என் மலர்tooltip icon

    தரவரிசை

    கே.அலெக்சாண்டர் இயக்கத்தில் சோழவேந்தன், தேஜா ரெட்டி, காயத்ரி, வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘குட்டி தேவதை’ படத்தின் விமர்சனம்.
    ஊர் தலைவராகவும், சாதி தலைவராகவும் கெத்தாக வாழ்ந்து வரும் வேல ராமமூர்த்திக்கு, சாதி மாறி காதலிப்பதோ, திருமணம் செய்வதோ அறவே பிடிக்காது. ஊரில் யாராவது வேறு சாதியினரை காதலித்தால், அவர்களை வெறித்தனமாக தாக்குவது, தேவைப்பட்டால் கொலை செய்வது என எந்த எல்லைக்கும் செல்கிறார். இப்படிப்பட்ட சாதி வெறி பிடித்த தலைவருக்கு அவரது மகன் மூலம் சோதனை வருகிறது.

    இவருடைய மகன் சோழவேந்தன் வேறொரு சாதியினரை சேர்ந்த நாயகி தேஜாவை காதலிக்கிறார். இந்த விஷயம் வேல ராமமூர்த்திக்கு தெரியவர, மகனை கண்டிக்கிறார். ஆனால், அவரோ வீட்டை விட்டு ஓடிச்சென்று, தேஜாவை திருமணம் செய்து வாழ்கிறார். இதனால் மேலும் ஆத்திரமடையும் வேல ராமமூர்த்தி, சோழவேந்தனையும், தேஜாவையும் கொலை செய்ய தேடி வருகிறார்.

    குழந்தை பிறக்கும் நேரத்தில் வேல ராமமூர்த்தியால் கொலை செய்யப்படுகிறார் தேஜா. பிறந்த குழந்தையை தூக்கிக் கொண்டு சோழவேந்தன் நகரத்துக்கு சென்று விடுகிறார். அங்கு எம்.எஸ்.பாஸ்கருடன் வேலை செய்துக் கொண்டு குழந்தையை வளர்த்து வருகிறார். மேலும் எம்.எஸ்.பாஸ்கரின் மகளையும் திருமணம் செய்துக் கொள்கிறார்.

    குட்டி தேவதை விமர்சனம்

    இந்நிலையில், இறந்ததாக நினைத்த மனைவி தேஜா, சோழவேந்தனை தேடி வருகிறார். அதே சமயம், எம்.எஸ்.பாஸ்கர் தனது மகள் மற்றும் பேத்தியை அழைத்துக் கொண்டு வேல ராமமூர்த்தியை சந்தித்து குடும்பத்துடன் இணைய முயற்சிக்கிறார்.

    இறுதியில் சோழவேந்தன் இரண்டு மனைவிகளில் யாருடன் சேர்ந்தார்? வேல ராமமூர்த்தியின் ஜாதி வெறி தணிந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சோழவேந்தன், தன்னால் முடிந்த அளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். நாயகிகள் தேஜா ரெட்டி, காயத்ரி இருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள். சிறுமியாக வரும் பேபி சவி சிறப்பான நடிப்பு.

    குட்டி தேவதை விமர்சனம்

    சாதிவெறி பிடித்த பெரிய மனிதர் பாத்திரத்தில் வேல ராமமூர்த்தியும் அவரை திருத்த போராடும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் படத்தை கலகலப்பாகவும் நகர்த்துகிறார்.

    கண் முன்னே நடக்கும் ஆணவக்கொலை சம்பவங்களை கோர்த்து ஒரு கதையாக்கி இருக்கிறார் இயக்குனர் அலெக்சாண்டர். கல் நெஞ்சக்காரரையும் அன்பால் மாற்றலாம் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    அமுதபாரதியின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். சூரியன், நௌசத்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

    மொத்தத்தில் ‘குட்டி தேவதை’ சுவாரஸ்யம் குறைவு.
    ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் நட்டி நட்ராஜ், அனன்யா, அஸ்வந்த், லால் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘காட் ஃபாதர்’ படத்தின் விமர்சனம்.
    சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நாயகன் நட்ராஜ், தன் மனைவி அனன்யா, மகன் அஸ்வந்துடன் வாழ்ந்து வருகிறார். மிகவும் சாதுவான நட்ராஜ், எந்த பிரச்சனைக்கும் செல்லாமல், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கிறார். 

