என் மலர்
சினிமா

தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `கனா' படத்தின் மூலம் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா பாடகியாக சினிமாவில் அறிமுகமாகிறார். #Kanaa #AishwaryaRajesh
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா'. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் இசை மற்றும் டீசர் வருகிற ஆகஸ்ட் 23-ஆம் தேதி (நாளை) வெளியாக இருக்கிறது. திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளனர். இந்த பாடலின் மூலம் ஆராதனா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம், நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை வருகிற அக்டோபரில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Kanaa #AishwaryaRajesh #Sivakarthikeyan #AaradhanaSivakarthikeyan
Next Story






