என் மலர்tooltip icon

    சினி வரலாறு

    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.
    விஜயகுமார் திரை உலகில் நுழைவதற்கு முன்பே திருமணமாகி விட்டது. மனைவி பெயர் முத்துக்கண்ணு. இந்த தம்பதிகளுக்கு கவிதா, அனிதா என்ற 2 மகள்கள். அருண் விஜய் என்று ஒரே மகன்.

    விஜயகுமார் நடிகராகப் புகழ் பெற்ற பிறகு, அவர் காதலித்து மணந்தவர் நடிகை மஞ்சுளா.

    விஜயகுமார் -மஞ்சுளா தம்பதிகளுக்கு வனிதா, ப்ரீதா, ஸ்ரீதேவி என்று 3 மகள்கள்.

    ஸ்ரீதேவி தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். மற்ற 5 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    தனது குடும்பம் பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அப்பா வெள்ளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். `கள்ளர் மறவர் கனத்ததோர் அகம்படியர் மெள்ள மெள்ள வந்து வெள்ளாளரானார்' என்றொரு பாடல் உண்டு. இந்த வழியில் வந்த சமூகம் எங்களுடையது. பட்டுக்கோட்டையை சுற்றிலும் உள்ள 32 கிராமங்களில் எங்கள் சமூகத்தவர்தான் இருக்கிறார்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் எம்.எல்.ஏ.யின் வெற்றி இந்த 32 கிராமங்களில் உள்ளவர்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

    இந்த சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்தில் இருந்தே திருமணம் நடந்தது. மனைவி முத்துக்கண்ணு நான் நடிக்க வரும் முன்னரே எனக்கு மனைவி ஆனவர். என் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருந்தவர்.

    கலையுலகுக்கு வந்த பிறகு எனக்கு மனைவியான மஞ்சுளா, பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். மனைவியர் இருவருமே சொந்த சகோதரிகள் போல் அன்பு செலுத்துகிறார்கள்.

    மஞ்சுளா பற்றி சொல்ல வேண்டும். திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி என முன்னணி கலைஞர்களுக்கு ஜோடியாக நடித்தவர். ஆந்திராவில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ் போன்ற சூப்பர் ஸ்டார்களுடனும் கதாநாயகியாக நடித்தவர். இவர் கலை மூலம் வெளிப்பட்டாலும் இவரது பூர்வீகம் மற்ற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டிருக்கிறது.

    மஞ்சுளாவின் கொள்ளுத்தாத்தா சர் டி.பி.முத்துசாமி அய்யர் சென்னை ஐகோர்ட்டின் முதல் நீதிபதியாக பணியாற்றியவர். அதை நினைவுபடுத்தும் வகையில் சென்னை ஐகோர்ட்டில் அவருக்கு மார்பளவு சிலை வைத்து மரியாதை செய்திருக்கிறார்கள்.

    மஞ்சுளாவின் தாத்தா சர்.டி.ஏகாம்பரம் அய்யர், தமிழ்நாட்டின் முதல் வருமான வரி ஆணையராக இருந்தவர். அப்பா பானிராவ் ரெயில்வேயில் ஐ.ஜி.யாக இருந்தவர். இவர் ஆற்றிய பணி குறித்து இப்போதும் தென்னக ரெயில்வேயில் பெருமையாக பேசிக்கொள்கிறார்கள்.

    மூத்த மகள் கவிதா திருமணமாகி கணவர் ரவிசங்கருடன் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் இருக்கிறாள்.

    அடுத்த மகள் டாக்டர் அனிதாவின் கணவர் கோகுலகிருஷ்ணா. இவர்கள் துபாயில் இருக்கிறார்கள்.

    அடுத்தடுத்த மகள்கள் வனிதாவும், பிரீதாவும் கலைத்துறையைச் சேர்ந்தவர்களை மணந்து கொண்டிருக்கிறார்கள்.

    வனிதா மணந்து கொண்ட ஆகாஷ், நடிகர். பிரீதாவின் கணவர் ஹரி, சினிமா டைரக்டர்.

    மகன் அருண் விஜய்க்கு கடந்த ஆண்டு திருமணமானது. மனைவி பெயர் ஆர்த்தி.

    பிள்ளைகள் திருமண விஷயத்தில் நான் "ஒன்றே குலம் ஒருவனே தேவன்'' என்ற கண்ணோட்டத்தில் நடந்து கொண்டேன். ஜாதி மத பேதமின்றி ஒரு இந்தியனாக இருந்து காட்டவேண்டும் என்பது என் முடிவான எண்ணம். கலைத்துறைக்குள் வந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பன்மொழிகளிலும் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது, `என்னை ரசிக்கிற நேசிக்கிற இத்தனை மக்களும் என்னை சொந்தம் கொண்டாடியபோதே, `ஒன்றே குலம் ஒருவனே தேவன்' சிந்தனைக்குள் வந்துவிட்டேன்.

    கோடிக்கணக்கில் நான் சம்பாதிக்காவிட்டாலும், கோடிக்கணக்கான ரசிகர் இதயங்களில் இருக்கிறேன். ஒரு கலைஞனான எனக்கு இதைவிட வேறென்ன சந்தோஷம் வேண்டும்? இந்த வகையில் என்னை கலை மூலம் அடையாளம் காட்டிய கலைத்தாய்க்கும் என் நன்றி.

    என்னை இந்த பூமிக்குத் தந்த என் பெற்றோரையும் நான் கொண்டாடி மகிழ்கிறேன். அப்பா எம்.என்.ரெங்கசாமி என் தன்னம்பிக்கைக்கு ஆணிவேராக இருந்தார். அவர் மட்டும் எனது சினிமா கனவுக்கு உயிர் கொடுக்காதிருந்தால், `நிச்சயம் நீ ஜெயிப்பாய்' என்று வாழ்த்தி சென்னைக்கு அனுப்பாதிருந்தால், பஞ்சாட்சரம் என்ற பெயருடன் கிராமத்தில் சாதாரண பிரஜையாகத்தானே இருந்திருப்பேன்.

    இந்த வகையில் கலை மூலம் என்னை உலகறியச் செய்த அப்பாவுக்கு எங்கள் ஊரில் 1995-ம் ஆண்டு ஒரு சிலை எழுப்பியிருக்கிறேன். அப்பா ரைஸ் மில் நடத்திய இடத்தில் தம்பி சக்திவேல் `எம்.என்.ஆர்' என்ற பெயரில் ஒரு திருமண மண்டபம் கட்டியிருக்கிறார். ரைஸ் மில் இருந்த இடத்தில் என் பங்குக்கான பகுதியில் அப்பாவுக்கு சிலை வைத்திருக்கிறேன்.

    என் தாயாருக்கும் சிலை வைக்கும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறேன். அப்பா  95 வயதிலும், அம்மா 90 வயதிலும் இறைவனடி சேர்ந்தார்கள். அது உலகப்பிரகாரம். என் இதயப் பிரகாரம் எப்போதும் என்னுடன் சிலையாக மட்டுமின்றி நிலையாகவும் இருந்து கொண்டிருப்பார்கள்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.

    விஜயகுமார் இப்போது நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
    நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.
    நடிகர் விஜயகுமார் புகழின் உச்சியில் இருந்தபோது நடிகை மஞ்சுளாவை திடீர் திருமணம் செய்து கொண்டார்.

    விஜயகுமார், அப்போது மிகவும் `பிசி'யான நட்சத்திரம். இரவும் பகலுமாக படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். சில நாட்கள் வீட்டுக்கே போக முடியாத அளவுக்கு ஸ்டூடியோவிலேயே குட்டித் தூக்கம் போட்டு விட்டு, அடுத்த படப்பிடிப்புக்கு போய் விடுவார்.

    சொந்த ஊரில் இருந்து மனைவி முத்துக்கண்ணுவை அழைத்து வந்து விட்டார். 1970-ல் மகள் கவிதா, 1973-ல் அடுத்த மகள் அனிதா, 1976-ல் மகன் அருண்குமார் என மூன்று வாரிசுகள்.

    1976-ல் ஏ.பீம்சிங் டைரக்ஷனில் ``உன்னிடம் மயங்குகிறேன்' படத்தில் நடித்த போதுதான் நடிகை மஞ்சுளாவையும் திருமணம் செய்து கொண்டார். அந்தப் படத்தில் நடிகை மஞ்சுளா விஜயகுமாரின் ஜோடியாக நடித்தார். படப்பிடிப்பு இடைவேளையில் அவர்கள் பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தபோதுதான் எதிர்பாராமல் நிகழ்ந்தது அந்த கல்யாணத் திருப்பம்.

    அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்.

    ``தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் சகோதரர்தான் ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் தயாரிப்பாளர். இவர் ஏற்கனவே ``ஆசை 60 நாள்'' படத்தை தயாரித்தவர். ``உன்னிடம் மயங்குகிறேன்'' படத்தின் கதாநாயகியாக மஞ்சுளாவை `புக்' செய்திருந்தார். நான் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன்.

    மஞ்சுளா அப்போது தெலுங்கிலும் பிரபலமாக இருந்தார். தெலுங்கின் முன்னணி நடிகர்கள் நாகேஸ்வரராவ், என்.டி.ராமராவ், சோபன்பாபு என மாற்றி மாற்றி நடித்துக் கொண்டிருந்தார். தமிழில் இந்தப் படத்தில் நடித்தபோது `லஞ்ச் பிரேக்'கில், சின்னச்சின்ன இடைவேளைகளில் ஏதாவது பேசிக்கொண்டிருப்போம். பேச்சு பொதுவாக இருக்கும். பல நேரங்களில் சுவராசியமாக எங்கள் உரையாடல் போய்க் கொண்டிருக்கும்.

    இப்படித்தான் ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென மஞ்சுளாவிடம், ``மஞ்சு! உங்களை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நீங்க என்ன சொல்கிறீங்க?'' என்று கேட்டு விட்டேன்.

    எதிர்பாராத அந்தக் கேள்வியில், மஞ்சுளாவும் திடுக்கிட்டுப் போனது அவரது முகபாவத்தில் தெரிந்தது.

    பொதுவாகவே, உள்மனதின் ஆழத்தில் நம்மையும் அறியாமல் சில விஷயங்கள் புதையுண்டு போயிருக்கும். மஞ்சுளாவிடம் பேசிப்பழக ஆரம்பித்த இந்த சில நாட்களில் அவரைப் பற்றி எண்ணங்கள் காதலாக மாறியிருந்தன.

    அதுதான் சட்டென வார்த்தைகளில் வெளிப்பட்டு விட்டது.

    என் கேள்விக்கு பதிலை மஞ்சுளாவின் அதிர்ச்சி முகமே எனக்கு சொல்லிவிட்டது. அவர் பதிலாகக் கூட எதுவும் சொல்லவில்லை.

    மறுநாள் எனக்கு மதியம் 2 மணிக்குத்தான் படப்பிடிப்பு. செட்டுக்கு வந்தபோது அங்கே மஞ்சுளா ஒரு காட்சியில் நடித்துக் கொண்டிருந்தார். காட்சியை முடித்து விட்டு வந்தவரிடம் ``நேற்று நான் சொன்னதை யோசித்தீர்களா? பதில் ஒன்றும் சொல்ல வில்லையே'' என்றேன் மறுபடியும்.

    இப்போது மஞ்சுளாவின் முகம் எனக்கு பதில் சொல்லத் தயங்கும் `தர்மசங்கடமான' நிலையை உணர்த்தியது. மெதுவாக என்னைப் பார்த்தவர், ``யோசித்து சொல்கிறேன்''  என்றார். பிறகு அவரே, ``இந்த விஷயத்தில் நானாக எந்த முடிவும் எடுக்க முடியாது. அப்பா- அம்மாவிடமும் கலந்து பேச வேண்டும்'' என்றார்.

    அடுத்தடுத்து வந்த இரண்டொரு நாட்களில் மஞ்சுளாவின் பெற்றோரை சந்தித்தேன். அவர்களோ, ``எங்கள் பெண் விருப்பம் எதுவோ, அதுவே எங்கள் விருப்பமும். உங்கள் விருப்பம் பற்றி மஞ்சுளா எங்களிடம் சொன்னாள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசியது எங்களுக்கும் பிடித்திருக்கிறது. எனவே திருமண விஷயத்தில் எங்களுக்கும் சம்மதமே'' என்றனர்.

    திருமணத்தை எளிமையாக நடத்தினோம். திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக் கொண்டார் மஞ்சுளா.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    படங்களில் நடிப்பது தொடர்ந்தாலும், ஒரே மாதிரியான கதைகள் விஜயகுமாரை சற்று யோசிக்க வைத்தது. அதனால் வித்தியாசமான கதைகளைத் தேட ஆரம்பித்தார்.

    இந்த சமயத்தில் வில்லனாக நடிக்கவும் அழைப்புக்கள் வந்தன. கதாநாயகனாக ரஜினி நடிப்பில் முன்னணியில் இருந்த நேரத்தில் அவரது படங்களில் கூட வில்லனாக? நடித்தார், விஜயகுமார்.

    தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜியின் ``சவால்'', ``தியாகி'' போன்ற படங்களிலும் வில்லனாக நடிப்பதைத் தொடர்ந்தார்.

    இப்படி வில்லன் நடிப்பில் பிஸியாக இருந்த நேரத்தில் மதுரையில் நடந்த ஒரு விழாவுக்கு விஜயகுமார் போனார். அப்போது சில ரசிகர்கள் அவரிடம், ``ஹீரோவாக நடித்து எங்களை சந்தோஷப்படுத்திய நீங்கள், இப்போது வில்லனாக நடிப்பது எங்களுக்கு வேதனை தருகிறது'' என்று சொல்ல, ரசிகர்களின் ஒட்டுமொத்த உணர்வாக அதை எடுத்துக் கொண்டு நடிப்பதையே நிறுத்தி விட்டார், விஜயகுமார்.