    இதே பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் லால், 13 வருடத்திற்கு பிறகு பிறந்த தன் மகன் மீது மிகவும் பாசமாக இருக்கிறார். இந்த மகனுக்கு இதய நோய் ஏற்படுகிறது. மகனை காப்பாற்ற வேண்டும் என்றால் அவனது குரூப் ரத்தம் மற்றும் அதே வயதில் உள்ள சிறுவன் வேண்டும் என்று டாக்டர் கூறுகிறார்.

    காட் ஃபாதர் விமர்சனம்

    என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கும் லால், நட்ராஜ் மகனின் ரத்தம் மற்றும் இதயம் தன் மகனுக்கு பொருந்தும் என்பதை அறிந்துக் கொள்கிறார். இதனால், நட்ராஜின் மகனை கொன்று இதயத்தை எடுத்து மகனுக்கு பொருத்த நினைக்கிறார். இதையறிந்த நட்ராஜ் தன் மகனின் உயிரை காப்பாற்ற போராடுகிறார். 

    இறுதியில் லால் தன் திட்டத்தை முடித்து மகனை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    காட் ஃபாதர் விமர்சனம்

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நட்ராஜ், பொறுப்பான கணவராகவும், பாசமான அப்பாவாகவும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார். குறிப்பாக மகனை காப்பாற்ற முயற்சிக்கும் காட்சியில் கவனத்தை ஈர்த்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நாயகி அனன்யா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். கணவரின் அமைதியான குணத்துக்கு நேர் எதிரான குணத்தையும் அதே நேரத்தில் மகன் ஆபத்தில் சிக்கியதும் அவர் காட்டும் பரிதவிப்பும் சிறப்பு.

    வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் லால். தான் நினைத்தவர்கள் எல்லோரையும் கொன்று குவிக்கும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவரின் மிரட்டல் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சின்ன சின்ன அசைவுகளால் ரசிக்க வைத்திருக்கிறார் சிறுவன் அஸ்வந்த். வில்லன்களிடம் இருந்து தப்பிக்க அவர் மறைக்கப்படும் காட்சிகள் திகிலூட்டுகின்றன.

    காட் ஃபாதர் விமர்சனம்

    சிறிய கதையை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகன் ராஜசேகர். குறைந்த நடிகர்களை கொண்டு ஒரு அபார்ட்மெண்டுக்குள்ளேயே கதையை முக்கால்வாசி நகர்த்தி இருக்கிறார். லாஜிக் மீறல்கள் மற்றும் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

    சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு சமமாக திகிலூட்டுகின்றன. நவின் ரவீந்தரனின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம். 

    மொத்தத்தில் ‘காட் ஃபாதர்’ கனகச்சிதம்.
    என்.கே.கண்டி இயக்கத்தில் ஆதர்ஷ், அன்னம் ஷாஜன் நடிப்பில் வெளியாகி இருக்கும் டே நைட் படத்தின் விமர்சனம்.
    ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் நாயகன் ஆதர்ஷை தேடி, நாயகி அன்னம் ஷாஜன் அங்கு செல்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில், நாயகன் ஆதர்ஷுக்கு ஒரு விபத்து மூலம் பணம் கிடைக்கிறது. இந்த பணத்தால் நாயகன் ஆதர்ஷ்க்கு பிரச்சனை ஏற்படுகிறது. 

    மேலும் நாயகி அன்னம் ஷாஜன் மர்மமான முறையில் இறக்கிறார். இவர் இறந்து ஓராண்டு கழித்து, ஆதர்ஷுக்கு அன்னம் ஷாஜன் போன் பண்ணுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் ஆதர்ஷ், அன்னம் ஷாஜனை தேடி செல்கிறார்.

    இறுதியில் அன்னம் ஷாஜனை ஆதர்ஷ் கண்டுபிடித்தாரா? அன்னம் ஷாஜன் உயிருடன் தான் இருக்கிறாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டே நைட் படக்குழு

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ், புதுமுக நடிகர் என்று தெரியாதளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். பதட்டம், படபடப்பு என அவரது நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. நாயகியாக நடித்திருக்கும் அன்னம் ஷாஜன் பயத்துடன் நடித்து கவனிக்க வைத்திருக்கிறார்.

    கிரைம் திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் என்.கே.கண்டி. ஆஸ்திரேலியாவில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுத்தது போல் தெரியவில்லை, அந்தளவிற்கு காட்சியமைப்பை கொடுத்திருக்கிறார். இயக்குனர் என்.கே.கண்டி, இயக்கியது மட்டுமில்லாமல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து கவர்ந்திருக்கிறார். 

