search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    வோல்வோ எக்ஸ்.சி.40
    X
    வோல்வோ எக்ஸ்.சி.40

    விரைவில் இந்தியா வரும் வோல்வோ பாதுகாப்பான பேட்டரி கார்

    வோல்வோ நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சொகுசு கார்களைத் தயாரிக்கும் வோல்வோ நிறுவனம் இப்போது பேட்டரி எஸ்.யு.வி. மாடல் கார்களையும் தயாரித்து அதை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. எக்ஸ்.சி 40. என்ற பெயரில் மிகவும் பாதுகாப்பான, சிறிய ரக எஸ்.யு.வி.யாக இது இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    சுவீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனத்தை சீனாவைச் சேர்ந்த ஜீலி குழுமம் வாங்கிஉள்ளது. இருப்பினும் சுவீடனின் கோதென்பர்க் நகரில் உள்ள டோர்ஸ்லான்டா என்ற இடத்தில் தலைமையகத்தைக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பேட்டரி காருக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மாறிவரும் சூழலில் வோல்வோ நிறுவனமும் பேட்டரி கார் தயாரிப்பில் தீவிரம் காட்டியுள்ளது.

    இந்நிறுவனத் தயாரிப்புகளில் பாதிக்கும் மேலான வாகனங்களை பேட்டரி வாகனங்களாக தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடுத்த 6 ஆண்டுகளில் எட்ட முடிவு செய்து முதலாவதாக எக்ஸ்.சி 40. மாடலை பேட்டரி காராக களமிறங்க திட்டமிட்டுள்ளது.

    வோல்வோ எக்ஸ்.சி.40

    வோல்வோ தயாரிப்புகளில் எக்ஸ்.சி 40. மாடல் மிகவும் பிரபலமானது. இதில் பேட்டரி காரை அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. நான்கு சக்கர சுழற்சி கொண்ட இந்த பேட்டரி காருக்கான முன்புற சக்கரத்திற்காக பிரத்யேகமாக ஒரு என்ஜினும், பின்புற சக்கரத்திற்காக பிரத்யேகமாக ஒரு என்ஜினும் உள்ளது. மோட்டாரை இயக்கத் தேவைப்படும் பேட்டரியை காரின் கீழ் பகுதியில் வைத்துள்ளது. 

    பெட்ரோலில் இயங்கும் எக்ஸ்.சி 40. மாடலை பேட்டரி மாடலாக உருமாற்றம் செய்யும்போது அதற்கேற்ப தேவையான மாற்றங்களை இந்நிறுவனம் செய்துள்ளது. பேட்டரி வாகனங்கள் பாதுகாப்பானவையாக இருக்கும் வகையில் பேட்டரியின் மேல்பகுதி அலுமினியத்தால் ஆனதாக இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்தக் காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டென்ட் சிஸ்டம் (ஏ.டி.ஏ.எஸ்.) சென்சார் உள்ளது.

    ஏற்கனவே இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான போல்ஸ்டார் தனது பேட்டரி காரில் 78 கிலோவாட் பேட்டரியை பயன்படுத்திஉள்ளது. அந்தக் கார் 408 ஹெச்.பி. திறன் மற்றும் 660 என்.எம் டார்க் செயல்திறனை கொண்டது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. 

    இதே தொழில்நுட்பத்தை எக்ஸ்.சி 40. பேட்டரி காரிலும் இந்நிறுவனம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தக் காரை முழுவதும் இறக்குமதி செய்து விற்பனை செய்வதா அல்லது பெங்களூருவில் உள்ள ஆலையில் அசெம்பிளி செய்து விற்பனை செய்வதா என்பது குறித்தும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
    Next Story
    ×