    மூன்றாண்டுகள் இந்த நிலை நீடித்தது. மறுபடியும் விஜயகுமார் நடிக்க ஆரம்பித்தது குணசித்ர வேடங்களில்.

    அதற்கான வாய்ப்பு, `ஜீ.வி.' பட நிறுவனம் மூலம் வந்தது.
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.
    நடிகர் விஜயகுமாரின் மகன் அருண்குமாருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. `அன்பாலயா' பிரபாகரன் தயாரித்த "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் ஹீரோவானார்.

    நடிகர் விஜயகுமாருக்கு ஒரே ஆண் வாரிசு அருண்குமார். சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது சினிமா வாய்ப்பு தேடி வந்தது. அதனால் "எம்.பி.ஏ.'' படிக்க அமெரிக்காவுக்கு போக இருந்த திட்டத்தை கைவிட்டு, முழுநேர நடிகராகி விட்டார், அருண்குமார்.

    மகன் அருண்குமார் சினிமாவுக்கு வந்தது பற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "அருண்குமார் படிப்பில் முழு கவனம் செலுத்தி படித்துக் கொண்டிருந்தார். அவரது பள்ளி வாழ்க்கையே, பல பள்ளிகளில் தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் நாடு விட்டு நாடும் தொடர்ந்தது.

    ஆரம்பப் படிப்பு சென்னை டான்போஸ்கோவில் தொடங்கியது. அதன் பிறகு `சோ'வின் சகோதரர் நடத்தி வரும் "லா சாட்டலின்'' பள்ளி. அதன் பின்னர் அமெரிக்காவில்

    2 வருடம் என உலகம் சுற்றியது. நான் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் 2 வருடம் ரெஸ்டாரெண்ட் நடத்திய நேரத்தில், அருண் 2 வருடமும் அமெரிக்காவில் படித்தார். அதன் பிறகு சென்னை வந்தபோது மறுபடியும் `லா சாட்டலின்' பள்ளியில் படிப்பு.

    அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்குத்தான் பெற்றோர்களின் டிரான்ஸ்பரை பொறுத்து, இப்படி ஊர்ஊராய் பள்ளிகளில் மாறி மாறி படிக்க வேண்டியிருக்கும். அருணுக்கும் இந்த மாதிரியான அனுபவம் கிடைத்தது.

    பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் "பி.காம்.'' பட்டப்படிப்பில் சேர்ந்த பிறகு கூட, அருணுக்குள் சினிமா ஆர்வம் இருந்ததாக தெரியவில்லை. அந்த வாய்ப்பை தேடி வந்து ஏற்படுத்திக் கொடுத்தவர் தயாரிப்பாளர் `அன்பாலயா' பிரபாகரன்.

    அருண் "பி.காம்.'' இரண்டாம் ஆண்டு படிப்பை தொடர்ந்த நேரத்தில் `அன்பாலயா' பிரபாகரன், என்னை வந்து சந்தித்தார். அவரது படத்தில் நான் நடிப்பது தொடர்பாகத்தான் பேச வந்திருக்கிறார் என்று எண்ணினேன். அவரோ வந்ததும் வராததுமாக, "ஒரு நல்ல லவ் ஸ்டோரி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். உங்க மகன் அருணை ஹீரோவாக அறிமுகப்படுத்தலாம் என்றிருக்கிறேன்'' என்றார்.

    எனக்கு அதிர்ச்சி. சினிமா பற்றியும், நடிப்பு பற்றியும் எந்த எண்ணமும் இல்லாத மகனுக்குள் வலுக்கட்டாயமாக சினிமாவை திணிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதனால் அவரிடம், "பையன் பி.காம். முடித்து விட்டு, அமெரிக்காவில் எம்.பி.ஏ. படிக்க இருக்கிறான். அதனால் சினிமா வேண்டாமே'' என்று தவிர்க்கப்பார்த்தேன்.

    ஆனால் நடந்ததை தனது அம்மா மூலம் தெரிந்து கொண்ட அருண், "நான் நடிக்கிறேன். தயாரிப்பாளர் கிட்ட `சரி'ன்னு சொல்லும்படி அப்பாகிட்ட சொல்லுங்க'' என்று கூறியிருக்கிறார்.

    மகனின் விருப்பம் அதுவென தெரிந்த பிறகு தடைபோட விரும்பவில்லை. அதோடு லவ் ஸ்டோரி, ஏ.ஆர்.ரகுமான் இசை என்று தயாரிப்பாளர் பிரமாண்டம் காட்டி விட்டுப் போவதால், "சரி; நடிக்கட்டும்'' என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் படத் தயாரிப்பு தாமதித்துக் கொண்டே போனது. தயாரிப்பாளரைக் கேட்டால், "ஏ.ஆர்.ரகுமான் 3 பாட்டுக்கு டிïன் தந்துவிட்டார். இன்னும் 2 பாட்டுக்கு டிïன் தந்து விட்டால் படத்தை முழு வீச்சில் தொடங்கி முடிக்க ஏதுவாக இருக்கும்'' என்று சொன்னார்.

    எனக்கு நம்பிக்கை குறைந்தது. அவசரப்பட்டு சரி சொல்லிவிட்டோமோ என்று கூட நினைத்தேன்.

    இந்த நிலையில் திடுமென ஒரு நாள் வந்து நின்றார், தயாரிப்பாளர். ரகுமான் இசை தாமதமாவதால் வேறு ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறேன். சுந்தர் சி. இயக்குகிறார். படத்துக்கு "முறை மாப்பிள்ளை'' என்று பெயர் வைத்திருக்கிறேன். முதலில் அருண் இந்தப் படத்தில் நடிக்கட்டும். அடுத்து ரகுமான் பாட்டை முடித்துக் கொடுத்ததும் `லவ் ஸ்டோரி' எடுக்கலாம்'' என்றார்.

    சரி! நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து சினிமாவுக்குள் அருண் காலெடுத்து வைத்தாயிற்று. இனி பின்வாங்கினால் சரியாக இருக்காது. நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்றபடி "முறை மாப்பிள்ளை'' படத்துக்கு அருணை ஹீரோவாக்க சம்மதித்தேன்.

    படத்தின் பூஜை ஏவி.எம். ஸ்டூடியோ பிள்ளையார் கோவிலில் நடந்தது. நண்பர் ரஜினி வந்து அருணுக்கு பொட்டு வைத்து வாழ்த்தி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். அப்போது அவர், "என் இனிய நண்பர் விஜயகுமாரின் மகன் அருண் சினிமாவுக்கு வருவதை வாழ்த்துகிறேன். அவர் நல்லா வரவேண்டும். நல்லா வருவார்'' என்று வாழ்த்தினார்.

    அவர் வாழ்த்து பலித்தது. "முறை மாப்பிள்ளை'' படம் மூலம் அருண் நிலையான ஹீரோ ஆனார். தொடர்ந்து "பிரியம்'', "காத்திருந்த காதல்'', "கங்கா கவுரி'', "துள்ளித்திரிந்த காலம்'', "கண்ணால் பேசவா'', "அன்புடன்'', "பாண்டவர் பூமி'', "முத்தம்'', "இயற்கை'', "ஜனனம்'', "அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது'' என தொடர்ந்து இப்போது ரிலீசான "தவம்'' வரை நடிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    இப்போதும் "வேதா'', "துணிச்சல்'' என திரைக்கு வரத் தயாராகிக் கொண்டிருக்கும் படங்களும் உண்டு.''

    இப்படிச் சொன்ன விஜயகுமார், நடிகர் அர்ஜ×ன், அருணை வைத்து தயாரித்த "தவம்'' படம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து
    கொண்டார்.

    "அர்ஜ×ன் சார் என்னிடம் அடிக்கடி அருண் பற்றி கேட்பார். "நன்றாக நடிக்கவும் செய்கிறார். `பைட்'டும் சூப்பரா போடறார். பிறகு ஏன் விஜய், அஜித் மாதிரி இன்னும் அருண் பேசப்படவில்லை?'' என்று கவலை தெரிவிப்பார்.

    "எல்லாத்துக்குமே நேரம்னு ஒண்ணு இருக்கே'' என்பேன் நான்.

    ஒருநாள் திடுமென என்னை சந்தித்த அர்ஜ×ன், "அருண் விஷயத்தில் நீங்கள் சொன்ன `நேரம்' இப்போது வந்து விட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். நான் அருணை ஹீரோவாகப்போட்டு ஒரு படம் தயாரிக்கிறேன். `தவம்' என்பது படத்துக்கு பெயர்'' என்றார்.

    எனக்கு ஆனந்த அதிர்ச்சி. தமிழ் சினிமாவில் ஒரு முதல் தர நடிகர்; `ஆக்ஷன் கிங்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். இவர் மாதிரி ஹீரோக்கள் தொடர்ந்து படம் எடுத்து தங்களை வளர்த்துக் கொள்ளவே நினைப்பார்கள். மாறுபட்டு என் மகனை ஹீரோவாகப் போட்டு படம் தயாரிக்கப்போகிறேன் என்று சொல்கிறாரே! இப்படியும் ஒரு அபூர்வ மனிதரா?'' என்ற வியப்புதான் ஆனந்த

    அதிர்ச்சியாகியிருந்தது.சொன்னபடியே `தவம்' படத்தை தயாரித்து ரிலீஸ் பண்ணி அருணுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்த தயாரிப்பாளராகவும் எனக்குள் நிலைத்து விட்டார்.

    படத்தில் அருணை வித்தியாசமான கதைக் களத்தில் நடிக்க வைத்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் தற்கொலைக்கு முயலும் கதாநாயகியை, "எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு'' என்று அருண் கேட்கிறபோது, அருணின் அப்பா, ஒரு நடிகர் என்பதையெல்லாம் நான் மறந்து ஒரு ரசிகனாக அந்தக் காட்சியில் அருணின் நடிப்போடு ஒன்றிவிட்டேன்.

    அருண்குமார் இந்தப்படம் முதல் `அருண் விஜய்' என்று, பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். புதிய பெயரில் வெற்றியும் அவரோடு கைகோர்த்துக்கொள்ள விரும்புகிறேன். அதற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை.

    அர்ஜ×ன் என் மகன் அருண் விஜய்யை ஹீரோவாக்கியது என்னை ரொம்பவே நெகிழ்ச்சியாக்கி விட்டது. இதன் விளைவு `தவம்' பட பாடல் கேசட்டு வெளியீட்டு விழாவின்போது என்னில் எதிரொலித்தது. அந்த விழாவில், "இனி நானும் வருஷம் 2 படம் தயாரிப்பேன். அதில் ஒரு படத்தில் அருண் விஜய் நடிப்பார். அடுத்த ஆண்டு முதல் தயாரிப்பு தொடங்கும்'' என்று கூறினேன். சொன்னபடி அடுத்த ஆண்டு படத்தயாரிப்பு தொடர்பான வேலைகளை இப்போதே தொடங்கி விட்டேன்.

    அருண் விஜய்யிடம் நான் அடிக்கடி சொல்லும் வாசகம்: "எப்போதும் `பிரஷ்' ஆகவே இரு! எந்தப்படம் பண்ணினாலும் அதை முதல் படமாக நினைத்து சிரத்தையோடு பண்ணு! உழைப்பு இருக்கிறது; தொழில் அக்கறை இருக்கிறது. இதோடு முழு ஈடுபாடும் கலந்து கொள்ளும்போது வெற்றியும் உன்னுடன் பின்னிப் பிணைந்திருக்கும்'' என்பதுதான்.

    சினிமா மீதான அவரது `தவம்' தொடர்ந்து நல்லவிதமாகவே கைகூடும் என்பது அவரது அப்பாவாக என் நம்பிக்கை.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.
    நடிகர் விஜயகுமார் படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோதே, தயாரிப்பாளராகவும் ஆனார். அவர் தயாரித்த "நெஞ்சங்கள்'' படத்தில் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.

    படத்தயாரிப்பாளராக மாறிய பின்னணி குறித்து, விஜயகுமார் கூறியதாவது:-

    "1980-ம் வருடம் எனக்கு படங்கள் கொஞ்சம் குறைவாக இருந்த நேரம். ஒருநாள் சிவாஜி சாருடன் பேசிக்கொண்டிருந்தபோது, "விஜயா! நீ எப்போது படம் தயாரிக்கப்போறே?'' என்று கேட்டார்.

    நான் திடுக்கிட்டேன். "என்னண்ணே! தயாரிப்பாளர் ஆவது சாதாரண விஷயமா? தவிரவும் எனக்கு அதில் அனுபவம் எதுவும் இல்லையே'' 

    என்றேன்.அண்ணன் சிவாஜியோ என் உணர்வுகள் எதையும் கண்டு கொள்ளாமல்,

    "நீ நாளைக்கு சிவாஜி பிலிம்சுக்கு போய், தம்பி சண்முகத்தை பாரு'' என்றார்.

    அண்ணன் இப்படிச் சொல்லி விட்டாரே தவிர, எனக்குள் உள்ளுக்குள் உதறல்தான். என்றாலும், அவர் சொல்லி விட்டாரே என்பதற்காக சண்முகம் சாரை பார்க்கப் போனேன். அவர் சிவாஜி பிலிம்சில் இல்லை. சிவாஜி தோட்டத்துக்கு போயிருப்பதாகச் சொன்னார்கள்.

    அங்கே போய் பார்த்தேன். என்னைப் பார்த்தவர், "அண்ணன் (சிவாஜி) சொன்னாரு! கையில் எவ்வளவு பணம் வெச்சிருக்கீங்க?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "பணம் எல்லாம் கிடையாது. அண்ணன் உங்களை பார்க்கச் சொன்னாரு! அதன்படி வந்திருக்கிறேன்'' என்றேன்.

