங்கள் நடக்கவேண்டும் என்பது கற்காலத்துக்கே நம்மை அழைத்து செல்வதுடன் நகைப்புக்குரியதாகவும் இருக்கிறது.

குறைகள் இருந்தாலும் திருமண மோசடிகளை விளக்கும் படமாக திரெளபதி அமைந்துள்ளது. விழிப்புணர்வு படமாக மோகன்.ஜி கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட கையாண்டுள்ளார்.
மனோஜ் நாராயணனின் நேர்த்தியான ஒளிப்பதிவும், ஜூபினின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
மொத்தத்தில் ‘திரெளபதி’ பலம்.
டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், அர்ச்சனா, கஞ்சா கருப்பு, மதுசூதனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் இரும்பு மனிதன் படத்தின் விமர்சனம்.
நாயகன் சந்தோஷ் பிரதாப் ஓட்டல் தொழில் மீது ஆர்வம் கொண்டவர். நன்றாக சமைக்கவும் தெரிந்தவர். ஒரு சின்ன ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். அனாதைகளாக இருக்கும் 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துவருகிறார். மனநலம் பாதித்த பிச்சைக்கார பெண்மணி ஒருவருக்கு பிறக்கும் குழந்தையும் அனாதையாகிவிட அதையும் எடுத்து மூவரையும் தன் சொந்த மகன்கள் போல வளர்க்கிறார்.
இந்த சூழலில் திருட வரும் கஞ்சா கருப்புவை தன் கடையிலேயே உதவியாளராகவும் வைத்துக்கொள்கிறார் சந்தோஷ். இந்நிலையில் இடங்களை மிரட்டி பிடுங்கும் தாதா மதுசூதனன் கண்களில் சந்தோஷின் கடை படுகிறது. சந்தோஷை மிரட்டி பணிய வைக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் தொழிலில் அபார வளர்ச்சி அடையும் சந்தோஷ் பல ஓட்டல்களுக்கு முதலாளியாகிறார்.

மகன்களை பிரித்துவிடுவார் என்பதால் காதலில் அர்ச்சனாவை ஒதுக்கும் சந்தோஷ், அதன் பின்னர் கல்யாணம் செய்துகொள்ளாமல் மகன்களுக்காகவே வாழ்கிறார். ஆனால் மகன்களோ சொத்துகளை பிடுங்கிக்கொண்டு சந்தோஷை நடுத்தெருவில் விடுகின்றனர். மகன்களின் துரோகத்தில் இருந்து சந்தோஷ் மீண்டு ஜெயித்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
நாயகன் சந்தோஷ் பிரதாப் இதுவரை பார்த்திராத வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார். படத்தையே தன் நடிப்பால் தான் தாங்கவேண்டும் என்பதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். இளவயது துடிதுடிப்பையும் முதுமையில் வரும் பொறுமையையும் அனுபவத்தையும் ஒருசேர காட்டி இருக்கிறார்.

அர்ச்சனா சந்தோஷை துரத்தி துரத்தி காதலிக்கிறார். திடீர் என்று அவர் மாறுவதை தான் நம்ப முடியவில்லை. கஞ்சா கருப்பு கலகலப்பாக கதையை நகர்த்துகிறார். இரண்டாம் பாதியில் உணர்வுபூர்வமான காட்சிகளிலும் கலக்கி இருக்கிறார். வழக்கமான வில்லன் தான் என்றாலும் மதுசூதனன் தோற்றங்களிலும் உடல்மொழியிலும் வித்தியாசம் காட்டுகிறார். மகன்களாக வரும் நிஷாந்த், அகில், திலீப் மூவரும் தங்கள் பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
இளைஞர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் அளிக்கும் வகையில், தயாரிப்பாளர் ஜோசப் பேபியின் கதையை கையில் எடுத்து அதை ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக தர முயன்று இருக்கிறார் இயக்குனர் டிஸ்னி. சில காட்சிகள் மட்டும் பழைய படங்களை நினைவுபடுத்துவது பலவீனம். இருந்தாலும் ரசிக்க வைக்கின்றன.

