என் மலர்
தரவரிசை
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தன்யா, ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் நெஞ்சுக்கு நீதி படத்தின் விமர்சனம்.
சாதி வேறுபாடுகள் அதிகமாக இருக்கும் ஊருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறார் ஐபிஎஸ் அதிகாரியான உதயநிதி. இந்த ஊரில் 2 இளம் பெண்கள் கொல்லப்பட்டு தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள். மேலும் ஒரு பெண் காணாமல் போகிறார்.


இந்தக் கொலை வழக்கை விசாரிக்கும் உதயநிதிக்கு பல தடங்கல்கள் வருகிறது. தடங்கல்களை கடந்து கொலைக்கான காரணத்தையும் காணாமல் போன பெண்ணையும் உதயநிதி கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக விஜயராகவன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து இருக்கிறது. தேவையான இடங்களில் மட்டும் கோபத்தை வெளிக்காட்டும் அந்தக் கதாபாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் தன்யா ரவிச்சந்திரன், உதயநிதிக்கு ஊக்குவிக்கும் கதாபாத்திரம். இதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். குமரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆரியின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். குறைசொல்ல முடியாத நடிப்பை கொடுத்திருக்கிறார். காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் சுரேஷ் சக்ரவரத்தியின் வில்லத்தனம் கலந்த நடிப்பு கவனிக்க வைத்திருக்கிறது. ஷிவானி ராஜ் சேகர், இளவரசு, மயில்சாமி, ரமேஷ் திலக், ராட்சசன் சரவணன் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறது.

இந்தியில் வெளியான 'ஆர்டிக்கிள் 15' படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக ஒரு சில காட்சிகளை சேர்த்தும், சிலவற்றை நீக்கியும் படமாக்கியிருக்கிறார் அருண்ராஜா காமராஜ். சத்துணவு சமைக்கும் பெண் ஒருவர் பட்டிலியன சாதி என்பதால் புறக்கணிக்கப்பட்டு அவமானப்படுத்தியது, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் பெரியார், அம்பேத்கர் சிலைகள், உண்மைச் சம்பவங்களை ஆங்காங்கே காட்சிப்படுத்தியிருப்பது சிறப்பு. கதாபாத்திரங்கள் இடையே அருமையாக வேலை வாங்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸின் பின்னணி இசை, ரசிகர்களை கண்கலங்க வைக்கிறது. திரையில் தோன்றும் காட்சிகளின் உணர்வுகளுக்கு உயிரூட்டுகிறது அவரது இசை. அங்காங்கே வரும் பாடல்கள் கவனிக்க வைக்கின்றது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
மொத்தத்தில் 'நெஞ்சுக்கு நீதி' வெல்லும்.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் டான் படத்தின் விமர்சனம்.
கிராமத்தில் வாழும் சமுத்திரக்கனி, தனக்கு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால், சிவகார்த்திகேயன் மகனாக பிறக்கிறார். தான் படும் கஷ்டம் தன் மகனுக்கு வர கூடாது என்று நினைத்து, சிவகார்த்திகேயனை படித்து பெரிய ஆளாக்க நினைக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால், சிவகார்த்திகேயனோ படிக்காமல் பெரிய ஆளாக மாற நினைக்கிறார்.



அதன்பின் இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார் சிவகார்த்திகேயன். அங்கு ஆசிரியராக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவிற்கும் சிவகார்த்திகேயனுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. சிவகார்த்திகேயனை இன்ஜினியரிங் டிகிரி வாங்க விடாமல் தடுக்கிறார்.

இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவின் தடைகளை தாண்டி, சிவகார்த்திகேயன் இன்ஜினியரிங் முடித்தாரா? வாழ்க்கையில் சாதித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன் துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். நடனம், காமெடி, சென்டிமென்ட், காதல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக நடனம் மற்றும் பள்ளி பருவ காட்சிகளில் கவனத்தை ஈர்த்து இருக்கிறார். தற்போது படிக்கும் மாணவர்களின் பிரதிபலிப்பாக ஜொலித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இறுதியில் கண்கலங்க வைத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரியங்கா மோகன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் இருவரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. படத்திற்கு பெரிய பலம் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு. பல இடங்களில் சாதாரணமாக நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். கண்டிப்பான அப்பாவாக மனதில் பதிந்திருக்கிறார் சமுத்திரக்கனி. ராதாரவி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா, சிவாங்கி, ஆர்ஜே.விஜய் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறார்கள்.
மாணவர்களின் கல்லூரி படிப்பு, அப்பா மகன் பாசம், இளம் இயக்குனர்களின் உணர்வை படமாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். முதல் பட இயக்குனர் என்று சொல்ல முடியாத அளவிற்கு படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் உணர்வுபூர்வமாக இயக்கி இருக்கிறார்.

அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசை சிறப்பு. பாஸ்கரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
மொத்தத்தில் 'டான்' டாப்.
கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு, நடிப்பில் வெளியாகி இருக்கும் கூகுள் குட்டப்பா படத்தின் விமர்சனம்.
கோவை மாவட்டத்தில் தந்தை கே.எஸ்.ரவிக்குமாருடன் வாழ்ந்து வருகிறார் தர்ஷன். இவர் இஞ்சினியரிங் படித்து முடித்து விட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுகிறார். ஆனால், தந்தை கே.எஸ்.ரவிக்குமார், தர்ஷனின் ஆசைக்கு தடை போடுகிறார். ஒருவழியாக தந்தையை சமாதானப்படுத்தி ஜெர்மன் செல்கிறார் தர்ஷன்.
மேலும், தனிமையில் இருக்கும் தந்தையை கவனித்துக் கொள்ள தனது நிறுவனத்தால் பரிசோதனையில் இருக்கும் ஒரு ரோபோவை அவருக்கு துணையாக தருகிறார். ஆரம்பத்தில் அந்த ரோபோவை வெறுக்கும் கே.எஸ்.ரவிக்குமார், ஒரு கட்டத்தில், ரோபோவின் அன்பில் விழுந்து அதையே தன்னுடைய மகனாக பார்த்து கொள்கிறார்.

பரிசோதனை முடிந்து அந்த ரோபோவை நிறுவன முதலாளி திரும்ப கேட்க, கே.எஸ்.ரவிக்குமார் திருப்பி அனுப்ப மறுக்கிறார். இதனால், ரோபோவை எடுத்து செல்ல இந்தியா திரும்புகிறார் தர்ஷன். இறுதியில் கே.எஸ்.ரவிக்குமார் ரோபோவை திருப்பி கொடுத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தந்தையாக நடித்திருக்கும் கேஎஸ் ரவிக்குமார், முழு கதையும் தன் தோளில் தாங்கி நடித்திருக்கிறார். எந்த இடத்திலும் குறை சொல்லாத அளவிற்கு தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார். மகனாக நடித்திருக்கும் தர்ஷன் தன்னால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். யோகிபாபுவின் காமெடி பெரியதாக எடுபடவில்லை.

மலையாளத்தில் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ திரைப்படத்தை தமிழில் கூகுள் குட்டப்பா என்ற பெயரில் தயாரித்து நடித்திருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார். இவருடன் ரோபோ காம்பினேஷன் காட்சிகள் படத்திற்கு ஆறுதலாக உள்ளது. இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சபரி மற்றும் சரவணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். கதையை நேராக சொல்லாமல் கதாபாத்திரங்களை சுற்றி சுற்றி காண்பித்து திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசை படத்திற்கு ஓரளவு பலம் சேர்த்திருக்கிறது. பின்னணி இசை ரசிக்க வைத்திருக்கிறார். அர்வியின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘கூகுள் குட்டப்பா’ சுமாரப்பா.
சாமி இயக்கத்தில் மஹீன், பேபி திவ்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் அக்கா குருவி படத்தின் விமர்சனம்.
சிறுவன்-சிறுமியாக இருக்கும் அண்ணன்-தங்கை. அவர்களின் ஏழை தந்தை, நோயாளி தாய், ஒரு இளம் காதல் ஜோடி... இவர்கள்தான் படத்தின் கதாபாத்திரங்கள். இந்த ஆறு பேர்களை வைத்துக்கொண்டு உணர்வுப்பூர்வமாக கதை சொல்லியிருக்கிறார், இயக்குனர் சாமி.
ஒரு ‘ஷூ’வில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. சிறுமி சாராவின் ‘ஷூ’ திடீரென்று காணாமல் போகிறது. அது, கான்வென்ட் என்பதால் ‘ஷூ’ இல்லாமல் பள்ளிக்குள் அனுமதிக்கமாட்டார்கள். சாராவின் பள்ளி நேரம் முடிந்ததும் தேவா ஓடிப்போய் தங்கையிடம் இருந்து ‘ஷூ’வை வாங்கி அணிந்து கொண்டு தனது பள்ளிக்கு ஓடுகிறான். இப்படி அண்ணனும், தங்கையும் ஒரே ‘ஷூ’வை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு சமாளிக்கிறார்கள்.

சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் காசு சேர்த்து வரும் தேவா, தங்கைக்கு ‘ஷூ’ வாங்கி கொடுப்பதற்காக அந்த உண்டியலை உடைக்கிறான். அவன் தங்கைக்கு புது ‘ஷூ’ வாங்கிக் கொடுத்தானா?, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
தேவாவாக மாஸ்டர் மஹீன், தங்கையாக பேபி திவ்யா நடித்து இருக்கிறார்கள் என்று சொல்வதைவிட, பாசமுள்ள அண்ணன்-தங்கையாகவே கவனம் ஈர்க்கிறார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இருவரும் நடித்தது போல் தெரியவில்லை. இவர்களின் தந்தையாக வி.எஸ்.குமாருக்கு இது முதல் படம் என்பது திரையில் தெரிகிறது.
இந்த மூன்று பேர்களின் கதையை மட்டும் சொன்னால், ‘ஒரு அப்பாவும், இரண்டு குழந்தைகளும்’ என்று படம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடங்கிப்போயிருக்கும்.

மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறு ஆக்கமாக இயக்குனர் சாமி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சாமியிடம் இருந்து இப்படி ஒரு படமா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். தேவாவும், அவனுடைய தந்தையும் நகரத்துக்கு வந்து தோட்ட வேலை தேடுவது, தேவையில்லாத காட்சி.
பின்னணி இசை மூலம் பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார், இசையமைப்பாளர் இளையராஜா. கொடைக்கானல் அழகை மாறாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் உத்பல் வி.நாயனார்.
மொத்தத்தில் ‘அக்கா குருவி’ கோடை கால விருந்து.
பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, மது ஷாலினி நடிப்பில் வெளியாகி இருக்கும் விசித்திரன் படத்தின் விமர்சனம்.
நாயகன் ஆர்கே சுரேஷ் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து வீஆர்எஸ் பெற்றவர். பெரிய அதிகாரிகள் கூட கண்டுபிடிக்க முடியாத கொலைக் குற்றங்களை மிகவும் சாதாரணமாக கண்டுபிடிக்க கூடியவர். இவர் தற்போது மதுபோதைக்கு அடிமையாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி பூர்ணா, சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இது விபத்தல்ல கொலை என்று ஆர்கே சுரேஷுக்கு என்று தெரியவருகிறது. மனைவி மரணத்திற்கான பின்னணியை ஆர்கே சுரேஷ் தேட ஆரம்பிக்கிறார்.
இறுதியில் மனைவி பூர்ணாவை கொலை செய்தது யார் என்பதை ஆர்கே சுரேஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா? பூர்ணாவை கொலை செய்ததற்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்கே சுரேஷ், கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படம் அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு உள்ளது. சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இவரது மனைவியாக நடித்திருக்கும் பூர்ணா, கணவன் மீது பாசம் வைத்திருக்கும் மனைவியாக நடித்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் மதுஷாலினி. மற்ற கதாபாத்திரங்களான இளவரசு, மாரிமுத்து, ஜார்ஜ், பகவதி பெருமாள் ஆகியோரின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மலையாளத்தில் ஜோசப் என்ற படத்தை இயக்கிய பத்மகுமார், அதே கதையை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் இப்படத்தை இயக்கி இருக்கிறார். மருத்துவத்தை சுற்றி நடக்கும் தொழில்களால் மனித உயிர்கள் பாதிக்கப்படுவதை திரைக்கதை மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். உடலுறுப்புத் திருட்டை எமோஷனல் திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். படத்திற்கு தேவையான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். வெற்றி வேல் மாஹேந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘விசித்திரன்’ வெற்றியாளன்.
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஹாஸ்டல் படத்தின் விமர்சனம்.
நாயகன் அசோக் செல்வன், சதீஷ் உள்ளிட்ட நண்பர்கள் நாசர் நடத்தி வரும் ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில், பண பிரச்சனையில் சிக்கும் அசோக் செல்வனுக்கு நாயகி பிரியா பவானி சங்கர் உதவ முன் வருகிறார். இந்த உதவிக்கு பலனாக பாய்ஸ் ஹாஸ்டலுக்கு தன்னை அழைத்து செல்லும்படி கேட்கிறார்.
அசோக் செல்வனும் பணத்திற்கு ஆசைப்பட்டு, பிரியா பவானி சங்கரை யாருக்கும் தெரியாமல் அழைத்து செல்கிறார். ஹாஸ்டலுக்குள் சென்ற பிரியா பவானி சங்கர் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொள்கிறார்.