    "சரி! என்ன கதை?'' என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

    "அதுவும் அண்ணன்தான் சொல்லணும். படம் எடுக்கச் சொல்லி என்னிடம் அண்ணன் (சிவாஜி) தானே சொன்னார்'' என்றேன்.

    உடனே அவர், "அண்ணனும் மேஜர் சுந்தர்ராஜனும் சமீபத்தில் பார்த்த ஒரு இந்திப்படம் பற்றி பெரிசா பேசிக்கிட்டிருந்தாங்க! அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அந்தக் கதையோட தமிழ் உரிமை வாங்கிடுங்க'' என்றார்.

    மேஜர் சுந்தர்ராஜன், சிவாஜி சாரின் நெருங்கிய நண்பர். அப்போது அவர் டைரக்டராகவும் மாறி, சிவாஜி சாரை "கல்தூண்'', "லாரி டிரைவர் ராஜாக்கண்ணு'' என்று 2 படங்கள் இயக்கினார். இந்திப்படத்தின் தமிழ் உரிமை வாங்கியதும், அதை மேஜரே இயக்குவதாக  இருந்தது.

    நான் இந்தித் தயாரிப்பாளரை சந்தித்து, தமிழுக்கு உரிமை வாங்கினேன். ஒப்பந்தம் கையெழுத்தானதும் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட்டை ஒரு வாரத்தில் அனுப்பி வைப்பதாக சொன்னார்கள்.

    சொன்னபடி ஒரு வாரத்தில் பிரிண்ட் வந்தது. இராம.அரங்கண்ணலின் ஆண்டாள் தியேட்டரில் படத்தை திரையிட்டுப் பார்த்தோம். இந்தி நடிகர் அமல் பலேகர் நடித்திருந்த படம் அது. அவர் `காமெடி டைப்'பில் நடிக்கக்கூடிய நடிகர். படம் முழுக்க அவர் பாணியிலேயே நடித்திருந்தார். முழுப்படமும் பார்த்து முடித்ததும் `இந்த கேரக்டர் சிவாஜி சாருக்கு எப்படி செட்டாகும்?' என்று யோசனை வந்துவிட்டது.

    மறுநாள் காலையில் சிவாஜி சார் வீட்டுக்குப் போனேன். அவரை பார்த்ததும், "அண்ணே! நேற்று இந்திப்படம் பார்த்தேன். அது நீங்க பண்ணவேண்டிய படம் இல்லையே'' என்றேன்.

    அப்போது அங்கிருந்த மேஜர் சுந்தரராஜன், "இந்த இந்திப்படத்தின் மூலக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு சிவாஜி சாருக்கு பொருத்தமான விதத்தில் படத்தை நான் முற்றிலுமாக மாற்றி விடுவேன்'' என்றார்.

    அவர் இப்படிச் சொன்னபோது சிவாஜி சார் என்னைப் பார்த்தார். "அப்புறம் என்னடா?'' என்பது போலிருந்தது அந்தப் பார்வை. நான் அமைதியானேன். பட வேலைகள் தொடங்கின.

    சிவாஜி சார் ஹீரோ. லட்சுமி ஹீரோயின் என்பது முடிவாயிற்று.

    சண்முகம் சார் பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். ஒரு பைனான்சியர் என்னிடம் வீட்டு டாக்குமெண்டை வாங்கிக்கொண்டு 2ஷி லட்சம் ரூபாய் கொடுத்தார்.

    பட வேலைகள் தொடர்ந்தன. சத்யா ஸ்டூடியோவில் பெரிய அளவில் செட் போட்டு படத்தை தொடங்கினோம். 10 நாள் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. அதற்குள் கையிருப்பு முழுவதும் காலி.

    மறுபடி பைனான்ஸ் பெற வேண்டிய கட்டாயம். சண்முகம் சாரும், "பொறு! ஏற்பாடு பண்றேன்'' என்றார். ஆனால் அவர் ஏற்பாடு செய்த பைனான்சியர், "மேற்கொண்டு பணம் தர முடியாது'' என்று கைவிரித்து விட்டார்.

    படம் 10 நாள் படப்பிடிப்போடு நின்று, மேற்கொண்டு பணமும் இல்லாத நிலையில் தான் ஒரு விழாவில் அண்ணன் எம்.ஜி.ஆரை சந்தித்தேன்.

    அது 1980-ம் வருஷம். அண்ணன் அப்போது தேர்தலில் ஜெயித்து மீண்டும் முதல்-அமைச்சர் ஆகியிருந்தார். அவரது மேக்கப் மேனாக இருந்த ராமதாசின் மகன் திருமணம் சென்னை அசோக் நகரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தத் திருமணத்துக்கு அண்ணன் சிவாஜி உள்ளிட்ட கலையுலகமே திரண்டு வந்திருந்தது.

    என் படம் முதல் ஷெட்ïலோடு நின்று 15 நாள் ஆகியிருந்த நிலையில் இந்த விழாவுக்கு போயிருந்தேன். முதல்-அமைச்சர் கலந்து கொண்ட விழா என்பதால் எல்லா அமைச்சர்களும் தவறாமல் வந்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். முதல் வரிசையில் அமர்ந்திருக்க, திருமண ஏற்பாடுகள் மேடையில் நடந்து கொண்டிருந்தன. நான் 10-வது வரிசையில் உட்கார்ந்திருந்தேன். திடீரென அண்ணன் எம்.ஜி.ஆர். எதற்கோ திரும்ப, அவர் பார்வை என் மீது பட்டது. உடனே விரலை சொடுக்கி, என்னை அழைத்தார். நான், எனக்கு பக்கத்தில் உள்ள யாரையோ அவர் அழைக்கிறார் என்று நினைத்து, அமைதியாக இருந்தேன். அண்ணன் விடவில்லை. இருக்கையில் இருந்து எழுந்து என்னைப் பார்த்து விரல் நீட்டி அழைத்தார்.

    அழைத்தது என்னைத்தான் என்று தெரிந்ததும் எழுந்து, அவரை நோக்கிச் சென்றேன். நான் அவர் அருகில் போனதும், பக்கத்தில் இருந்த ஒரு அமைச்சர் எழுந்து, தனது இருக்கையை எனக்கு கொடுக்க முன்வந்தார். ஆனால், அந்த அமைச்சரை அமரச்சொன்ன அண்ணன், என்னைத் தன் மடியில் உட்கார வைத்துக் கொண்டார்.

    எனக்கு தர்ம சங்கடமான நிலை. எப்பேர்ப்பட்ட அன்பு இருந்தால் இப்படிச் செய்வார்? திருமணம் நடந்த அந்த அரை மணி நேர வைபவத்திலும் அவரது மடியிலேயே உட்கார வைத்துக் கொண்டார்.

    திருமணம் முடிந்ததும், அவரது காரில் என்னை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். "என்ன நீ! ரொம்ப நாளா என்னை ஏன் பார்க்கவில்லை?'' என்று கேட்டார்.

    நான் படத்தயாரிப்பு விஷயத்தை விவரித்தேன். `சிவாஜி சார் நடிக்கிறார். மேஜர் டைரக்ட் செய்கிறார்' என்பதில் தொடங்கி 2ஷி லட்சம் பைனான்சில் படம் ஒரு ஷெட்யூலுடன் நிற்பது வரை கூறிவிட்டேன்.

    நான் சொல்லி முடித்ததும், "வீட்டு டாக்குமெண்டை வைத்தா பணம் வாங்கினாய்?'' என்று கேட்டார்.

    "ஆமாண்ணே! படம் எடுத்து முடித்ததும் திருப்பிடலாம்'' என்றேன்.

    அப்புறமாய் என்னை சாப்பிட வைத்து அனுப்பினார். இடையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

    வீட்டுக்கு நான் திரும்பியபோது, என்னை பார்க்க ஒருவர் வந்து காத்திருந்தார். "சின்னவர் (எம்.ஜி.ஆர்) அனுப்பினாருங்க. உங்க படத்துக்கு 10 லட்சம் பைனான்ஸ் கொடுக்கச்சொன்னார். அதுல 2ஷி லட்சம் எடுத்துட்டுப்போய், உடனடியாக உங்கள் வீட்டு டாக்குமெண்டை மீட்கச் சொன்னாருங்க'' என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார், அவர்.

    எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி. அதாவது - ஆனந்த அதிர்ச்சி! இப்படி ஒரு அன்பா என் மீது!

    இப்போது அடுத்த "ஷெட்ïல்'' படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டும். பணம் வந்துவிட்டதே, கதாநாயகி லட்சுமியிடம் தேதி கேட்டபோது, அவரோ "நான் அமெரிக்கா போக வேண்டியிருக்கிறதே'' என்றார்.

    சொன்னபடி லட்சுமி அமெரிக்கா போய்விட்டதால் மறுபடியும் படப்பிடிப்பு தொடங்க முடியாத நிலை. இப்படி 20 நாள் போயிருந்த நிலையில் அண்ணன் எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு போன். "என்ன தம்பி! படம் வளர்ந்து வருகிறதா?'' என்று கேட்டார்.

    நான் உண்மையைச் சொன்னேன். "லட்சுமி அமெரிக்காவில். அண்ணன் சிவாஜியோ இன்னொரு படத்தில். மறுபடி கால்ஷீட் கிடைத்தால்தான் படப்பிடிப்பு'' என்றேன்.

    "சரி'' என்று கேட்டுக்கொண்டவர், தனது படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த குஞ்சப்பனை அண்ணன் சிவாஜி வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். அவர் சண்முகத்தை சந்தித்து, "விஜயகுமார் எடுக்கும் படத்தை சின்னவர் சீக்கிரம் முடித்து கொடுக்கச் சொன்னார்'' என்று 

    சொன்னார்.வந்ததே கோபம் சண்முகத்துக்கு. உடனே அவர் தனது அண்ணனிடம், "இவர் (விஜயகுமார்) எதற்காகப்போய் சின்னவரிடம் சொல்ல வேண்டும்?'' என்று கோபித்துக்கொண்டு விட்டார்.

    நான் சிவாஜி சாரிடம், "அண்ணே! நானாகப்போய் அண்ணனிடம் (எம்.ஜி.ஆர்) சொல்லவில்லை. நீங்களும் தான் மேக்கப் மேன் பையன் திருமணத்துக்கு வந்திருந்தீர்கள். அல்லவா. அப்போது என்னை அழைத்து பேசி, மடிமீதே உட்கார வைத்துக்கொண்டது வரை பார்த்தீர்கள். பிறகு வீட்டுக்கு அழைத்துச்சென்றபோது என் விஷயத்தைக் கேட்டார். அப்போது தயாரிப்பு பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. இரண்டாவது பைனான்சுக்கு ஏற்பாடு செய்தார். அதன் பிறகு 20 நாள் ஆகியும் படப்பிடிப்பு வேலைகள் நடக்காததால், அதுபற்றி என்னிடம் போனில் கேட்டார். நானும் சொல்ல வேண்டியதாகி விட்டது.இதில் என் தவறு எதுவும் இல்லை'' என்றேன்.

    சிவாஜி சார் என்னைப் பார்த்தார். `இவ்வளவு நடந்து இருக்கிறதா?' என்ற கேள்வி அந்தப் பார்வையில் இருந்தது. "சரிடா! தம்பி சண்முகம் கிட்ட போய் தேதி வாங்கிக்கோ'' என்றார்.

    பிறகு, "நெஞ்சங்கள்'' மளமளவென தடங்கலின்றி வளர்ந்து ரிலீசானது. எதிர்பார்த்தபடி போகாததால், ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில் நஷ்டத்தை சந்தித்தேன்.

    இந்தப் படத்தில்தான் நடிகை மீனா அறிமுகமானார். அப்போது அவர் ஏழெட்டு வயது சிறுமி. படத்துக்கு 2,500 ரூபாய் பேசி, 500 ரூபாய் அட்வான்சாக கொடுத்தேன். பின்னாளில் பெரிய கதாநாயகி ஆகிவிட்ட மீனா, "சினிமாவில் நடிக்க எனக்கு முதல் அட்வான்ஸ் கொடுத்தவர் விஜயகுமார் சார்தான்'' என்று என்னை பல தடவை பல பேரிடம் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார்.

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.
    மூன்றாவது முறையாக ஊரில் இருந்து சென்னைக்கு வந்த விஜயகுமார், இம்முறை தனது நடிப்பு முயற்சியில் வெற்றி பெற்றார். பி.மாதவன் இயக்கிய "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தில் கதாநாயகன் ஆனார்.

    "சினிமாவில் ஹீரோவாக, இன்னொரு முறை முயற்சி செய்கிறேன்'' என்று அப்பா விடம் கூறிவிட்டு சென்னைக்கு வந்த விஜயகுமார், தனியாக ஒரு அறை எடுத்து தங்கினார். 6 வருட இடைவெளியில் எஸ்.வி.எஸ்.குழுவினர் நாடகங்கள்நடத்துவது குறைந்து விட்டதால், நடிகை சந்திரகாந்தாவின் நாடகக் குழுவில் சேர்ந்தார். கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.

    நாடகம் இல்லாத நாட் களில் மறுபடியும் சினிமா வாய்ப்புக்கு முயலுவார்.போகிற கம்பெனிகளில் எல்லாமே சொல்லி வைத்தது போல் `பார்க்கலாம்'என்பதே பதிலாக இருந்தது.

    இப்படியே 11 மாதம் ஆகிவிட்டது. ஒரு மாதத்திற்குள் நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஊருக்குப் போகவேண்டியதுதான். இதனால் கடைசி ஒரு மாதத்தில் வாய்ப்பு தேடும் முயற்சியை தீவிரமாக்கினார்.