பிள்ளைகளை முழுமையாக நம்பினால் என்ன நிலை ஏற்படும் என்பதையும் காட்டி இருக்கிறார். சமூகத்துக்கும் இளைஞர்களுக்கும் மிகவும் அவசியமான படமாக இரும்பு மனிதன் அமைந்துள்ளது.
கேஎஸ்.மனோஜின் இசையும் கே.கோகுலின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. எஸ்பி.அகமதுவின் படத்தொகுப்பில் இரண்டாம் பாதி விறுவிறுவென நகர்கிறது.
மொத்தத்தில் ‘இரும்பு மனிதன்’ வலிமை.
ஹரி உத்ரா இயக்கத்தில் சிவா நிஷாந்த், ஐரா, ஆண்டனி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கல்தா’ படத்தின் விமர்சனம்.
தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கிராமத்தில் பணத்திற்காக அரசியல்வாதிகள் மருத்துவ கழிவுகள் மற்றும் மாமிச கழிவுகளை கொட்டி குவிக்கிறார்கள். இந்த கிராமத்தில் வசிக்கும் நாயகன் சிவா நிஷாந்தின் அப்பா கஜராஜ் மற்றும் ஆண்டனி ஆகியோர் இதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த கழிவு பொருட்களின் பாதிப்பால் ஆண்டனியின் மனைவி உட்பட ஊரில் பலர் இறக்கிறார்கள். இதனால் கோபமடையும் ஆண்டனி மது போதைக்கு அடிமையாகி ஊர் கவுன்சிலரிடம் சண்டை போடுகிறார். கவுன்சிலரோ ஆண்டனியை கொலை செய்து விடுகிறார்.

இறுதியில் ஊர் மக்கள் இதை எதிர்த்து போராடினார்களா? கவுன்சிலர் என்ன ஆனார்? மருத்து கழிவுகள் கொட்டப்படுவது தடுக்கப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிவா நிஷாந்த் அறிமுக நடிகர் என்று தெரியாதளவிற்கு நடனம், சண்டைக்காட்சிகளில் நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக வரும் ஐரா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்த ஆண்டனி, கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் கஜராஜ்.

கழிவுகள் கொட்டப்படுவதால் கிராமங்கள் எப்படி பாதிக்கப்படுகிறது. பணத்திற்காக அரசியல்வாதிகள் செய்யும் தவறுகள். கழிவுகளால் சுகாதாரம் எப்படி கெடுகிறது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஹரி உத்ரா. இவரின் முயற்சிக்கு பெரிய பாராட்டுகள். லாஜிக் மீறல்களும் திரைக்கதையில் கொஞ்சம் கவனமும் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஜெய் கிரிஷின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக அப்பா பாடல் ரசிக்க வைக்கிறது. வாசுவின் ஒளிப்பதிவு கவனிக்க வைத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘கல்தா’ அரசியல் பழகு.
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கி இருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ படத்தின் விமர்சனம்.
எழுத்தாளரான பாரதிராஜா லண்டனில் வசிக்கும் மகனால் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார். அங்கு அவருடன் பழகி இறந்த நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஒரு பயணத்தை தொடங்குகிறார். அப்போது அக்கா கணவரின் கொடுமையில் இருந்து தப்பித்த நட்சத்திராவை சந்திக்கிறார். தற்கொலை முடிவில் இருக்கும் நட்சத்திரா மனதை மாற்றிக்காட்டுவதாக உறுதி தருகிறார்.
10 நாட்களில் மாற்ற முடியாவிட்டாலே தன் கையாலேயே கொன்றுவிடுவதாக சவால் விடுகிறார். அந்த 10 நாட்கள் பயணத்தில் நட்சத்திராவுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை புரியவைத்தாரா? பாரதிராஜா எடுத்துக்கொண்ட கடமை என்ன ஆனது? பாரதிராஜா, நட்சத்திரா இருவருக்கும் இடையே உண்டாகும் உறவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

பாரதிராஜா தனக்கான கச்சிதமான கதாபாத்திரத்தை உருவாக்கி அதில் அனுபவ நடிப்பை காட்டி இருக்கிறார். அவர் பேசும் சில வசனங்கள் அழுத்தமானதாக இருக்கின்றன.
ராசி நட்சத்திரா தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். பாரதிராஜாவிடம் அவர் குறும்பு செய்யும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. மவுனிகா, ஜோ.மல்லூரி இருவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்.