இறுதியில் பாய்ஸ் ஹாஸ்டலில் இருந்து பிரியா பவானி சங்கர் வெளியேறினாரா? பிரியா பவானி சங்கர் ஹாஸ்டலுக்குள் செல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், எப்பவும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருவார். ஆனால், இம்முறை அவரது தேர்வு தவறாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அவரது நடிப்பில் பெரிய மாற்றம் இல்லை. நாயகியாக நடித்திருக்கும் பிரியா பவானி சங்கர், கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். சதீஷ், நாசர், முனிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறது.

காமெடியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன். ஆனால், படத்தில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. பல காமெடி காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், சிரிக்கதான் முடியவில்லை. திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது. அனுபவ நடிகர்களை வைத்து வேலை வாங்காமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.
போபோ சாஷி இசையில் பாடல்கள் அதிகம் கவனம் பெறவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் 'ஹாஸ்டல்' சுவாரஸ்யம் குறைவு.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் விமர்சனம்.
நாயகன் விஜய் சேதுபதி பிறந்ததிலிருந்து துரதிஷ்டசாலியாக இருக்கிறார். இவர் வாழ்க்கையில் எல்லாம் நேருக்கு மாறாக நடக்கிறது. இவர் பகலில் கார் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வருகிறார்.



டிரைவராக வேலை செய்யும்போது நயன்தாராவையும், பவுன்சர் வேலை செய்யும்போது சமந்தாவையும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த காதல் பிரச்சனையாக மாறுகிறது. இறுதியில் விஜய் சேதுபதி காதல் பிரச்சனையை எப்படி சமாளித்தார்? நயன்தாரா, சமந்தா இருவரில் யாருடன் காதலில் ஒன்று சேர்ந்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் விஜய் சேதுபதி, ராம்போ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகள் மற்றும் முக பாவனைகளில் கூட அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குடும்ப பெண்ணாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் நயன்தாரா. மாடர்ன் பெண்ணாக நடித்து அசத்தி இருக்கிறார் சமந்தா. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா காம்பினேஷன் சீன்களில் மூன்று பேருமே போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

இரண்டு காதலை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இரண்டு காதல் வைத்து பார்ப்பவர்களை நெருடல் இல்லாமல் ரசிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். காமெடி காட்சிகள் ஆங்காங்கே கைகொடுத்து இருக்கிறது.

படத்திற்கு பெரிய பலம் அனிருத்தின் இசை. பின்னணி இசையில் மாஸ் காண்பித்து இருக்கிறார். பாடல்கள் அனைத்தும் சூப்பர். ஸ்ரீதரின் ஒளிப்பதிவோடு பார்க்கும்போது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
மொத்தத்தில் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' கலகலப்பான காதல்.
சரோவ் சண்முகம் இயக்கத்தில் விஜயகுமார், அருண் விஜய், அர்னவ் விஜய், மகிமா நம்பியார் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஓ மை டாக்’ படத்தின் விமர்சனம்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நாயகன் அருண் விஜய், மனைவி மகிமா நம்பியார், தந்தை விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகியோருடன் ஊட்டியில் வாழ்ந்து வருகிறார். அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் மிகவும் சேட்டை செய்பவராக இருக்கிறார். இந்நிலையில், டாக் ஷோவில் பல வெற்றிகளை பெற்றிருக்கும் வினய், கண் தெரியாமல் இருக்கும் குட்டி நாயை தன் ஆட்கள் மூலம் கொல்ல சொல்கிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குட்டி நாய் அர்னவ் விஜய்யிடம் கிடைக்கிறது. அந்த குட்டி நாய்க்கு கண் ஆப்ரேஷன் செய்து வளர்க்க ஆரம்பிக்கிறார் அர்னவ். ஒரு கட்டத்தில் டாக் ஷோ நடக்க இருக்கிறது. இந்த ஷோவில் அர்னவ்வின் நாய் பல சுற்றுகளில் முன்னேறுவதால் அந்த நாயை போட்டியில் கலந்துக் கொள்ளாமல் தடுக்க வினய் முயற்சி செய்கிறார்.