    அப்போது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. அதுபற்றி விஜயகுமார் கூறுகிறார்:-

    "சென்னையில் உள்ள சாந்தி தியேட்டரில் சிவாஜி சார் நடித்த படத்தை மேட்னி ஷோ பார்க்கச் சென்றிருந்தேன். படம் முடிந்ததும், அறைக்குத் திரும்புவதற்காக சாந்தி தியேட்டரை ஒட்டியுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது மாலை 6 மணி இருக்கும்.

    திடீரென என்னையே கூர்மையாக பார்த்தபடி வந்த ஒருவர், "தம்பி, எங்கே இருக்கிறீங்க?'' என்று கேட்டார்.

    சினிமாவுக்கு கதை எழுதும் கதாசிரியர் பாலமுருகன்தான் அவர். ஏற்கனவே வாய்ப்பு கேட்டுப் போனதில் அவரிடமும் நான் அறிமுக மாகியிருந்தேன். ரொம்பவும் அக்கறையாக என்னை விசாரிப்பார். என் முயற்சி நிச்சயம் வெற்றி தேடித்தரும் என்று மனதுக்குள் தன்னம் பிக்கை

    விதைப்பார்.அப்படிப்பட்டவர் என்னிடம் வந்து விசாரித்ததும் என் மனதிலும் கொஞ்சம் சந்தோஷம். "நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதோடுசினிமா வாய்ப் புக்கும் முயன்று கொண்டிருக் கிறேன்'' என்றேன்.

    அவர் உடனே ரொம்பவே உரிமையுடன் "ஏன் தம்பி என்னை வந்து பார்க் காமல் இருந்தீர்கள்? டைரக்டர் பி.மாதவன் சார்புதுமுகங்களை வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார். உங்கள் முகவரி தெரியாததால் உடனடியாக உங்களை தொடர்பு கொள்ள முடியாமல் போயிற்று'' என்றவர், "தம்பி! நாளைக்கு காலை 10 மணிக்கு தேனாம்பேட்டையில் இருக்கும் மாதவன் சார் கம்பெனிக்கு வந்திடுங்க'' என்று கேட்டுக் கொண்டார். முகவரியையும் கொடுத்தார்.

    பாலமுருகன் சொன்னபடி மறுநாள் காலை 10 மணிக்கு தேனாம்பேட்டை ஆபீசுக்கு போனேன். அங்கே டைரக்டர் பி.மாதவன், கேமராமேன் பி.என்.சுந்தரம் ஆகியோர் இருந்தார்கள்.

    நான் போயிருந்த நேரத்தில் கதாசிரியர் பாலமுருகனும் வந்துவிட்டார். நேராக என்னை டைரக்டர் பி.மாதவனிடம் அழைத்துச் சென்று, "சார்! நம்ம கதைக்கு 2 ஹீரோ. அதுல ஒரு ஹீரோவுக்கு இவர் சரியா இருப்பார். சிவகுமார்னு பேரு'' என்றார்.

    டைரக்டர் பி.மாதவன் என்னை மேலும் கீழுமாய் ஒரு பார்வை பார்த்தார். பிறகு கேமராமேன் பி.என்.சுந்தரத்தை அழைத்தவர்,  "ஒரு டெஸ்ட் எடுத்திடுங்க'' என்றார்.

    மறுநாளே டெஸ்ட்! ஏவி.எம். 6-வது மாடிக்கு வரச்சொல்லி டெஸ்ட் எடுத்தார்கள். முடிவு டைரக்டர் பி.மாதவனுக்கு திருப்தியாக இருந்ததால், "தம்பி! வசனம் பேசிக் காட்டுங்க'' என்றார். பேசிக்காட்டினேன்.

    பிறகு, "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் சிவாஜி சார் நடிக்கும்போது பயன் படுத்திய உடைகளை எனக்கு தந்து நடிக்கச் சொன்

    னார்கள்.நான் நடிக்கும்போது, அதை படமாக்கினார்கள்.

    அதை திரையிட்டுப் பார்த்த டைரக்டர் பி.மாதவன், "தம்பி! நம்ம படத்தில் நீங்க நடிக்கிறீங்க'' என்றார்.

    "கந்தன் கருணை'' படத்தில் முருகன்வேடத்துக்காக எந்த சிவகுமாருடன் போட்டி ஏற்பட்டதோ, அதே சிவகுமாரும் நானும் இந்தப் படத்தில் இரட்டை நாயகர்கள். அந்தப்படம்தான் "பொண்ணுக்கு தங்க மனசு.''

    "ராமன் எத்தனை ராமனடி'' படத்தில் நடிகர் திலகம் சிவாஜி சார் சாதாரண கிராமத்து இளைஞன் ராமனாக இருந்து பின்னாளில் பிரபல நடிகராக வருவது போல் கதை அமைக்கப்பட்டிருந்தது. நடிகராகும்போது அவருக்கு பெயர் விஜயகுமார். அதனால் அதுவரை சிவகுமாராக இருந்த எனக்கு `விஜயகுமார்' என்ற பெயரை சூட்டினார், டைரக்டர் பி.மாதவன்.

    பஞ்சாட்சரம், சிவகுமாராகி பிறகு விஜயகுமாராக மாறியது இப்படித்தான்.''

    இவ்வாறு நடிகர் விஜயகுமார் கூறினார்.
    தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர்.
    தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர்.

    "இளைய தலைமுறை'' படப்பிடிப்பின்போது 9 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த விஜயகுமாருக்கு தோள்பட்டை பிசகி, சில நாட்கள் ஓய்வில் இருந்தார். புதிய பட வாய்ப்பு கிடைத்து சத்யா ஸ்டூடியோ சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரில் எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.

    தான் நேசிக்கும் எம்.ஜி.ஆர். எதிரில் வந்ததும் ஒரு கணம் செய்வதறியாது திகைத்து விட்டார், விஜயகுமார். "வணங்கிச் செல்வதா? வழி விடுவதா?'' என்று அவர் முடிவெடுத்து செயல்படுவதற்குள் எம்.ஜி.ஆரே அவரை நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டு நலம் விசாரித்தார்.

    இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    அண்ணன் எம்.ஜி.ஆர். நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் என் கைகளை பற்றிக்கொண்டு, "கை எப்படி இருக்கிறது விஜயகுமார்?'' என்று கேட்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன். வார்த்தைகள் உடனடியாக வரவில்லை. இருந்தாலும் பதட்டத்தைத் தவிர்த்து, "பரவாயில்லை. வலி குறைந்து விட்டது'' என்று தெரிவித்தேன்.

    அப்போதும் அவர் போய்விடவில்லை. "சினிமாவில் இந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்கக் கூடாது. எந்த வகை அதிரடி காட்சி என்றாலும் அதை ஒரிஜினல் மாதிரி வெளிப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

    அதன் பிறகு எந்த மாதிரி சிகிச்சைகள் தரப்பட்டன என்பது பற்றி கேட்டார். சொன்னேன். `பிஸியோதெரபி' சிகிச்சை மூலம், கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பற்றியும் விவரித்தேன்.

    பொறுமையாக கேட்டவர், "எனக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கிறது. இதற்கு நாட்டு மருந்து நல்ல பலன் தரும். மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் நாட்டு மருந்துக்கடை இருக்கிறது. அங்கே `கரியபவளம்' என்ற நாட்டு மருந்து கேட்டால் தருவார்கள். அதை உரசி, சதைப் பிடிப்பு இருக்கிற இடத்தில் போட்டால் தசைப்பிடிப்பில் ஏற்பட்டு இருக்கும் இறுக்கம் சரியாகி விடும். இன்றைக்கே வாங்கி போட்டுப் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.

    அவருக்கும் அன்றைய தினம் சத்யா ஸ்டூடியோவில்தான் படப்பிடிப்பு இருந்தது. அதனால் மதியம் `லஞ்ச் பிரேக்'கின்போது எனக்கு அழைப்பு விடுத்தார். நான் கொஞ்சம் தயக்கத்துடன் போய் சந்தித்தபோது, "என்னுடன் சாப்பிடுங்கள்'' என்று கூறினார். அந்த அன்பை தவிர்க்க முடியுமா? பாக்கியமாக எண்ணிக்கொண்டேன்.

    ஒருவரை பிடித்துவிட்டால், அவர் விஷயத்தில் தனி அக்கறை செலுத்துவது எம்.ஜி.ஆருக்கு உரிய பண்பாடு என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் விஷயத்திலும் பரிபூரணமாய் உணர்ந்தேன்.

    டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் வி.டி.எல்.எஸ். என்ற படக்கம்பெனி "இன்று போல் என்றும் வாழ்க'' என்ற படத்தை தயாரித்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். படம் தொடங்க இருந்த நேரத்தில், திடீரென ஒருநாள் அந்த கம்பெனியின் தயாரிப்பு நிர்வாகி என்னை சந்தித்தார். "இந்தப்படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். `சின்னவர்' உங்களை அவரது தங்கை கணவர் கேரக்டரில் போடச் சொன்னார்'' என்றார்.

    எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. `சின்னவர்' என்றால் யார் என்று தெரியாததுதான் இதற்குக் காரணம். அப்புறம் தான் எம்.ஜி.ஆரை எல்லாரும் `சின்னவர்' என்றுதான் சொல்வார்கள் என்று சொன்னார்கள்.

    (எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி `பெரியவர்' என்று அழைக்கப்பட்டார்)

    அப்போது என் சம்பள விஷயம் பற்றி எதுவும் அந்த தயாரிப்பு நிர்வாகி பேசவில்லை. முதல் படத்தில் நான் வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்தான். அதுவும் முதலில் 200. பிறகு 300. பிறகு ரிலீசுக்கு முந்தின நாள் 500 என்று கொடுத்தார்கள்.

    பிறகு தொடர்ந்து படங்கள் வரவர, சம்பளமும் 5 ஆயிரம்,

    7 ஆயிரம் என்று கூடியது. தொடர்ந்த வாய்ப்புகளில் 10 ஆயிரத் தில் நின்று கொண்டிருந்தது.

    சிவாஜி  சாருடன் நடித்த பிறகு 12 ஆயிரம் வாங்கினேன்.

    எம்.ஜி.ஆர். பட தயாரிப்பு நிர்வாகி என்னிடம், "என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "சம்பளம் இருக்கட்டும் சார்! எந்த தேதிகள் வேண்டும் என்று சொல்லுங்க. கால்ஷீட் போட்டுக்கலாம்'' என்றேன்.

    நான் என் சம்பள விஷயம் சொல்லத் தயங்குகிறேன் என்பதை புரிந்து கொண்ட அந்த நிர்வாகி, "சரி! இப்ப பத்தாயிரம் ரூபாய் அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள். மற்றதை அப்புறம் பேசிக்கொள்ளலாம்'' என்று பணத்தை கொடுத்தார்.

    எனக்கு அதிர்ச்சி. அட்வான்சே பத்தாயிரமா? அதுவரை நான் வாங்கிய மொத்த சம்பளமே கிட்டத்தட்ட இதே அளவில்தான்!

    எனக்கு 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து என் சம்பளத்தை அதிகமாக்கியவரே அண்ணன் எம்.ஜி.ஆர்.தான்.

    "இன்று போல் என்றும் வாழ்க'' படப்பிடிப்பில் அவரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் அருகில் அழைத்தவர், பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். படப்பிடிப்பில் மற்ற எல்லாருமே 50 அடி தூரத்தில்தான் அவருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார்கள்.

    அப்போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கியிருந்த நேரம். காங்கிரஸ் ஆதரவுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராக இருந்தார். அவர் "எம்.பி.'' தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்த 40 பேர், படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    அன்று மாலை `பாம்குரோவ்' ஓட்டலில் கட்சி பொதுக்குழுவை கூட்டியிருந்தார். "ஒருவேளை படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டால் என்னை எதிர்பார்க்காதீர்கள். எனக்கு பதிலாக இந்த தம்பியை அனுப்பி வைக்கிறேன்'' என்று என்னை அவர்களிடம் சுட்டிக்காட்டிச் சொன்னார். அந்த அளவுக்கு அவர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்காக இதைச்      சொன்னேன்.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார்.
    மிருகங்களை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துக் குவித்தவர், சாண்டோ சின்னப்பத்தேவர். அவரது தயாரிப்பில் எடுக்கப்பட்ட "தாயில்லாக் குழந்தை'' படத்தில் நிஜமாகவே முரட்டுக்காளைகளுடன் மோதினார், விஜயகுமார்.
    மிருகங்களை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துக் குவித்தவர், சாண்டோ சின்னப்பத்தேவர். அவரது தயாரிப்பில் எடுக்கப்பட்ட "தாயில்லாக் குழந்தை'' படத்தில் நிஜமாகவே முரட்டுக்காளைகளுடன் மோதினார், விஜயகுமார்.

    பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த காளைச் சண்டையில் உயிரைப் பணயம் வைத்து காளைகளை அடக்கினார்.

    இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    "சிங்கம், புலி, கரடி, யானை போன்ற மிருகங்களை வைத்து மட்டுமல்ல, சாதுவான ஆட்டைக்கூட வைத்துக்கூட படம்  எடுத்தவர் சின்னப்பத் தேவர். இந்தப் பின்னணியில் அமைந்த படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களே.

    இவரது "தாயில்லாக் குழந்தை'' படத்தில் என்னை ஹீரோவாக `புக்' பண்ணும்போதே, "விஜயகுமார்! நீங்க பெரிய வீரர்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்துல 2 காளை மாடுகளோட நீங்க மோத வேண்டியிருக்கும். அதுக்கு இப்பவே உங்களை தயார்படுத்திக்குங்க, என்றார்.

    நான் கிராமத்தில் வளர்ந்தவன். எனவே, தேவர் இப்படிச்சொன்னபோது எனக்குள் ஒரு துளி பயம் கூட ஏற்படவில்லை.