தற்கொலையோ, கொலையோ ஒரு உயிரை எடுக்கும் உரிமை நமக்கு இல்லை என்பதை படம் உணர்த்துகிறது. கதையில் இருந்த வலுவை திரைக்கதை, வசனங்களிலும் கொண்டு வந்திருந்தால் இந்த மரியாதையும் காலம் கடந்து பேசப்பட்டு இருக்கும்.
லண்டன் அழகை சாலை சகாதேவனின் கேமரா அப்படியே கொண்டு வந்துள்ளது. ரகுநந்தனின் பின்னணி இசை படத்துடன் ஒன்ற வைக்கிறது. பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
மொத்தத்தில் ‘மீண்டும் ஒரு மரியாதை’ நட்பும் பயணமும்.
போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு ராமசாமி, சாயாதேவி, ஆடுகளம் முருகதாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘கன்னி மாடம்’ படத்தின் விமர்சனம்.
சென்னையில் ஆட்டோ ஓட்டும் ஶ்ரீராம் கார்த்திக்கும் ஆடுகளம் முருகதாசும் உறவினர்கள். ஊரில் வசதியாக வாழ்ந்த இவர்கள் இங்கு ஆட்டோ ஓட்டுவதற்கு பின்னணியில் ஸ்ரீராம் கார்த்திக் தந்தையின் சாதிவெறியால் ஏற்பட்ட சம்பவம் இருக்கிறது.
ஊரை விட்டு சென்னை வரும் காதல் ஜோடி விஷ்ணுவும் சாயாதேவியும் ஶ்ரீராம் கார்த்திக், முருகதாஸ் தங்கியிருக்கும் வீட்டின் அருகிலேயே குடி வருகிறார்கள். அவர்களை சாதிவெறி கொண்ட கும்பல் ஆணவக்கொலை செய்ய துரத்துகிறது. சாயாதேவியை கொன்று விட்டு, விஷ்ணுவை அழைத்துச் செல்வது அவர்கள் திட்டம்.
அவர்களின் திட்டம் நிறவேறியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

ஸ்ரீராம் கார்த்திக்குக்கு உள்ளுக்குள் சோகத்தை வைத்துக்கொண்டு நண்பர்களுக்காக சிரித்து வாழும் கதாபாத்திரம். அதை சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாம் பாதி முழுக்க உணர்வுபூர்வமான நடிப்பு.
சாயாதேவிக்கு படத்தையே தாங்கும் கதாபாத்திரம். முதல் படம் என்பதை நம்ப முடியாத அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். முதல் பாதியில் மட்டும் வரும் விஷ்ணுவும் கவர்கிறார். ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, பிரியங்கா சங்கர் மூவருமே காமெடியாக படத்தை நகர்த்துகிறார். உணர்வுபூர்வ காட்சிகளிலும் மூவரும் கலக்கி இருக்கிறார்கள். ஆட்டோ டிரைவராக வந்து காதலை, மனதுக்குள் புதைக்கும் வலினா, சாதிவெறியுடன் அலையும் கஜராஜ் என அனைவரும் கச்சிதமான தேர்வு.

நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராகி இருக்கும் படம். முதல் படத்திலேயே சில உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட கதையை எழுதி, அதை நேர்த்தியாக சொல்ல முயன்றுள்ளார். இடைவேளை காட்சியும் இறுதிக்காட்சியும் அவரை தேர்ந்த இயக்குனராக அடையாளம் காட்டுகிறது.
ஹரி சாயின் பின்னணி இசையும் ஹரிஷ் ஜெ இனியனின் ஒளிப்பதிவும் கதையோடு பயணிக்க உதவுகிறது. சாதிவெறி கொடுமையை பல படங்களில் பார்த்திருந்தாலும் இந்த கதையின் முடிவு அதிர்ச்சி கொடுக்கிறது. சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் சாதிவெறியுடன் போராடும் காதலையும் நேசத்தையும் இயல்பாக சொன்னதில் படம் மனதை கனக்க செய்கிறது.
மொத்தத்தில் ‘கன்னி மாடம்’ சுவாரஸ்யம் குறைவு.
பிரியா கிருஷ்ணசுவாமி இயக்கத்தில் ஆர்.ராஜு, முத்துக்குமார், சுகுமார் சண்முகம் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பாரம்’ படத்தின் விமர்சனம்.
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் காவல்காரராக இருந்து வருபவர், கருப்பசாமி. அறுபது வயதை தாண்டிய அவர், ஒரு விபத்தில் சிக்குகிறார். அதில், அவருடைய இடுப்பு எலும்பு முறிந்து போகிறது. பக்கத்து டவுனில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகிறார்கள். அவரை பரிசோதித்த டாக்டர், “இடுப்பில் ஆபரேஷன் செய்து சிகிச்சை அளித்தால் குணமாகி விடும்” என்கிறார்.
அதற்கு செலவாகும் என்பதால் அவருடைய மகன் செந்தில் ஆபரேஷனுக்கு சம்மதிக்க மறுக்கிறார். வலியால் துடிக்கும் அப்பாவுக்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல், அலட்சியப்படுத்துகிறார். இந்த நிலையில், பெரியவர் கருப்பசாமி திடீரென்று மரணம் அடைகிறார். அவருடைய மரணத்தில் மர்மம் இருப்பதாக கருப்பசாமியின் மருமகன்கள் (சகோதரியின் மகன்கள்) சந்தேகிக்கிறார்கள்.
மருமகன்களில் ஒருவரான வீரா போலீசுக்கு தகவல் தெரிவிக்கிறார். பத்திரிகைகளுக்கும் தகவல் கொடுக்கிறார். அமைச்சர் கேட்டுக்கொண்டதால், கருப்பசாமியின் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று வழக்கை முடித்து விடுகிறார்கள்.