இறுதியில் அர்னவ்வின் நாய் டாக் ஷோவில் வெற்றி பெற்றதா?, வினய்யின் முயற்சி என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய், தந்தை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். விஜயகுமார் மற்றும் அர்னவ்வுடன் கோபம் மற்றும் பாசம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். அர்னவ் விஜய்க்கு முதல் படம் என்பதால் பல இடங்களில் ரசிக்க வைத்தாலும், ஒருசில இடங்களில் தடுமாற்றம் தெரிகிறது. மகிமா நம்பியார் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஜயகுமார்.
ஸ்டைலிஷ் வில்லனாக வரும் வினய்யின் நடிப்பு பெரியதாக எடுபடவில்லை. அர்னவ்வின் நண்பர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் அனைவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

கண் தெரியாத நாய் போட்டிகளில் கலந்து கொண்டு எப்படி வெற்றி பெறுகிறது என்பதை கதையாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சரோவ் சண்முகம். ஒரு சில காட்சிகள் யதார்த்த மீறல்களாக இருந்தாலும், பெரியதாக தெரியவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி திரைக்கதை உருவாக்கி இருக்கிறார். குறிப்பாக சிறுவர்கள் மற்றும் நாயிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். அதேபோல் கோபிநாத்தின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு ஏற்ப கலர் புல்லாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் ‘ஓ மை டாக்’ ரசிக்கலாம்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கே.ஜி.எஃப் 2 படத்தின் விமர்சனம்.
கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் தங்க சுரங்கத்தை தன் வசம் வைத்திருந்த கருடனை கொலை செய்து கே.ஜி.எஃப்- யை யஷ் கைப்பற்றினார். அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது.


கே.ஜி.எஃப் பில் வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார் யஷ். கே.ஜி.எஃப்-பை பிடிக்க யஷ்க்கு முன்னால் ஆசைப்பட்டு வந்தவர்கள், யஷை கொலை செய்ய திட்டம் போடுகிறார்கள். அதே சமயம் இறந்துவிட்டதாக கருதப்பட்ட சஞ்சய் தத், கே.ஜி.எஃப்.யை கைப்பற்ற தன் படைகளுடன் வருகிறார்.
இறுதியில் எதிரிகளை எதிர்த்து யஷ், கே.ஜி.எஃப்யை தக்க வைத்துக் கொண்டாரா? சஞ்சய் தத்தின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்து இருக்கும் யஷ் தனி ஒருவனாக படத்தை தன் தோள் மேல் சுமந்து செல்கிறார். மான்ஸ்டராக, மாஸ் ஹீரோவாக மனதில் நிற்கிறார். இவரது அலட்டல் இல்லாத நடிப்பு படத்திற்கு பெரிய பலம். நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீநிதி ஷெட்டி அழகான தேவதையாக வந்து ரசிக்க வைக்கிறார்.
சஞ்சய் தத் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய கெட்டப்பும் பார்வையும் மிரட்டல். அரசியல் தலைவராகவும் ரவினா டாண்டன் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முதல் பாகத்தை விட 2 மடங்கு மாஸாக படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் பிரஷாந்த் நீல். விறுவிறுப்பான திரைக்கதை, காட்சிகளுக்கு காட்சி பிரம்மாண்டம், அழுத்தமான வசனம், ஆட்பறிக்கும் சண்டைக்காட்சிகள், என படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்து ரசிகர்கள் ரசிக்கும் உருவாக்கி இருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலமான சண்டைக்காட்சிகளில் அன்பறிவ் மாஸ் காட்டியிருக்கின்றனர். ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். புவன் கவுடாவின் ஒளிப்பதிவு அபாரம். கர்நாடகா, மும்பை, கே.ஜி.எஃப் சுரங்கம் என சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்
மொத்தத்தில் 'கே.ஜி.எஃப் 2' மாஸ்.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருக்கும் பீஸ்ட் படத்தின் விமர்சனம்.
ராணுவத்தில் ரா பிரிவில் பணியாற்றி வரும் விஜய், தீவிரவாதி உமர் பரூக் என்பவரை பிடிக்க முயற்சி செய்யும் போது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை இறந்து விடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விஜய், ராணுவ வேலையை விட்டு, விடிவி கணேஷ் நடத்தி வரும் செக்யூரிட்டி அலுவலகத்தில் வேலை செய்கிறார்.


