search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இருவரும் பிரிந்துவிட்டோம்: ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு
    X

    இருவரும் பிரிந்துவிட்டோம்: ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு

    • ஜி.வி.பிரகாஷ் தனது மனைவி சைந்தவியைப் பிரிவதாக அறிவித்துள்ளார்.
    • இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல், ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

    சென்னை:

    பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்குமார் கடந்த 2013-ம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 வயதில் அன்வி என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், தற்பொழுது தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    இவருடைய பென்சில், திரிஷா இல்லனா நயன்தாரா, சிவப்பு மஞ்சள் பச்சை ஆகிய பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த பேச்சுலர், ஜெயில், செல்பி, அடியே போன்ற படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தன.

    இதற்கிடையே, ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியானது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

    இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார், தனது மனைவி சைந்தவியைப் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், நீண்ட யோசனைக்குப் பிறகு சைந்தவியும் நானும் திருமணமாகி 11 வருடங்கள் கழித்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையைக் காத்துக்கொண்டு, எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்தோம்.

    இந்த ஆழமான தனிப்பட்ட மாற்றத்தின்போது எங்கள் தனியுரிமையைப் புரிந்துகொண்டு மதிக்குமாறு ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் பிரிந்து வருகிறோம் என்பதை ஒப்புக்கொண்டு, இது ஒருவருக்கொருவர் சிறந்த முடிவு என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் கடினமான நேரத்தில் உங்கள் புரிதல் மற்றும் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×