    "தாயில்லாக் குழந்தை'' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில்தான், காளைகளை அடக்கும் காட்சியை படமாக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். 2 காளைகள் வந்தன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகளைப்போல திடகாத்திரமாக, பெரிய திமிலுடன் பார்க்கவே கம்பீரத்துடன் காணப்பட்டன.

    காளையுடன் நான் மோதுகிற இடத்தைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது.

    முதலில் ஒரு மாட்டுடன் மோதவேண்டும். அந்த மாடும் வந்தது. நான் நின்றிருந்த பகுதியில் விடப்பட்டது. என்னிடம் வந்த தேவர், "விஜயகுமார்! 2 இடத்தில் 2 கேமரா இருக்கு. டைரக்டர் சொன்னதும் கேமரா  ஓடத்தொடங்கும்.  `நீயா... மாடா...'ன்னு பார்த்துக்க'' என்றார், தேவர்.

    ஏற்கனவே கிராமத்து காளைகளுடன் கொஞ்சம் விளையாடிய அனுபவம் இருந்ததால், கேமரா ஓடத்தொடங்கியதும் நான் எந்தவித பதட்டமும் இல்லாமல் காளையை நெருங்கினேன்.

    என்னிடம் பிடிகொடுக்காத அந்த காளை, ஒரு கட்டத்தில் நான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில் தனது கொம்பால் எனது தொடையில் குத்தித் தள்ளியது. தொடையில் இருந்து ரத்தம் வரத்தொடங்க, காளையை அடக்கியே தீரவேண்டிய வேகம் எனக்குள். இப்போது இந்த வீரத்தை அதிகப்படுத்துவது போல, "விஜயகுமார்! விடாதே! காளையை அடக்கு'' என்று கத்தினார், தேவர்.

    தேவரின் அந்த வார்த்தைக்கும் பலம் இருந்திருக்க வேண்டும். ரத்தம் சொட்டச்சொட்ட, காளையின் கொம்பை பிடித்த நான், அடுத்த சில நிமிட போராட்டத்தில் அந்தக் காளையை மண்டியிட வைத்தேன். அன்று மதியமே இன்னொரு மாட்டையும் அடக்கியாக வேண்டும். ஏற்கனவே ஒரு வீரக்காளையை அடக்க முடிந்த தெம்புடன் இதை அணுகியதால் மிக சுலபமாய் அந்தக் காளையையும் மடக்கிவிட்டேன்.

    பொதுமக்கள் ஆரவாரம் செய்தார்கள். விசில், கரகோஷ சத்தம் காதைத் துளைத்தது.

    காளைகளை அடக்கும் காட்சி முடிந்ததும் சந்தோஷ மிகுதியால் ஓடிவந்து என்னை ஆரத் தழுவிக் கொண்டு வாழ்த்து சொன்னார், தேவர். "நான் எதிர்பார்த்ததை விடவும் காட்சி நல்லா வந்திருக்கு'' என்றார்.

    சில நாட்களில் வாகினி ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேவர், படத்தில் நான் வீரத்துடன் காளைகளுடன் மோதியதை சொன்னார். அதோடு நில்லாமல், "எனக்குத் தெரிந்து சண்டைக் காட்சியில் `டூப்' போடாமல் செய்பவர்கள் இரண்டே இரண்டு நடிகர்கள்தான். வடநாட்டில் தர்மேந்திரா, தென்னாட்டில் விஜயகுமார்'' என்றார். தேவரின் இந்த வெளிப்படையான பாராட்டில் காளை குத்தியதில் ஏற்பட்டிருந்த வலி கூட மறந்து போயிற்று.''

    இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

    "குற்றப்பத்திரிகை'' படத்தில் நடித்த நேரத்தில் பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பியிருக்கிறார், விஜயகுமார். இந்த விபத்தில்

    4 நாட்கள் `கோமா' நிலையில் இருந்து கண் விழித்திருக்கிறார்.

    அதுபற்றி அவர் கூறுகிறார்:-

    "டைரக்டர் ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகை படத்தில் எனக்கும் முக்கிய கேரக்டர். அப்போதிருந்த அரசியல் பின்னணியில் பரபரப்பான படமாக எதிர்பார்க்கப்பட்டது அந்தப்படம். என் சம்பந்தப்பட்ட காட்சிகளை தர்மபுரியில் படமாக்கினார்கள்.

    என் இளைய மகள் ஸ்ரீதேவிக்கு அப்போது 5 வயது இருக்கும். சினிமா படப்பிடிப்புக்கு நான் எப்போது புறப்பட்டாலும், "அப்பா! காரில் இரவுப் பயணம் மட்டும் செல்ல வேண்டாம்'' என்று கூறுவாள். அப்பா மீதான அதிகபட்ச பாசமாக அதை எடுத்துக் கொள்வேன்.

    தர்மபுரியில் முடிந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து கோபிசெட்டிப்பாளையம் போக வேண்டியிருந்தது. மறுநாள் அங்கே படப்பிடிப்பு. இரவு படப்பிடிப்பு முடிந்து 11 மணிக்குத்தான் கார் வந்தது. எனக்கு அப்போது மகள் ஸ்ரீதேவியின் `ராத்திரி கார் பயணம் வேண்டாம்' என்ற வார்த்தைகள் காதுக்குள் வந்து போயின.

    ஆனாலும் கம்பெனியின் அவசரம் கருதி காரில் புறப்பட்டு விட்டேன். கார் வேலூரில் இருந்து புறப்பட்டு கோபிசெட்டிப்பாளையம் போய்க் கொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டி 2 மணி அளவில் நான் கொஞ்சம் கண்ணயர்ந்த நேரம் கார் எதிரில் வந்த லாரி மீது மோதி, மூன்று குட்டிக்கரணம் அடித்தது. காரில் இருந்து நான் தூக்கியெறியப்பட்டது தெரிந்தது. மரணத்தை ருசிபார்க்க நேர்ந்த அனுபவமும் அப்போது

    கிடைத்தது.என் இதயத்துடிப்பு படிப்படியாக குறைவது எனக்குத் தெரிகிறது. `நோ' என்று அலறுகிறேன். மறுபடி துடிப்பு ஏறுகிறது.

    மீண்டும் இறங்கத் தொடங்கும்போது `நோ' என்று அலறுவேன். இப்படி ஜீவ மரணப் போராட்டத்திலும் மகள் ஸ்ரீதேவி சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போகின்றன...

    அப்புறம் என்ன நடந்தது என்று தெரியாது. பெங்களூரில் உள்ள மணிபால் ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் கழித்து கண் விழித்தேன். விலா எலும்புகள் உடைந்திருந்தன என்றார்கள். தொடையின் ஒரு பக்கம் கிழிந்து தையல் போட்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் என்னைப் பார்த்தவர்கள் `மறுபிறவி' என்றார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு நான் காரில் இரவுப் பயணத்தை அது எத்தனை அவசரமானாலும் மேற்கொள்வதில்லை.

    இந்த விபத்து சமயத்தில் டைரக்டர் பி.வாசுவின் வால்டர் வெற்றிவேல் படத்திலும், மலையாளத்தில் மம்முட்டியுடன் `ஆயிரம் பரா' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். "நான் குணமாகி வர மாதக் கணக்கில் ஆகலாம். எனவே, என் கேரக்டரில் வேறு நடிகரைப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அனுப்பியும், அவர்கள் எனக்காக காத்திருப்பதாக சொல்லி விட்டார்கள். நான் திருப்பிக் கொடுத்த அட்வான்சையும் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். நெகிழ்ந்து போனேன்.'
    பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம் இளையராஜா வர்ணித்த "மலரும் நினைவுகள்''
    பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம் இளையராஜா வர்ணித்த "மலரும் நினைவுகள்''

    சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், பாவலரை ஏற்கனவே அறிந்திருந்த கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் ஒரு டேப் ரிக்கார்டரை கொடுத்தார்.

    "இந்த டேப் ரிக்கார்டர் உங்களிடமே இருக்கட்டும்'' என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கொடுத்தார். இது அவருக்கு கோவை விஞ்ஞானியும் தொழில் அதிபருமான ஜி.டி.நாயுடு கொடுத்தது என்பதையும் அறிந்து கொண்டோம்.

    இந்த டேப் ரிக்கார்டர் வந்த பிறகு, எங்கள் உற்சாகம் இன்னும் அதிகமாகி விட்டது. தலைவர்களின் பேச்சையும், எங்களின் கச்சேரியையும் போட்டுப் போட்டுக் கேட்போம். கைதட்டல் ஒலி ஆரவாரத்துடன் எங்கள் கச்சேரிக்கு மக்கள் அளித்த வரவேற்பை `டேப்' வாயிலாக கேட்க நேர்ந்தபோது, உற்சாகம் அதிகமானது.

    வீட்டில் அந்த டேப் ரிக்கார்டர் இருந்தபோது கிடார், புல்புல்தாரா, ஆர்மோனியம், பாங்கோ சகிதம் ஏதோவொன்றை வாசிப்பேன். அதை டேப்பில் பதிவு செய்து திரும்பக் கேட்கும்போது வேறு ஏதோ மாதிரி இருக்கும்.

    இது எனக்குள் ஒரு புதிய இசைப்பரிமாணத்தை கொண்டு வந்தது. அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகளை டேப்பில் தொடர்ந்தேன்.

    ஆனால், இந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. "தலைவர் ஜீவானந்தம் கொடுத்த டேப் ரிக்கார்டரை கட்சி ஆபீசில் ஒப்படைக்கவும்'' என்று கம்ïனிஸ்டு கட்சியிடம் இருந்து கடிதம் வந்தது. அதே வேகத்தில், டேப் ரிக்கார்டரையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.

    அது வீட்டில் இருந்தபோது நானும் பாஸ்கரும் "மனோகரா'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'' படங்களில் சிவாஜி பேசிய வசனங்களை எங்கள் ஆக்ரோஷ குரலில் பேசி பதிவு செய்து கொள்வோம். பிறகு போட்டுக் கேட்போம். இதில் பாரதிராஜாவும் அவரது நண்பர் `டெய்லர்' மணியுடன் வந்து சேர்ந்து கொள்வார். பாரதிராஜா எழுதிய வசனத்தை அவரும், `டெய்லர்' மணியும் பேசி பதிவு செய்து போட்டுக்

    கேட்பார்கள்.இப்படியெல்லாம் வசனம் பேசி, வசனம் பேசி கேட்டுப் பழகியதால்தான் அவருக்கு நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.

    இதற்குப் பின்பே பழனி செட்டிப்பட்டி கோவில் திருவிழாவிலும், அல்லி நகரம் (பாரதிராஜாவின் சொந்த ஊர்) கோவில் திருவிழாவிலும் இரண்டு நாடகங்களை நடத்தினார், பாரதிராஜா.

    நாடகத்தில் பாரதிராஜா நடிக்கவும் செய்தார். பாரதிராஜா மதுரை நடிகையுடன் பாடி நடிப்பதற்காக, சிவாஜி - பானுமதி நடித்த `அம்பிகாபதி' படப்பாடலான "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே'' என்ற பாடலை தேர்ந்தெடுத்தோம். நாடகத்தில் அப்போதெல்லாம் பெரும்பாலும் சினிமாப் பாடல்களையே பயன்படுத்துவார்கள்.

    அல்லி நகரத்தில் நடந்த நாடகத்தில் மதுரையில் இருந்து நடிகைகள் சீன் செட்டிங்ஸ் மேக்கப்பிற்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு பள்ளிக்கூடத்திலும், அரியநாயகம் என்பவர் வீட்டிலும் ஒத்திகை பார்த்தோம். "பூட் மேக்கர் பி.ஏ'' என்பது நாடகத்தின் பெயர். எனக்குத் தெரிந்து இதுதான் பாரதிராஜாவின் முதல் நாடக அரங்கேற்றம்.

    பாரதிராஜா ஹீரோவாக - செருப்பு தைக்கும் "பி.ஏ'' பட்டதாரி இளைஞராக நடித்தார். நாடகத்தில் அவர் ரோட்டில் ஷூ பாலீஷ் போடுவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ஏற்கனவே உள்ள சினிமா பாடல்களை தவிர்த்து புதிதாக ஒரு பாடல் கம்போஸ் செய்யச் சொன்னார்.

    சட்டென பாட்டு பிறந்தது. `பாலீஷ் பூட் பாலிஷ்' என்று தொடங்கி, "செருப்பப்பா இது செருப்பு! சுறுசுறுப்பா எனக்கிருப்பு'' என்று ஒரு பாடலை கம்போஸ் செய்தேன்.

    இந்த காலக்கட்டத்தில் பாவலர் அண்ணனுடன் இடைவிடாத கச்சேரி இருக்கும். இப்படிப் போகும் ஊர்களில் புதிய நவநாகரீகம் எங்கள் உடைகளில் வெளிப்படும். புதிதாக உடையிலும், ஹேர்ஸ்டைலிலும் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அதற்கேற்ப நாங்கள் மாறி விடுவோம். அதாவது `லேட்டஸ்ட் பேஷன்' எது என்பதை எங்கள் ஆடை, தலைமுடி அறிவிக்கும். கவுபாய் பேண்ட், சம்மர் கிராப் போன்றவை அப்போது ஏற்பட்ட மாற்றங்கள்.

    இப்படி லேட்டஸ்ட்டாக ஒரு "டீ'' சர்ட் அணிந்து நாடகத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். என் `டிசர்ட்' பாரதிராஜாவை கவர்ந்திருக்க வேண்டும். ஒரு சீனில் நடிக்கும்போது மேடையில் தோன்ற எனது `டிசர்ட்'டை கழற்றித் தரும்படி கேட்டார்.