    டே நைட் படக்குழு

    அரவிந்தின் ஒளிப்பதிவும் அரி சென்னின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவின் அழகை அரவிந்தின் கேமரா அழகாக படம் பிடித்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘டே நைட்’ பட்ஜெட் திரில்லர்.
    கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா நடிப்பில் வெளியாகி இருக்கும் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் விமர்சனம்.
    கதாசிரியராக வேண்டும் என்று கனவோடு இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இவரும் நாயகி ராஷி கண்ணாவும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். வேலைக்கு ஏதும் போகாமல் ராஷி கண்ணாவின் பணத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.

    இந்நிலையில், விஜய் தேவரகொண்டா இதுவரைக்கும் எந்த கதையும் எழுதாததால் ராஷி கண்ணாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இருவரும் பிரிகிறார்கள். வருத்தத்தில் இருக்கும் விஜய் தேவரகொண்டா, தன்னை மையமாக வைத்து கதை எழுதுகிறார்.

    வேர்ல்ட் பேமஸ் லவ்வர்

    எழுதிய கதையோடு ராஷி கண்ணாவை பார்க்க செல்கிறார். அங்கு ராஷி கண்ணா வேறொரு பிரச்சனையில் இருக்கிறார். இறுதியில் விஜய் தேவரகொண்டா கதையாசிரியர் ஆனாரா? ராஷி கண்ணாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா இளமை துள்ளலுடன் நடித்துள்ளார். காதல், சென்டிமெண்ட் என நடிப்பில் அதகளப்படுத்தி இருக்கிறார். முழு படத்தையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். நாயகியாக வரும் ராஷி கண்ணா நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குடும்ப பெண்ணாக மனதில் பதிகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் கேத்ரின் தெரசா.

    வேர்ல்ட் பேமஸ் லவ்வர்

    காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கிராந்தி மாதவ். காதல் காட்சிகள் படத்தில் அதிகம் இருந்தாலும் அதை ரசிக்கும் அளவிற்கு இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஜெயகிருஷ்ணா கும்மாடியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    மொத்தத்தில் ‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ இன்னும் பேமஸ் ஆக வேண்டும்.
    ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நான் சிரித்தால்’ படத்தின் விமர்சனம்.
    ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஆதிக்கு ஒரு விசித்திரமான பிரச்சனை உள்ளது. அதாவது சோகமானாலோ, பதற்றம் ஏற்பட்டாலோ அவருக்கு தாங்கமுடியாமல் சிரித்துவிடுவார். இந்த சிரிப்பால் அவர் வேலையை இழக்கிறார். அவரது காதலும் சிக்கலுக்குள்ளாகிறது. இந்த சூழலில் காணாமல் போன தன் நண்பனை மற்ற நண்பர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்கின்றார் ஆதி.

    இதேபோல் தாதாக்களான ரவி மரியாவும் கே.எஸ். ரவிக்குமாரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கின்றனர். கே.எஸ். ரவிக்குமாரை கொல்ல ரவி மரியா மூன்று ரவுடிகளை அனுப்பி வைக்கிறார். நண்பனை தேடி செல்லும் ஆதி எதிர்பாராத விதமாக கே.எஸ். ரவிக்குமாரிடம் சிக்கி கொள்கிறார். இறுதியில் ஆதி அங்கிருந்து எப்படி தப்பித்தார்? அவரின் காதல் கை கூடியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நான் சிரித்தால் படக்குழு

    கெக்க பெக்க எனும் பெயரில் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற குறும்படத்தை முழு நீள படமாக எடுத்துள்ளனர். நாயகன் ஆதி, வழக்கம்போல தனது துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், காமெடி, டான்ஸ் என கமர்ஷியல் ஹீரோவாக அசத்தி இருக்கிறார். நாயகி ஐஸ்வர்யா மேனன், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார். 

    ஆதியின் தந்தையாக வரும் படவா கோபி, டைமிங் காமெடிகளின் மூலம் சிரிக்க வைக்கிறார். ஆதிக்கும் அவருக்கும் இடையிலான அப்பா, மகன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. அதேபோல் வில்லனாக நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிமரியா, இருவருமே அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். 

    நான் சிரித்தால் படக்குழு

    இந்த கதையை கெக்க பெக்க எனும் குறும்படம் மூலம் ரசிக்க வைத்த இயக்குனர் ராணா, இந்த படத்தில் அதனை தவறவிட்டுள்ளார். கதாபாத்திரங்களில் தேர்வில் கவனம் செலுத்தி உள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். காமெடி காட்சிகள் சில இடங்களில் மட்டுமே ரசிக்கும் படியாக உள்ளது. 

    ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பிரேக் அப், நான் சிரித்தால் ஆகிய பாடல்களை தவிர மற்றவை மனதில் ஒட்டவில்லை. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன. 

    மொத்தத்தில் ‘நான் சிரித்தால்’ கலகலப்பு குறைவு.
    அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ’ஓ மை கடவுளே’ படத்தின் விமர்சனம்.
    சிறு வயதில் இருந்தே அசோக் செல்வனும், ரித்திகா சிங்கும் நண்பர்களாக இருந்து வருகின்றனர். வாலிபம் வந்த பின்பும் இவர்களின் நட்பு தொடர்கிறது. நண்பனாக இருக்கும் அசோக் செல்வனே கணவரானால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என கருதும் ரித்திகா சிங், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறார். அசோக் செல்வனும் தயக்கத்துடன் அதற்கு சம்மதிக்கிறார்.

    இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த சூழலில் அசோக் செல்வனின் சின்ன வயது சினேகிதியான வாணி போஜன் இவர்களது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். அசோக் செல்வனை விட இரண்டு வயது மூத்தவர் வாணி போஜன். அசோக் செல்வனும் வாணி போஜனும் நெருங்கி பழகுவது ரித்திகா சிங்கிற்கு பிடிக்கவில்லை. 

    ஓ மை கடவுளே படக்குழு

    இதனால் அடிக்கடி அசோக் செல்வனுடன் சண்டை போடும் ரித்திகா சிங், ஒரு கட்டத்தில் விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். மன உளைச்சலில் இருக்கும் அசோக் செல்வன் முன்பு விஜய் சேதுபதியும், ரமே‌‌ஷ் திலக்கும் கடவுளாக ஆஜராகிறார்கள். உனக்கு இன்னொரு வாழ்க்கையை தருகிறோம், இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என கூறுகிறார்கள்.

    அந்த வாழ்க்கையில் ரித்திகா சிங், வாணி போஜன் ஆகிய இருவருடனும் பழகி வரும் அசோக் செல்வன், இரண்டு பேரில் யாரை திருமணம் செய்து கொள்கிறார்? என்பதே மீதிக்கதை.

    ஓ மை கடவுளே படக்குழு

    நாயகன் அசோக் செல்வன், இரண்டு பெண்களிடம் சிக்கி தவிக்கும் இளைஞன் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். குறும்பான நண்பராகவும், ஜாலியான கணவராகவும் படம் முழுக்க வருகிறார். ரித்திகா சிங், வாணி போஜன் ஆகிய இருவருடனும் அசோக் செல்வனுக்கு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருப்பது படத்திற்கு பிளஸ்.

    ரித்திகா சிங், நண்பராக இருக்கும் போது வெகுளியாக இருப்பவர், மனைவியான பின் கணவரை சந்தேகப்படும் காட்சிகளில், கதாபாத்திரமாகவே மாறி கலக்கி இருக்கிறார். வாணி போஜன், காதல் தேவதையாக வருகிறார். அவர் வருகிற காட்சிகள் எல்லாமே வசீகரிக்கின்றன. எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    ஓ மை கடவுளே படக்குழு

    கடவுள்களாக வரும் விஜய் சேதுபதியும், ரமே‌‌ஷ் திலக்கும் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவியிருக்கின்றனர். ‌ஷாரா, ஒரு நண்பனுக்கே உரிய கடமைகளை தவறாமல் செய்திருக்கிறார். ஆங்காங்கே அவர் அடிக்கும் கவுண்ட்டர் காமெடி சிரிக்க வைக்கிறது. 

    படத்தின் முதல் பாதி காதலும், மோதலுமாக கடந்து போகிறது. இரண்டாவது பாதியில், ஆரம்பம் முதல் இறுதிவரை கவித்துவமான காட்சிகள். ஒரு காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்லி கைதட்ட வைக்கிறார், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. 

    லியோன் ஜேம்சின் பின்னணி இசை படத்திற்கு புத்துயிர் தருகிறது. பாடல்கள் ஓகே ரகம் தான். விது அய்யண்ணா ஒளிப்பதிவு காட்சிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. 

