என் மலர்
சினிமா

சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
மாமனிதன் படப்பிடிப்புக்கு இடையே அளித்த பேட்டியில், சபரிமலை விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. #VijaySethupathi #Maamanithan #SabarimalaIssue
சபரிமலையில் அனைத்துப் பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடந்தது.
கடந்த 2-ந் தேதி முதல் பெண்கள் கேரள அரசு பாதுகாப்புடன் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் கேரளாவில் பெரிய விவாதமாகவும் சர்ச்சையாகவும் மாறி உள்ளது.
இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
அப்போது படப்பிடிப்புக்கு இடையே அளித்த பேட்டியில், சபரிமலை விவகாரம் தொடர்பாக விஜய்சேதுபதி தெரிவித்த கருத்துக்கள் மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. சபரிமலை விவகாரம் தொடர்பாக விஜய் சேதுபதி கூறி இருப்பதாவது:-
நான் முதல்வர் பினராயி விஜயனின் ரசிகன். சபரிமலை விவகாரத்தில் அவர் மிக சரியான முடிவை எடுத்துள்ளார். இது தொடர்பாக ஏன் பலரும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் பெண்கள் சில தாங்க முடியாத வலிகளை சந்திக்கின்றனர். நம் அனைவருக்கும் தெரியும். அந்த வலி எதனால் வருகின்றது என்று நாம் அனைவரும் அந்த வலியில் இருந்துதான் வந்தோம்.

மாதவிலக்கு தூய்மையானது அல்ல என்று யார் சொன்னது? அது மிகவும் புனிதமானது. அந்த வலி இல்லையெனில் இங்கு ஒரு மனிதர் கூட இருக்க முடியாது. பெண்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். ஆணாக வாழ்வது மிகவும் சுலபம். ஆனால், ஒரு பெண்ணாக வாழ்வது மிகவும் கடினமானது. அதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்’.
இவ்வாறு விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துகளுக்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. சபரிமலை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக போராடி வருபவர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. விஜய் சேதுபதி படங்களை புறக்கணிக்க போவதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். #VijaySethupathi #Maamanithan #SabarimalaIssue
Next Story






