என் மலர்
விமர்சனம்

விமர்சனம்
எமோஷனல் திரில்லர் - விசித்திரன் விமர்சனம்
பத்மகுமார் இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், பூர்ணா, மது ஷாலினி நடிப்பில் வெளியாகி இருக்கும் விசித்திரன் படத்தின் விமர்சனம்.
நாயகன் ஆர்கே சுரேஷ் போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்து வீஆர்எஸ் பெற்றவர். பெரிய அதிகாரிகள் கூட கண்டுபிடிக்க முடியாத கொலைக் குற்றங்களை மிகவும் சாதாரணமாக கண்டுபிடிக்க கூடியவர். இவர் தற்போது மதுபோதைக்கு அடிமையாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் இவரை விட்டுப் பிரிந்து சென்ற மனைவி பூர்ணா, சாலை விபத்தில் உயிரிழக்கிறார். இது விபத்தல்ல கொலை என்று ஆர்கே சுரேஷுக்கு என்று தெரியவருகிறது. மனைவி மரணத்திற்கான பின்னணியை ஆர்கே சுரேஷ் தேட ஆரம்பிக்கிறார்.
இறுதியில் மனைவி பூர்ணாவை கொலை செய்தது யார் என்பதை ஆர்கே சுரேஷ் கண்டுபிடித்தாரா? இல்லையா? பூர்ணாவை கொலை செய்ததற்கான பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆர்கே சுரேஷ், கடுமையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படம் அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவிற்கு உள்ளது. சின்ன அசைவுகளில் கூட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இவரது மனைவியாக நடித்திருக்கும் பூர்ணா, கணவன் மீது பாசம் வைத்திருக்கும் மனைவியாக நடித்திருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் மதுஷாலினி. மற்ற கதாபாத்திரங்களான இளவரசு, மாரிமுத்து, ஜார்ஜ், பகவதி பெருமாள் ஆகியோரின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மலையாளத்தில் ஜோசப் என்ற படத்தை இயக்கிய பத்மகுமார், அதே கதையை தமிழில் விசித்திரன் என்ற பெயரில் இப்படத்தை இயக்கி இருக்கிறார். மருத்துவத்தை சுற்றி நடக்கும் தொழில்களால் மனித உயிர்கள் பாதிக்கப்படுவதை திரைக்கதை மூலம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். உடலுறுப்புத் திருட்டை எமோஷனல் திரில்லர் பாணியில் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். படத்திற்கு தேவையான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். வெற்றி வேல் மாஹேந்திரனின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘விசித்திரன்’ வெற்றியாளன்.
Next Story