    மொத்தத்தில் ‘ஓ மை கடவுளே’ காதல் கலாட்டா.
    மில்கா எஸ். செல்வகுமார் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் - மனிஷா யாதவ் நடிப்பில் வெளியாகி இருக்கும் சண்டிமுனி படத்தின் விமர்சனம்.
    மனைவியும் பெற்றோரும் ஒரு விபத்தில் மரணமடைந்த நிலையில், தனியாக வாழ்ந்துவருகிறார் நட்ராஜ். அவர் வசித்து வரும் வீட்டில் பேய் இருப்பதாக, அப்பகுதியைச் சேர்ந்த புரோக்கர் ஒருவர் தகவல் பரப்புகிறார். அப்பகுதி மக்களும் அது உண்மை என்று நம்பத் தொடங்குகின்றனர். ஆனால் நட்ராஜ் இதனை நம்ப மறுக்கிறார்.

    இந்த சூழலில் பள்ளியொன்றில் பணியாற்றும் மனிஷா செல்லும் இடமெல்லாம் பேய்கள் விடாது துரத்துகின்றன. இதற்கு தீர்வு காண மனிஷாவின் குடும்பத்தினர் ஒரு சாமியாரைச் சந்திக்கின்றனர். அவர் சொல்லும் தீர்வினால், மனிஷாவும் நட்ராஜும் நேருக்கு நேர் சந்திக்கின்றனர். காதல் மலர்கிறது. அதுவே, அவர்கள் இருவருக்கும் திருமண ஏற்பாடு நடக்கக் காரணமாகிறது.

    சண்டிமுனி

    இதன்பின்னர், நட்ராஜின் கண்களுக்கும் பேய் தென்படத் தொடங்குகிறது. அந்த பேய் மனிஷாவைக் கொல்ல முயற்சிக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடையும் நட்ராஜ், மனிஷாவை விட்டு பேய் விலக என்ன செய்தார்? அந்த பேய் யார் என்பதை கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    சண்டிமுனி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நட்ராஜ் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கஞ்சனா படத்தில் லாரன்ஸ் செய்வது போல், பேய் தன்னுள் புகுந்ததும் பெண் போல் நட்ராஜ் நடித்துள்ள காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. நாயகி மனிஷா யாதவ் தாமரை, ராதிகா என இரு வேடங்களில் நடித்து அசத்தியுள்ளார். இரு கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் நடிப்பில் வித்யாசம் காட்டி இருக்கிறார். 

    சண்டிமுனி

    ஆர்த்தி அவ்வப்போது வந்து சிரிக்க வைக்கிறார். யோகிபாபு பிளாஷ்பேக் காட்சியில் மட்டும் வந்து தலையை காட்டிவிட்டு செல்கிறார். ஒருவர் மீது கொண்ட அன்பு மரணமடைந்த பின்னும் தொடரும் என்பதை சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குனர் தலையை சுற்றி மூக்கை தொடுவது போல் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது மிகப்பெரிய மைனஸ். 

    ஏ.கே.ரிஷால்சாயின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான், பின்னணி இசை இன்னும் மிரட்டலாக கொடுத்திருக்கலாம். செந்தில் ராஜகோபால் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன. 

    மொத்தத்தில் ‘சண்டிமுனி’  தொய்வு.
    எஸ்.பி. ராஜ்பிரபு இயக்கத்தில் மைக்கேல் சசிகுமார், குணா, அமலா மரியா, கிருத்திகா நடிப்பில் வெளியாகி இருக்கும் புலிக்கொடி தேவன் படத்தின் விமர்சனம்.
    மேல்சாதி குடும்பத்துப் பெண்ணுக்கும் கீழ்சாதி இளைஞனுக்கும் காதல் மலர்கிறது. சாதிவெறி பிடித்த பெண்ணின் அப்பா, குடும்ப கெளரவம் கெட்டுவிடும் என்பதைக் காரணமாகச் சொல்லி குடும்பத்தின் சம்மதத்தோடு தன் மகளைக் கொன்று விடுகிறார். காதலியைப் பறிகொடுத்த அந்த இளைஞன் மனநலம் பாதிக்கப்படுகிறான். கதையில் இது ஒரு டிராக்.

     ஊரில் பெரிய மனிதர் அவர். சாதியில் உயர்ந்தவர். அவரது தங்கையை கீழ்சாதி இளைஞன் ஒருவன் காதலிக்கிறான். பெண்ணுடைய அண்ணனின் சாதிவெறி இந்த காதலர்களை என்ன செய்தது என்பது கதையின் இன்னொரு டிராக். இரண்டு கதைக்குமான தொடர்பு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    புலிக்கொடி தேவன்

    நாயகர்கள் மைக்கேல் சசிகுமார், குணா ஆகியோர் நடிப்பில் வெளிப்படும் அப்பாவித்தனம், நாயகிகள் அமலா மரியா, கிருத்திகா நடிப்பில் வெளிப்படும் குழந்தைத்தனம் கதாபாத்திரத்துக்கு பலம். பெருத்த தேகம், முறுக்கு மீசை என கம்பீரமான தோற்றத்தில் வேலா கிருஷ்ணசாமி. புலிக்கொடி தேவனாக, சாதிவெறியில் ஊறிப்போனவராக தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நடித்திருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. நாயகன் குணாவின் அண்ணனாக அருள் அன்பழகனும் சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளார்.