பத்திரிகை நிருபர்கள் துப்பறிந்து, கருப்பசாமிக்கு அவருடைய மகன் சம்மதத்தின் பேரில், விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டதை கண்டுபிடிக்கிறார்கள். இந்த விவகாரம் நாடு முழுவதும் காட்டுத்தீயாக பரவுகிறது. இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா? அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படுகிறது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கருப்பசாமியாக ஆர்.ராஜு நடித்து இருக்கிறார். விபத்துக்குள்ளாகி காயம் அடைந்த ஒரு முதியவரின் வலியையும், வேதனைகளையும் படுத்துக்கொண்டே வெளிப்படுத்துகிறார். இயற்கை உபாதைக்காக, மகனை அழைக்கும்போது, ஒட்டு மொத்த பார்வையாளர்களின் அனுதாபத்தை சம்பாதிக்கிறார்.
அவரைப்போலவே ஒப்பனை எதுவும் செய்து கொள்ளாமல் கருப்பசாமியின் மகன் முத்துக்குமார், மருமகன்கள் சுகுமார் சண்முகம், சமராஜா, பிரேம்நாத், சகோதரியாக ஜெயலட்சுமி ஆகியோர் கிராமத்து மனிதர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

டைரக்டர் பிரியா கிருஷ்ணசுவாமி, கிராமப்புறங்களில் தலைக்கூத்தல் என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப்பற்றி இந்த படத்தில் விவரமாக கூறியுள்ளார். இயல்பான நடிப்பு, யதார்த்தமான காட்சிகள் மூலம் ஒரு கிராமத்தில், எளிய மனிதர்களுடன் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்தி விடுகிறார்.
இசையமைப்பாளர் வெட் நாயர், ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேதுமாதவன் ஆகியோரும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளனர்.
மொத்தத்தில் ‘பாரம்’ அபாரம்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மாஃபியா’ படத்தின் விமர்சனம்.
அருண் விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாக இருக்கிறார். அவரது குழுவில் பிரியா பவானி சங்கரும், ஒரு இளைஞரும் பணியாற்றுகின்றனர். சென்னையில் முக்கிய இடங்களில் அருண்விஜய் தலைமையிலான குழு திடீர் சோதனை நடத்துகிறது. இந்த சோதனையில் கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் போதை புழக்கத்தை கண்டறிகிறார் அருண் விஜய். அவரது இந்த சோதனையில் போதை மருந்து கடத்தும் சின்ன சின்ன ஆட்கள் மட்டுமே சிக்குகின்றனர். அவரால் பெரும் புள்ளிகளை நெருங்க முடியவில்லை.

இந்த சூழலில், போதை மருந்து தடுப்பு பிரிவில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரும், அருண் விஜய்க்கு சில முக்கிய தகவல்களை தந்த சமூக ஆர்வலர் ஒருவரும் கொல்லப்படுகின்றனர். இதன்பிறகு தேடலை துரிதப்படுத்தும் அருண் விஜய் போதை மருந்து கடத்தல் மாஃபியாவின் பெரும் புள்ளியை கண்டுபிடித்தாரா? போதை மருந்து புழக்கத்தை ஒழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் அருண் விஜய், போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். உடல்மொழியால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனை நெருங்க முயற்சிக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கின்றார். ஆக்ஷன் காட்சிகளில் அதகளப்படுத்தி இருக்கிறார்.

நாயகி பிரியா பவானி சங்கர், மற்ற நாயகிகள் போல் காதல், ரொமான்ஸ் என்று இல்லாமல் ஆக்ஷன் காட்சிகளிலும் திறம்பட நடித்து கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஸ்டைலிஷ் வில்லனாக மனதில் பதிகிறார் பிரசன்னா.
இயக்குனர் கார்த்திக் நரேன், படத்தை மிகவும் ஸ்டைலிஷாக எடுத்துள்ளார். துருவங்கள் பதினாறு படத்தின் வெற்றியால் மாஃபியா படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை ஓரளவு மட்டுமே பூர்த்தி செய்துள்ளார் கார்த்திக் நரேன்.

இரண்டாம் பாதியை போல் முதல் பாதியும் வேகமாக இருந்திருந்தால் ரசித்திருக்கலாம். கிளைமாக்ஸில் கொடுக்கும் டுவிஸ்ட் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. கோகுல் பினாயின் ஒளிப்பதிவில் படம் மிகவும் ஸ்டைலிஷாக வந்துள்ளது.
மொத்தத்தில் ‘மாஃபியா’ வேகம் குறைவு.






