என் மலர்
சினிமா செய்திகள்

நமது வாக்குரிமை பறிக்கப்படும்: இப்போதாவது நாம் எழுந்து நிற்க மாட்டோமா? - நடிகர் கிஷோர்
- டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்?
- இது ராகுல் காந்தியின் போராட்டம் அல்ல.. நமது போராட்டம்
2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தேர்தல் ஆணையம் பாஜவுடன் சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக நேற்று, தேர்தல் ஆணைய தரவுகளை காண்பித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
கர்நாடகாவில் மகாதேவபுரா தொகுதியில் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருடப்பட்டன, மகாராஷ்டிராவில் குறுகிய காலத்தில் 1 கோடி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், படிவம் 6 முறைகேடு உள்ளிட்ட 5 வழிகளில் மோசடி நடந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்?, வீடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்?, வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை தேர்தல் ஆணையம் செய்வது ஏன்?, எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்?, பாஜகவின் ஏஜண்டைப் போல தேர்தல் ஆணையம் செயல்படுவது ஏன்? உள்ளிட்ட 5 கேள்விகளை ராகுல் எழுப்பினார்.
இந்நிலையில், ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு குறித்து நடிகர் கிஷோர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இந்திய ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் படுகொலை செய்த பயங்கரவாதிகளை 'மகாதேவா'புரா நடவடிக்கை அம்பலப்படுத்துகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனைத்து இந்தியர்களின் சார்பாக வணக்கம். டிஜிட்டல் தரவு மற்றும் சிசிடிவி காட்சிகளை வழங்காத தேர்தல் ஆணையத்தின் தந்திரங்களையும் தாண்டி, ஜனநாயகத்தின் அடித்தளத்தை அழித்த மிகப்பெரிய துரோகத்தை நிரூபிக்க, 21 அடி உயரமுள்ள டன் கணக்கில் சூழ்ச்சி ஆவணங்களை பகுப்பாய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வணக்கம்..
இது ராகுல் காந்தியின் அல்லது எதிர்க்கட்சியின் போராட்டம் அல்ல.. நமது போராட்டம் மற்றும் நமது உரிமைதான் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இப்போதாவது நாம் எழுந்து நிற்க மாட்டோமா? இப்போதாவது விசாரணை நடக்குமா? இல்லை இது ஒரு புதிய சாதாரணமாக இருக்குமா?
துணை ஜனாதிபதி போன்ற உயர்ந்த பதவியை ராஜினாமா செய்வது போலவும், தேர்தல் பத்திரங்களைப் போன்ற அரசியலமைப்பிற்கு முரணான ஒரு மோசடி போலவும்?
இறந்த பொருளாதாரம் எனக்கு தெரியாது, ஆனால் நாம் நிச்சயமாக இறந்த ஜனநாயகத்தில் வாழ்கிறோம்.
இந்திய மக்கள், ஊடகங்கள், நீதிமன்றம், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்த துரோகத்தின் ஒரு பகுதியாக இருக்க மறுத்து, இந்த துரோகிகளுக்கு எதிராக நிற்காவிட்டால், நமது வாக்குரிமை முற்றிலுமாக பறிக்கப்படுவதை விரைவில் காண்போம்" என்று தெரிவித்துள்ளார்.