அப்போது விஜய் ஒரு மாலுக்கு செல்லும் போது அங்கு தீவிரவாதிகள் பொதுமக்களை பணைய கைதிகளாக பிடித்து வைக்கிறார்கள். மேலும் உமர் பரூக்கை விடுவிக்க கோரிக்கை வைக்கிறார்கள்.

இறுதியில் விஜய், மாலுக்குள் இருக்கும் தீவிரவாதிகளை அழித்து பொதுமக்களை எப்படி காப்பாற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் வீரராகவன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கிறார் விஜய். சண்டைக்காட்சிகளில் மாஸ் காண்பித்து இருக்கிறார். குறிப்பாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் விஜய். நாயகியாக வரும் பூஜா ஹெக்டே, கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். அதிகாரியாக வரும் செல்வராகவன் ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்திற்கு பெரிய பலம் விடிவி கணேஷ். பல இடங்களில் ரசிகர்களை சிரிக்க வைத்து இருக்கிறார். யோகி பாபு ஒரு சில இடங்களில் வந்து சென்றிருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷின் நடிப்பு ஓவர் ஆக்டிங்.
பழைய கதையை தூசி தட்டி கொடுத்து இருக்கிறார் இயக்குனர் நெல்சன். வழக்கமான திரைக்கதையில் கொஞ்சம் சுவாரஸ்யம் கலந்து கொடுத்து இருக்கிறார். நிறைய லேக் லாஜிக் மீறல்களை தவிர்த்து இருக்கலாம். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்து இருக்கிறது.
மொத்தத்தில் 'பீஸ்ட்' கலகலப்பு.
தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், லால் நடிப்பில் வெளியாகி இருக்கும் டாணாக்காரன் படத்தின் விமர்சனம்.
நாயகன் விக்ரம் பிரபுவின் தந்தை லிவிங்ஸ்டன் போலீசாரால் பாதிக்கப்படுகிறார். இதனால் தனது மகனான விக்ரம் பிரபுவிடம் நீ போலீசாக வேண்டும் என்று கூறி விட்டு இறந்து விடுகிறார். தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக போலீஸ் வேலைக்கு செல்கிறார்.



போலீஸ் பயிற்சியில் விக்ரம் பிரபுவுக்கும் பயிற்சியாளர் லாலுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் விக்ரம் பிரபு போலீஸ் ஆக கூடாது என்று லால் தொந்தரவு கொடுக்கிறார்.

லாலின் தொந்தரவுகளை தாண்டி விக்ரம் பிரபு போலீஸ் ஆனாரா? தந்தை லிவிங்ஸ்டன் ஆசையை விக்ரம் பிரபு நிறைவேற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் விக்ரம் பிரபு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். படத்திற்காக திறமையாக உழைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு ரசிக்க வைத்திருக்கிறது.

ஈஸ்வரமூர்த்தி என்ற காவல்துறை பயிற்சி அதிகாரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் லால். பல இடங்களில் சாதாரணமாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்து இருக்கிறார். இவர்கள் இருவருக்கு பிறகு எம்.எஸ்.பாஸ்கர் தனது அனுபவ நடிப்பின் மூலம் கவனம் ஈர்க்கிறார். நாயகியாக வரும் அஞ்சலி நாயருக்கு பெரியதாக வேலையில்லை. கொடுத்த வேலையை செய்து இருக்கிறார். லிவிங்ஸ்டன், லிங்கேஷ், பவல் ஆகியோர் தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.
காவலர் பயிற்சி பள்ளியில் நடக்கும் அநீதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் தமிழ். முதல் பாதி முழுக்க பயிற்சி பள்ளியில் நடக்கும் அவலங்களையும், இரண்டாம் பாதி முழுக்க ஹீரோ, வில்லன் பாணியில் உருவாக்கி இருக்கிறார். கதாபாத்திரங்கள் இடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் வரும் அனிமேஷன் காட்சிகள் மற்றும் அதை சொன்ன விதம் அருமை. விக்ரம் பிரபுவின் பிளாஷ்பேக் காட்சி அழுத்தம் இல்லை.