    புலிக்கொடி தேவன்

    சாதிவெறியால் சின்னாபின்னமாகும் காதலை மையப்படுத்தி படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் எஸ்.பி. ராஜ்பிரபு. படத்தில் காமெடி காட்சிகளுக்காக இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஜீவன் மயில் இசையில் ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘கள்ளி என் கள்ளி’ பாடல்கள் இனிமை.  சமித் சந்துருவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.

    மொத்தத்தில் ‘புலிக்கொடி தேவன்’ சாதியும்.... காதலும்.
    ரமேஷ்.ஜி இயக்கத்தில் வினோத் கிஷன், அம்மு அபிராமி, ராஜபாண்டியன், விஷ்ணு பிரியா, ஆர் என் ஆர் மனோகர், முத்துராமன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘அடவி’ படத்தின் விமர்சனம்.
    இயற்கை எழில் கொஞ்சும் கோத்தகிரி மலைப்பகுதியில் ஒரு கிராமத்தில் சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வம் வந்து சமூக விரோதிகள் சிலரை கொடூரமாக கொல்கிறது. போலீஸ் இதை நம்ப மறுத்து கிராம மக்களை பிடித்து விசாரிக்கின்றனர். அப்போதுதான் வினோத் கிஷன், அம்மு அபிராமியின் பிளாஷ்பேக் காட்சிகள் வருகின்றன. 

    கோத்தகிரி மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் (மனோகரன்) முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த முருகன் (வினோத்), வள்ளி (அம்மு அபிராமி)யும் மக்களை ஒன்று சேர்த்து அந்தக் கும்பலை எதிர்த்துப் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே மீதிக்கதை.

    அடவி விமர்சனம்

    வினோத் கிஷன் மலைவாழ் இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என நன்றாக நடித்துள்ளார். அம்மு அபிராமி கதாநாயகியாக வந்து உள்ளங்களை கொள்ளையடிக்கிறார். அழகான காதலியாக மட்டும் அல்லாமல் சிலம்பு சுற்றும் காட்சிகளிலும் மிரட்டி இருக்கிறார்.

    வள்ளியின் தோழியாக வரும் விஷ்ணுபிரியாவுக்கு சிறப்பான கதாபாத்திரம். தனது பங்களிப்பை உணர்ந்து நடித்துள்ளார். ராஜபாண்டியன், ஆர்.என்.ஆர்.மனோகர், முத்துராமன், கே.சாம்பசிவம் ஆகியோரும் அந்தந்த கதாபாத்திரத்துக்கு உரிய சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார்கள். ஏற்கனவே பல திரைப்படங்களில் காட்டிய மலைவாழ் மக்களை விரட்டியடிக்கும் கதை என்ற தோற்றம் இருந்தாலும், தேன்மொழி தாஸின் வசனமும், ரமேஷ்.ஜி ஒளிப்பதிவும் நம்மை இருக்கையில் கட்டிப்போகிறது. 

    அடவி விமர்சனம்

    சரத் ஜடாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளது. மலைவாழ் மக்களின் இசையையும் பாடலையும் படத்தில் பயன்படுத்தியது பொருத்தம். சதீஷ் குரோசேவ்வின் படத்தொகுப்பில் முதல் பாதியில் இருந்த வேகத்தை இரண்டாம் பாதியிலும் கொண்டு வந்து இருக்கலாம்.

    அடவி என்றால் காடு மட்டும் அல்ல. அதுதான் வாழ்க்கை. அதை அழிப்பதன் மூலம் நம் வாழ்க்கையை நாமே குழிதோண்டி புதைத்துக்கொள்கிறோம் என்ற கருத்தை வலுவாகவும் வணிக ரீதியாகவும் சொல்லியிருக்கிறார்கள். வனம் என்னும் இயற்கை அளித்த வரத்தை சுயலாபத்துக்காக சிதைக்க நினைப்பவர்களுக்கு எதிரான மலைவாழ் மக்களின் போராட்டமே அடவி.