    நான் இதற்கு உடன்படுவேனா? ஷர்ட்டை கழற்றிவிட்டு வெறும் பனியனோடு ஆர்மோனியம் வாசிப்பதாவது? அதுவும் மதுரை நடிகைகள்

    முன்பாக?ஷர்ட்டை தருவதற்கில்லை என்று நான் மறுக்க, பாரதி விடாப்பிடியாக ஷர்ட் வேண்டும் என்று அடம் பிடிக்க, ஒரு கட்டத்தில் என் பிடிவாதத்தைவிட பாரதிராஜாவின் பிடிவாதம் அதிகமாக ஷர்ட்டை கழற்றிக் கொடுத்தேன். ஆசைப்பட்டபடியே ஒரு சீனில் என் டிஷர்ட்டை போட்டு நடித்து விட்டு வந்தார் பாரதிராஜா.

    இப்போது, எனக்கு புதுக்கவலை. இந்த டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டுதானே நாளை அல்லி நகர வீதிகளில் நடக்கவேண்டும். அப்படி யாராவது பார்த்தால், `இது பாரதிராஜாவின் ஷர்ட். அவர்தானே நாடகத்தில் இந்த ஷர்ட்டுடன் தோன்றினார்' என்று எண்ணி, என்னை "இரவல் சட்டைக்காரன்'' என்று நினைத்துவிட்டால் என்னாவது?

    இதோ இப்போதே இது என் ஷர்ட்தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கொரு ஐடியாவும் வந்தது.
    சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள்.
    சினிமாவில் நுழைவதற்கு முன்பே (சிறு வயதிலேயே) டைரக்டர் பாரதிராஜாவும் இளையராஜாவும் நண்பர்கள்.

    இவர்களுக்கிடையே நட்புறவு ஏற்பட்டதே சுவையான கதை. அதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "என் இளமைக்கால தோழர்கள் என்றால் அதில் முதல் இடம் கரியணம்பட்டி சுப்பிரமணியத்துக்குத்தான். பலரும் இருந்தார்கள் என்றாலும் மிகவும் உயர்ந்த நட்பு இவருடன்தான் இருந்தது. ஜெயகரன், ரங்கசாமி, மகேஸ்வரன் என்பவர்களும் இந்த லிஸ்ட்டில் உண்டு.

    சுப்பிரமணியுடன் ஆறு, ஏழு, எட்டு என ஒன்றாகப் படித்த பின்னே, அவர் பெரியகுளம் ஆஸ்டலில் தங்கிப் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி. முடித்தவர், அப்போதிருந்த "பி.ï.சி'' முடித்து ஊருக்கு வந்த நேரத்தில்தான் எங்கள் நட்பு வலுத்தது.

    இந்த நேரத்தில்தான் இந்திய அரசு "என்.எம்.இ.பி'' என்றொரு அமைப்பை தொடங்கியிருந்தது. இது மலேரியா காய்ச்சல் வரும் முன் காக்கும் அமைப்பு.

    கிராமங்களுக்குப்போய் வீடு வீடாக இருப்பவர்களிடம் ரத்தம் எடுப்பார்கள். அதை பரிசோதனைக்கு வத்தலக்குண்டுக்கு அனுப்புவார்கள். இந்த சோதனையில் மலேரியா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அதற்கு இலவசமாக மருந்து, மாத்திரைகள் கொடுப்பார்கள்.

    இந்த வேலையை பார்ப்பதற்காக எங்கள் ஊர் பண்ணைபுரத்தை சென்டராக்கி 7 கிராமங்களுக்கு மூன்று பேர் இருந்தார்கள். அவர்களை கண்காணிப்பதற்காக இன்ஸ்பெக்டராக ஒரு ஆள் வந்தார்.

    ஒருநாள் தற்செயலாக நானும், அண்ணன் பாஸ்கரும் பண்ணைபுரம் அத்தி மர பஸ் ஸ்டாண்ட் பக்கமாய் போய்க்கொண்டிருந்தோம். பஸ்சில் இருந்து பேண்ட் - ஷர்ட்டுடன் இறங்கிய ஒருவர், எங்களைக் கடந்து ஊருக்குள் போனார்.

    "அது யார்றா பேண்ட் - ஷர்ட் போட்டுக்கிட்டு நம்ம ஊருக்கு வர்றது?'' என்று எங்களுக்குள் கேட்டுக்கொண்டோம். உடனே விடை கிடைக்கவில்லை. மதிய உணவு முடிந்து சாயங்காலம் காபி சாப்பிட கடைத் தெருவுக்குப் போனால் அங்கே பாஸ்கரும், காலையில் பார்த்த பேண்ட் - ஷர்ட் ஆளும் உட்கார்ந்திருந்தார்கள்.

    என்னைப் பார்த்ததும் பாஸ்கர் "இவர்தான் இந்த ஊருக்கு வந்திருக்கிற என்.எம்.இ.பி. இன்ஸ்பெக்டர். பெயர் சின்னசாமி'' என்று அந்த புதியவரை அறிமுகப்படுத்தினார். நானும் உடனே கைகொடுத்து `ஹலோ சார்' என்று அறிமுகமாகிக் கொண்டேன்.

    காபி குடித்து முடித்ததும் அப்படியே பேசிக்கொண்டே நடந்தபோது ஒரு மாதிரியான ரசனை உள்ளவராகத் தெரிந்தது.

    மறுநாள் காலையில் கிணற்றடியில் குளிக்கப்போனோம். முதல் நாள் அவரை `சார்... சார்...' என்று அழைத்த பாஸ்கர், `ஏய், என்னப்பா' என்று மாற்றி, அதையும் தாண்டி `அடப்போய்யா' என்ற லெவலுக்கு நெருக்கமாகி விட்டார்.

    நான் சிறுவன். நானும் பாஸ்கரும் அண்ணன் - தம்பி என்றாலும் நண்பர்கள் போலத்தான் பழகுவோம். இப்போது பிரச்சினை என்னவென்றால் சின்னச்சாமியுடன் பாஸ்கர் நெருக்கம் காட்டியதில் என்னை வெட்டி விட்டார். அவர்கள் போகிற இடங்களுக்கு என்னை அழைத்துச் செல்லமாட்டார்கள். மீறி அவர்களுடன் போக முயன்றால் "டேய், நீ சின்னப்பையன்! எங்களோடு வராதே!'' என்பார்கள்.

    இந்த சின்னச்சாமி வேறு யாருமல்ல. பின்னாளில் சினிமா டைரக்டராக மாறி, `மண்வாசனை'யுடன் ரசிகர்கள் மனதில் குடிகொண்டுவிட்ட பாரதிராஜாதான்.

    பண்ணைபுரத்திலேயே பாரதி ஒரு சிறு அறையை வாடகைக்கு எடுத்து தங்கிவிட்டார். இன்ஸ்பெக்ஷனுக்கு போய்வரவேண்டும் என்று அவ்வப்போது புறப்பட்டுப்போவார்.

    "என்னய்யா, பெரிய இன்ஸ்பெக்ஷன்? அப்புறம் போகலாம்'' என்பார், பாஸ்கர்,

    "டூட்டியில் கரெக்டா இருக்கணும்'' என்பார், பாரதி. "நீயே இன்ஸ்பெக்டர்தானே. எப்ப வேணும்னாலும் போகலாமில்லே?'' - இது

    பாஸ்கர்."மேல இருந்து யாராவது வந்து நான் மாட்டிக்கக் கூடாதில்லே?'' - இது பாரதி.

    பாரதி அங்கே இங்கே இன்ஸ்பெக்ஷனுக்காக சுற்றுகிற நேரம்தவிர, மற்ற நேரங்களில் எங்களோடுதான் இருப்பார். எங்களோடுதான் சுற்றுவார். நாங்கள் நல்ல நண்பர்களாகி விட்டோம்.

    சீட்டாடுவது; சினிமாவுக்குப் போவது; பிடித்த நடிகர்கள் பற்றி பேசுவது; எழுத்தாளர்களின் படைப்புகள் பற்றி அலசுவது; புளியந்தோப்பில் காக்கா குஞ்சு விளையாடுவது; கிணற்றில் நீச்சலில் தலைகீழாகத் தாவுவது; கிணற்றுக்குள்ளேயே ஒளிந்து பிடித்து விளையாடுவது என இப்படி நாங்கள் சுதந்திரப் பறவைகளாகத் திரிந்தோம்.

    ஆனாலும் மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை என்னை ஒதுக்கிவிடுவார்கள். `நீ சின்னப்பையன். எங்களுடன் வரக்கூடாது' என்று "தடா'' போடுவார்கள். நானும் ஒதுங்கி விடுவேன்.

    `ஏன் இப்படி?' கேட்பீர்கள். அந்த நேரம் ஸ்கூல் முடிந்து மாணவிகள் வீடு வரும் நேரம்! இதுதான் காரணம்.

    இப்படி `தடா' போட்டவர்கள் நாளடைவில் நான் வளர்ந்ததாக கருதினார்களோ என்னவோ, என்னையும் சேர்த்துக்கொண்டார்கள்.

    பாரதி நன்றாக ஓவியம் வரைவார். நானும் கொஞ்சம் வரைவேன். எல்லாம் பென்சில் டிராயிங்தான். சமயத்தில் எங்கள் இருவருக்கும் ஓவியம் வரைவதில் போட்டி வந்துவிடும். யார் வரைவது நன்றாக இருக்கும் என்று யாராலும் கணித்து சொல்ல முடியாது. இரண்டுமே நன்றாக

    இருக்கும்.ஆனால் எனக்கு மட்டுமே தெரியும், பாரதி என்னைவிட நன்றாக ஓவியம் வரைவார் என்பது.

    இப்படி எங்களுடன் தெருவில் ஆரம்பித்த நட்பு வீடு வரை வந்துவிட்டது. வீட்டுக்கும் வந்து, `ஜோக்' அடித்து கலகலப்பு ஏற்படுத்திவிட்டுப் போவார்.

    ஆனால் இப்படி நெருக்கம் காட்டி பழகிய பாரதி என்னைவிட எங்களிடம் கோபித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு விஷயம் நடந்தது. அதற்கு பாஸ்கர்தான் காரணம்.

    பாஸ்கர் ஒருமுறை கோம்பை டூரிங் தியேட்டரில் படம் பார்க்க பாரதியை அழைத்துப்போனார். டிக்கெட் வாங்காமல் நண்பர்கள் மூலம் பெஞ்ச் டிக்கெட்டில் ஓசியில் படம் பார்க்க ஏற்பாடு செய்தார். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, போதாத நேரம் செக்கிங் அதிகாரி வந்துவிட, பாரதிக்கு வியர்த்துக் கொட்டியது. ஒரு வழியாக செக்கிங் பார்வைக்கு போகாமல் தியேட்டரில் இருந்து வெளியே வந்தவர், பாஸ்கரை கோபத்தில் திட்டித் தீர்த்துவிட்டார்.

    அடுத்த நாள் காலையில் கடை வீதியில் டிபன் சாப்பிடப் போனால் அங்கிருந்தார். ஆனால் எங்களைப் பார்த்த பிறகும் பேசாமல் இருந்தார். "சரி; கோபம் போலிருக்கிறது'' என்றெண்ணி சாப்பிடும் நேரத்தில் மெள்ள பேச்சுக் கொடுத்தோம்.

    அப்போதுகூட தீராத கோபத்துடன்தான் பாஸ்கரை பார்த்தபடி, "டேய் இவன் இருக்கானே...'' என்று ஆரம்பித்தார்.

    ஆனால் அந்தக் கோபம் நிற்கவில்லை. பாஸ்கர் முகத்தைப் பார்த்ததும் புரையேறும் அளவுக்கு சிரிக்கத் தொடங்கி விட்டார். கூடவே நாங்களும் சேர்ந்து கொள்ள, நிறுத்த முடியாத சிரிப்பாகி விட்டது.

    சிரிப்பு ஓய்ந்த நேரத்தில் பாஸ்கரிடம், "எப்படிய்யா உனக்கு இந்த மாதிரி ஒரு தைரியம் வந்தது?'' என்று கேட்டார்.

    பாஸ்கர் அவரிடம், "இன்ஸ்பெக்டர் அய்யாவாச்சே! நல்ல படம் ஓடுது. அதைப் பார்க்கட்டுமேன்னு `ஓசி'யில ஏற்பாடு செய்தேன். ஆனா உன்னோட நேரம் சரியில்லை'' என்றார்.

    பாரதியும் விடவில்லை. "ஏண்டா கூட்டிட்டுப்போனது நீ! ஆனால் என் நேரம் சரியில்லையா?'' என்று மடக்கினார்.

    பாஸ்கரும் விடுவதாக இல்லை.

    "இத்தனை நாள் நாங்க போயிருக்கோம். யாராவது செக்கிங் வந்தார்களா? அதென்ன நீ வந்தப்போ மட்டும் செக்கிங்? அப்ப உன் நேரம் சரியில்லையா? என் நேரம் சரியில்லையா?''

    பாஸ்கர் விடாப்பிடியாகக் கேட்க, பாரதி  அதற்கு சிரிக்க, கோபம் காணாமல் போயிருந்தது.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளால் எங்கள் நட்பு மேலும் வலுப்பட்டது.
    அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.
    அண்ணன் இல்லாத நேரத்தில், அவருடைய ஆர்மோனியத்தை இளையராஜா எடுத்து வாசித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அண்ணன் பாவலர் வரதராஜன், பிரம்பை எடுத்து இளையராஜாவை விளாசினார்.

    பாவலரின் கச்சேரிகளில் பெண் குரலில் பாடி அசத்திய இளையராஜாவை, திடீரென்று "நீ பாடவேண்டாம்'' என்று பாவலர் கூறிவிட்டார். அதற்குக் காரணம் இளையராஜாவின் குரலில் ஏற்பட்ட மாற்றம்தான்.

    இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "நாளொரு கச்சேரி, பொழுதொரு ஊர் என்று போய்க்கொண்டிருந்த அந்த உற்சாக நாட்களில், ஆண்களுக்கு பருவ வயதில் வரும் "மகரக்கட்டு'' எனக்கு வந்துவிட்டது. அதாவது குரல் உடைந்து, ஆண் குரலாக மாறுவதை "மகரக்கட்டு'' என்பார்கள். என் குரல் பெண் குரல் போல் இல்லாததால், என்னை விட்டு விட்டு தம்பி அமரனை (கங்கை அமரன்) கச்சேரியில் டூயட் பாட அழைத்துக்கொண்டு போனார், அண்ணன்.

    "படிப்பும் போச்சு; பாட்டும் போச்சு! இதென்ன பெரிய பாடாய்ப் போச்சுதே!'' என்ற வேதனையுடன் பண்ணைபுரம் கிராமத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக கழிந்தது.

    என்னுடன் படித்த நண்பர்கள் மதுரையில் கல்லூரிகளில் சேர்ந்து படித்து லீவு நாட்களில் ஊர் வருவார்கள். ஊரில் இருக்கும் நான், அவர்களை சந்திக்க நேரும்போது படிப்பின் இழப்பைப்பற்றி நினைத்து, மனம் துன்பப்படும்.

    அதே நேரம் அதிகமாக ஊர் சுற்றியதால் கிடைத்த அனுபவத்தில், அவர்களுக்குத் தெரியாத விஷயங்களை நான் தெரிந்து வைத்திருப்பதைக் கண்டு, அவர்கள் பொறாமைப் படுவதைக் காணப் பெருமையாகவும் இருக்கும்!

    எப்படியோ! எப்போதும் நான் தனிதான் என்று இறைவன் எழுதி வைத்து விட்டதால், அதை என்னால் எப்படி மாற்ற முடியும்?

    இந்தத் தனிமையைப் போக்க, "கல்கி''யின் சரித்திர நாவல்கள் எனக்கு உதவின. பள்ளியில் படிக்கும்போது ஏற்கனவே இந்த நாவல்களை படித்திருந்தாலும், என்றைக்குப் படித்தாலும் அன்றைக்குத்தான் எழுதியதைப் போலிருக்கும்.

    இதற்கிடையே கோவையில் கச்சேரிக்கு சென்று வந்த அண்ணன் ஆர்மோனியம் ஒன்றை வாங்கி வந்திருந்தார். அதன் விலை 85 ரூபாய் என்றார். அதை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்தார். யாரும் தொடக்கூடாது என்று உத்தரவே போட்டிருந்தார்.

    இது தெரிந்தும், அவர் வீட்டில் இல்லாத ஒரு நாள் நான் அந்த ஆர்மோனியத்தை எடுத்து சும்மா வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். எதிர்பாராமல் அந்த நேரத்தில் அண்ணன் வந்துவிட்டார். நான் ஆர்மோனியமும் கையுமாக இருந்ததை பார்த்தவருக்கு, கோபம் வந்துவிட்டது. புறங்கையை நீட்டச்சொல்லி, பிரம்பால் விளாசிவிட்டார்.''

    - இவ்வாறாக இளமைப் பருவத்து நினைவுகளை பகிர்ந்து கொண்டார், இளையராஜா.

    இளையராஜா இப்படி பிரம்படி வாங்கியிருக்கிறாரே என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். ஏற்கனவே அண்ணனிடம் அடிவாங்கிய அனுபவமும் இருக்கிறது. அதை அவரே கூறுகிறார்:

    "சிறு வயதில் கிணற்றில் நீச்சலடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது, பாதுகாப்புக்கு ஆளில்லாமல் சிறுவர்களாக சேர்ந்து குளித்ததை தெரிந்து கொண்டவர், என்னை வீட்டுத்தூணில் கட்டிப்போட்டார். மீண்டும் ஒரு முறை குளித்து விட்டு வந்ததற்காக, அம்மாவே என்னையும் பாஸ்கரையும் தூணில் கட்டி வைத்திருக்கிறார்கள். அதோடு நில்லாமல் கண்ணில் மிளகாயை அரைத்து வைத்தார்கள். அப்புறம் தண்டனையைக் குறைக்க வெங்காயத்தை அரைத்து வைப்பது வழக்கமாயிற்று.

    குறைந்தது மூன்று மணி நேரமாவது இப்படி தூணில் கட்டிப் போட்டிருப்பார்கள். பின்பு பரிதாபப்பட்டு அவிழ்த்து விடுவார்கள்.

    இப்படி தண்டனை வாங்குகிற அன்று இரவு சாப்பாட்டின்போது, கேட்பதெல்லாம் இல்லை என்று சொல்லாமல் போட்டிருக்கிறார்கள். அதுதான் சமயம் என்று நானும் பாஸ்கரும் "இந்த வீட்டைப்போல் எந்த வீடும் இருக்க முடியாது'' என்று ஆரம்பிப்போம்.

    "ஏண்டா அப்படிச் சொல்றீங்க?'' என்று அம்மா திருப்பிக் கேட்பார்.

    "குளிக்கிறதுக்குப் போய் எந்த வீட்டிலாவது அடிப்பாங்களா?'' என்று தொடங்கி "இனிமே தீபாவளி தீபாவளிக்குத்தான் `கங்கா ஸ்நானம்' பண்ணணுமாக்கும்?'' என்று சொல்லும்போதே சிரிப்பு வந்து சிரித்து விடுவோம்.

    ஆர்மோனியத்துக்காகவும் அடி வாங்க நேர்ந்ததால், அதன் பிறகு அண்ணன் வீட்டில் இருக்கும் நேரங்களில் ஆர்மோனியத்தை தொடுவதில்லை. அவர் இல்லாதபோது எடுத்து வாசிப்பது, வருவது தெரிந்தால் எடுத்து மூடி வைத்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருப்பது என்பது வழக்கமாகிவிட்டது.

    அம்மா, அண்ணனை கண்டிக்கவும் மாட்டார்கள்; நான் வாசிப்பதை தடுக்கவும் மாட்டார்கள். இதனால் அம்மாவின் மானசீக அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில், சீக்கிரமே ஓரளவுக்கு ஆர்மோனியம் வாசிக்க கற்றுக்கொண்டு விட்டேன்.

    ஆர்மோனியம் வீட்டுக்கு வந்த புதிதில், அண்ணனுடன் கச்சேரிக்கு வரும் சங்கரதாசிடம், எனக்கு ஆர்மோனியம் கற்றுத்தரும்படி கேட்டிருக்கிறேன். அவரும் `சரி' என்றார். ஆனால் வாய்ப்பு அமையாததால் அவரிடம் கற்கும் வாய்ப்பு கிடைக்காமலேயே போயிற்று. ஆனாலும் அவர் வாசிக்கிற பாணியை மனதில் கொண்டு வந்து `இப்படி வாசிப்பாரா? இல்லை, இப்படி வாசிப்பாரா?' என்று வாசித்து வாசித்து, ஓரளவுக்கு என்னால் வாசிக்க முடியும் என்ற தெளிவுடன், அதே நேரம் திருப்தியில்லாமலும் இருந்தேன்.

    இந்த நிலையில்தான் அண்ணனுக்கும், சங்கரதாசுக்கும் ஏதோ மனஸ்தாபம். கம்பத்தில் நடக்கவிருந்த ஒரு கச்சேரிக்கு, முந்தின நாள் தன்னால் வர இயலாது என்று சொல்லியனுப்பி விட்டார், சங்கரதாஸ்.

    அணணன் தவித்துப் போனார். ஒருநாள் இடைவெளியில் வேறு ஒருவரை பார்க்க வேண்டும். அதற்கு மதுரைக்குத்தான் போகவேண்டும். அப்படியே ஆள் கிடைத்தாலும் ஒத்திகை பார்க்க நேரம் வேண்டும்.

    இப்போதும் அம்மாதான் கைகொடுத்தார். அம்மா அண்ணனிடம், "தம்பி ராஜையாவை கூட்டிட்டுப் போகலாமே'' என்றார்.

    அம்மா இப்படிச் சொன்னதும், அண்ணன் ஒருமுறை என்னை மேலும் கீழும் பார்த்தார். நான் பிராக்டீஸ் செய்து வைத்திருப்பதை அவராகத் தெரிந்து கொண்டாரோ அல்லது எனக்குத் தெரியாமல் அம்மாதான் சொல்லியிருந்தாரோ, "சரி, வா!'' என்றார்.

    என் இசை வாழ்வுக்கு போடப்படும் முதல் அஸ்திவாரக்கல் அது என்று தெரியாமல், ஆர்மோனியத்துடன் அண்ணன் கச்சேரிக்கு புறப்பட்டேன்.

    கம்பத்தில் மெயின் ரோட்டில் மேடை போடப்பட்டிருந்தது. ஒரு சிறுவன் (இளையராஜா) அரை டிராயருடன் ஆர்மோனியம்வாசிக்க, பாஸ்கர் தபேலா வாசிக்க, அண்ணன் பாட கச்சேரி தொடங்கியது. என் கைகள் நடுக்கத்துடன் ஆர்மோனியம் வாசிக்க, நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை, என் வாசிப்புக்கும் கைதட்டல் கிடைக்குமென்று!

    தப்பும் தவறுமாய் வாசித்ததற்கே இவ்வளவு கைதட்டல் கிடைக்கிறதே, இன்னும் சரியாக வாசித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று

    எண்ணினேன்.இதன் பிறகு, வீட்டில் ஆர்மோனியத்தை நான் தொட்டால், அண்ணன் அடிப்பதில்லை.
    சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.
    சின்ன வயதில் இளையராஜா பாடிய பாட்டு பெண் குரலில் அமைந்தது! குரலைக் கேட்டு விட்டு, "பாடுவது பெண்'' என்று பந்தயம் கட்டியவர்கள் ஏமாந்தனர்.

    கேரள முதல்-மந்திரி நம்பூதிரிபாடு, பாவலர் வரதராஜனை மேடைக்கு அழைத்து, "தனது மந்திரிசபை அமையக் காரணமானவர்'' என்று பாராட்டியதால் அவர் ஒரே நாளில் புகழின் உச்சிக்குப் போய்விட்டார்.

    "இந்த சம்பவம்தான் நான் இசை உலகில் அதிகமாக கால்பதிக்க காரணமாக அமைந்தது'' என்கிறார், இளையராஜா.

    அவர் கூறுகிறார்:-

    "கேரளாவில் நடந்த நிகழ்ச்சி மூலமாக பாவலரை அறிந்த கம்ïனிஸ்டு கட்சியினர் அவரை தங்கள் பகுதிகளிலும் பாட அழைத்தார்கள். அதில் முதல் அழைப்பு திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் கம்ïனிஸ்டு தொழிலாளர் மாநாட்டுக் குழுவிடம் இருந்து வந்தது.

    அண்ணனும் பாட ஒப்புக்கொண்டார். இது தொடர்பாக விளம்பரமும் செய்தார்கள். ஆனால் பாட வேண்டிய மூன்று நாளைக்கு முன் அண்ணனுக்கு ஜ×ரம் வந்துவிட்டது. இரண்டொரு நாளில் ஜ×ரம் சரியாகி விடும் என்று பார்த்தால் அதிகமானதே தவிர, குறைந்த பாடில்லை.

    இதற்கிடையே நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி அண்ணன் தந்தி கொடுத்துவிட்டார். அப்படியும் அண்ணனை அழைத்து பாட வைத்தே ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள், நிகழ்ச்சிக்கு முதல் நாள் திருச்சியில் இருந்து காரை எடுத்துக்கொண்டு நேராகவே வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.

    அவர்களின் ஆர்வத்தை நேரில் பார்த்த அண்ணன், `அடாத ஜ×ரத்திலும் விடாது பாட' முடிவு செய்துவிட்டார். ஆர்மோனியம் சங்கரதாஸ், தபேலாக்காரர் சகிதம் அண்ணன் புறப்படவிருந்த நேரத்தில் அம்மா அண்ணனிடம் வந்தார். "உன்னுடன் தம்பி ராஜையாவையும் அழைத்துப் போனால், அவனையும் இடையிடையே இரண்டொரு பாட்டுப்பாட வைக்கலாமே. அவன் அப்படிப் பாடும்போது உனக்கும் `ரெஸ்ட்' கிடைத்த மாதிரி இருக்கும்'' என்றார்.

    ஜ×ரத்தில் பலவீனப்பட்ட நிலையில் அண்ணன் பாடப்போனால், அவருக்கு கொஞ்சமாவது ஓய்வு தேவை என்ற கண்ணோட்டத்தில்தான் அம்மா என்னை சிபாரிசு செய்தார். அதைப் புரிந்து கொண்ட அண்ணன், என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, "சரி நீயும் வா'' என்றார்.

    அண்ணனின் இந்த அழைப்புதான் என் கலையுலக வாழ்க்கைப் பயணத்தின் தொடக்கம் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

    திருவெறும்பூர் மாநாட்டில் சுமார் ஐம்பதாயிரம் பேர் கூடிய கூட்டத்தில் நான் முதன் முதலில் பாடியபோது கிடைத்த கைதட்டல், உயர் படிப்பு குறித்து நான் கட்டியிருந்த மனக்கோட்டையைத் தகர்க்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கவில்லை.

    மூன்று நாட்கள் திருச்சியில் கச்சேரி. பாடும் நேரம் மாலைதானே. மற்ற நேரங்களில் பெரும்பாலும் திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில், தாயுமானவர் கோவில் என்று நேரம் ஓடியது. மலைக்கோட்டையின் உச்சியில் இருந்து, காவிரியைப் பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. ஸ்ரீரங்கம், திருவானைக் காவல் கோபுர தரிசனம் என்று, கண்களில் அதிசயங்கள் கண்டேன்.

    அதோடு காவிரியாற்றில் உற்சாகக் குளியல் போட்டபோது, அந்த மகிழ்ச்சி என்னை உறைïரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்திற்கே கொண்டு போய்விட்டது.

    மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தால், மாணவ நண்பர்கள் என்னிடம், "என்ன ஆயிற்று? ஏன் ஸ்கூலுக்கு வரவில்லை?'' என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். நானோ மூன்று நாளும் ஸ்கூலில் என்ன பாடம் நடந்திருக்கும் என்பதற்குப் பதிலாக, இந்த மூன்று நாளில் வெளியுலகில் என்ன பாடம் படித்தேன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். கூரை வேய்ந்த அந்த சின்னஞ்சிறிய வகுப்பறையின் தடுப்புச் சுவர்களுக்குள் இருந்தபடி மலைக்கோட்டையின் உச்சிக்கும் மேலே திறந்த வானவெளியிலே கற்பனை சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தேன்.

    அண்ணனுக்கு கச்சேரிகளுக்கு நிறைய அழைப்பு வந்தது. அவரோடு அவ்வப்போது கச்சேரிகளில் கலந்து கொண்டு படிப்பையும் தொடர்வது சாத்தியமாக இல்லை. அவ்வளவுதான். பள்ளிக்கூட கதவு அடைபட்டு விட்டது.

    அப்போது சிறிய வயது என்பதால் என் குரல் பெண் குரல் மாதிரி இருக்கும். அண்ணன் நான் பாடுவதற்கென்றே பாடல்களையும் எழுதிவிட்டார். அண்ணனுடன் பாட `டூயட்' பாடல்களும் தயாராயின! இப்படி அண்ணனின் இசைக்குழுவில் நானும் முக்கியமான பாத்திரமாகி விட்டேன்.

    இசை நிகழ்ச்சியைப் பொறுத்தவரையில், தொடக்கத்திலேயே மக்களை அண்ணன் தன் பக்கம் இழுத்து விடுவார். முதல் பாடல் முடிந்து, வந்திருக்கும் எல்லாருக்கும் `வணக்கம்' சொல்லும் பாடலிலேயே பத்து இடங்களில் கை தட்டல்கள் வாங்கி விடுவார். கூட்டம் முழுவதும் அவர் சிரித்தால் சிரிக்கும்; கோபித்தால் மக்கள் முகத்திலும் கனல் தெரியும். அழும் மாதிரி பேசினாலோ முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களின் முகங்களில் கண்ணீர் வழியும்.

    இது, தினமும் நாங்கள் காணும் அன்றாட நிகழ்ச்சி.

    டூயட் பாடலில் அண்ணன், "காங்கிரசில சேரப்போறேண்டி பொம்பளே! கதரைப் போட்டு பார்க்கப் போறேண்டி' என்று பாட, பதிலுக்கு நான், "வெளிய சொல்லித் தொலைச்சுடாதீங்க மாப்பிளே! வீணா கெட்டுப் போயிடாதீங்க'' என்று பாடுவேன்.

    சிறு வயது என்பதால், என் குரல் பெண் குரல் போல ஒலிக்கும்.

    இதில் ஆச்சரியம் என்ன தெரியுமா? என்னைப் பார்க்காமல் வெளியில் என் குரலைக் கேட்டுவிட்டு "யாரோ ஒரு பெண் பாடுகிறாள்'' என்று எதிர்பார்த்து அப்புறமாய் நேரில் பார்க்க வந்து ஏமாந்து போனவர்கள் பலர்! குரலைக்கேட்டு நான் பெண்தான் என்று பந்தயம் கட்டி தோற்றவர்களும் ஏராளம்.

    1962-ல் பாண்டிச்சேரி தேர்தலில் அண்ணன் பாடிய பாட்டு ரொம்பவே பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அண்ணனும் நானும் இப்படிப்

    பாடுவோம்:"ஒத்த ரூபா தாரேன் நான்

    ஒனப்பத் தட்டும் தாரேன்

    ஓட்டுப் போடுற பொண்ணே - கொஞ்சம்

    மாட்டப் பாத்து குத்து''

     - இது அண்ணன்.

    "ஒத்த ரூபாயும் வேணாம் ஒங்க

    ஒனப்பூத் தட்டும் வேணாம் - நீங்க

    ஊரை அழிக்கிற கூட்டம் - ஒங்கள

    ஒழிச்சிக் கட்டப் போறோம்''

    - இது நான்.

    இந்தப் பாட்டுக்கு எவ்வளவு கரகோஷம் தெரியுமா?

    இப்படி பாடி, நானும் ரசிகர்களுக்கு தெரிய வந்த நேரத்தில், "இனி நீ பாட வரவேண்டாம்'' என்று அண்ணன் சொன்னால் எப்படி

    இருக்கும்?படிப்புப் போச்சு; பாட்டும் போச்சு என்றால் எனக்கு எப்படி இருக்கும்?
    கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்.
    கேரள சட்டசபை தேர்தலில், கம்ïனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார். கம்ïனிஸ்டு கட்சி வெற்றி பெற்று, நம்பூதிரிபாடு முதல்-மந்திரியானார். "இந்த வெற்றி பாவலர் வரதராஜனின் வெற்றி'' என்று நம்பூதிரிபாடு பாராட்டினார்.

    தேர்தல் பிரசாரத்தில் அண்ணனுடன் சேர்ந்து ஈடுபட்ட அனுபவம் பற்றி இளையராஜா கூறியதாவது:-

    "ஒரு தேயிலைத் தோட்டத்தின் வழியாக நாங்கள் சென்றபோது, ஓரிடத்தில் ஆண்களும், பெண்களுமாக தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள். அங்கே மேட்டுப் பகுதியில் ஜீப்பை நிறுத்தச் சொன்ன பாவலர் அண்ணன் பிரசார பாட்டை பாடினார் இப்படி:

    "சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா

    வெட்கங்கெட்ட காளை ரெண்டு

    முட்டி உடைஞ்ச காளை என் கண்ணம்மா - இது

    மூக்குக்கயிறு அறுந்த காளை என் பொன்னம்மா''

    என்று பாடினார்.

    பாவலரின் பாட்டு தேயிலைத் தோட்டத்தில் எதிரொலிக்க, அங்கே வேலை செய்தவர்கள் தங்கள் பின்னால் கட்டியிருந்த தேயிலைக் கூடைகளை அப்படியே போட்டுவிட்டு, மேலே வேகமாக ஓடிவந்து ஜீப்பை சுற்றி நின்று கேட்டார்கள்.

    இடையிடையே கரகோஷம். ஆனந்தக் கூச்சல்கள்.

    `இன்னும் ஒரு பாட்டு. இன்னும் ஒரு பாட்டு' என்று ரசிகர்களாக மாறிப்போன தொழிலாளர்கள்!

    நேரம் ஆகிவிட்டதை உணர்ந்த பாவலர் அவர்களிடம், "வேறு இடங்களுக்கும் போகவேண்டும். நேரமாகிவிட்டது'' என்று சொல்லி ஜீப்பை கிளப்பச் சொல்ல,

    அப்போது, "பாவலரே! கொஞ்ச நேரம் பொறுங்க'' என்று சொன்ன ஒரு தொழிலாளி, ஓட்டமாய் ஒரு பர்லாங் தூரம் ஓடி கையில் சூடு பறக்கும் `டீ' கிளாசுடன் வந்து நின்றார்.

    அந்தக் குளிரிலும் ஆவி பறக்க டீ கொடுத்த அந்த அன்பு, எங்களை நெகிழச் செய்தது.

    எதிர்பார்த்தபடியே அந்தத் தொகுதியில் மீண்டும் கம்ïனிஸ்டு கட்சி ஜெயிக்க, நம்பூதிரிபாடு தலைமையில் கம்ïனிஸ்டு கட்சி மந்திரிசபை அமைத்தது.

    மூணாறு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் வெற்றி விழா கொண்டாட்டம். லட்சக்கணக்கில் மக்கள் கூட்டம். மேடையில் நம்பூதிரிபாடு பேசவந்தபோது, "இவடே பாவலர் வரதராஜன் ஆரானு?'' என்று கேட்டார்.

    கூட்டத்தின் முன் வரிசையில் அமர்ந்திருëëத பாவலரை ஜனங்கள் எழுந்து நிற்க வைத்தார்கள். பாவலரை பார்த்த நம்பூதிரிபாடு, `என்ட சகாவே! இவிட வரு'' என்றார். அண்ணன் மேடையில் ஏறினார். கைதட்டல் அதிகமாகியது.

    அப்போது நம்பூதிரிபாடு "ஈ வெற்றி முழுவன் பாவலர் வரதராஜன்ட வெற்றியானு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

    அவர் இப்படிச் சொன்னதும் மொத்தக் கூட்டமும் உற்சாகமானது. கைதட்டல் ஒலி விண்ணை எட்டியது. இந்த சம்பவத்துக்குப் பிறகே தமிழ்நாடு கம்ïனிஸ்டு கட்சிக்கு பாவலர் அறிமுகமானார்.''

    இவ்வாறு இளையராஜா கூறினார்.

    பாவலர் அண்ணனின் பாட்டு மூலம் கேரளத்தில் கிடைத்த வெற்றியை பகிர்ந்து கொண்ட இளையராஜா, தேவாரம் ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பில் பீஸ் கட்டி சேர்ந்து விட்டார்.

    அதுபற்றி உற்சாகத்துடன் இளையராஜா சொன்னார்:

    "பள்ளியில் சேர்ந்த அன்று நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவேயில்லை. புதிய புத்தகங்களும், நோட்டுப் புத்தகங்களும் வாங்கினேன். அதன் மணம் மனதுக்கு ரம்மியமாக இருந்தது. புதுப் புத்தகங்களை வாங்கிய அன்று அவற்றை தலையணைக்கு பக்கத்தில் வைத்து தூங்கினேன்.

    அடுத்த நாள் காலை பள்ளிக்குக் கிளம்பினேன். போன வருடம் 9-ம் வகுப்பில் பெயிலான என் நண்பன் ஜெயகரனும் என்னுடன் 9-ம் வகுப்பில் சேர்ந்து கொண்டான். நான் படிக்காமல் ஒரு வருடம் வேஸ்ட் ஆகிவிட்டதே என வருந்தியதை, அவன் படித்தும் ஒரு வருஷம் வேஸ்ட் ஆகியிருப்பதை எண்ணி மனதை தேற்றிக்கொண்டேன்.

    பள்ளியில் சேர்ந்தாகிவிட்டது. அது `நான் 9-வது படிக்க முடியாது'' என்று சொன்ன ஜோதிடர்களுக்குத் தெரிய வேண்டாமா?

    ஜோதிடர்களை பார்த்தேன். "நான் இளங்கோவடிகள் இல்லை என்றாலும், உங்கள் ஜோதிடத்தைப் பொய்யாக்கி விட்டேன் பார்த்தீர்களா?'' என்று கேட்டேன்.

    அவர்களோ என்னை ஏளனமாக பார்த்தபடிகள், "கொஞ்சம் பொறு கண்ணா. இன்னும் மூணே மாசம். இந்த கிரகம் இந்த வீட்டுக்கு வரும்போது எல்லாம் சரியாய்ப் போயிடும் (அதாவது படிக்க முடியாமல் போய்விடும்) என்றார்கள்.

    "அதையும் பார்க்கலாம்'' என்று சொல்லிவிட்டு, படிப்பைத் தொடர்ந்தேன். என்ன நடந்தாலும் எக்காரணம் கொண்டும் படிப்பையும், ஸ்கூலையும் விட்டு விடுவதில்லை என்று எனக்குள் ஒரு வைராக்கியமே குடிகொண்டது.

    அப்போது என்னை பார்ப்பவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். நாலைந்து மாணவர்களோடு சேர்ந்து நானும் பேசிக்கொண்டிருக்கும்போது, நான் ஏதாவது முக்கியமாக சொன்னால்கூட, அதை ஏனோதானோவென்றே கேட்பார்கள்.

    பள்ளியில் காலை பிரேயரை எனக்கு அண்ணன் முறைக்காரரான குருசாமி என்பவர் பாடுவார். இல்லையென்றால் ராமநாதன் என்ற தேவாரத்து மாணவன் பாடுவார். இவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. படித்தார்கள்.

    அன்றைக்கென்று பார்த்தால் குருசாமி அண்ணனுக்கு நல்ல ஜ×ரம். குரல் வேறு கம்மிப் போயிருந்தது. அதனால் அன்றைய பிரேயர் பாடலை `பாட முடியாது' என்பதை தெரிந்து கொண்டவர், பிரேயர் நேரத்தில் என்னைப் பாட அழைத்தார்.

    மைதானம் முழுக்க மாணவர்கள். நான் தயங்கித் தயங்கி, படிகளில் ஏறி, மேல் படியில் வழக்கமாக பிரேயர் பாடும் இடத்தில் நின்றபடி, `ஆதியந்தம் இல்லா அருட்ஜோதியே' என்று தொடங்கினேன். ஒரு அமைதி எங்கிருந்தோ வந்து கவ்வியது. பாடி முடியும்வரை அந்த அமைதி தொடர்ந்தது. பாடல் முடிந்து அவரவர் வகுப்புகளுக்குச் சென்ற மாணவர்கள் என்னை விசேஷமாக பார்த்தார்கள்.

    என் வகுப்பிலோ மாணவ-மாணவிகள் என்னை தனியாக கவனித்தார்கள்.

    அதுவரை என்னை பொருட்படுத்தாதவர்களுக்கு அன்று முதல் நான் முக்கியமானவன் ஆனேன். என்னை சட்டை செய்யாதவர்கள்கூட வலுவில் வந்து பேசினார்கள்.

    இப்படி திடீர் கவனிப்பு தொடர்ந்தாலும் ஜோதிடத்தை பொய்யாக்க வேண்டும் என்ற உறுதியுடன் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினேன். காலாண்டுத் தேர்வில் நல்ல மார்க் எடுத்தேன்.
    ×