படம் முழுக்க மைதானம் காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் அதை சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம். ஜிப்ரான் இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லையென்றாலும் பின்னணி இசையின் மூலம் படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
மொத்தத்தில் 'டாணாக்காரன்' சிறந்தவன்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் நடிப்பில் வெளியாகி இருக்கும் மன்மத லீலை படத்தின் விமர்சனம்.
நாயகன் அசோக் செல்வனின் வாழ்க்கையில் 2010ல் நடந்த ஒரு சம்பவம் மற்றும் பத்து ஆண்டுகள் கழித்து 2020ல் நடந்த ஒரு சம்பவத்தை திரைக்கதையாக சொல்லியிருக்கிறார்கள்.
2010ல் ஆர்குட் மூலம் தனக்கு அறிமுகமாகும் சம்யுக்தா ஹெக்டேவுடன் பழகுகிறார் அசோக் செல்வன். வீடியோ மூலம் பேசி வரும் அசோக் செல்வன், ஒரு நாள் நேரில் சந்திக்க ஆசைப்படுகிறார். அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சம்யுக்தாவை சந்திக்கிறார் அசோக்செல்வன். அப்போது இருவரும் மது போதையில் தவறு செய்துவிடுகிறார்கள். விடியும் நேரத்தில் வீட்டிற்கு சம்யுக்தாவின் அப்பா வந்துவிடுகிறார்.

அடுத்து, 2020ல் மனைவி ஸ்மிருதி வெங்கட் மற்றும் குழந்தையுடன் வாழ்ந்து வருகிறார் அசோக் செல்வன். ஒரு நாள் ஸ்மிருதி வெங்கட் குழந்தையுடன் வெளியில் சென்றவுடன், தற்செயலாக வீட்டிற்கு வரும் ரியா சுமனுடன் இணைந்து தவறு செய்து விடுகிறார். மறுநாள் காலை ஸ்மிருதி வெங்கட் வீட்டிற்கு வந்துவிடுகிறார்.
2010ல் சம்யுக்தா ஹெக்டேவின் வீட்டில் இருந்து அசோக் செல்வன் எப்படி தப்பித்தார்? 2020ல் தன் வீட்டில் இருந்து ரியா சுமனை எப்படி வெளியேற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், காதல், பாசம், ரொமான்ஸ், பரிதவிப்பு, என நடிப்பில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். முதல் பாதியில் ரொமான்ஸ், இரண்டாம் பாதியில் காமெடி, நக்கல், ஆக்ஷன் என்று ரசிக்க வைத்திருக்கிறார். குறிப்பாக சம்யுக்தா ஹெக்டே வீட்டில் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சியில் கைத்தட்டல் பெற்றிருக்கிறார்.

நாயகியாக சம்யுக்தா ஹெக்டே மற்றும் ரியா சுமன் இருவரும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். அழகாக வந்து அளவான நடிப்பை ஸ்மிருதி வெங்கட் கொடுத்திருக்கிறார்.
இயக்குனர் வெங்கட் பிரபு, இந்த படத்திற்கு மன்மத லீலை என்று பெயர் வைத்திருந்தாலும், இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாமல், அதிக கவர்ச்சி காட்சிகள் இல்லாமல் கதையை நகர்த்தி இருப்பது சிறப்பு. இரு வேறு காலகட்டங்களுக்கு பயணிக்கும் கதையை புரியும்படி திரைக்கதை அமைத்த இயக்குனர் வெங்கட் பிரபுக்கு பாராட்டுகள். இரண்டாம் பாதியில் இருந்த சுவாரஸ்யம் முதல் பாதியிலும் கொடுத்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
பிரேம்ஜியின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதுபோல், தமிழ் அழகனின் ஒளிப்பதிவும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. இரண்டு கால கட்டத்திற்கு ஏற்றாற்போல் ஒளிப்பதிவு செய்து கவனிக்க வைத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘மன்மத லீலை’ ரசிக்கலாம்.