    மொத்தத்தில் ‘அடவி’ அடர்த்தி குறைவு.
    தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் விமர்சனம்.
    சரத்குமார் தனது அண்ணன் பாலாஜி சக்திவேலை கொல்ல முயற்சித்தவர்களை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். பின்னர் சரத்குமாரின் மனைவி ராதிகா தனது பிள்ளைகள் விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் சென்னைக்கு குடியேறுகிறார். கஷ்டப்பட்டு உழைத்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார். முதலில் டிரைவராக வேலைபார்த்து வரும் விக்ரம் பிரபு, பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தமாக வாழை மண்டி ஆரம்பிக்கிறார். 

    அவரின் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இந்த சூழலில் கொலை வழக்கில் 16 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த சரத்குமார், விடுதலையாகி குடும்பத்தை பார்க்க ஆவலோடு வருகிறார். ஆனால் விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் அவரை ஏற்க மறுக்கிறார்கள். இதனிடையே, சிறையில் இருந்து வந்த சரத்குமாரை தீர்த்து கட்ட, அவர் கொலை செய்தவரின் மகனான நந்தா துடித்து கொண்டிருக்கிறார். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    வானம் கொட்டட்டும்

    நாயகன் விக்ரம் பிரபு, சாதிக்கத்துடிக்கும் இளைஞனாக தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் குறும்புத்தனமான தங்கையாக வந்து கவர்கிறார். அவருக்கு விக்ரம்பிரபுவுக்கும் இடையேயான அண்ணன் - தங்கை பாசம் ரசிக்க வைக்கிறது.

    படத்தின் மிகப்பெரிய பலம் சரத்குமாரும், ராதிகாவும் தான். நீண்ட நாட்களுக்கு பின் ஜோடியாக நடித்துள்ள இருவரும் தங்களது அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்கள். சாந்தனு மற்றும் மடோனா செபஸ்டியனுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

    வானம் கொட்டட்டும்

    இரட்டை வேடத்தில் நடித்துள்ள நந்தா, சரத்குமாரை பழிவாங்க துடிக்கும் வில்லனாக வந்து பார்வையிலேயே மிரட்டுகிறார். மேலும் பாலாஜி சக்திவேல், மதுசூதனன் ஆகியோர் எதார்த்தமாக நடித்துள்ளனர். 

    இயக்குனர் தனசேகரன் அறிமுக படத்திலேயே கதைக்கு ஏற்றபடி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த விதமும், அதனை கையாண்டுள்ள விதமும் சிறப்பு. சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது. மற்றபடி குடும்பத்தோடு சென்று ரசிக்க கூடிய வகையில் படத்தை எடுத்துள்ளார்.

    வானம் கொட்டட்டும்

    சித் ஸ்ரீராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக கண்ணு தங்கம் பாடல் திரைக்கதைக்கு ஏற்றார் போல் பொருந்திப்போகிறது. அதேபோல் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. பிரீதா ஜெயராமின் ஒளிப்பதிவு கச்சிதம்.

    மொத்தத்தில் ‘வானம் கொட்டட்டும்’ பாச மழை.
    ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா, ரியா சுமன், நவ்தீப், வருண், சதீஷ் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சீறு’ படத்தின் விமர்சனம்.
    மாயவரத்தில் தொலைக்காட்சி சேனல் நடத்தி வரும் ஜீவாவுக்கும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கும் பகை ஏற்படுகிறது. இதனால், ஆத்திரமடையும் எம்.எல்.ஏ, ஜீவாவை கொல்ல சென்னை வியாசர்பாடியின் பெரிய ரவுடியான வருணை மாயவரத்திற்கு அழைக்கிறார்.

    இதைக் கேள்விப்பட்ட ஜீவா பயப்படாமல், ‘வருண் வரட்டும் பார்க்கலாம்’ என காத்திருக்கிறார். மாயவரத்திற்கு வரும் வருண், பிரசவ வலியில் துடித்த ஜீவாவின் தங்கையை மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றுகிறார். தன்னை கொல்ல வந்த இடத்தில், தன் தங்கையின் உயிரை காப்பாற்றிவிட்டு சென்ற வருணின் மனிதாபிமானத்தை நினைத்து பெருமைப்படுகிறார் ஜீவா. அவரைத் தேடி சென்னைக்கு வரும் ஜீவா, ரவுடிகளால் கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த வருணை காப்பாற்றுகிறார். அத்துடன் வருணை கொல்ல வந்தவர்களை பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார்.

    சீறு விமர்சனம்

    இறுதியில் வருணை கொல்ல வந்தவர்களை ஜீவா கண்டுபிடித்தாரா?, இந்த கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ஜீவா, ஆக்‌ஷன், சென்டிமெண்ட் நடிப்பில் அசத்தி இருக்கிறார். வழக்கமான ஜீவாவை இதில் பார்க்க முடியவில்லை. தங்கை மீது பாசம் காட்டுவது, நட்புக்கு மரியாதை கொடுப்பது என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். நாயகியாக வரும் ரியா சுமன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். கொஞ்சம் நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார் சதீஷ்.

    சீறு விமர்சனம்

    ரவுடியாக மிரட்டி இருக்கிறார் வருண். படத்திற்கு படம் நடிப்பில் முன்னேற்றம் காண்பித்து வருகிறார். ரவுடிக்கு உண்டான தோற்றம், உடலமைப்பு என மல்லி கதாபாத்திரத்தை மெருகேற்றி இருக்கிறார். மற்றொரு வில்லனாக ஒயிட் காலர் கிரிமினலாக வரும் நவ்தீப் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்.

    அண்ணன்-தங்கை பாசம், மற்றும் நட்பை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ரத்ன சிவா. ஆண்கள் மட்டும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, பெண்களும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதை ஆழமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரத்ன சிவா. லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ரசனையுடன் காட்சிகளை அமைத்திருக்கிறார். குறிப்பாக, கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார்.

    சீறு விமர்சனம்

    இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார். கிராமத்து அழகையும், நகரத்து அழகையும் அற்புதமாக படம் பிடித்திருக்கிறது பிரசன்னா குமாரின் கேமரா.

    மொத்தத்தில் ‘சீறு’ தாறுமாறு.
    மஞ்சித் திவாகர் இயக்கத்தில் அக்‌ஷதா ஸ்ரீதர், ஆர்.கே.சுரேஷ், நேகா சாக்சேனா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வன்முறை’ படத்தின் விமர்சனம்.
    நாயகி அக்‌ஷதா தந்தையை இழந்து தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். நாயகியை இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விடுகிறார். இதனால் கருவுற்ற அக்‌ஷதா, கருவை கலைக்க மருத்துவர் நேகா சக்சேனாவை நாடுகிறார். ஆனால் அவரோ இங்கு கருக்கலைப்பு செய்தால் பிரச்சனையாகிவிடும் என கூறி அக்‌ஷதாவை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்.

    கருக்கலைப்பு செய்வதற்காக சென்னை வரும் அக்‌ஷதாவை, மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி கூட்டிச்செல்லும் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிடுகின்றார். அப்போது மயக்கமடையும் அக்‌ஷதாவை, இறந்துவிட்டதாக கருதி அங்கேயே விட்டு சென்றுவிடுகின்றனர். 

    வன்முறை

    போலீஸ் அதிகாரியான ஆர்.கே.சுரேஷ் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கிறார். பின்னர் ஆர்.கே .சுரேஷ் அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளைத் தேடிச்செல்கிறார். இறுதியில் ஆர்.கே.சுரேஷ் அவர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நாயகன் ஆர்.கே.சுரேஷ், மிடுக்கான போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். இரண்டாம் பாதியில் வந்தாலும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றத்தை கண்டறிவதற்காக அவர் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் படத்தின் வேகத்தை கூட்டுகிறது.

    வன்முறை

    நாயகி அக்‌ஷதா ஸ்ரீதர் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல் டாக்டராக வரும் நேகா சாக்சேனாவும், தாயாக வரும் சர்மிளாவும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஆட்டோ டிரைவராக வரும் வினோத்  கிருஷ்ணன் கொடூர வில்லனாக மிரட்டுகிறார்

    நாட்டில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளும் கொடுமைகளும் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே அச்சப்படும் சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் உண்மைகள் வெளியே தெரியாமலேயே புதைக்கப்படுகின்றன. பொள்ளாச்சி, தெலுங்கானா போன்ற சம்பவங்களை மையமாக வைத்து இந்த ‘வன்முறை’ படம் எடுத்துள்ளார்  இயக்குனர் மஞ்சித் திவாகர்.

    வன்முறை

    அழுத்தமான கதையை தேர்ந்தெடுத்த இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம். சன்னி விஸ்வநாத்தின் பின்னணி இசை வலுசேர்க்கிறது. ஐயப்பனின் நேர்த்தியான ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன.

    மொத்தத்தில் ‘வன்முறை’ சுவாரஸ்யம் குறைவு.
    ×